பகிரங்கக் கடிதங்கள்

 

தோழர் அவர்களே!

தங்களது ஆத்மசக்தி கடைசியாகத் தங்களைக் காலைவாரி விட்டுவிட்டதா? இல்லாவிட்டால் மனமுடைந்து இருளில் தடுமாறிக் கொண்டிருப்பதாகச் சொல்ல நேரிடுமா? அப்படியிருக்கும்போது மற்றவர்களையும் ஆத்மசக்தியை வளர்க்கச் சொல்லுகிறீர்களே. அவர்களையும் இருளில் திண்டாடவிடவா முடிவு செய்திருக்கிறீர்கள். இந்த யோசனை, “குருடன் குருடனுக்கு வழிகாட்டுவது” போலாகாதா? இந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்கு உடனே தங்களுடைய அந்தராத்மா (இன்னர் வாயிஸ்) என்ன சமாதானம் சொல்கிறதென்று கேட்டு அறிக்கை ஒன்று வெளியிடவும். அதற்குள் அவசரப்படுகிறவர்களுக்கு உங்கள் தடுமாற்றத்தைப் பற்றி நான் ஒரு வியாக்யானம் செய்து அவர்களை அடக்கிவைக்கிறேன். அதாவது முஸ்லிம் பொது மக்களை ஏமாற்ற இது ஒரு வழியென்று தோன்றுகிறது என்பதாகச் சொல்லிவைக்கிறேன். அந்த வியாக்கியானம் சரியா என்று தோழர் படேலை கேட்டுத் தெரிவிக்கவும்.

குட்பை.

தோழர் மகாதேவ தேசாய் அவர்கள் இருக்கிற ஊர்

தோழரே!

தாங்கள் “ஹரிஜன்” பத்திரிகை நடத்துகிறீர்களே அதில் ஹரிஜன சமூகத்துக்காக ஒன்றையும் காணுமே. அந்தப் பேரை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றவா அல்லது பொழுது போக்குக்காகவா என்பதைத் தயை செய்து அடுத்த வார “ஹரிஜனி”லேயே பதில் எழுதவும்.

குட்பை.

தோழர் நேரு அவர்கள் ஏரோப்ளேன் சரி

தோழர் நேருவே,

உங்கள் பெயர் காந்தியார் பெயரைப் போலவே பல இடங்களிலும் பரவியிருப்பதாகச் சொல்லுகிறார்களே, அதற்குக் காரணம் தாங்கள் சோஷியலிஸ்டாயிருப்பதினாலா அல்லது சோஷியலிஸத்தைப் பேசுவதாலா என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் தெரியும்படி பத்திரிகையில் வெளியிடவும் காலத்துக்குத் தகுந்தபடி நல்ல பிரசாரம் செய்தீர்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள். அது உண்மைதானா என்றும் தெரிவிக்கவும்.

குட்பை.

தோழர் ஆச்சாரிய சுவாமிகள் மாம்பலம்

தோழரே!

தாங்கள் ஹிட்லரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்படியில்லாவிட்டால் தாங்கள் செய்வதெல்லாம் யார் செய்வதைப்போல் இருக்கிறது என்று உங்களிடம் ஆடிக் கொண்டிருக்கும் எந்தப் பொம்மையையாவது அல்லது கைதூக்கும் எந்தக் கை காட்டி “ஜென்டில்மானை”யாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவும். காங்கரஸ் என்றால் பார்பனீயத்தை வளர்க்கும் ஒரு “வே”ஸ்தாபனம் என்று சொல்லுகிறார்களே அது சரிதானா என்று தயை செய்து “மாட்டு வண்டி ஓட்டும்” மந்திரியிடம் சொல்லி ஒரு அறிக்கை வெளியிடவும்.

(குறிப்பு:- “தேவர்” என்பவர் கயவர் அனையர் என்று திருக்குறளில் காணக்கிடக்கிறது)

குட்பை.

குடி அரசு – கடிதங்கள் – 01.05.1938

You may also like...