ஒன்றிய ஆட்சியின் ‘மனுதர்மப்’ பார்வை அடிமைச் சின்னத்தின் அடையாளமா திருமணம்? – ர.பிரகாசு
திருமணமான பெண்களின் விருப்பத்துக்கு மாறாக உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது ஒன்றிய ஆட்சி.
உலகம் முழுக்கவே பெண்ணுரிமை சார்நது நடைபெறும் விவாதங்களில் திருமணத்திற்குப் பின்பு கணவனால் பெண்கள் எதிர்கொள்ளும் கட்டாய உறவு முக்கியமான ஒன்று. இத்தகைய வல்லுறவை Marital Rape என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். உலகில் மூன்றில் ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே சுமார் 14 விழுக்காடு பெண்கள் இக்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் 18 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 82 விழுக்காட்டினர் கணவனால் பாலியல் வன்கொடுமையை எதிர்கொள்வதாக 2019-21ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல சுகாதார ஆய்வு கூறுகிறது.
சுமார் 150 நாடுகளில் திருமணத்திற்குப் பிந்தைய கட்டாயப் பாலியல் வன்கொடுமை குற்றமாக்கப்பட்டுள்ளது. எனினும் சட்டத்தையும் மீறி உலகம் முழுவதும் இக்கொடுமையைப் பெண்கள் எதிர்கொண்டே வருகின்றனர்.
32 நாடுகளில் மட்டும்தான் இதனைக் குற்றமாகக் கருதுகிற சட்டம் இல்லை. அதில் இந்தியாவும் ஒன்று. மனைவி 18 வயதுக்குக் குறைவானவராக இல்லாமல் இருந்தால், அவருடன் கணவர் வலுக்கட்டாயமாக உறவு கொள்வது வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படாது என்பது இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 375-இல் அளிக்கப்பட்டிருந்த விலக்கு. இந்தப் பிரிவுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், பெண்ணுரிமைப் போராளிகள் நீண்டகாலமாகக் குரல் எழுப்பி வருகின்றனர். திருமணம் செய்துகொண்டார் என்பதற்காகவே மனைவி கணவனுக்கு அடிமையாகி விட முடியாது. கணவனாக இருந்தாலும் கட்டாய உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையே ஆகும் என்ற அடிப்படையில் மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்புகின்றன.
ஆனால் காதுகொடுத்து கேட்கவே ஒன்றிய அரசு இதுவரை தயாராக இல்லை. பிரிட்டிஷார் காலச் சட்டங்களைத் தூக்கியெறிந்துவிட்டோம் என்று பாரதிய நாகரிக சுரக்சா சன்கிதா, 2024, பாரதிய நியாய சன்கிதா, 2024, மற்றும் பாரதிய சாக்சிய ஆதிநியம் 2024 என்ற புதிய குற்றவியல் சட்டங்களை பாஜக அரசு நடைமுறைப்படுத்தியது. ஆனால் அந்தப் புதிய சட்டங்களின் பெயர்கள்தான் மாறியிருக்கிறதே தவிர, கருத்துரிமை பறிப்பைத் தீவிரமாக்கியதைத் தவிர பல சட்டங்கள் அப்படியே இருக்கின்றன. அதில் ஐ.பி.சி. பிரிவு 375-ம் ஒன்று.
அதுமட்டுமின்றி, பிஎன்எஸ் சட்டப் பிரிவு 67-இல், விவாகரத்து பெற்று பிரிந்து வாழும் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்யும் கணவருக்கான சிறைத் தண்டனை 2 முதல் 7 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ஆக, ஒன்றிய அரசின் புதிய சட்டம் குடும்ப வன்கொடுமைகளுக்கு விதிவிலக்கு அளிப்பதுடன், திருமணமான பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறுகிறது. இதனை எதிர்த்து இந்திய மாதர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளது. அந்த வழக்கில் பதிலளித்துள்ள ஒன்றிய அரசு, “மனைவியுடன் கணவன் விருப்பத்துக்கு மாறாக உறவு கொள்வதை வன்கொடுமையாகக் கருத இயலாது” என்று பதிலளித்திருக்கிறது.
இது பாஜகவின் இந்துத்துவா சிந்தனையில் ஊறிப்போன பழமைவாதத்தைத் தவிர வேறில்லை. “எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் செய்யக்கூடாது. இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் பிள்ளைகள் தயவில்தான் இருக்க வேண்டும். இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றை உடையவனாயினும் கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக” என்று மனுசாஸ்திரம் (அத்.4, சுலோ.43, 55; அத்.5, சுலோ.147, 148, 154) கூறுகிறது.
கணவன் எத்தகையை கொடுமையை இழைத்தாலும் எதிர்த்துவிடக் கூடாது என்பதுதான் மனுநீதி. அந்த மனுநீதியைச் சட்டமாக்கிடத் துடிக்கும் பாஜக, திருமணமான பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒருபோதும் இருக்காது. அந்த மனுநீதிப் பற்றைத்தான் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்திருக்கிறது பாஜக அரசு.
இத்தகைய அநீதிக்கு எதிராகப் பெண்கள் ஏந்த வேண்டிய ஆயுதம் பெரியார். திருமணம்- குடும்ப அமைப்பு முறைகளுக்கு எதிரான பெரியாரின் கருத்துக்கள் இவற்றைத்தான் உணர்த்துகின்றன. 1971ஆம் ஆண்டு சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் மனுசாஸ்திரத்திற்கெதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். பெண்ணின் உடல் கணவனின் சொத்துடைமை அல்ல என்பதையும், பெண்ணுக்கு திருமணத்தை மறுத்து விவாகரத்து பெற உரிமை உண்டு என்பதையும் வலியுறுத்தும் தீர்மானம் அது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக அப்போது பார்ப்பன ஏடுகள் திரிபுவாதம் செய்து கூச்சலிட்டபோது, சட்டப்போராட்டம் நடத்தி வென்றவர் தந்தை பெரியார். பெண்கள் விடுதலைக்கு அத்தகைய வீரியமிக்க கருத்துக்கள்தான் தீர்வு என்பதை இதுபோன்ற வழக்குகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. மதங்களும் அவை வலியுறுத்தும் பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் நிறைந்த கோட்பாடுகளும் காலாவதியாகி ஆகிவரும் இந்தக் காலத்தில், திருமணம் செய்துவிட்டதாலேயே பெண் கணவனுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தவள் என்பது போல வன்கொடுமை செய்யலாம் என்று சட்டத்திலேயே நிறுவப்பட்டிருப்பது மிகுந்த பிற்போக்குத்தனமானது. திருத்தப்பட வேண்டியது.
பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்