ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

‘அது என்னப்பா! ஆர்.எஸ்.எஸ் பேரணியில அமைச்சர் முருகன் சீருடையுடன் போஸ் குடுக்குறாரு. தமிழிசையும், வானதியும் காணோமே என்றார் ஒரு நண்பர். ஆமாம் அப்படித்தான். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை ஊடகங்கள் ஒளிபரப்பின. காக்கி பேண்ட் – குல்லாவுடன் நடந்தார்கள். ஒரு பெண்ணை மருந்துக்குக் கூட காணவில்லை . அது ‘ஆர்.எஸ்.எஸ் ஆண்கள்’ மட்டும் பேரணி. ஏதோ ஒரு சுயம் சேவக்கைப் பிடித்து அவருக்கு பெண் வேடம் போட்டுக்கூட அழைத்து வந்திருக்கலாம். அதற்கும் தயாராக இல்லை.
பெண்கள் விண்வெளிக்குப் போகிறார்கள். பல மாதங்கள் சந்திர மண்டலத்தில் எங்களால் வாழ முடியும் என்று சாதனை படைக்கிறார்கள். இராணுவக் கமாண்டர்களாக வருகிறார்கள். குடியரசுத் தலைவராகக் கூட வரலாம், ஆனால் அதே பெண் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக மட்டும் முடியாது. சனாதன தர்மம் அப்படி ஒரு இரும்புக் கோட்டை.
‘என்னப்பா இது; தமிழிசையும் வானதியும் ஒவ்வொரு நாளும் இந்து தர்மத்துக்காக முழங்குறாங்க, ஆனா அவங்க தாய் அமைப்பு பேரணிக்குள் வராதே என்று தடை போடுது என்று கேட்கக் கூடாது. கேட்டாலும் அப்படி என்ன சொல்லுவார்கள்?
’சார், இது நூறு வருச மரபு, நாங்கள் பெண்களை ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்ப்பது கிடையாது. பாரதத் தாயின் மீது நாங்கள் சத்தியம் செய்திருக்கிறோம். இந்து தர்மத்துக்கு பெண்கள் தீட்டு. அவர்கள் வேதம் ஓதக்கூடாது. அர்ச்சகராகக் கூடாது. சடங்குகள் புண்ணியக் காரியங்கள் செய்யக்கூடாது. இது அரசியல் கட்சியல்ல; அரசியலில் அவர்கள் வேண்டுமானால் அமைச்சராகட்டும், தலைவராகட்டும், கவர்னர் ஆகட்டும், எங்களுக்கு அது பற்றி கவலையில்லை. எங்கள் தர்மம் பெண்களைத் தீண்டாமைப் பட்டியலில் வைத்திருக்கிறது என்று தான் பதில் கூற வேண்டும். ஆனால் அப்படி வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். இது ஒரு ‘நிர்வாகப் பிரச்சனை, எங்கள் அமைப்பு பிரச்சனை, நீங்கள் தலையிட வேண்டாம்’ என்று பூசி முழுகி காதில் பூ சுற்றப் பார்ப்பார்கள். ஆனால் உண்மையைத் திரை போட்டு மறைத்துவிட முடியாது. சனாதன தர்மத்தில் தீண்டாமைக்கு இடமில்லை என்று பேசுகிறவர்களுக்கு இதோ பார் பெண்கள் தீண்டாமை என்று நெற்றியில் அடித்து பதில் கூறிவிட்டது ஆர்.எஸ்.எஸ்.
காலம் மாறிவருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
1. தொடக்கத்தில் ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை ஏற்றினார்கள். பின்னர் அதை கைவிட்டனர்.
2. தேசியக் கொடியை ஏற்றவே முடியாது என்ற அடம்பிடித்தார்கள். பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார்கள்.
3. அரைக் கால் சட்டையே எங்கள் சீருடை என்றார்கள். இப்போது முழுக்கால் சட்டையாக அது மாறிவிட்டது.
4. சித்பவன் ‘பிராமணர்’ மட்டுமே எங்கள் தலைவர் என்றார்கள். பிறகு இந்து ராஷ்டிரத்தை ஏற்றுக்கொண்ட பிராமணல்லாதாரும் தலைவர் ஆகலாம் என்று கூறினார்கள்.
5. கையில் தடியுடன் தான் அணிவகுப்போம் என்றார்கள். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தடியையும் கைவிட்டார்கள்.
6. பிரார்த்தனைப் பாடலையும் மாற்றிவிட்டார்கள். ஆனால் பெண்களை சுயம் சேவக்குகளாக மட்டும் அனுமதிக்க மாட்டோம். எவ்வளவு கால மாற்றம் வந்தாலும் இந்தச் சனாதன தர்மத்தில் கைவைக்கவே மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள்.
மோகன் பகவத் கடந்த வாரம் இராஜஸ்தானில் கோட்டாவில் பேசும் போது ஒன்றைக் கூறியிருக்கிறார். இந்து என்ற பெயர் வருவதற்கு முன்பே நாம் வாழ்ந்திருக்கிறோம். நாம் வாழ்ந்ததற்கு பிறகு தான் இந்து என்ற பெயரே நமக்குச் சூட்டப்பட்டது என்று கூறியிருக்கிறார். அதாவது முன்னாள் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ என்பது போல பின்னால் இந்துக்கள் என்கிறார் போலும். இந்து மதத்துக்கு முன்பே சனாதனம் வந்துவிட்டது என்பதாகவே நாம் புரிந்து கொள்ளலாம். அந்தச் சனாதனம் தான் பெண்களைத் தீட்டு என்று ஒதுக்குகிறது. அதே பகவத் மற்றொரு அழைப்பையும் விட்டிருக்கிறார்.
மொழி, ஜாதி, பிராந்தியம் எல்லாவற்றையும் களைந்து சனாதன இந்து மதத்தைக் காப்பாற்ற ஆர்.எஸ்.எஸ்-இல் சேருங்கள் என்கிறது அந்த அறைகூவல். இது இந்துமத ஆண்களுக்கு மட்டும் தான்.
‘சூத்திர’ தமிழிசைகளே!, ‘சூத்திர’ வானதிகளே! ‘பிராமண’ நிர்மலாக்களே! சனாதன பெண் புலிகளே! நீங்கள் பேசும் சனாதனத்தில் உங்களின் நிலை என்ன? தீண்டப்படாதவர்கள்.
– கோடங்குடி மாரிமுத்து
பெரியார் முழக்கம் 10.10.2024 இதழ்

You may also like...