காலஞ்சென்ற தோழர் ஏ.ஆர். சிவானந்தம் வாழ்க்கை வரலாறு
உள்ளம் உவந்த உணர்ச்சியது வழியே கள்ளம் இன்றிக் காலங் கடத்தியவருள் தோழர் சிவானந்தம் ஒருவராவார். கரூர் தாலூகாவில் அரவக்குரிச்சியில் தோழர் இராமசாமி முதலியாரது திருமகனாக, 1884ம் ஆண்டிற் பிறந்தார். தோழர் இராமசாமி முதலியார் தொண்டை மண்டல வேளாள மரபினர். மிக்க செல்வந்தர். பிரபல மிராசுதாரருமாவர். தோழர் சிவாநந்தம் பண்டை முறைப்படி தமிழ்க்கல்வி நன்கு பயின்று தமது 20-வது வயதிலேயே குடும்ப பாரத்தையும் தாங்கலாயினார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான்” என்னும் தமிழ் மறையின் தூய கொள்கையை நிலைபெறச் செய்ய வேண்டுமென்னும் உண்மை நோக்குடன் அவர் தமது 20-வது வயதில் பொது வாழ்க்கையிற் பெரிதும் ஈடுபடலாயினார். இயற்கையிலேயே ஏழைகளிடமும், தாழ்த்தப்பட்டோர்களிடமும் அளவற்ற பரிவும் அன்பும் உடையவர். இளமை தொட்டே தீண்டாமை, ஜாதி ஆணவம் முதலியவற்றை உள்ளூர வெறுத்து வந்தார். இவைகளே, மக்களுள் பிரிவினை உணர்த்தும் வன்பகையென்றும், இந்திய சமுதாயத்தை அரித்து வருங் கொடும் புழுக்களென்றும் உணர்ந்தவர்....