தலையங்கம் – மதச்சார்பின்மையா? மனுதர்மமா?
மதச்சார்பின்மை ‘சோசலிசம்’ என்ற சொற்கள் 1976ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் தான் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதற்கு முன்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது இல்லவே இல்லை என்று சங்பரிவாரங்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைச் செயலாளர் போல் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் அண்மையில் இவ்வாறு பேசியிருக்கிறார். அரசியல் சட்டத்தின் கீழ் உறுதி மொழியேற்று – பதவிக்கு வந்தவர் ஆளுநர். அவர் மதச்சார்பின்மை என்ற சொல்லை நீக்கிவிட வேண்டும் என்று சட்ட மறுப்புப் பேசுகிறார். ‘மதச்சார்பின்மை’ என்ற சொல்லை ஏன் அகற்ற வேண்டும்? அகற்றிவிட்டால் ’இந்துக்கள்’ நாடு என்றாகிவிடுமா? அதாவது அரசியல் சட்டக் குழு மதச்சார்பின்மைக் கொள்கையை ஏற்கவில்லை, அதை இந்திரா காந்தி தான் திணித்தார் என்று இவர்கள் வாதாடுகிறார்கள். அரசியல் சட்டத்தின் அடித்தளமே மதச்சார்பின்மை தான். சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் மதப் பாகுபாடு கூடாது; ஜாதிப் பாகுபாடு கூடாது; இனப் பாகுபாடு கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. இந்தப் பிரிவுகள் நீடிக்கும் வரை இது மதச்சார்பற்ற நாடு தான்; பொது வேலைகளில் பாகுபாடு கூடாது ( பிரிவு 10) தனி மனித மதச் சுதந்திர உரிமை உண்டு ( பிரிவு ) அரசு உதவி பெறும் கல்வி நிலையங்கள் (29(2) வாக்காளர் பட்டியலில் ( பிரிவு 32 ) மதப்பாகுபாடுகள் கூடாது. இவை அரசியல் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள்; ஏதோ, மதச்சார்பின்மை என்ற வார்த்தை இணைக்கப்பட்டதால் மட்டுமே மதச்சார்பற்ற நாடு; இல்லையேல் இந்துக்களின் நாடு என்றே சட்டத்தை உருவாக்கினார்கள் என்பது திரிபுவாதம்; மதச்சார்பின்மை அடிப்படை உரிமைகளிலேயே வலியுறுத்தப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், அரசியல் சட்டத்தில் ‘ஜனநாயகம்’ என்ற சொல் அது உருவாக்கிய போது இடம்பெறவில்லை. அதனால் இது ஜனநாயக நாடு இல்லை என்றாகிவிடுமா? என்று கேட்கிறோம். ‘ஜனநாயகம் என்று குறிப்பிடப்படாத அரசியல் சட்டத்தில் தான் வாக்குரிமை; தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் பிரதிநிதித்துவ சட்டங்களை அரசியல் சட்டத்தில் இணைத்திருக்கிறது’. திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இடம்பெறவில்லை அதற்காக திருக்குறளே தமிழ் இல்லை என்றாகி விடுமா?
‘மதச்சார்பின்மை என்பது அய்ரோப்பாவில் இருந்து இறக்குமதியானது. அரசர்களுக்கும் சர்ச்சுகளுக்கும் நடந்த போராட்டங்களால் உருவான உடன்பாடு தான் மதச்சார்பின்மை’ என்கிறார் ஆளுநர் ரவி. வரலாறு தெரியாமல் பேசுகிறார் ஆளுநர். 1776இல் நடந்த அமெரிக்கப் புரட்சி; 1789இல் நடந்த பிரஞ்சு புரட்சிகளே மதச்சார்பின்மைக்கு வழிவகுத்தது. அங்கு மக்கள் நடத்திய புரட்சியால் சுதந்திரம் – சமத்துவம் – சகோதரத்துவம் என்ற மதச்சார்பின்மையை மய்யம் கொண்ட கோட்பாடுகள் உருப்பெற்றன. எட்டு ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்து அமெரிக்காவைச் சுதந்திர நாடாக அறிவித்தது. தொடர்ந்து 1787-88 இல் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தில் அரசு தன்னை மதத்தில் இருந்து விடுவித்துக் கொண்டு மதச்சார்பற்ற அரசு (secular state) என்று உலகுக்கு அறிவித்தது. பிரெஞ்சுப் புரட்சியிலும் அதுதான் நடைபெற்றது. புரட்சிக்குப் பிறகு 1789 ஆகஸ்ட் 26 அன்று வெளியிடப்பட்ட ‘மனிதன் மற்றும் குடிமக்களின் பிரகடனம்’ தான் மதச்சார்பின்மையை அறிவித்தது. இந்த வரலாறுகளைப் புரியாமல் உளறுகிறார் ஆளுநர் ரவி. மதச்சார்பின்மை என்ற கருத்தியல் மக்கள் நடத்திய புரட்சியால் உருவானதே தவிர அரசர்களுக்கும் சர்ச்சுகளுக்கும் நடந்த உடன்பாட்டால் அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.
மேற்கத்திய சிந்தனைகள் தான் பாரதக் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது என்று தொடர்ந்துப் பேசிவருகிறார் ஆளுநர் ரவி. அவர் அணியும் உடையும் குடியிருக்கும் மாளிகையும், அவரது பதவியும் மேற்கத்திய கலாச்சாரம் தான் என்பதை முதலில் உணர வேண்டும். பாரதியக் கலாச்சாரமாக இருந்திருக்கும் என்றால் அவர் புலித்தோல் மீது காவி வேட்டி உடுத்திக் கொண்டு மேல் சட்டை இல்லாமல் பூணூல் உச்சிக்குடுமிகளுடன் ராஜகுருவாக அமர்ந்திருப்பார். சங்கராச்சாரிகளிடம் தான் செங்கோல் இருந்திருக்கும். பள்ளிக்கூடங்கள் இருக்காது, வேத பாட சாலைகள் தான் இருந்திருக்கும். நாடாளுமன்றமும், ஜனநாயகமும், நீதிமன்றங்களும், பள்ளிக்கல்லூரிகளும் மேற்கத்திய ஜனநாயகம் வழங்கியக் கொடை தான்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு (அக் 06, 2024) ஆளுநர் கருத்தை மறுத்து ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. ஆளுநரை நோக்கி அந்தக் கட்டுரை சில கேள்விகளை எழுப்புகிறது. மதச்சார்பின்மை பாரத தர்மம் இல்லை என்று கூறும் ஆளுநர் அதற்குப் பதிலாக மனுதர்மம் வர வேண்டும் என்கிறாரா? ஏகலைவன் கட்டை விரலைத் துரோணாச்சாரி குரு தட்சணையாகக் கேட்டதையும், சம்பூகன் தலையை ராமன் வெட்டியதையும் பாரத தர்மம் என்று கூற வருகிறாரா? ‘பிராமணர் உரிமைகளில் பிராமணர் அல்லாதார் குறுக்கிடாமல் இருப்பது தான் தர்மம் என்கிறாரா?’ என்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆளுநரின் பேச்சுகள் தமிழ்நாட்டையும் தாண்டி அவரது சனாதன முகத்திரையைக் கிழிக்கத் தொடங்கியிருக்கிறது.
அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள ஆளுநர் அந்தச் சட்டத்தையே நான் மதிக்க மாட்டேன் என்று இங்கு பேச முடியும். அவர்கள் மீது சட்டம் பாயாது. சனாதனத்தை எதிர்த்தால் நீதிபதிகளே சனாதனத்தின் வழக்கறிஞர்களாக ஓடிவருகிறார்கள். மதச்சார்பின்மை என்ற கொள்கையைப் படிப்படியாக குழி தோண்டிப் புதைக்க நினைக்கிறது பார்ப்பனியம். வன்மையான கண்டனத்துக்குரியது.
பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்