தமிழர் இருப்பதா! இறப்பதா!

 

அமெரிக்கா செல்வப் பெருக்குடைய நாடு, சுதந்தர நாடு, ஜனநாயகத்துக்குப் பேர் போன நாடு. ஆனால் அமெரிக்க ஜனநாயகம் ஒரு புதுரகம். அமெரிக்க ஜனநாயகத்துக்கு அடிப்படையாக இருப்பது முதலாளி நாயகமே. இது கேட்போருக்குப் புதுமையாகத் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை அதுவே. ஜனநாயகத்தின் அங்கங்களான காங்கரஸ், தேர்தல் தொகுதி, வாக்காளர், பொதுத் தேர்தல் முதலிய விநோதங்கள் எல்லாம் அமெரிக்காவில் உண்டு. ஆனால் காங்கரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் தோரணைதரன் விசித்திரமானது. அமெரிக்காவிலே ஆயில் கிங், மோட்டார் கிங், காட்டன் கிங் என பல கோடீசுரர்கள் உண்டு. தேர்தல் காலங்களில் இக்கோடீசுரர்கள் தம் ஆட்களைத் தேர்தலுக்கு நிறுத்தி தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெற்றி பெறும்படி செய்துவிடுவார்கள். ஈட்டி எட்டின மட்டும்தான் பாயும்; பணமோ பாதாளம் வரை பாயக் கூடியது. ஆகவே இந்த கோடீசுரர்களின் கையாட்கள் தான் பொதுவாகத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க காங்கரசுக்கு மெம்பர்களாகச் செல்வது. கோடீசுரர் உதவியினால் காங்கரஸ் மெம்பர்களானவர்கள் கோடீசுரர் சொற்படியே நடப்பார்கள் எனக் கூறவும் வேண்டுமா? ஆகவே அமெரிக்க ஜனநாயகம் கோடீசுரருக்கு அடிமைப்பட்ட புது தினுசு நாயகமே. அந்த ஜனநாயகத்தின் யோக்கியதை எப்படி யிருக்குமென்று நாம் விளக்கவும் வேண்டுமா?

~subhead

மாகாண சுய ஆட்சியா? பார்ப்பனீய ஆட்சியா?

~shend

நமக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் மாகாண சுய ஆட்சியும் அநேகமாக அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. வாக்காளர் தொகுதி விரிவாக்கப்பட்டதும் வாக்காளர் தொகை பெருகியதும் உண்மையில் ஒரு சாபத்தீடாகவே முடிந்துவிட்டது. பிரசார பலமும் பத்திரிகை பலமும் பண பலமும் மிகுந்த காங்கரஸ் வாதிகள் கட்டுப்பாடாகப் பொய்ப் பிரசாரம் செய்து காந்தி பேரைச் சொல்லியும், காங்கரஸ் பேரைச் சொல்லியும், பாரத மாதா பேரைச் சொல்லியும் பாமர மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று ஏழு மாகாணங்களில் மந்திரி சபையும் ஸ்தாபித்து விட்டார்கள். இந்திய மாகாணங்களில் எல்லாம் மாகாண சுய ஆட்சியும் அமலுக்கு வந்துவிட்டது.

ஆனால் காங்கரஸ் மந்திரிசபை ஏற்பட்டிருக்கும் ஏழு மாகாணங்களிலும் பார்ப்பனீய ஆட்சியே அமலில் இருந்து வருகிறது. ஆறு காங்கரஸ் மாகாணப் பிரதம மந்திரிகள் பார்ப்பனராயிருப்பதினாலும் ஒரு மாகாண மந்திரி பார்ப்பன பக்தராயிருப்பதினாலும் அந்த ஏழு மாகாணங்களிலும் பார்ப்பனீய ஆட்சி நடைபெறுவது ஆச்சரியமா!

~subhead

சென்னை மாகாண நிலைமை

~shend

சென்னை மாகாணத்தை எடுத்துக்கொள்வோம். பத்து மந்திரிகளில் நான்கு பேர் பார்ப்பனர். அசம்பிளி, கெளன்சில் தலைவர் உபதலைவர்களில் மூன்று பேர் பார்ப்பனர். பார்லிமெண்டரி காரியதரிசிகளில் பெரும்பாலார் பார்ப்பனர். எனவே தற்கால சென்னை மந்திரி சபைக்கு அக்ரகார மந்திரிசபையென ஒரு காங்கரஸ் வாதியே பெயர் சூட்டினார். இந்த மந்திரிசபை தோன்றிய நாள் முதல் இன்றுவரை பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் காரியங்களே பெரும்பாலும் நடைபெற்று வருகின்றன. மூன்று முறை கார்ப்பரேஷன் காங்கரஸ் கெளன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாதாரை நீக்கி விட்டு ஒரு பார்ப்பனரைக் கல்வி அதிகாரியாக நியமித்ததையும் 20 கார்ப்பரேஷன் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்களில் 19 பேர் பார்ப்பனர்களாகப் பொறுக்கி யெடுக்கப்பட்டதையும் மிருக வைத்தியர்கள் 20 பேரில் 17 பேர் பார்ப்பனராகப் பொறுக்கி யெடுக்கப்பட்டதையும் ஏற்கனவே எடுத்துக் காட்டியிருக்கிறோம். பார்ப்பனரல்லாதார் பப்ளிக் பிராசிகூட்டராகக்கூட வரக் கூடாதென்ற கெட்ட எண்ணத்தினால் பப்ளிக் பிராஸிக்கூட்டர் பதவிக்கு ஆட்களை சிபார்சு செய்யும் அதிகாரத்தை பார்ப்பன ஆதிக்கம் கொண்ட வக்கீல் சங்கங்களுக்கு விட்டுக்கொடுத்திருப்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறோம். இப்பொழுது ஸ்தல ஸ்தாபனங்களிலும் பார்ப்பனீயம் தாண்டவமாடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இதற்கு சமீபத்தில் நடைபெற்ற ஜில்லா போர்டு நகரசபைத் தேர்தல்களில் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் தலைவர்களாகவும், உபதலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே தக்க ஆதாரம். இப்பொழுது ஜில்லா போர்டு நகரசபைத் தலைவர்களாகவும், உபதலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் யோக்கியதைகளையும் நாலைந்து வருஷங்களுக்கு முன் அந்த ஸ்தானங்களில் வீற்றிருந்தவர்களின் யோக்கியதைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் தென்னாடு இப்பொழுது பார்ப்பனீயத்திற்கு அடிமையாகி வரும் உண்மை புலனாகாமல் போகாது. எங்கு பார்த்தாலும் மூன்றாந்தர, நான்காந்தரப் பார்ப்பனர்களின் செல்வாக்கே மிகுந்து நிற்கிறது. 100-க்கு 97- ஜனத்தொகை கொண்ட பார்ப்பனரல்லாதார் 100 க்கு 3 பேர் கொண்ட பூணூல் கூட்டத்தார் இஷ்டப்படியே காரியங்கள் நடத்த வேண்டியதாக ஏற்பட்டிருக்கின்றன.

~subhead

பழங்குடிப் பெருமக்கள் எங்கே?

~shend

ஒவ்வொரு ஜில்லாவிலும் முனிசிபல் நகரத்திலும் செல்வத்தாலும், உயர்குடிப் பிறப்பாலும், பொது ஜன ஊழியத்தினாலும் படிப்பாலும், ஏனைய சிறப்புகளாலும் சமூகவாழ்வில் முன்னணியில் நின்ற தமிழர்கள் மூலையில் ஒதுக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் ஸதானங்களை ஊர் பேர் சொல்வதற்கில்லாத அநாமதேயர்கள் காங்கரஸ் பேரைச் சொல்லி கைப்பற்றிக் கொண்டு அட்டகாசம் செய்து வருகிறார்கள். சென்ற 7-ந் தேதி சேலத்தில் நடந்ததைக் கவனிப்போம். சேலத்தில் நடைபெறப் போகும் அகில இந்திய காதி சுதேசிப் பொருட் காட்சிக்கு விக்டோரியா மார்க்கட் மைதானத்தை வாடகையின்றி கொடுக்கும்படி நகரசபை தீர்மானித்திருப்பது பற்றி சேலம் மக்களுக்கு மிக்க மனக் கொதிப்பு இருந்து வருகிறது. அஜண்டாவில் இல்லாத பிரஸ்தாப விஷயத்தை கூட்டம் முடியப்போகும் தருணத்தில் மெம்பர்கள் பலர் வெளியேறிக் கொண்டிருக்கும் தருணத்தில் நகர சபை முன்கொண்டு வந்து அவசரம் அவசரமாக நிறைவேற்றிவிட்டது. நியாய விரோதமானதென உணர்ந்த சேலம் மக்கள் அத்தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கிளர்ச்சி செய்ததின் பயனாக சென்ற 7-ந்தேதி அதை ரத்து செய்ய ஒரு விசேஷக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் குழப்பமுண்டாகி கூட்டத்தை நடத்த முடியாத நிலைமை ஏற்படவே சேர்மன் கூட்டத்தைக் கலைத்துவிட்டார்.

~subhead

காங்கரஸ் மெம்பர்கள் அட்டகாசம்

~shend

அப்பால் காங்கரஸ் மெம்பர்கள் மட்டும் கூடி மார்க்கட் மைதானத்தை சுதேசிக் காட்சிக் கமிட்டியாருக்கு வாடகையின்றிக் கொடுக்கும்படி முன் சாதாரணக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீண்டும் நிறைவேறியதாய்த் தீர்மானம் செய்து கலைந்து போனார்களாம். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் மூலகாரணராயிருப்பது யார்? சுதேசிக் கண்காட்சி விஷயத்தில் அக்கரையுடையவர்கள் யார்? என ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் தமிழர்களின் தற்கால இரங்கத்தக்க இழிவான நிலைமை விளங்காமல் போகாது. சேலம் பொருட்காட்சியில் கைத்தறி நெசவாளர் துணிகளைக் காட்சிக்கு வைக்க பொருட்காட்சி நிர்வாகஸ்தர்கள் அநுமதி மறுப்பதினால் கைத்தறி நெசவாளருக்கும் சேலம் மக்களுக்கும் மிக்க மனக் கொதிப்பும் அதிருப்தியும் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் தொகை அதிகமாக இருந்தும் கைவிரல் விட்டு எண்ணக் கூடிய சிலரின் இஷ்டப்படி சேலம் நகரவாசிகள் எல்லாம் நடந்துத் தீரவேண்டுமென ஏற்பட்டால் தமிழர்கள் உயிருடன் இருந்துதான் பயன் என்ன? திருநெல்வேலி நிலைமை, சேலம் கதையை இத்துடன் நிறுத்திவிட்டு திருநெல்வேலி கதையை கவனிப்போம். பப்ளிக் பிராஸிக்கூட்டர் நியமன விஷயமாக திருநெல்வேலி வக்கீல் சங்கத்தார் நடந்துகொண்ட தோரணை திருநெல்வேலி ஜில்லா மக்கள் மனத்தைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. காங்கரஸ் பத்திரிகையான ்ஆனந்த விகடன்” கூட திருநெல்வேலி வக்கீல் சங்கத்தார் போக்கைக் கண்டித்திருக்கிறது. எனவே சென்ற 6 -ந் தேதி திருநெல்வேலியில் கூடிய திருநெல்வேலி ஜில்லாக் காங்கரஸ் கமிட்டியார் அவசரக் கூட்டத்திலே திருநெல்வேலி டவுன் காங்கரஸ் கமிட்டி தலைவர் தோழர் கூத்த நயினார் பிள்ளை பப்ளிக் பிராசிக் கூட்டர் நியமன விஷயமாக சர்க்கார் வெளியிட்டிருக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தாராம். அதை அநேக மெம்பர்கள் ஆட்சேபித்தார்களாம். கடைசியில் தீர்மானமே கைவிடப் பட்டதாம். தீர்மானத்தை நழுவ விடக் காரணம் என்ன? பிரஸ்தாப விஷயம் சர்க்காரையும் வக்கீல் சங்கத்தையும் பொறுத்ததென்றும் ஜில்லா காங்கரஸ் கமிட்டி அதில் தலையிடக் கூடாதென்றும் தோழர் யாக்ஞேசுர சர்மா ஜில்லா காங்கரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாராம். அவரது கட்டளைக்கு முரணாக ஜில்லா காங்கரஸ் கமிட்டியார் நடக்கலாமா? பப்ளிக் பிராஸிகூட்டர் நியமன விஷயமாக சர்க்கார் செய்துள்ள தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென்று திருநெல்வேலி ஜில்லா காங்கரஸ் கமிட்டியார் தீர்மானிப்பதினால் அந்த உத்தரவு ரத்தாகி விடுமென்று நாம் நினைக்க வில்லை. ஜில்லா மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கொதிப்பைச் சாந்தப் படுத்த அம்மாதிரி ஒரு தீர்மானம் நிறைவேற்றக்கூட பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் பெற்ற ஜில்லாக் காங்கரஸ் கமிட்டிக்கு முடியவில்லையானால் – அங்கும் ஒரு பார்ப்பனர் அபிப்பிராயத்துக்கே மதிப்புக் கொடுக்கப்படு கிறதானால் தமிழர் அபிப்பிராயத்துக்கு மதிப்பேயில்லையென்பது விளங்கவில்லையா? எல்லாக் காங்கரஸ் கமிட்டிகளிலும் மெஜாரட்டியாக இருப்பது தமிழர்கள்தான். ஆனால் அவர்களுக்கு சுயமாகக் காரியம் செய்ய சக்தியுமில்லை, உரிமையுமில்லை.

~subhead

சூத்திரக்கயிறு யார் கையில்?

~shend

காங்கரஸ் கமிட்டிகளை ஆட்டிவைக்கும் சூத்திரக் கயிறு பார்ப்பனர் கையிலேயே இருக்கிறது. ஒரு புரோகிதப் பார்ப்பானுக்கு ஒரு பஞ்சாங்கப் பார்ப்பானுக்கு காங்கரஸில் இருந்து வரும் மதிப்பு குலத்தாலும் நலத்தாலும் பணத்தாலும் மற்ற சிறப்புகளாலும் மதிப்புப் பெறுவதற்குரிய தமிழனுக்கு இல்லையானால் தமிழர் இருப்பதா இறப்பதா என்ற நிலை ஏற்பட்டு விட்டதென நாம் கூறுவது பொய்யாகுமா? இவ்வண்ணம் காங்கரசிலும் நாட்டிலும் தமிழர்களுக்கு மதிப்புக் குறைந்து வருவதைக் கண்ணாரக் கண்டும் மேலும் மேலும் தமிழர்கள் பார்ப்பனர் கால்களுக்கிடையில் நுழைவதும் அவர்கள் புகழ்பாடுவதும் அவர்கள் ஆக்கத்துக்கு உழைப்பதும் மானக்கேடல்லவா? இந்நிலையில் மாற்றமேற்பட வேண்டாமா? வேண்டுமானால் மாற்றமேற்படுத்தக் கடமைப்பட்டவர்கள் யார்? அவர்கள் செய்யப் போவதென்ன? சுயமரியாதையுடைய தமிழர்களே யோசித்துப் பாருங்கள். காலம் தாழ்த்த வேண்டாம். ஆபத்து நெருங்கி வருகிறது.

குடி அரசு – தலையங்கம் – 10.07.1938

You may also like...