பெரியாரை நோக்கி திரளும் இளைஞர்கள் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் அமோக விற்பனை!
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்கள் இளைஞர்களைக் கவர்ந்து நிற்கின்றது என்று “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. 18லிருந்து 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கூட்டம் பெரியார் நூல் விற்பனைக் கடைகளில் அலைமோதுகிறது. அதே நேரத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பக்தி, ஆன்மீக நூலை வாங்குகிறார்கள் என்றும் அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. பெரியாரிய – கடவுள் மறுப்புக் கொள்கையில் இளம் வயது முதல் ஈர்க்கப்பட்டேன் என்று தனியார் கல்லூரியில் பணியாற்றும் 27 வயது இளைஞர் சவுமியா நாராயணசாமி கூறுகிறார். மதத்தோடு ஜாதி பிணைந்திருக்கிறது என்று அந்த நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில் சமூகம், ஜாதி, மதம், பெண்ணடிமை கருத்துகளில் மூழ்கிக் கிடந்தது. “தமிழ்நாட்டு வரலாற்றில் சமூகத்தை வர்ணாஸ்ரமும், ஜாதியும் ஊடுறுவி சிதைத்தது. இப்போது மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். மாற்றம் தொடங்கிவிட்டது” என்கிறார் 19 வயது இளைஞர் கருணாகரன். தமிழ் இலக்கியப் பட்டப் படிப்பில் அவர் முதலாம் ஆண்டு படிக்கிறார். கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் பெரியார் நூல்கள் விற்பனை ஆகின்றன. அண்மைக் காலமாக இளைஞர்கள் பெரியார் கொள்கை மீது மிகுந்த ஈடுபாடு ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று பெரியார் பதிப்பக நிர்வாகி சக்திவேல் கூறுகிறார். 120க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் பெரியார் நூல்கள் விற்பனைக்கு உள்ளன. புராணம், யோகம், மந்திரம் தொடர்பான நூல்களை 50 வயதுக்கு மேற்பட்டோர் வாங்குகிறார்கள் என்கிறார் ‘சின்மயானந்தா நிறுவன’ நிர்வாகி சாய் தேஜா.
பெரியார் முழக்கம் 09012025 இதழ்
