குமாரபாளையத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
நாமக்கல் : தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா மற்றும் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 22.09.2024 அன்று குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.
முதல் நிகழ்வாக பெரியாரியலாளர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. குமாரபாளையம் நகரக் கழகத் தலைவர் தண்டபாணி, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள்.
நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் கழகத் தலைவருக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.கே.குமார், நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் பயணாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
இதில் மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, வெண்ணந்தூர், காளிப்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நகரத் துணைச் செயலாளர் பி.மாதேஸ்வரன் நன்றி கூறினார்.
செப்டம்பர் 17ஆம் தேதி அன்று பெரியார் பிறந்தநாள் விழா இருசக்கர வாகனப் பேரணி குமாரபாளையம் காவேரி நகரில் தொடங்கியது. அங்கு கழகக் கொடியை ரேணுகா தேவி ஏற்றி வைத்தார். அடுத்ததாக பாலம் பிரிவு ரோட்டில் வெண்ணந்தூர் ராமச்சந்திரனும், பேருந்து நிலையம் அருகே சுமதி மணிராசும், எம்.ஜி.ஆர் நகரில் தேவி மாதேஸ்வரனும், கம்பன் நகர் காமராஜர் சிலை, கச்சேரி சமத்துவபுரம் பெரியார் சிலை உள்ளிட்ட இடங்களில் கழகக் கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரணியில் கேப்டன் அண்ணாதுரை தலைமையில் தண்டபாணி, வடிவேலு, மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, ராசிபுரம் பிடல் சேகுவாரா, காளிப்பட்டி பெரியண்ணன் மற்றும் பள்ளிபாளையம் பகுதித் தோழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்