சட்ட விரோத ஈஷா மையம் மூடப்படுவது எப்போது?
கோவையில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தின் மீது எழுந்துள்ள நூற்றுக்கணக்கான புகார்களின் பட்டியலில் புதிதாக ஒன்று இணைந்துள்ளது.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘எனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ளச் சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாகத் தெரிய வருகிறது. அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஈஷா யோகா மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க சாமியார் ஜக்கி வாசுதேவ் அனுமதி தந்துள்ளார். எனது மகள்கள் அங்கிருந்து வெளிவந்தால் அவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தைக் கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும். எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” எனக் கோரி இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மகள்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களைக் தெரிவித்தனர். மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனைக் குற்ற வழக்குகள் உள்ளது? என்பன போன்ற விவரங்களைப் போலீசார் அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா தலைமையிலான குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மையத்தில் உள்ள தன்னார்வலர்கள், வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து தங்கியிருப்பவர்கள், அவர்களுக்கு மையத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு, விருப்பத்தின் அடிப்படையில் இங்கே தங்கியிருக்கிறார்களா?, கட்டாயப்படுத்தி துறவறத்தில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்களா? போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். மேலும் மையத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களது உறவினர்களைச் சந்திக்க முறையாக அனுமதி வழங்கப்படுகிறதா?, கட்டாயத்தின் பேரில் சட்ட விதிமுறைக்கு மாறாக யோகா மையம் செயல்பட்டு வருகிறதா? என்ற விவரங்களையும் போலீசார், சமூக நலத்துறையினர் சேகரித்தனர்.
ஈஷா மையத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுவது முதன்முறையல்ல. 2016ஆம் ஆண்டில் மதுரை திருப்பாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் 12 இலட்சம் ரூபாய் பணம் கட்டி 2 மகன்களை ஈஷா மையத்தில் சேர்த்தார். சில மாதங்களிலேயே இருவரும் கடுமையாக மனநலம் பாதிக்கப்பட்டு வெளியேறினர். மொட்டை அடித்துக் கொள்வது, கழிவறைச் சுத்தம் செய்ய வைப்பது, மாட்டுச்சாணி அள்ள வைப்பது, மையத்தில் உள்ளவர்களின் துணிகளைத் துவைத்து தருவது, வெளிநாட்டவர் தங்கியுள்ள அறைகளைச் சுத்தம் செய்ய வைப்பது என சிறுவர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர்.
2014ஆம் ஆண்டில் ஈஷா மையத்திற்குச் சென்ற சுவீடனைச் சேர்ந்த ஜெயபால் என்ற பெண், தன்னிடம் நாலரை இலட்சம் ரூபாயைப் பிடுங்கிக் கொண்டதாக ஈஷா மையத்தின் மீது புகாரளித்தார். ஈஷா மையம் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்த ஜக்கி வாசுதேவ் மீது எக்கச்சக்கமான புகார்கள் உள்ளன. 48 ஆண்டுகளுக்கு முன்பு கோவை ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் இவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. அப்போது இவரோடு நெருக்கமாக இருந்தவர் ரவுடி ரிச்சர்டு. இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட பின்னர், ரவுடி ரிச்சர்டு கொலை செய்யப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்தும், ஈஷா மையத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் ஜக்கி வாசுதேவிடம் கேள்வி எழுப்பிய மூத்த பத்திரிகையாளர் பூபதி கண்ணன் 2011ஆம் ஆண்டில் ஈஷா மைய குண்டர்களால் தாக்கப்பட்டார். ஈஷா மையத்தில் ஜக்கியின் படங்கள், படம் பொறித்த பனியன்கள், வேட்டிகள், மாலைகள், நகைகள், லிங்கங்கள், உத்திராட்ச மாலை, ஸ்படிக லிங்கம் உள்ளிட்ட பொருட்கள் சந்தை மதிப்பை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இவற்றிற்கு சட்டவிரோதமாக ஒன்றிய அரசு வரி விலக்கு அளிக்கிறது. யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் எழுப்பியதையும் வனத்துறை கண்டும் காணாமல் இருக்கிறது. 4,27,700 சதுர மீட்டர் அளவில் வனப்பகுதியில் கட்டடங்களைக் கட்டியுள்ள ஈஷா மையம், இதுவரை “ஹாக்கா” (Hill Area Conservation Authority) அமைப்பிடம் அனுமதி வாங்கவில்லை.
அனுமதியில்லாமல் இயங்கும் ஈஷா மையத்திற்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க தனி அரசாணையே வெளியிடப்பட்டுள்ளது. காவேரி கூக்குரல் என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ் பல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களை வைத்து துவங்கிய திட்டத்தில் 10,626 கோடி ருபாய் ஊழல் நடந்ததாகவும் வழக்கு நிலுவையில் உள்ளது. மடக்காடு, முட்டத்துவயல், கரும்புக்காடு, முள்ளாங்காடு, பட்டியார்பதி, செம்மேடு, பச்சாம்வயல் உள்ளிட்ட பழங்குடி கிராம மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலம் ஈஷா மையத்திற்குள் இருப்பதாகவும் புகார் உள்ளது. அந்த இடத்தில்தான் 2016ஆம் ஆண்டில் பிரதமர் மோடி ஈஷாவில் திறந்துவைத்த ஆதியோகி சிலையும் உள்ளது. இதுபோல நூற்றுக்கணக்கான புகார்கள் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் மீது பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் பெரும் சமூக விரோதக் கூடாரமாகத் திகழும் ஈஷா மையம் நிரந்தரமாக மூடப்படுவதே ஒன்று, அப்பாவி மக்களை காக்கும் ஒரே வழி.
பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்