தலையங்கம் – அறிவியலைக் கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள்?
அறிவியலைக் கண்டு அஞ்சுகிறது மதவாதம்; உண்மையான விஞ்ஞானிகளை அடையாளப்படுத்தாமல் போலி அறிவியலைப் பரப்புவோருக்கு விஞ்ஞானி என்று மகுடம் சூட்டி விருது வழங்கத் தயாராகிறது ஒன்றிய பாஜக ஆட்சி. இதுவரை ஒன்றிய விஞ்ஞான அமைச்சகம், விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் முறையைத் திடீரென மாற்றியுள்ளது. அறிவியல் இயக்கங்கள் மற்றும் அறிவியலாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் தான் இத்தனை ஆண்டுகாலம் விருதுகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் அறிவியலில் சாதனை புரிந்த விஞ்ஞானிகள் விருதுகளைப் பெற்றுவந்தனர். இவர்கள் பாஜகவின் போலி அறிவியலையும், வரலாற்றுப் புரட்டுகளையும் ஏற்காமல் உண்மைகளை உரத்துப் பேசுகிறார்கள். அந்தக் கருத்துகள் சர்வதேச அளவில் மதவாத மூட நம்பிக்கை கருத்துகளை அம்பலப்படுத்தியது. அதன் காரணமாக விஞ்ஞானிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பைத் திடீரென மாற்றியமைத்திருக்கிறார்கள். விருதுகள் வழங்கப்படும் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படும் முறையிலும் மாற்றம் கொண்டுவந்துள்ளது ஒன்றிய பாஜக ஆட்சி. இனி விஞ்ஞான அமைச்சகத்தின் தனி அதிகாரியான முதன்மை அறிவியல் ஆலோசகர் மட்டுமே இது குறித்த முடிவுகளை எடுப்பார் என்றும் அறிவித்து அதற்கான விதிகளையும் மாற்றியமைத்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இணையத்தில் இதற்கான விதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானிகளின் பெயர்ப் பட்டியலில் இருந்து பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட அத்தனை விஞ்ஞானிகளும் ஒன்றிய ஆட்சியின் போலி அறிவியலுக்கு, வரலாற்றுப் புரட்டுகளுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளை முன் வைத்தவர்கள் என்று வாசுதேவன் முகுந்த் என்ற ஆய்வாளர் இந்து ஆங்கில நாளேட்டில் (01.10.2024) எழுதிய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒன்றிய விஞ்ஞான அமைச்சகம் அறிவியலுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதற்கு உயர்கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்திவருகிறது. அந்தக் கல்வி மய்யங்களில் அதிகாரத்தில் இருக்கும் மநுநீதியாளர்கள் இந்தத் திட்டங்களுக்கு செயல் வடிவம் தருகிறார்கள். இதற்கு ஏராளமான சான்றுகளை எடுத்துக்காட்ட முடியும். உதாரணத்திற்கு 2021ஆம் ஆண்டு கான்பூர் ஐ.ஐ.டி. வேத காலண்டர் ஒன்றை வெளியிட்டது. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தொல் பொருள் கண்டுபிடிப்புகளுக்கும் வேதங்களின் சாயத்தைப் பூசியது இந்தக் காலண்டர். ஹரப்பா, மொகஞ்சாதரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட ‘பசுபதி’ என்ற முத்திரைக்கு வேதகாலத்து சிவன் என்று இந்தக் காலண்டரில் குறிப்பிட்டார்கள். மற்றொன்று 2022இல் கான்பூர் ஐ.ஐ.டி ஆன்மீக குரு என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரைத் தனது ஆலோசகராக நியமித்தது. அவரது சீடர்களாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களை அதே ஐ.ஐ.டியில் மாணவர்களாக சேர்த்துக்கொண்டது. ‘வேத காலத்திலேயே ஜனநாயக ஆட்சி நடந்தது’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்துமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி) அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டது. அதுவும் அரசியலமைப்பு நாளான நவம்பர் 26ஆம் அன்று இந்தக் கருத்தரங்கை நடத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை கூறியது. கடந்த ஆண்டு அகில இந்திய மருத்துவ நிறுவனம் ஒரு கருத்தரங்கை நடத்தியது. கருத்தரங்கின் தலைப்பு “புராணங்களில் மருத்துவம் – விஞ்ஞானம்”. இந்தக் கருத்தரங்கில் மருத்துவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிலவுக்குச் சுற்றுலா செல்லும் அறிவியல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்திய ஆய்வு மய்யத்தின் தலைவர் எஸ். சோம்நாத் விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வதற்கு சமஸ்கிருத மொழி அறிவு பெரிதும் பயன்படுகிறது என்று கூறுகிறார். ஆனால் அதை நிரூபிப்பதற்கு எந்தச் சான்றையும் அவர் முன்வைக்கவில்லை. கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதற்குக் காரணம் அங்கு வாழ்ந்த மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டது தான் என்று வெட்கமில்லாமல் கூறுகிறார் மாண்டி ஐ.ஐ.டி. இயக்குநர் லட்சுமி தர் மெகாரா. அறிவியலை வளர்த்தெடுக்க வேண்டிய உயர்கல்வி மய்யங்கள் முறைகேடாக மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கு தான் பயன்படுகின்றன.
கொரோனாவை விரட்ட வீடுகளில் விளக்கேற்றச் சொன்னவர் தான் மோடி. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கூத்து நடந்திருக்கிறது. ஜெய்ப்பூர் ஹெரிட்டேஜ் நகர சபையில் சில உறுப்பினர்கள் காங்கிரசில் இருந்து விலகி சேர்ந்தார்கள். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களை சுத்தப்படுத்த பால் முகுந்த் ஆச்சாரியா என்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறியவர்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களை மாட்டு சிறுநீரான கோமியத்தைக் குடிக்க வைத்திருக்கிறார். அவர்கள் உடலின் மீது கங்கை நீரைத் தெளித்திருக்கிறார். மாட்டு மூத்திரமும் கங்கை நீரும் உடலின் மீது பட்டால் ஊழல் கறை மறைந்து போகும் என்று கூறி இந்தச் சடங்குகளை நடத்தி பாஜகவில் அவர்களை அனுமதித்து இருக்கிறார். இப்படிப்பட்ட கூத்துகள் தான் இந்த ஆட்சியில் நடைபெற்று வருகின்றன. பகுத்தறிவாளர்களும், விஞ்ஞானிகளும் இந்த மூடத்தனத்தை அம்பலப்படுத்துகிறார்கள் என்ற காரணத்தினால் தான் உண்மையான விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்குவது கூட இந்த ஆட்சியில் மறுக்கப்பட்டு வருகின்றது.
பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்