ஜனநாயகமா? தடிநாயகமா?
ஜனநாயகம் அல்லது குடி அரசு தோல்வியடைந்து விட்டது. முடி அரசு அல்லது யதேச்சாதிகார ஆட்சிதான் சிறந்தது என்கிறார் அந்தப் பழைய ஹோம்ரூல் வாதி திருவிதாங்கூர் திவான் ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர், ஆனிபெசண்டு அம்மையாரின் பிரதம தளகர்த்தராய்- வலக்கையாய் இருந்த தோழர் ஸி.பி. ராமசாமி அய்யர் இப்பொழுது இவ்வாறு கூறக் காரணம் என்ன? அவரது சொக்காரரான சென்னை அக்ரகார மந்திரிகளின் யதேச்சாதிகாரப் போக்கைப் பார்த்து – ஹிட்லரிஸத்தைக் கண்டு வெறுப்படைந்து தான் அவர் ஒருகால் அப்படிச் சொல்லுகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஜனநாயக ஆட்சி நல்லதுதான். இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஆட்சிகளில் அதுவே சிறந்த ஆட்சியாம். அதைக் கண்டிப்பவர்கள் பிரதியாக ஒரு நல்ல ஆட்சிமுறையை இதுவரைக் கண்டு பிடிக்கவில்லையாம். இவை ஜனநாயக பக்தர்கள் கூறும் வாதங்கள். ஆனால் ஜனநாயக ஆட்சியை நடத்தி வைப்போர் ஜனநாயக தத்துவத்தையே அறியாமலிருந்தால் – அல்லது அறிந்திருந்தும் வேண்டுமென்றே யதேச்சாதிகாரத் தோரணையில் தர்பார் நடத்தினால் – அதைப் போன்ற ஆபத்தான ஆட்சி முறை இல்லை என்று தைரியமாகக் கூறி விடலாம். யதேச்சாதிகாரக் கிறுக்கர்களிடம் ஜனநாயகத்தை ஒப்படைப்பது குரங்கின் கையில் கூரிய கத்தியைக் கொடுக்கும் செயலாகவே முடியும்.
~subhead
அக்கிரமச் செயல்
~shend
சென்னை மாகாணப் பிரதம மந்திரி, பதவி ஏற்ற முதல் தினத்திலேயே ஜனநாயக ஆட்சி நடத்த லாயக்கற்றவர் என காட்டிக் கொண்டார். எந்த ஜனநாயக நாட்டிலும் காண முடியாத ஒரு அக்கிரமச் செயலை அவர் வெகு துணிச்சலாகச் செய்தார். அதாவது காங்கரஸ்காரரால் “துரோகி” என புறக்கணிக்கப்பட்ட ஒருவரை மேல் சபைக்கு நியமனம் செய்து மந்திரியாகவும் ஆக்கிக் கொண்டார். தம்மை மந்திரி பீடத்தில் ஏற்றி வைத்த வாக்காளரிடம் அவருக்கு எள்ளத்தனையாவது மதிப்பிருந்தால் – தாம் எந்த ஸ்தாபனத்தின் தலைவர் என்ற ஹோதாவில் மந்திரி பதவி பெற்றாரோ அந்த ஸ்தாபனத்தின் நற்பெயரில் அவருக்கு கடுகத்தனையாவது கவலையிருந்தால் – ஜனநாயக தத்துவத்துக்கு முரணாக நாமினேஷன் மெம்பர் ஒருவரை மந்திரியாக்கி யிருக்கவே மாட்டார். தமக்கு இஷ்டமானவரை மந்திரியாக நியமித்து 6 மாத காலத்துக்குள் தேர்தல் மூலம் அசம்பிளி மெம்பராகவோ கெளன்சில் மெம்பராகவோ ஆக்கிக் கொள்ள பிரதம மந்திரிக்கு சட்டப்படி அதிகாரமுண்டு. பொதுத் தேர்தலில் மஞ்சள் பெட்டியை நிரப்பியவர்கள் எல்லாம் உப தேர்தலிலும் தடையின்றி மஞ்சள் பெட்டியை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை தோழர் ஆச்சாரியாருக்கு இருந்திருந்தால் டாக்டர் ராஜனை மந்திரியாக்கி ஒரு உப தேர்தல் மூலம் அவரை கெளண்சிலிலோ, அசெம்பிளியிலோ கொண்டு வர முயன்று இருக்கலாம். அவ்வாறு செய்ய அவர் ஏன் முயலவில்லை? டாக்டர் ராஜனை மந்திரியாக்கி ஒரு உபதேர்தலில் போட்டி போடும்படி நிறுத்தினால் தென்னாட்டு வாக்காளர் அவரை ஆதரிக்க மாட்டார்கள் என அவர் உணர்ந்திருக்க வேண்டும். ஏன்? அவரது செயல் அவ்வளவு அரசியல் ஒழுக்க ஹீனமானது; ஆபாசமானது; நேர்மையற்றது. அவரது சம்மந்தியார் இப்பொழுது உபதேசம் செய்வது போல பிரதி தினமும் “ஆத்ம பரிசோதனை” செய்து தம்மை சுத்தம் செய்யும் வழக்கம் தோழர் ஆச்சாரியாருக்கு இருந்திருந்தால் தமது நண்பருக்கு சலுகை காட்டும் பொருட்டு இவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கமாட்டார்.
~subhead
அன்றே தெரிந்தது
~shend
டாக்டர் ராஜனை மந்திரியாக்கிய அன்றே தோழர் ஆச்சாரியாரின் மந்திரி தர்பார் எவ்வாறு இருக்கக் கூடுமென்பதை தென்னாட்டு மக்கள் உணர்ந்து கொண்டார்கள். கனம் ஆச்சாரியார் பதவியேற்ற அன்று முதல் இன்று வரை தலைகீழ் தர்பாரே நடத்தி வருகிறார். சட்ட சபையில் அவரை ஆதரிப்பவர்கள் பொம்மைகளாக இருந்து வருவதினால் அவரது யதேச்சாதிகாரம் முட்டின்றி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பொதுஜன அபிப்பிராயத்தை அவர் லட்சியம் செய்வதேஇல்லை. பொது ஜன அபிப்பிராயத்தை அவர் புல்லாக மதித்திருப்பதற்கு சேலம் சம்பவமும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சேலம் தண்ணீர்த்திட்ட விஷயமாக ஆச்சாரியார் மந்திரிசபை நடந்து கொள்ளும் தோரணை எந்த மந்திரி சபைக்கும் மதிப்பளிக்கக் கூடியதே அல்ல. வெள்ளைக் காக்காய் பறக்கிறது என ஆச்சாரியார் சொன்னால், “ஆமாம்” “ஆமாம்!” “நானும் கண்டேன்” என ஒப்புக் கொள்ள ஒரு மானங்கெட்ட கூட்டம் அசம்பிளியில் தனக்கு துணையாக இருக்கும் மமதையினால் சேலம் தண்ணீர் திட்ட விஷயமாக தோழர் ஆச்சாரியார் செய்யும் அட்டூழியம் ஹிட்லரிசத்தைவிட மிகவும் கொடுமையானது, பயங்கரமானது.
~subhead
சேலம் கதை
~shend
மேட்டூர் முதல் நங்கைவள்ளி வரை 7 மைல் தூரம் குழாய் அமைக்க நவம்பர் ஆரம்பத்துக்கு முன் டெண்டர் சமர்ப்பிக்க வேண்டுமென்று 1937 செப்டம்பரில் சேலம் நகரசபையார் விளம்பரம் செய்தார்கள்.
அவ்விளம்பரப்படி கிடைத்த டெண்டர்களை உடைத்துப் பரீசிலனை செய்யும் முன்னமேயே 1937 ஜúலை 7-ந் தேதி ஜி.ஓ. உத்தரவை ரத்து செய்து ஹியூம் குழாய்களுக்கு பதிலாக வார்ப்படக் குழாய்களை உபயோகப்படுத்த சர்க்கார் அனுமதி தர வேண்டுமென்று சேலம் நகரசபையார் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அந்த தீர்மானத்துக்கு பதிலளிக்கு முகத்தான் ஜúலை 7 -ந் தேதி ஜி.ஓ. உத்தரவை மாற்ற முடியாதென்று 1937 டிசம்பர் 4 -ந் தேதி கனம் ஆச்சாரியார் சர்க்கார் தெரிவித்தனர்.
எனவே 1937 டிசம்பர் 4 -ந் தேதி வரை ஹியூம் குழாய்கள் ஆச்சாரியார் சர்க்காருக்கு திருப்தியளிக்கக் கூடியவைகளாகவே இருந்திருக்கின்றன.
அப்பால் பத்ராவதி கம்பெனியாரின் வார்ப்படக் குழாய் டெண்டர் உட்பட எல்லா டெண்டர்களையும் சானிட்டரி இஞ்சினீயருக்கு அனுப்பி அவைகளைப் பரிசீலனை செய்து சிபார்சு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
சானிட்டரி இன்சினீயர் அந்த டெண்டர்களைப் பரிசீலனை செய்து மூன்று டெண்டர்களே சர்க்கார் விதிப்படி பூரணமானவை என்றும் அம்மூன்றிலும்
இந்தியன் ஹியூம் கம்பெனியார் டெண்டர்களே நயமும் மலிவும் ஆனவையென்றும் பத்ராவதி கம்பெனி டெண்டர் சர்க்கார் நிபந்தனைப்படி எழுதப்படவில்லை யென்றும் சில அயிட்டங்கள் குறைவாக இருக்கின்றனவென்றும்
~subhead
1937 டிசம்பர் 2ந்தேதி சர்க்காருக்குத் தெரிவித்தார்.
~shend
ஆகவே 1937 டிசம்பர் 21ந் தேதி பத்ராவதி கம்பெனியார் டெண்டரை சானிட்டரி இஞ்சினீயர் ஒப்புக் கொள்ளவில்லை யென்பது வெளிப்படை.
நிலைமை இப்படி யிருந்தும் “பத்ராவதி கம்பெனி டெண்டரை ஒப்புக் கொள்வதாய் சர்க்கார் முடிவு செய்து விட்டதாயும் அந்த டெண்டரையே நகர சபையார் டிசம்பர் 30ந்தேதிக்குள் ஒப்புக் கொள்ள வேண்டுமென்றும் 1937 டிசம்பர் 30ந்தேதி தந்தி மூலம் சர்க்கார் சேலம் நகரசபையாருக்கு தெரிவிக்கக் காரணம் என்ன?
~subhead
அவசரப்படக் காரணம் என்ன?
~shend
அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய முடியாதெனக் கூறி தலைவர், உபதலைவர் உட்பட 11 பேர் ராஜிநாமாச் செய்த பிறகு சர்க்கார் உத்தரவை ஒப்புக் கொள்ளுமாறு செய்ய நாண் அபிஷ்யல் தலைவர் தலைமையில் இரண்டு மூன்று கூட்டங்கள் கூடியும் கோரம் இல்லாமல் போகவே நகரசபையின் கடைசி நாளான மார்ச்சு 31ந் தேதி சர்க்கார் உத்தியோகஸ்தரான நாண் அபிஷ்யல் தலைவர் தலைமையில் கூடிய ஒரு போலிக் கூட்டத்தில் சர்க்கார் உத்தரவை ஒப்புக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது ஜனநாயக முறைக்கு அடுத்ததா? லட்சக்கணக்கான ரூபாய் செலவு பிடிக்கக்கூடிய விஷயத்தில் இவ்வளவு கண்மூடித்தனமாய் நடந்து கொள்வதை ஜனநாயகப் பற்றுடைய எந்த மந்திரிசபையாவது ஆதரிக்குமோ?
ஏப்ரல் 30 -ந் தேதி தேர்தலில் வெற்றி பெரும் நகரசபை மெம்பர்கள் மே மாதத்தில் கூடும் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை முடிவு செய்து கொள்ளட்டும் என ஆச்சாரியார் சர்க்கார் ஏன் ஒத்திவைக்கவில்லை?
நிபுணர்கள் அபிப்பிராயம் சிமெண்டு பூசிய ஹியூம் கம்பெனி குழாய்களுக்கு ஆதரவாக இருந்தும் பத்ராவதி கம்பெனியார் குழாய்களுக்கு ஆதரவாக மந்திரிமார் சலுகையைத் தவிர வேறு யோக்கியதைகள் இல்லாமல் இருந்தும், தமது முன் உத்தரவுகளுக்கு மாறாக பத்ராவதிக்கு கம்பெனி குழாய்களையே சேலம் தண்ணீர்த் திட்டத்துக்கு உபயோகம் செய்ய வேண்டும் என்று கனம் ஆச்சாரியார் பிடிவாதம் செய்வதற்கு விசேஷ காரணங்கள் ஏதாவது இருக்க வேண்டுமென்று சாமானிய ஜனங்கள் எண்ணினால் அது தப்பாகுமா? மற்றும் மாஜி மந்திரி தோழர் எஸ். முத்தைய முதலியார் சேலம் தண்ணீர் திட்டத் தகராறு விஷயமாக எழுதிய ஒரு கடிதம் வேறிடத்து வெளிவருகிறது. அதில் கேட்கப்பட்டிருக்கும் ஆணித்தரமான கேள்விகளுக்கு தோழர் ஆச்சாரியார் பதிலளிக்க முன் வருவாரா? அதில் அடங்கியுள்ள சில புது விஷயங்களையும் வாசகர்கள் படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மந்திரிமார்களில் ஒருவரின் பந்துவுக்கோ, நண்பருக்கோ பத்திராவதிக் கம்பெனியாரோடு தொடர்பிருப்பதாக சேலம் ஜனங்கள் சரியாகவோ, தப்பாகவோ பேசிக் கொள்கையில் அவர்களது பேச்சுக்குப் பொருளும், உறுதியுமளிக்குமாறு அவசரம் அவசரமாக பத்திராவதி கம்பெனி டெண்டர் பிரச்சனையை முடிவு செய்வது நீதியாகுமா? ஒழுங்காகுமா? நேர்மையாகுமா?
சீசரின் மனைவியைப் போல் மந்திரிமார்கள் சந்தேகத்துக்கு இடமில்லாதவர்களாய் இருக்க வேண்டும்.
என தோழர் ஆச்சாரியாரின் சம்மந்தியார் கூறுகிறாரே! அவரது வார்த்தைக்காவது எள்ளளவு மதிப்பு தோழர் ஆச்சாரியார் கொடுக்க வேண்டாமா?
சேலம் தண்ணீர்த் திட்ட விஷயமாக உள்ள ஊழல் இவ்வளவு பகிரங்கமாக இருக்கையில் ஆச்சாரியார் சர்க்காரை ஆதரிக்கும் ஒரு கூட்டம் சேலம் நகரசபைத் தேர்தலுக்கு நிற்கவும் முன் வந்திருக்கிறதென்றால் பொது வாழ்வு எவ்வளவு உளுத்துப் போய்விட்டதெனக் கூறவும் வேண்டுமா?
சேலம் மக்கள் கருத்தை லட்சியம் செய்யாமலும் மாகாண மக்கள் அபிப்பிராயத்தை மதியாமலும் தோழர் ஆச்சாரியார் நடத்திவரும் ஆட்சி ஜனநாயக ஆட்சியா? தடிநாயக ஆட்சியா?
~subhead
காங்கரஸ் அட்டூழியங்கள்
~shend
இந்த லக்ஷணத்தில் ஆச்சாரியாரை ஆதரிக்கும் பொம்மைகளையே நேற்று 30ந் தேதி தேர்தலில் தேர்ந்தெடுத்துவிட வேண்டுமென்ற அநியாயத் துணிச்சலால், காங்கரஸ்காரர் என்னென்ன அட்டூழியங்கள் எல்லாமோ செய்வதாக நமக்குத் தகவல் கிடைத்து வருகிறது. நம்மவர்களில் ஒரு சாரார் மானத்தை விற்று வயிறு கழுவத் தயாராக காத்திருக்கையில் ஆச்சாரியார் இது மாத்திரமா? இதற்கு அப்புறமும் செய்யத் துணிந்துதான் நிற்பார். என் சர்க்கார்தான் நடக்கிறது, நான் நினைத்தபடி செய்வேன், இஷ்டப்படி போலீங் ஸ்டேஷனை மாற்றுவேன். ஆச்சாரியார் சர்க்காரை ஆதரியாதவர்களை சிறையிலடைப்பேன் என மஞ்சள் பெட்டி பேரால் அசம்பிளிக்குள் புகுந்த ஒரு ஆசாமி கூறவேண்டுமானால் ஆச்சாரியார் சர்க்கார் யோக்கியதையை விளக்கிக் கூறவா வேண்டும்? இத்தகைய ஜனநாயக ஆட்சியில் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்வது மேலல்லவா? வரப்போகும் ராமராஜ்யத்துக்கு ஆச்சாரியாரின் தற்கால ராஜ்யம் ஒரு “சாம்பிள்”. ஆனால் அந்த ராமராஜ்யத்தில் நீதிக்கும், நேர்மைக்கும், ஒழுங்குக்கும் “மகாத்மா” போற்றும் உண்மைக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கக் கூடும்? இந்த ராஜ்யம் பெறவா தேச பக்தியின் பேரால் பல்லாயிரம் பேரின் உயிர் பலியிடப்பட்டது. பல்லாயிரம் பேர் சிறை புகுந்தார்கள்! இந்த ராஜ்யம் பெறவா திலகர் நிதி ஒன்றேகால் கோடி பாழாக்கப்பட்டது! இந்த ராஜ்யம் பெறவா பல்லாயிரம் பேர் கோவணாண்டிகளானார்கள்!
இந்த இருபதாவது நூற்றாண்டிலே பட்டப்பகலிலே ஆச்சாரியார் இவ்வளவு துணிகரமான திருவிளையாடல் நடத்துவதை மன்னர்பிரான் பிரதிநிதியான கவர்னர் பிரபு கண்ணைத் திறந்து கொண்டு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? எப்படியாவது யூனியன் ஜாக் கொடி இந்தியாவில் பறந்தால் போதுமென்பது அவரது கருத்தா? மேலும் கவர்னர் பிரபு சும்மா இருப்பாரேல் என்னென்ன அநியாயங்கள் நடக்குமோ தெரியவில்லை.
குடி அரசு – தலையங்கம் – 01.05.1938