தலையங்கம் – நூற்றாண்டு காணும் ஜாதி ஒழிப்புப் போராளி
ஜாதி ஒழிப்புக் களத்தில் உயிர்நீத்த மாவீரன் இமானுவேல் சேகரன் நூற்றாண்டு இது. தென் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடிய ஜாதிவெறிக்கு எதிராக மக்களைத் திரட்டி போராடிய மாவீரன். 1924, அக்டோபர் 09ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூரில் அவர் பிறந்தார். இராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக் காலங்களில் ஊருக்கு வரும் போது ஒடுக்கப்பட்ட மக்களின் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடினார். மக்களை அணிதிரட்டினார். ஒருகட்டத்தில் இராணுவத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஜாதி ஒழிப்புக் களத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டார். தேவேந்திர குல வேளாளர் என்ற ஜாதிப் பிரிவில் அவர் பிறந்தாலும் சுயஜாதியைக் கடந்து தீண்டாமையால் பாதிக்கப்பட்ட நாடார் உள்ளிட்ட அனைத்து ஜாதிகளையும் அவர் ஒருங்கிணைத்தார். 1953இல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை அவர் தொடங்கினார். ஜாதி ஒழிப்புடன் பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். கணவனை இழந்தப் பெண்கள் மறுமணம் செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் நேரடியாகச் சென்று பரப்புரை செய்தார். அன்றைய காலகட்டத்தில் இராஜகோபாலாச்சாரி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் போராட்டக் களத்தில் இறங்கினார். அதே கால கட்டத்தில் தென் மாவட்டங்களில் குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியவர் இமானுவேல் சேகரன். கிராமங்களில் உள்ள தேனீர் கடைகளில் நிலவிய இரட்டைக் குவளை முறையை எதிர்த்து இரட்டைக் குவளை உடைக்கும் போராட்டத்தை அவர் நடத்தினார். அதே வழியில் பெரியார் திராவிடர் கழகம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு தழுவிய இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டத்தை நடத்தியதையும் இங்கே நினைவுகூற வேண்டும். 1954இல் இரட்டைக் குவளை எதிர்ப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் அவர் நடத்தினார். தனது கணவர் பெரியார் கொள்கையில் ஈடுபாடுக் கொண்டவர். மிகச்சிறந்த பகுத்தறிவாளர் என்று அவரது மறைவுக்குப் பிறகு அவரது துணைவியார் அளித்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார். இராமநாதபுர மாவட்ட ஆதிக்க ஜாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களை அடிமைகளாக நடத்தினார்கள். ஜாதித் திமிரோடு 1919லும், பிறகு 1930லும் தீர்மானங்களாக இதை அறிவித்தார்கள். இதை எதிர்த்து 1930இல் அமராவதி புதூரில் ‘சட்டைக் கட்சி’ என்ற பெயரில் ‘சட்டை போடும் உரிமை’ மாநாடு ஒன்று நடந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் காலில் செருப்பு அணியக் கூடாது, தோளில் துண்டு அணியக்கூடாது, முழங்காலுக்குக் கீழே வேட்டிக் கட்டக் கூடாது, குடை பிடிக்கக் கூடாது, பள்ளிக்கூடங்களுக்குப் போகக் கூடாது, ஆண்டைகளின் ஆடு, மாடுகளை மேய்க்க வேண்டும் என்ற அடிமைக் கட்டளைகளை அவர்கள் திணித்தார்கள். இதுவே கிராமப் பண்பாடு என்று அச்சுறுத்தினார்கள். இதை எதிர்த்துப் போராடினார் இமானுவேல் சேகரன். 1946, டிசம்பர் 26ஆம் நாள் மதுரை விக்டோரியா அரங்கில் அம்பேத்கர் உரையாற்றுவதற்கு வருகை தந்த போது இமானுவேல் அவரைச் சந்தித்து ஜாதிய ஒடுக்குமுறைகளைப் பகிர்ந்து கொண்டார். கிராமம் கிராமமாக மக்களிடம் சென்று விழிப்புணர்வு பரப்புரைகளை அவர் மேற்கொண்டார். ஃபார்வேடு பிளாக் கட்சித் தலைவர் முத்துராமலிங்கத் தேவர், மிகுந்த செல்வாக்கோடு அப்பகுதியில் வலம்வந்துகொண்டிருந்தார். அவரது ஃபார்வேடு பிளாக் கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி இருந்தது. ஃபார்வேடு பிளாக் கட்சித் திணித்த ஜாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி இமானுவேலைத் தனது கட்சிக்குள் இணைத்துக் கொண்டது. 1954இல் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரசில் இணைந்த பிறகும் தேவேந்திரர் அரசியல் மாநாட்டை முதுகுளத்தூரில் நடத்தி ஜாதி ஆதிக்க சக்திகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். 1956, டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்த பெருவாரியான மக்களைத் திரட்டினார் இமானுவேல் சேகரன். ஜாதி ஆதிக்கத்துக்கு கடும் நெருக்கடிகளை அவர் உருவாக்கினார். 1957இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனித் தொகுதியில் இமானுவேலை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டது. அதற்காகக் கிருஸ்துவத்தில் இருந்து விலகி இந்து மதத்திற்கு மாறி, இமானுவேல் என்ற தனது பெயருடன் சேகரன் என்பதை இணைத்துக் கொண்டார். ஆனாலும் அந்தத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. முத்துராமலிங்கத் தேவர் கைகாட்டும் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்ற நிலை நீடித்திருந்தது. இதை எதிர்த்து இமானுவேல் சவால் விட்டார். 1957இல் முதுகுளத்தூர் தனித் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் தன்னுடைய தலித் வேட்பாளரை நிறுத்தி முத்துராமலிங்கத் தேவர் நிறுத்திய தலித் வேட்பாளரைத் தோற்கடித்தார். ஜாதி ஆதிக்க வெறி தலைத்தூக்கியது. பெரும் கலவரம் வெடித்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் சி.வி.ஆர்.பணிக்கர், 1957 செப்டம்பர் 10இல் சமாதானக் கூட்டத்தைக் கூட்டினார். தேவர்கள் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் இமானுவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஒரு கட்டத்தில் இமானுவேல் சேகரனுக்கும், முத்துராமலிங்கத் தேவருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மறுநாள் செப்டம்பர் 11ஆம் தேதி, தனது வீட்டின் அருகே இருந்த பெட்டிக்கடை முன்பு ஜாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 32. படுகொலையைத் தொடர்ந்து முதுகுளத்தூர் பற்றி எரிந்தது. இரு தரப்பிலும் மரணங்கள் – துப்பாக்கிச்சூடுகள் நடந்தன. இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் விரிவான அறிக்கையை அரசு சார்பில் தாக்கல் செய்தார். (1957, அக்டோபர் 21) தனக்குச் சரிசமமாக இமானுவேல் பங்கேற்றுப் பேசியதையும், விவாதம் செய்ததையும் முத்துராமலிங்கத் தேவர் விரும்பவில்லை. அதுவே கலவரத்துக்குக் காரணமாயிற்று என்று அரசின் அறிக்கை கூறியது. முதுகுளத்தூர் கலவரம் தமிழ்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பியது. அப்போது பெரியார் ஒருவர் மட்டும் தான் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக, இமானுவேல் சேகரனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார். இது குறித்து ‘முதுகுளத்தூர் கலவரம்’ வரலாற்றை எழுதிய பத்திரிகையாளர் தினகரன், தனது நூலில் இவ்வாறு பதிவு செய்துள்ளார். “இன்று மட்டுமல்ல முதுகுளத்தூர் கலவரம் காலம் முதல் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு வெளிப்படையான – உறுதியான ஆதரவை எந்தவொரு அரசியல் கட்சியும் தந்தது இல்லை. தங்களது வாக்கு வங்கிக்காக ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்தும் நோக்கில் மட்டுமே அரசியல் கட்சிகளும், வலதுசாரி – இடதுசாரி கட்சிகளும் பாசாங்கு செய்துவருகின்றனர். விதிவிலக்காக திராவிடர் கழகமும், விடுதலை நாளேடும் மட்டுமே அன்றைய சூழலில் ஆதரவு தளத்தில் செயல்பட்டன” என்று பதிவு செய்துள்ளார் தினகரன். அதுமட்டுமின்றி விடுதலை நாளேடு அப்போராட்டக் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இமானுவேல் சேகரனை ஆதரித்தும், முத்துராமலிங்கத் தேவரை எதிர்த்தும் வெளியிட்ட செய்திகளையும் – தலையங்கங்களையும் நூலில் இணைப்பாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார் (தினகரன் சுயஜாதி மறுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். அதனால் சொந்த மறவர் ஜாதியினாராலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார்) முதுகுளத்தூர் கலவரம் பற்றிப் பேராசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் ஒரு நூலை எழுதியுள்ளார். காந்தியத்தில் தீவிரப் பற்று கொண்ட டி.எஸ்.சொக்கலிங்கம், தமிழ்நாடு – மணிக்கொடி இதழ்களில் பணியாற்றியதோடு தினமணி இதழில் முதல் ஆசிரியராகவும் இருந்தவர். அவரும் முதுகுளத்தூர் கலவரத்தில் பெரியாரின் குரல் மட்டுமே தனித்து ஒலித்தது என்று பதிவு செய்திருக்கிறார். அந்த நூலில் பின் இணைப்பாக கலவர நாட்களில் விடுதலையில் வந்த செய்திகளை அப்படியே பிரதி எடுத்து 100 பக்கங்களில் அதை வெளியிட்டு இருக்கிறார். பெரியார் 1957, நவம்பர் 26இல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரிக்கும் போராட்டத்திற்கு வித்திட்டதே முதுகுளத்தூர் கலவரம் தான். இதை விடுதலை ஏடே பதிவு செய்திருக்கிறது. 11.11.1957இல் வெளிவந்த விடுதலை தலையங்கம் வேறு பக்கத்தில் வெளியிட்டுள்ளோம். 33 வயதில் ஜாதி ஒழிப்புக் களத்தில் வீரமரணத்தைத் தழுவிய இமானுவேல் ஊட்டிய அந்த உணர்வை இளைய தலைமுறை நெஞ்சில் ஏந்த வேண்டும். சுயஜாதி உணர்வுகளைக் கடந்து ஜாதி ஒழிப்பு இயக்கத்தை முன்னெடுப்பதுதான் இமானுவேல் சேகரனுக்கு நாம் செலுத்தும் வீரவணக்கம்.
பெரியார் முழக்கம் 17.10.2024 இதழ்