திராவிட இயக்கம் பேசுவது இனவெறி அல்ல; இனத்தின் விடுதலை! – மனோ தங்கராஜ்

21.09.2024 அன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற “அன்றே எச்சரித்தார் பெரியார் – பறிபோகும் மாநில உரிமைகள்” பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு.
பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். காரணம் தந்தை பெரியார் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வு. சுயமரியாதையோடு மற்றவர்களையும் மதிக்கும் பண்பு. அதே போன்று நம்மை மானம் இழக்கச் செய்து, நமது உரிமைகளைப் பறித்து நம்மை நிராயுதபாணிகளாக மாற்றி, பல்வேறு மூடநம்பிக்கைகளைக் கற்பித்து அதை நம்ப வைத்து நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து விடுதலைப் பெறுவதற்காகவே, தன் வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார்.
எனக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருக்கும் நீண்டகாலத் தொடர்பு இருக்கிறது. நான் கடந்துவந்த பாதையை அடிக்கடி நினைத்துப் பார்ப்பது உண்டு. நான் கொளத்தூர் மணி அவர்களைக் கூடங்குளம் அணு உலைக்கு எதிரானப் போராட்டக் களத்தில்தான் முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது அவரைச் சார்ந்த தோழர்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பரப்புரையைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்த இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். அந்த வகையில் என்றைக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். இதை நான் இங்குக் குறிப்பிடுவதற்குக் காரணம், சமூகத்தில் இருக்கின்ற பிரச்சனைகளைக் கையில் எடுக்கும் பக்குவம் திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற சமூக இயக்கங்களுக்குத்தான் உண்டு.
நீங்கள் ஏன் சனாதனத்தை எதிர்த்துப் பேசுகிறீர்கள், அடிமைத்தனம் எல்லா இடங்களிலும் உண்டு என்று என்னிடம் பலரும் கேட்டுள்ளனர். போரில் தோல்வியடைந்தவர்களை வெற்றி பெற்றவர் அடிமையாக எடுத்துக் கொள்கிறான். மற்ற நாடுகளில் மிகப்பெரிய நபராக இருப்பவர்கள் கூட அடிமையாக மாறக்கூடும். ஆனால் இந்தியாவில் இருக்கக்கூடிய அடிமைத்தனம் என்பது அப்படிப்பட்டது அல்ல. அதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஏற்பட்ட அடிமைத்தனம் போரினால் ஏற்பட்ட அடிமைத்தனம் அல்ல, தனது பலத்தைப் பயன்படுத்தி பலவீனமானவர்களை அடிமைப்படுத்தியது அல்ல. இது சித்தாந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அடிமைத்தனம் ஆகும்.
ஜாதியக் கட்டமைப்பை எதிர்ப்பதும், சமத்துவத்தைப் பேசுவதும், மதச்சார்பற்ற தன்மையைக் காக்கப் போராடுவதும், பெண்களுக்கு எதிராக நிகழும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதையும் கலாச்சாரப் படுகொலை என்று ஆளுநர் ரவி கூறுகிறார். இது எப்படிப்பட்ட ஆணவமானப் பேச்சு. பெண்கள் குழந்தையாக இருக்கும் போதே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டால் அந்தப் பெண்ணை உடன்கட்டை ஏறச்செய்தனர். இல்லையென்றால் விதவையாக்கப்பட்டு, அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டது.
விதவை மறுமணம் கூடாது. பெண்களுக்கு சொத்தில் உரிமைக் கிடையாது. அவர்களுக்கு அனைத்துவிதமான உரிமைகளும் மறுக்கப் பட்டு நிரந்தர அடிமைகளாக வீட்டில் முடக்கிவைக்கப்படுகிறார்கள். ஆனால் இந்திய வைசிராயாக இருந்த வில்லியம் பெண்டிங்தான் முதன்முதலாக சதி என்னும் உடன்கட்டை ஏற்றுவதை முடிவுக்குக் கொண்டுவந்தார். இதுதான் ஆளுநர் பார்வையில் கலாச்சாரப் படுகொலை.
ஜாதியக் கட்டமைப்பு எப்படி ஏற்படுத்தப்பட்டது? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாட்டை உருவாக்கி, அதைப் பெரும்பான்மை மக்களை நம்பவைத்து அதை ஏற்கவும் செய்தனர். வீட்டில் கிளியோ, நாயையோ வளர்த்தால் அது தனது வாழ்விடத்தை மறந்து நம்முடன் வாழப் பழகிவிடும். அதுபோன்று இந்த அப்பாவி மக்களை “நீ தாழ்ந்தவன், உன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று சொல்லி நம்ப வைத்துக் கழுத்தறுத்த அநீதி இந்தியத் துணைக் கண்டத்தைத் தவிர உலகில் வேறெங்கும் நிகழவில்லை. எனவே இந்த ஜாதிய அடிமைத்தனத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அறுத்தெறிய வேண்டும்.
இன்றைக்கு பழங்குடி வகுப்பில் இருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் பெரியார் பேசிய சமூகநீதி, இட ஒதுக்கீடு, சுயமரியாதை என்ற கோட்பாடுகள்தான். இதற்கு ஆளுநர் ரவியிடம் பதில் உண்டா?
நமது இனத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. நமக்குப் பல கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அந்த வரலாற்றைத்தான் பேச வேண்டும். வரலாற்றைப் பேசாதவன் மயக்கத்தில் இருப்பதற்குச் சமம் என்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே தந்தை பெரியார் பேசியது இனவெறி அல்ல. நாம் பேசுவது இனவெறி அல்ல, மாறாக ஒரு இனத்தின் விடுதலையைப் பேசுகிறோம். நம்மை அடிமைப்படுத்தி, நமது உழைப்பைச் சுரண்டிய கொடுங்கோலர்களின் வரலாற்றை நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
இன்றைக்கு நாம் மாநில சுயாட்சி குறித்து பேசி வருகிறோம். ஆனால் பெரியார் அன்றைக்கே தனித்தமிழ்நாடு கேட்டார். சிலர் விரக்தியின் வெளிப்பாட்டில்தான் பெரியார் அப்படிக் கேட்டார். பெரியாருக்கு அப்படி என்ன விரக்தி? முதல்வராக முடியவில்லை என்ற விரக்தியா? இல்லை பெரிய கட்சிக்குத் தலைவராகவில்லை என்ற விரக்தியா? அப்படியெல்லாம் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். அன்றைக்கு இருந்த சூழலில் நமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் தனித்தமிழ்நாடு ஒன்றே தீர்வு என்று தந்தை பெரியார் பேசினார். அதற்குப் பின்னர் பேரறிஞர் அண்ணா ஒன்றியத்தில் கூட்டாட்சி என்று முழங்கினார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்திய பிரதமர் கலந்துகொள்கிறார். இதற்குக் காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவுசெய்தது. ஆனால் இதற்குப் பதிலளித்த மோடி “காங்கிரஸ் கட்சி விநாயகர் மீது வெறுப்பைக் கக்குகிறது” என்றார். நீதித்துறையில் அரசியல் தலையீடு இருந்தால் அது தனது தனித்தன்மையை இழந்துவிடும்.
இந்த நாட்டின் பலமே இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான். அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏன் இப்போது வலுக்கிறது? மன்னராட்சியில் மறுக்கப்பட்ட நமது அடிப்படை உரிமைகள் எல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகத்தான் நமக்குக் கிடைத்தது. ஆனால் இன்றைக்கு மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவர பாஜக திட்டமிட்டு வருகிறது.
மக்களைக் கவருவதில் மூன்று விதம் இருக்கிறது. அவை, இரக்கப்பட்டு பேசுவது, நெறிமுறைகளைப் பற்றிபேசுவது, எதார்த்தத்தைப் பேசுவது. இந்த மேடை எதார்த்தத்தைப் பேசுகிறது. ஆனால் மற்ற இரண்டும் நம்மைச் சிந்திக்கவிடாது, நமது உணர்வுகளோடு விளையாடுவது.
நாயை எடுத்துக்கொண்டால் கூட ஜெர்மன் செப்பர்டு, அல்சீசன் என்று பல வகைகள் உண்டு. அதேப்போல மாடு வகைகளை எடுத்துக்கொண்டால் காங்கேயன், ஜெர்சி எனப் பல வகைகள் உண்டு. மனிதரில் கூட அய்ரோப்பியன், ஆப்பிரிக்கன், மங்கோலியன் என பல இனங்கள் உண்டு. ஆனால் ஜாதி எங்கே இருக்கிறது? ஒத்த வயதுடைய பத்து குழந்தைகளை ஒன்றாக நிற்கவைத்து இவர்கள் எந்த ஜாதி என்று கண்டுபிடிக்கச் சொன்னால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஒரே இனம், ஆனால் அய்ரோப்பியக் குழந்தைகளை அருகே நிற்கவைத்தால் அவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இப்படி இல்லாத ஜாதியை மக்கள் மத்தியில் புகுத்தியுள்ளனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியது. அவர்களால் தனியாகப் பயிற்சி மய்யங்களுக்கு சென்று படிக்க முடியாது. அதனால்தான் கலைஞர் உயர்கல்வி செல்வதற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு போதும் என்ற கொள்கை முடிவுக்கு வந்தார். மாணவர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறது. அந்த மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு எதற்கு நீட்தேர்வு? நீட், ஜெ.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளெல்லாம் மாணவர்களை மடையர்களாக மாற்றுகிறது.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விஷ்வகர்மா திட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம் என்கிறார். ஆனால் இந்த தர்மம்தான் சூத்திரர்களைப் படிக்கவிடாமல் செய்தது. பார்ப்பனரல்லாத மக்களைக் குலத்தொழிலை நோக்கி இழுத்துச்சென்றது. இப்படி ஒன்றிய அரசு கொண்டுவருகிற ஒவ்வொரு திட்டமும் பெரும்பான்மை இந்துக்களை ஏமாற்றும் விதமாகத்தான் இருக்கிறது.
இன்றைக்கு மோடி அரசை நாம் எதிர்ப்பதற்கான காரணம் என்ன? நாட்டில் 80 விழுக்காடு மக்கள் குறுகிய இடத்தில், குறுகிய வருமானத்தோடு, குறுகிய வாழ்வாதாரத்தோடு வாழ்ந்துவருவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? நாட்டில் வீடு இல்லாமல், ஒருவேளை உணவு கிடைக்காமல், படிக்க வாய்ப்பற்ற மக்கள் இன்றளவும் இருந்து வருகிறார்கள். ஆனால் இவைகளின் மீதெல்லாம் கவனம் செலுத்தாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே தனது ஆட்சியை நடத்திவருகிறார் மோடி.
நமது கருத்துரிமை மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தி திணிக்கப்படுகிறது. இலக்கண, இலக்கிய வளம்கொண்ட செம்மொழியாம் தமிழுக்கு சொற்ப நிதியை ஒதுக்குகிறார்கள். தாய்மொழி என்பது நமது அடையாளம், எனவே எக்காரணம் கொண்டும் தாய்மொழியை நாம் விட்டுக்கொடுக்கமுடியாது.
சனாதனம் பேசுபவர்களுக்கும் தமிழுக்கும் மிகப்பெரிய அளவில் முரண் காணப்படுகிறது. காரணம், சங்க இலக்கியங்களில் கடவுள் வழிபாடு என்பதே கிடையாது. அய்யன் திருவள்ளுவர் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று முழங்கியவர். இப்படி இருக்கையில் தமிழை அவன் எப்படி ஏற்றுக்கொள்வான். அதனால்தான் தமிழுக்கு எதிராக இத்தனை வேலைகளையும் சனாதனவாதிகள் செய்துவருகின்றனர்.
திராவிட இனம் என்பது சாதாரண இனம் அல்ல, நான் பிறந்த குமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் இருக்கிறார். ‘தாழக்கிடப்பவனைத் தற்காப்பது தர்மம்’ என்று அய்யா வைகுண்டர் பேசியிருக்கிறார். இதுதான் தமிழர்களின் தர்மம். ஆனால் சனாதனவாதிகள் பேசக்கூடிய தர்மம் என்பது மேலே இருக்கக்கூடிய எங்களைக் கீழே தள்ளி மிதிக்கும் தர்மம்தான் உங்களுடையது. இந்தத் தர்மம் எங்களுக்குத் தேவையில்லை. அவர்கள் மக்களை எந்தளவிற்கு மனமாற்றம் செய்யமுடியுமோ அந்தளவிற்குக் கடுமையாக மக்களிடம் பேசி வருகிறார்கள். எனவே இதில் இருந்து விடுபட வேண்டுமானால் நமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மொழி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இனங்களின் தனித்துவ அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு மாநில சுயாட்சிதான் தீர்வாக இருக்க முடியும்.

பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்

You may also like...