தமிழ்த்தாயின் மக்களுக்கு ஒர் வேண்டுகோள்

 

தமிழ்த்தாயின் புதல்விகளே! புதல்வர்களே!!

அக்ரகார முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் “தீட்டின மரத்திலே கூர்மை பார்ப்பது போல்” தமிழ் மக்களிடத்திலே தமது கூர்மையைக் காண்பிக்கிறார். தமிழ் மக்களால் ஓட்டுப்பெற்று முதல் மந்திரி பதவிக்கு வந்த கனம் ஆச்சாரியார், தமிழ் மக்களுக்கே துரோகம் செய்யத் துணிந்துவிட்டார். தேர்தல் காலத்தில் வாக்குக்கொடுத்ததும், தமிழ் மக்களால் மிக்க வேண்டப்படுவதுமான ஆலயப்பிரவேச மசோதாவை மூலையில் தள்ளிவிட்டு தமிழர்களால் வெறுக்கப்படுவதும் வேண்டப்படாததுமான அந்நிய பாஷையாகிய ஹிந்தியை தமிழ் மக்களிடத்தில் புகுத்தத் துணிந்திருப்பது கனம் ஆச்சாரியாரின் எதேச்சதிகாரமா? முதல் மந்திரி பதவி உத்தியோக மமதையா? பார்ப்பனத் தந்திரமா? அல்லது பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடுவதின் நோக்கமா? என்று கேட்கிறேன். இந்த அற்ப அதிகாரத்திலேயே இவ்விதமான எதேச்சதிகாரம் தாண்டவமாடினால், பூரண சுயராஜ்யம் கிடைத்துவிட்டால் என்னவாகுமோ? அம்மம்ம!! மயிர் கூச்சுறுகின்றதே!!!

தமிழ்நாட்டு வீரர்களே திரண்டெழுந்து ஆச்சாரியாரின் ஹிந்தி பாஷையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யுங்கள்.

தமிழ்நாட்டு தாய்மார்களே, தகப்பன் மார்களே! உங்களது பிள்ளைகளை ஹிந்தி கட்டாய பாட பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாதீர்கள். மாணவர்களே ஹிந்தி கட்டாயபாட பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியேறிச் சத்தியாக்கிரகம் செய்யுங்கள்.

கனம் ஆச்சாரியார் ஹிந்தி பாஷையாகிய ஈட்டியைக் கையிலேந்தித் தமிழ்த்தாயை கொலை செய்யத் துணிந்து நிற்கிறார். கனம் ஆச்சாரியாரின் ஈட்டியைப் பார்க்க நமது தமிழ்த் தாயின் அழுகுரல் வீறிட்டு எழுகிறது. தமிழ் மக்களே நமது தாயை இந்த அலங்கோல நிலையில் பார்க்க மனம் சகிக்கின்றதா? இச்சமயத்தை நீங்கள் தவறவிட்டால் தமிழ்த் தாயின் நிலமை பரிதாபகரமாக முடியுமென்பது நிச்சயம். ஆகையினால் தமிழ் வீரர்களே இந்தச் க்ஷணமே யுத்தசன்னதமாகி தமிழ்த்தாயைக் காக்க முனைந்து வாருங்கள். கனம் ஆச்சாரியாரின் எதேச்சதிகாரத்தை உடைத்தெறியுங்கள்.

தமிழ்த் தாயின் அருந்தவ மக்களே, கனம் ஆச்சாரியார் தமிழ் மக்களை ஹிந்தி பாஷைக்கு அடிமையாக்க, கையில் மாயவலையுடன் சுற்றுப்பிரயாணம் வருவார். தமிழர்களே உஷாராகயிருந்து கனம் ஆச்சாரியாரின் மாயவலையில் சிக்காமல் கனம் ஆச்சாரியாரை புறமுதுகு காட்டி ஓடும்படி செய்வீர்களாக. ஹிந்தி வீழ்க “தமிழ் வாழ்க” .

குடி அரசு – வேண்டுகோள் – 26.06.1938

 

You may also like...