கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!
பெரியார் பேசுபொருளாக மாறியிருக்கிற காலச்சூழலில் திராவிட மாடல் அரசு எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்திருப்பதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் கருத்துக்கள் நாட்டிற்கு மிக மிகத் தேவையான கருத்துக்களாக இருக்கிறது என்பதைச் சமகால சமூக – அரசியல் சூழல்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பெரியாரியலை மேலும் வலுவாகக் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெரியாரியத்தின் எதிரிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியார் காலத்தில் இருந்து அவருடைய கொள்கைகள் வேகமாகப் பரவியது அவருடைய எதிரிகளால் தான் என்று பெரியாரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஒரு சூழ்நிலையில் பெரியார் விருதை வழங்கி கவுரவித்திருப்பது, பெரியாரியத் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிற விருதாகவே நாங்கள் கருதுகிறோம். அதற்காக முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றி. பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உந்துசக்தியும் அதிகரித்திருக்கிறது. பெரியாரியலை இன்னும் வேகமாக முன்னெடுக்க நாங்கள் உறுதி ஏற்கிறோம்.
(விருதுபெற்ற பின்னர் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் அளித்த பேட்டியில் இருந்து)
பெரியார் முழக்கம் 16012025 இதழ்
