காலஞ்சென்ற தோழர் ஏ.ஆர். சிவானந்தம் வாழ்க்கை வரலாறு

 

உள்ளம் உவந்த உணர்ச்சியது வழியே கள்ளம் இன்றிக் காலங் கடத்தியவருள் தோழர் சிவானந்தம் ஒருவராவார். கரூர் தாலூகாவில் அரவக்குரிச்சியில் தோழர் இராமசாமி முதலியாரது திருமகனாக, 1884ம் ஆண்டிற் பிறந்தார். தோழர் இராமசாமி முதலியார் தொண்டை மண்டல வேளாள மரபினர். மிக்க செல்வந்தர். பிரபல மிராசுதாரருமாவர்.

தோழர் சிவாநந்தம் பண்டை முறைப்படி தமிழ்க்கல்வி நன்கு பயின்று தமது 20-வது வயதிலேயே குடும்ப பாரத்தையும் தாங்கலாயினார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான்”

என்னும் தமிழ் மறையின் தூய கொள்கையை நிலைபெறச் செய்ய வேண்டுமென்னும் உண்மை நோக்குடன் அவர் தமது 20-வது வயதில் பொது வாழ்க்கையிற் பெரிதும் ஈடுபடலாயினார். இயற்கையிலேயே ஏழைகளிடமும், தாழ்த்தப்பட்டோர்களிடமும் அளவற்ற பரிவும் அன்பும் உடையவர். இளமை தொட்டே தீண்டாமை, ஜாதி ஆணவம் முதலியவற்றை உள்ளூர வெறுத்து வந்தார். இவைகளே, மக்களுள் பிரிவினை உணர்த்தும் வன்பகையென்றும், இந்திய சமுதாயத்தை அரித்து வருங் கொடும் புழுக்களென்றும் உணர்ந்தவர். தாய்நாட்டின் அடிமைத்தன்மை, பிறப்பால் மேல் கீழ் பார்க்கும் சாதி வேற்றுமை தீண்டாமை யாகிய இவை அடியோடு அழிந்தொழிந்தாலன்றி மக்களுக்கு விடுதலையில்லை என்னும் ஒரே உறுதியைக் கொண்டவராய், அப்பகைப் புழுக்களைத் தொலைப்பதற்குச் சமரச சன்மார்க்க சங்கம் என ஒரு கழகத்தை நிறுவி அதன் வாயிலாகத் தொண்டாற்றினார். சோழவந்தான், தமிழ்ப்புலவர் அரசன் சண்முகனார் சைவ சித்தாந்த சங்கம் நிறுவிய போது அச்சங்கத்திற்குத் தோழர் சிவானந்தம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று அதன் வழியாகச் சின்னாள் பணியாற்றினார்.

~subhead

பிராமணரல்லாதார் இயக்கப் பற்று

~shend

1917ல் நமது தோழர் கோவைக்குச் சென்றிருந்த போது அங்கு கூடிய முதல் பிராமணரல்லாதார் மகாநாட்டைக் காணும் பேறு பெற்றார். அவ்வியக்கக் கொள்கைகள் தோழர் சிவானந்தத்தின் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே கொள்ளை கொண்டு விட்டன. திரும்பித் தமது ஊருக்கு வந்ததும் அக்கட்சிக்காகப் பாடுபட முயன்றார். தமது தாலூக்காவின் பலவிடங்களிலும் பல சங்கங்களை நிறுவி வைத்தார். அவ்வியக்கத்தின் கொள்கைகளை மாகாண முழுவதும் பரப்புதற் பொருட்டுத் தமது சொந்தச் செலவில் ஊர் ஊராகப் பிரசாரம் செய்து வந்தார்.

~subhead

பார்ப்பனர் தொல்லை

~shend

பிராமணர்களால் இவருக்கு நேர்ந்த இன்னல்கள் பல. இவர் மீது எண்ணிறந்த அநீதி வழக்குகளும் தொடர ஏற்பாடு செய்தனர். மதுரை மகாநாட்டில் ஒரு சமயம் பிராமணீயத்தின் கொடுமையைப் பற்றி மேங்காட்டுப் பொட்டலில் வெகு உருக்கமாகச் சொல்மாரி பொழியுங்காலை இவர் மீது கல்மாரி பொழிய ஆரம்பித்தது. முழங்காலிலும் தலையிலும் கற்கள் தாக்கி இரத்தம் பெருக்கெடுத்தது. எதுவரினும் தளராத ஈடுமெடுப்பும் கொண்டவராதலால், தமது உயிரை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது அஞ்சாத நெஞ்சுடன் நின்று ஆண்மை ததும்பும் சொற்களால் அன்று மக்களைத் தட்டி எழுப்பினார்.

பண்டைக் காலந்தொட்டுப் பிராமணீயத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்துழலும் மக்களைத் தட்டியெழுப்பி வந்த ஆண்மை வீரர்களுள் தோழர் சிவானந்தமும் ஒருவராவார்.

“நம்மனோர் இயக்கத்தின் உண்மையும் டாக்டர் நாயர் ஞாபகச் சின்ன நிதியும்” என்ற வெளியீட்டைத் தமது சொந்த செலவில் அச்சிட்டுப் பரப்பி அருநிதி திரட்டித் திராவிடன் பத்திரிகைக்கு அளித்துதவினார் நமது தோழர் சிவானந்தம்.

சங்கீத உலகத்தில் பார்ப்பனரல்லாதார் பலர் சீரிய ஞானம் சிறந்தமைந்தும் சாரீர வளனும் சார்ந்தமைந்தும், ஆதரிப்பாரற்று ஒடுக்கப்பட்டு உள்ளமழிந்து வருந்துவதைத் தோழர் சிவானந்தம் கண்டு அவர்களது வருத்தத்தை ஒழிக்க அவர் கையாண்ட முயற்சிகள் எழுதி முடியாதவை. அதன் பொருட்டு இவர் முயற்சியால் ஈரோட்டில் நடைபெற்ற 2-வது மாகாண சுயமரியாதை மகாநாட்டின் போது ஒரு சங்கீத மகாநாடும் நடத்தப்பட்டது.

~subhead

கோவைக்கு மாற்றம்

~shend

சமதர்ம இயக்கத்துக்காகவும் அரும்பாடு பட்டார். இடைவிடாது உழைத்து வந்ததால் உடல் நலங்குன்றி நீரிழிவு என்னும் கொடி நோய் அவரைப் பற்றியது. டாக்டர்களின் கருத்துப்படி அவர் தமது ஊரை விட்டுக் கோவைப்பதிக்கு வந்து வாழ்வாராயினார். இந்நிலையிலும் அவர் வாளாவிருக்கவில்லை. கோவை சுயமரியாதை வாலிப சங்கத் தலைவராகவும், சென்னை மாகாணச் சுயமரியாதைத் தொண்டர் சங்கத் துணைத் தலைவராகவும் கோவை குடிணூ கீ.ஓ.33 ண்ணிஞிடிச்டூ ஞிடூதஞ தலைவராகவும் இருந்து உண்மைத் தொண்டாற்றி வந்தார். மேலும் நம் நாட்டு மக்களின் உடல்நலம் மேம்பாடடைய வேண்டும் என நாட்டங் கொண்டு கோவை ஆரோக்கிய அபிவிருத்தி சங்கம் என்னும் ஓர் கழகத்தைப் பல தோழர்கள் உதவியால் நிறுவி அதன் துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து பணியாற்றி வந்தார்.

சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதும் அவ்வியக்கத்திலும் சேர்ந்து அதன் கொள்கைகளை எங்கும் பரப்பி வந்தார்.

தோழர் சிவாநந்தம் இனிய மனப்பாங்குடையவர். தம்மோடு பழகியவர் எவரேயாயினும் எவ்வளவு மாறுபட்ட கொள்கையைக் கொண்டவரேயாயினும் அவர்கள் அவரை ஒரு பொழுதும் நொந்திருக்க மாட்டார்கள்.

“இனியவுளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று”

என்னும் குறள் மறையைக் குறிக்கொண்ட உள்ளத்தினராவர்.

~subhead

இரக்கச் சிந்தை

~shend

இத்தகைய இனிய தன்மையராதலால் எடுத்த காரியத்தைக் கொடுத்து முடிக்கும் ஆற்றலும், செய்வன திருந்தச் செய்தலும் இவருக்கு எளிதாகவும் இயல்பாகவும் இருந்தன. நொந்தவர்களுக்கென்று தனிப்பட்டதோர் இரக்கம் இவருக்கு என்றும் இருந்து வந்தது. சொற்பொழிவாற்றும் பொழுது இவர் வெகு நிதானமாகப் பேசுவார் நா வன்மையும், சொல் வளப்பமும், சொல் அமைப்புப் பொருளோடு கெழுமிக் கேட்போருக் குள்ளத்தில் தெளிவாகப் பதிந்து நிலைத்திருக்குமாறு எடுத்த பொருளை விரிவுரை செய்வார்.

அந்தோ! அந்தோ! அவ்வளவு தான். என்றைக்கிருந்தாலும் ஒருநாள் அடங்க வேண்டியது தானே. ஆம். ஆம். “நெரு நல் உளன் ஒருவன் இன்றில்லையென்னும், பெருமையுடையத்திவ் வுலகு”. நமது பெரியார், நமது தோழர் சிவானந்தம் சமீபத்தில் நீரழிவு நோயின் காரணத்தால் ஒரு வாரம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்து 17.8.38ம் தேதி புதன்கிழமை இரவு 3 மணிக்கு இயற்கை முடிவையடைந்தார். அவருடைய முடிவு பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு ஓர் பெருங்குறைவாகவே நேரும். குன்றின் மேலிட்ட நந்தா விளக்கம் போலும் நின்று விளங்க இக்குணக்குன்றின் நினைவுக்குறியாக ஏதேனும் ஓர் திருப்பணி செய்யப் பார்ப்பனரல்லாதார் சமூகம் கடமைப்பட்டுள்ளது.

குடி அரசு – இரங்கற் கட்டுரை – 28.08.1938

You may also like...