முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா
மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா முடிவெய்தினார். அவரது உடலில் 90 சதவீத உறுப்புகள் செயலிழந்தவை. சக்கர நாற்காலியிலேயே அவரது வாழ்க்கை நகர்ந்தது. மாவோயிஸ்ட் நூல்களை தனது வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை இணைந்து அவரை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. 3592 நாட்கள் சிறையில் கழித்தார். அவர் செய்த குற்றமே மாவோயிசம் சம்பந்தப்பட்ட நூல்களை தனது அறையில் வைத்திருந்தார் என்பது தான். அந்த நூல்களை ரகசியமாக சுற்றுக்கு அனுப்பி நாட்டை உடைப்பதற்கு சதி செய்தார் என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 3592 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு அவரிடம் அப்படி நூல்கள் கைப்பற்றுவதற்கான ஆதாரமே இல்லை என கூறி உச்சநீதிமன்றம் அவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. சிறைக்கு சென்ற பின் கடுமையான நோய் உபாதைகளுக்கு உள்ளானார். எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கழிவறைக்கு போகும் போது கூட யாரோ ஒருவர் அவரை தூக்கி வைத்து உட்கார வைக்கும் அவல நிலை தான் இருந்தது. தனிமைச் சிறையில் இருந்ததால் மனநலம் பாதிப்பிற்குள்ளானார். அவருடைய அரசியல் வாழ்க்கையே இட ஒதுக்கீட்டுக்காகத்தான் தொடங்கியது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் என்ற ஊரில் பிறந்த அவர், ஆந்திர பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது மண்டல் பரிந்துரைகளை ஆதரித்து மாணவர் இயக்கத்தின் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான சமூகநீதிப் போராட்டங்களை முன்னெடுத்தார். சிறை கைதிகள் – ஆதிவாசிகளின் உரிமைகளுக்காகவும், தனித் தெலுங்கானாவுக்கான போராட்டங்களையும் தொடர்ச்சியாக நடத்திவந்தார். டெல்லி பல்கலையில் பேராசிரியாக இருந்த போதுதான் இந்த கைது நடவடிக்கை நிகழ்ந்தது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு சில சிக்கல்கள் எழுந்த போது மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வந்தது. எந்தனையோ போராளிகள் மக்களுக்காக போராடி ஊடக வெளிச்சத்துக்கு வராதவர்களாக தங்களை மிகப்பெரிய தியாகத்திற்கு அர்பணித்துள்ளனர். மாவோயிசம் என்பது ஒரு தத்துவம், அந்த தத்துவத்தை படிப்பது ஒரு குற்றமா? இது குற்றம் என்றால்? கீதை என்ன சொல்கிறது? சண்டை போடு! போராடு! எதிரில் நிற்பவன் உறவினர் என்று பார்க்காதே, அவனை கொலை செய். கொலை செய்வது பாவமல்ல, ஆத்மா அழியாது என்றெல்லாம் கொலையை தூண்டுகிற, போரை தூண்டுகிற ஒரு இலக்கியத்தை வீட்டில் வைத்து வணங்குவது புனிதம். ஆனால் மாவோயிசம் என்ற தத்துவத்தை படிப்பது மட்டும் தேச துரோகமா? தேச துரோகி என்று குற்றம் சாட்டப்பட்ட சய்பாபவை விட உண்மையான தேச பக்தர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. அந்த போராளிக்கு நமது புகழ் வணக்கத்தை செலுத்துவோம்.
பெரியார் முழக்கம் 17.10.2024 இதழ்