முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாள ருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊடகங்களில் பேசிவருபவர். இவர் இதுவரை 58 நூல்களை எழுதியுள்ளார். இவரின் அனைத்து நூல்களும் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு மதவாத அரசியலை எதிர்த்து இவர் எழுதிய நூலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

சமூகநீதிக்காக முழு நேரமாக தொண்டாற்றி வரும் திரு.விடுதலை இராசேந்திரன் அவர்களைப் பாராட்டும் வகையில் அன்னாருக்கு தமிழ்நாடு அரசு, 2024-ஆம் ஆண்டிற்கான ‘தந்தை பெரியார் விருது’ அளித்து, அய்ந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் தங்கப் பதக்கத்தையும் தகுதியுரையையும் வழங்கிச் சிறப்பிக்கின்றது.
பெரியார் முழக்கம் 16012025 இதழ்

You may also like...