வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக் குறித்து சட்ட சபையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கியத் தகவல்களின் தொகுப்பு இது. ஆளுநர் உரையைப் படிக்க மறுத்ததால் பேரவைத் தலைவர் உரையைப் படித்தார்.
பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னோடி
நாட்டின் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது. வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. முந்தைய ஆண்டுகளில் தேசிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த 4 ஆண்டுகளில் 9.21 சதவிகிதமாக உயர்ந்துள்ளதே திராவிட இயக்க கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. இதனை முன்னேற்றிடும் வகையில் எதிர்வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை தமிழ்நாடு தனது இலக்காக கொண்டுள்ளது. மருத்துவம், கல்வி மற்றும் சமூகநலனையும் மேம்படுத்துவதிலும் நாட்டிற்கே முன்னோடியாகத் தமிழ்நாடு விளங்குகிறது.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் வழியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கால தலைமுறைகளின் வாழ்வை செம்மையாக வடிவமைத்திடுவதற்காக பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படித்தியுள்ளார். சிறந்த திட்டங்களின் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கிவருகிறது. மகளிர் விடியல் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு நாட்டிற்கே முன்னோடியாக திகழ்கிறது.
பெரியார் முழக்கம் 09012025 இதழ்
