கோல்வாக்கர்: இந்தியப் பாசிசத்தின் தந்தை!
இன்றைய இந்தியாவின் மிக முக்கிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இந்திய ஒன்றியத்தை அந்த அமைப்புதான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வட இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ளது. அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க மிகவும் சக்திவாய்ந்த, பணக்கார கட்சியாக உருவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. பல்கலைக் கழகங்கள் முதல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கலாச்சாரம் தொடர்பான அனைத்து நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்போது இந்த அமைப்பு உலகின் பிற நாடுகளிலும் பல பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அது ஒரு தனித்த அமைப்பு மட்டுமல்ல, பல நூறு அமைப்புகளுக்கான அமைப்பு என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒரு நூற்றாண்டில் எப்படி இத்தகைய நிலையை ஆர்.எஸ்.எஸ் அடைந்தது என்பதைத் தெரிந்துகொள்ள கோல்வாக்கரை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான படைப்புதான் “Golwalkar: The Myth Behind the Man, The Man Behind the Machine (Simon and Schuster; 2024)” என்ற ஆங்கில நூல். திரேந்திர கே.ஜா என்பவர் இந்நூலை எழுதியிருக்கிறார். இவர் ஏற்கெனவே இந்திய வலதுசாரிகளின் வரலாறு, உருவாக்கம் குறித்தும், கோட்சேவின் வாழ்க்கை வரலாறு, நிழல் படைகள்: விளிம்புநிலை அமைப்புகள் மற்றும் இந்துத்துவாவின் அடிவருடிகள் உள்ளிட்ட கவனித்தக்க நூல்களைப் படைத்திருக்கிறார். அந்த வரிசையில் இந்நூலில் கோல்வாக்கரின் வரலாற்றின் ஊடாக இந்தியாவில் பாசிசம் பரப்பப்படும் வரலாற்றை விவரித்திருக்கிறார். வெறுப்புப் பிரச்சாரத்துக்கு அடித்தளமிட்டவர்! ஆர்.எஸ்.எஸ்-ஸின் இரண்டாவது தலைவர் என்பது மட்டுமே கோல்வாக்கரின் அடையாளம் அல்ல. அதை விட முக்கியத்துவமானது அவர் வன்முறை மற்றும் வெறுப்பு இயந்திரத்தை உருவாக்கியவர் என்பது. அந்த இயந்திரம் ஆர்.எஸ்.எஸ். ஹெட்கேவர்தான் ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்கினார். ஆனால் நூற்றாண்டுக்கு பின்பும் வன்முறை, வெறுப்பை விதைக்கிற கருவியாக ஆர்எஸ்எஸ் இருப்பதற்குக் காரணமானவர் கோல்வாக்கர். அது எப்படி என்பதை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்நூல். மற்றவர்கள் (பிற மதத்தினர்) தங்களை இந்தியர்கள் என்று அழைத்துக் கொண்டு இந்தியர்களாக வாழவே இந்துக்களிடம் அனுமதி பெற வேண்டுமென்று மனநிலையில் ஆர்.எஸ்.எஸ் வார்க்கப்பட்டிருக்கிறது. இந்துக்களை மேம்படுத்துவதோ, இந்துக்களுக்குள் இருக்கும் பாகுபாடுகளைக் களைவதோ அல்லது இந்துக்களின் ஆன்மீகத்தைப் பற்றியோ ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ்-க்கு கவலை இருந்ததில்லை. இந்துக்களின் சமூக வாழ்வில் உள்ள படிநிலை ஒழுங்கைப் பற்றியும் அது கவலைப்படவில்லை. புரட்சியாளர் அம்பேத்கரைப் போல ஜாதியை ஒழிப்பது ஆர்.எஸ்.எஸ்-ஸின் நோக்கமாக இல்லை. குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான எந்த ஒரு விழிப்புணர்வுப் பணியையும் இதுவரை செய்ததில்லை. அது சதியின் தீமையை எதிர்த்துப் பேசவில்லை. கணவரை இழந்த பெண்களின் வாழ்வியல் உரிமைக்காக ஒருபோதும் பரப்புரை செய்யவில்லை. ஜாதிகளுக்கு இடையேயான திருமணங்களை ஊக்குவிக்க முயன்றதில்லை. வரதட்சணை முறை போன்ற இந்து சமூகத்தின் பிற தீமைகளை ஒழிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் எந்த இயக்கத்தையும் நடத்தவில்லை. மாறாக பிற மதத்தினரைக் கண்மூடித்தனமாக வெறுக்க வைக்கும் இந்துவை உருவாக்கும் கருவியாக ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது. இசுலாமியர்கள், கிறித்துவர்கள், பொதுவுடைமை சிந்தனையாளர்களைத் தங்களின் நிரந்தர எதிரிகள் என்று வரையறுக்கிறது. ஒட்டுமொத்தத்தில் வெறுப்பையும் வன்முறையையும் பரப்புகிற இயந்திரம் ஆர்.எஸ்.எஸ். இக்கொடூர இயந்திரத்தை இந்தியாவில் நிறுவமனமயப்படுத்தியவர் கோல்வாக்கர். ஆர்.எஸ்.எஸ்-ஸின் இந்துத்துவம் என்பது ஒரு மதவாத சிந்தனை என்ற எல்லையைக் கடந்து இந்துத்துவ தேசியவாதமாக மாற்றப்பட்டதன் பின்னணியில்தான் கோல்வாக்கரின் பங்கு முக்கியமானது. “இந்த உலகிலேயே, ஏன் இந்த அண்டத்திலேயே சிறந்த படைப்பு இந்துக்கள். இந்து மதம்தான் உலகிலேயே மிகப் பழமையானது. இந்து மதத்திற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்த தேசம்தான் இந்தியா. அதனால் இந்துக்களுக்குத்தான் இந்தியாவில் எல்லா உரிமையும்” என்பதுதான் கோல்வாக்கர் வகுத்த இந்துத்துவ இந்தியாவுக்கான ஆர்.எஸ்.எஸ்-ஸின் கோட்பாடு. அதுதான் இன்றைக்கும் இந்துத்துவா கும்பலால் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதற்கான உணர்வைக் கொடுக்கிறது. ஆக, ஆர்.எஸ்.எஸ்-ஸின் தற்போதைய வடிவம் கோல்வாக்கரால் கற்பனை செய்யப்பட்டது. கோல்வாக்கரின் இத்தகைய இந்துத்துவா சிந்தனைகளுக்காக சித்தாந்த குருவாக சாவர்க்கர் உள்ளார். எதிர்கால இந்துராஷ்டிராவுக்கான புளூ பிரிண்டை உருவாக்கியவர்! இந்திய வலதுசாரிகளைப் பற்றிய ஆய்வுக்கான முக்கிய ஆதாரமாகத் திகழும் இந்நூல், கோல்வாக்கரை ஏன் இந்தியப் பாசிசத்தின் தந்தையாக வரையறுக்கிறது என்ற கேள்வி எழலாம். “நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது” என்ற கோல்வாக்கரின் உரை அதற்கான பதிலைத் தருகிறது. இந்து ராஷ்டிரா திட்டத்திற்கு சாவர்க்கர் கடந்த காலத்தை வரையறுத்த போது, கோல்வாக்கர் தான் எதிர்கால இந்துராஷ்டிராவிற்கான புளூ பிரிண்டை வரைந்தார். அத்தகைய ஆபத்துக்குரியதாகத்தான் அந்த உரை உள்ளது. அந்த உரையில் கோல்வாக்கரின் சிந்தனை பாசிசத்தின் ஊடாக வெளிப்படுகிறது என்பதை விட நாசிசத்தின் ஊடாக வெளிப்படுகிறது என்பதே பொருத்தமாக இருக்கும். நாஜிக்களின் வழியில் இந்தியாவில் இந்துக்கள் இசுலாமியர்களை எதிர்கொள்ள வேண்டுமென்பதே அவ்வுரையின் மையப்புள்ளி. சுயவெறி, சந்தேகம், பொய்யை அடிப்படையாகக் கொண்ட ஒரு நபராகவே நூல் முழுக்க அடையாளப்படுகிறார் கோல்வாக்கர். வெறுப்பைப் பரப்புவதும் தன்னைப் பற்றிய பொய்யான பிம்பங்களைத் திட்டமிட்டு கட்டமைப்பதையும் தொழிலாகக் கொண்டு செய்திருக்கிறார் கோல்வாக்கர். அவர் ஒரு பேராசிரியர் என்று இந்துத்துவவாதிகள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறார்கள். தன்னைப் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்திக்கொள்ள கோல்வாக்கர் பரப்பிய மிகப்பெரிய முதல் பொய் அதுதான்.
காந்தியை எச்சரித்த கோல்வாக்கர்! உண்மையில் அவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் செய்முறை விளக்குநராக (demonstrator) மட்டுமே இருந்துள்ளார். அதேபோன்று, பிற்காலத்தில் அவரது சொந்தப் புத்தகமான ‘நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது’ என்பது குறித்தும் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் கோல்வாக்கரால் எழுதப்பட்டது, ஆனால் அதன் காரணமாக அவரே ஆபத்தில் சிக்கியபோது, இது தனது சொந்த புத்தகம் அல்ல, மொழிபெயர்ப்பு என்று சொல்ல ஆரம்பித்தார். அந்த வழியில் வந்ததால்தான் காந்தியடிகளைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவர் என்பதை இன்றளவிலும் ஒப்புக்கொள்ள சங்கிகள் மறுக்கிறார்கள். காந்தியின் மீது ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு இருக்கும் கோபம் எத்தகையது என்பதற்கு கோல்வாக்கரே மிக முக்கிய சாட்சி. 1947 டிசம்பரில், டெல்லியின் ரோஹ்தக் சாலையில் நடைபெற்ற கூட்டத்தில், இசுலாமியர்களை இந்தியாவில் வைத்திருக்க வேண்டும் என்ற தனது பிடிவாதத்தைக் காந்தி தொடர்ந்தால், அவர் அமைதியாக்கப் படலாம் என்று கோல்வாக்கர் மிரட்டினார். அடுத்த மூன்றாவது வாரத்தில் கோட்சேவால் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் காந்தி கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ்-ஸும் கோல்வாக்கரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள 13 நாள் துக்கம் அறிவித்தனர். கோல்வாக்கரின் பேச்சால் உந்தப்பட்டுத்தான் கோட்சே காந்தியைக் கொன்றாரா என்ற கேள்வியை இந்நூல் எழுப்புகிறது. வல்லபாய் படேல் அல்லது கோவிந்த் வல்லப பந்த் போன்றோர் ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் காட்டிய நெருக்கம், இசுலாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளின்போது இவர்கள் எடுத்த மோசமான நிலைப்பாடுகள் என ஆர்.எஸ்.எஸ்-ஸின் மதவாத அரசியலின் அருவருப்பான வரலாற்றை, கோல்வாக்கரின் வரலாற்றின் ஊடாக ஆழமாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர் ஜா. ஒட்டுமொத்தத்தில் பாஜகவின் பாசிச ஆட்சிக்கான கருத்தியல், கோல்வாக்கர் விதைத்த நஞ்சில் இருந்து எழுகிறது என்பதை இந்நூலை வாசிக்கும் எவரும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.
பெரியார் முழக்கம் 17.10.2024 இதழ்