ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு சனாதனத்தை மிரள வைத்த ‘குடிஅரசு’

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார்.
சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்..
குடிஅரசும் சுயமரியாதை இயக்கமும் தமிழ்நாட்டின் வரலாற்றில் 1925 முதல் 1949 வரை அதன் எழுத்தையும் பேச்சையும் வரலாறாகப் பதிவு செய்யப்பட்டதன் காரணமாகத்தான் இன்றைக்கும் நாம் அதைப் படிக்கவும் பேசவும் முடிகிறது. பெரியார் குடிஅரசு இதழை ஆரம்பித்த போது வெறும் 7 சதவீதம் பேர் தான் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் கூட தந்தை பெரியார் “நான் ஒருவனே எழுதி, நான் ஒருவனே அச்சிட்டு, நான் ஒருவனே எழுதிப் படிக்கின்ற நிலை வந்தாலும் குடிஅரசு இதழை நடத்திக் கொண்டு இருப்பேன்”. நவீன அச்சு இயந்திரங்களோ, தொலை தொடர்பு வசதி என எதுவுமே இல்லாத காலம் அது. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் கூட ‘ஒலிபெருக்கி’ வசதி உண்டு என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படியொரு காலத்தில் மக்கள் மத்தியில் ஒரு பேரெழுச்சியை உண்டாக்கியது குடிஅரசு.
1925ஆம் ஆண்டு குடிஅரசு இதழ் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அடக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறது. 1933ஆம் ஆண்டு ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்காகப் பிரிட்டிஷ் அரசு பெரியார் மற்றும் அவரது சகோதரி கண்ணம்மாள் மீது இராஜதுவேச வழக்கைப் பதிவு செய்து கைது செய்து ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதித்தது. கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டார். பெரியார் தங்கையும், பதிப்பாளருமாகிய கண்ணம்மாவுக்கு சிறை தண்டனை; ரூ.2000 ஜாமீன் தொகை கேட்கப்பட்டது. கண்ணம்மாள் ஜாமீன் தொகை கட்டினார். பெரியார் வழக்கம் போல் சிறை சென்றார்.
பெரியார் தனது வாழ்நாளில் எந்த வழக்கிலும் எதிர் வழக்காடியது கிடையாது. நீதிமன்றத்துக்குச் சென்று அவர் சார்பில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று அறிவித்த ஒரு போராட்டக் குணம் மிக்கத் தலைவர் தான் பெரியார். பார்ப்பன நீதிபதிகள் முன்னாலேயே “பார்ப்பான் நீதிபதிகளாக வாழும் நாடு கடும் புலிகள் வாழும் காடு” நான் புலி வேட்டைக்குப் புறப்பட்டிருக்கிறேன். பார்ப்பன நீதிபதிகள் முன்பே தனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
சிறையில் இருந்து வெளிவந்த பெரியாருக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், குடிஅரசு இதழில் என்னால் எழுதப்பட்ட சாதாரணமானதும் சப்பையானதுமான வியாசத்துக்காகத்தான் நான் சிறைக்குச் செல்ல நேர்ந்ததே தவிர மற்றபடி செய்யத்தக்க ஒரு காரியம் செய்துவிட்டு நான் சிறை செல்லவில்லை. சர்க்கார் பழைய குடிஅரசு இதழ்களின் பழையதைப் புரட்டிப் பார்த்தால் என்னை கடுமையாகக் கண்டிக்கக் கூடியதும், நாடுகடத்தக் கூடியதுமான வியாசங்களை நான் எழுதி இருப்பதை அவர்கள் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் அந்தக் காலத்தில் இதைக் கவனித்தார்களா என்று தெரியவில்லை. அதற்குக் காரணம் அப்போது சுயமரியாதைக் கொள்கைகள் மக்களிடம் போய்ச் சேரவில்லை. இப்போது இதைக் கண்டிக்கக் காரணம் சுயமரியாதைக் கொள்கையைப் பாமர மக்கள் ஆதரிக்கத் தொடங்கியவுடன் இப்போது என்னைக் கைது செய்ய தொடங்கியிருக்கிறார்கள். என்னைக் கைது செய்யத் தொடங்கியிருப்பது என்பது என்னுடைய கொள்கை மக்களால் கவனிக்கத் தொடங்கிவிட்டது என்பதற்கான வெற்றியாக இதைக் கருதுகிறேன்.
நான் சிறை சென்றதைப் பற்றிப் பேசினார்கள்.அதைக் கொண்டாடுவதற்கு என்று எதுவும் இல்லை. சிறைக்குச் சென்றுவந்தால் தியாகி என்று பாமர மக்கள் வேண்டுமானால் அறியாமையால் பேசலாம். அறிவுள்ளவர்கள் இதைப் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறினார் பெரியார். இப்படிப்பட்ட அடக்குமுறைகளை நீங்கள் பாராட்டி வரவேற்க வேண்டும். இதன் மூலமாகத்தான் என்னுடைய கொள்கைகள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர முடியும் என்றார்.
1933இல் குடிஅரசு நின்றுவிட்டது. வெளிவந்த கடைசி பத்திரிகையில் பெரியார் இப்படி எழுதினார். இந்தப் பத்திரிகை நின்று போகாது. அடுத்தப் பத்திரிகை உங்கள் கைக்கு வந்து கொண்டிருக்கும் என்று எழுதினார். அடுத்த ஏழே நாட்களில் ‘புரட்சி’ என்ற பெயரில் மற்றொரு பத்திரிகையைத் தொடங்கினார் பெரியார். அப்போது “அடக்குமுறை எங்கிருந்து வருகிறதோ அங்கே புரட்சி தோன்றும்” என்று எழுதினார். ஏழு மாதங்கள் மட்டும் வெளிவந்த புரட்சிக்குப் பின்னர் பகுத்தறிவு என்ற நாளிதழ் வந்தது. அதுவும் 1 1/2 மாதங்களில் நின்றுவிட்டது. அதற்கு பிறகு விடுதலை வந்தது. அப்படி அவர் நடத்திய பத்திரிகை ஒவ்வொன்றும் அடக்குமுறைகளைச் சந்தித்தவைகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1930இல் பெரியார் ஈரோட்டில் சுயமரியாதை மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்க இந்துமகா சபைத் தலைவர் ஜெயகரை அழைக்கிறார். அவரை எதற்காக அழைத்தார் என்றால் பம்பாய் மாகாணத்தில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காகப் பெரியார் அவரை அழைத்தார். எதிர் முகாமில் இருந்து பார்ப்பனிய எதிர்ப்பு கருத்துக்கள் வந்தால் அதைப் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பெரியாரின் அணுகுமுறையை இது உணர்த்துகிறது.
1925-1930 வரை குடிஅரசின் ஐந்தாண்டு பணிகளை மதிப்பீடு செய்து லண்டனில் உள்ள Rationalist Association என்ற அமைப்பு லிட்டரரி கைடு (Litrary Guide) என்ற பத்திரிகை, தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு அதிசயப் புரட்சியை நடத்தியது என்று எழுதியது. குடிஅரசு தொடங்கிய ஏழு ஆண்டுகளில் குடிஅரசை ஒழித்துக்கட்ட கத்தோலிக்கர்கள் குடிஅரசு ஒழிப்பு நிதி என்ற பெயரில் நிதி திரட்டியிருக்கிறார்கள்.
கத்தோலிக்கக் குருமார்கள், இந்த குடிஅரசு பத்திரிகை எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசிடம் மனு அளித்தனர். பின்னர் பிரிட்டிஷ் அரசு மதத் தலைவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தை இயற்ற வேண்டிய நிலை உருவானது. அந்தளவுக்கு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது பெரியாரின் குடிஅரசு. கத்தோலிக்கர்கள் நடத்திய கத்தோலிக்க லீடர் என்ற ஆங்கிலப் பத்திரிகை குடிஅரசை ஒழிக்க நிதி திரட்டியது.
1933ஆம் ஆண்டு மெயில் பத்திரிகை ஒரு தலையங்கத்தை எழுதுகிறது. இதுவரையில் மதத் தலைவரான நாங்கள் மதத்தைப் பற்றி பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அந்த பாழாய்ப் போன சுயமரியாதை இயக்கமும் குடிஅரசும் வந்த பிறகு தேவாலயங்களுக்கு உள்ளேயும் மத நிறுவனங்களுக்கு உள்ளேயும் தான் நடத்த முடிகிறதே தவிர மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்யமுடியவில்லை என்று மெயில் பத்திரிகை தலையங்கம் தீட்டியது. இதுதான் சுயமரியாதை இயக்கம் குடிஅரசில் உருவாக்கிய புரட்சி.
பால்ய விவாகம் தடை செய்யப்படுவதற்கு குடிஅரசின் தொண்டு அளப்பரியது. கிருஷ்ணமாச்சாரி என்ற பார்ப்பன எம்.எல்.ஏ பால்ய விவாகத்தில் பார்ப்பனர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டுமெனச் சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். இதைக் கண்டித்து குடிஅரசில் அப்போது கட்டுரை எழுதப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர் சர்.சிபி.ராமசாமி அய்யர். வாணிப செட்டியார்கள் இழி ஜாதியினர் என்று கூறி அவர்களுக்கு சமஸ்தானக் கோயில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதைக் கண்டித்து குடிஅரசு கட்டுரைகளை எழுதியிருக்கிறது. அதே காலகட்டத்தில் பிராமண சபைகள் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களை நடத்துகிறார்கள். அதில் நிறைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது குடந்தையில் கூடிய ஒரு கூட்டத்தில் பிராமணர்கள் வர்ணாசிரமத்தைக் கட்டாயமாக ஆதரிக்க வேண்டும். பிராமணர்கள் கடல் கடந்து பயணிக்கக் கூடாது. கடல் கடந்து பயணம் செய்த காந்தி, நேரு, லஜபதி ராய் உள்ளிட்டவர்களை இந்தச் சபை வன்மையாகக் கண்டிக்கிறது. பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவிதாங்கூர் சமஸ்தானம், கடல் தாண்டிப் பயணித்த பார்ப்பனர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்தக் கொடுமைகளை எதிர்த்து அன்று எழுந்த ஒரே எதிர்ப்புக் குரல் சுயமரியாதை இயக்கமும், குடிஅரசும், பெரியாரும் தான்.
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்பது காங்கிரசில் இருக்கும் போதே தொடங்கியது. சமூகத்தில் ஜாதிப் பாகுபாடுகளைக் காட்டாதீர் என்று காங்கிரசில் இருக்கும் போதே தீர்மானம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றுக் கூறி இராஜாஜி, இராஜன், வரதாச்சாரி, சந்தானம் உள்ளிட்ட பார்ப்பன முன்னணித் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்தே விலகிப் போய்விட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது ஜாதிரீதியாக எப்படியெல்லாம் தான் அவமானப்பட்டேன் என்பதைப் பெரியார் குறிப்பிட்டார். திண்டுக்கல், பெரியகுளம் ஆகிய ஊர்களுக்குக் கட்சிக் கூட்டங்களுக்குச் செல்லும் வேளையில் அவருடன் ஒரு அய்யங்கார் வந்தார். அவருக்கு வீட்டிற்குள் வைத்து சாப்பாடு போட்டார்கள், பெரியாருக்கு வெளியில் வைத்துச் சாப்பாடு போட்டார்கள். எச்சில் இலைகளுக்கு அருகில் அமர்ந்து தான் நான் சாப்பிட்டேன் என்று பெரியார் தனக்கு நேர்ந்த அவமானங்களைக் குறிப்பிடுகிறார். தனது அவமானத்தை ஒரு பிரச்சனையாக அவர் மாற்றவில்லை.
ஆனால், காங்கிரஸ் கட்சி நடத்திவந்த சேரன் மாதேவி குருகுலத்தில் ஜாதியப் பாகுபாடு தலைவிரித்தாடிய போது பெரியார் அதற்காகப் போராடினார். தன்னுடைய மான அவமானத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் சமூகத்தின் மான அவமானங்களைப் பற்றிச் சிந்தித்தத் தலைவராகத்தான் பெரியார் இருந்திருக்கிறார்.
(தொடரும்)

பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்

You may also like...