மனிதம் தழைத்தோங்கும் தமிழ்நாடு!
இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு கலைஞர், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் பெறும் மகத்தான திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர்களுக்கு, இறுதி நிகழ்வின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்தகைய முன்னெடுப்புகளால், தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 8 மாதங்களில் 1086 உடல் உறுப்புகள் அரசுக்குத் தானமாகக் கிடைத்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் அறிவித்த முதல் 11 மாதத்தில் மட்டும் இதுவரை 192 பேர், உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல், கார்னியா என மொத்தம் 1086 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சாதனை ஆகும். 2023ஆம் ஆண்டு 178 நபர்களும், 2022ஆம் ஆண்டு 156 நபர்களும், 2021ஆம் ஆண்டு 60 நபர்களும், 2020ஆம் ஆண்டு 55, 2019ஆம் ஆண்டு 127 நபர்களும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு உடல் உறுப்பு அளிப்பதாக 6775 நபர்கள் உறுதி அளித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது உடல் உறுப்புகளைக் கொடையளிக்கப் பதிவு செய்திருப்பதாக, அண்மையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் உடற்கொடை வழங்க முன்வந்து பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்