பகிரங்கக் கடிதங்கள்

 

 

~subhead

தோழர் முத்துரங்கம் அவர்களுக்கு,

~shend

தாங்கள் “ஆண்மை, ஆற்றல்” இல்லாதவர் என்றும், தாங்கள் தமிழ் மாகாணக் காங்கரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் வரையில் காங்கரசில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் தங்களுக்குச் சுயமதிப்பும், பொது நோக்கும் இல்லை யென்று ஏன் சொல்லக் கூடாது என்பதாக பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். பார்ப்பனத் தாசர் என்றால் எப்படி யிருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள பலர் ஆசைப்படுகின்றார்கள். தயை செய்து அவர்களின் முன் தாங்கள் பிராப்தமானாலே போதும் என்று நினைக்கிறேன்.

குட்பை.

~subhead

தோழர் சுப்பராயன் அவர்களுக்கு,

~shend

தாங்கள் போகும் இடங்களில் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் பொதுவாக சுயமரியாதைக்காரர்கள் என்றும் சிறப்பாகத் தோழர் ஈ.வெ.ரா. என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். இந்த மாதிரி தாங்கள் மாலை நேரத்தில்தான் சொல்லியிருக்க வேண்டும். ஆகையால் இனிமேல் காலை நேரத்தில் நிதானமாகப் பிரசங்கம் செய்வீர்களோனால் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தமிழர்களே என்று உணர்ந்து கொள்வீர்கள்.

குட்பை.

~subhead

தோழர் ராஜன் அவர்களுக்கு,

~shend

தங்களைச் “சாக்கடை” மந்திரி என்று அழைக்கிறார்கள். சுகாதாரத்துக்கு முக்கியமான சாதனம் சாக்கடை சுத்தமாக இருக்க வேண்டும். அதிலும் பெரிய நகரங்களில் சாக்கடையை மிகச் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் ஜனங்கள் நோயில்லாமலிருப்பார்கள். இக்காரணம் பற்றித்தான் தங்களை அப்படி அழைக்கிறார்களா?

குட்பை.

~subhead

தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு,

~shend

தாங்கள் வக்கீல் வேலைக்குப் படித்தவர் என்றும், ஆனால் தொழில் நடத்தவில்லையென்றும், பட்டம் பெற்றிருக்கிறீர்கள் என்றும், ஆனால் பணம் செலவு செய்யவில்லையென்றும், ராஜபோகம் அனுபவிக்கிறீர்கள் என்றும் ஆனால் வரும்படி இல்லை என்றும் புகழ்ந்து சொல்லப்படுகிறது. இந்தக் காரியங்களுக்கு இன்னும் மனைவி மக்கள் பட்டுக் கட்டவும், வைரத்தோடு போடவும் ஒருவனுக்குப் பணம் வேண்டும். ஒரு வழியுமில்லாமல் தங்களுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்ததென்று ஒரு அறிக்கை வெளியிட்டால் இக்காலத்தில் வேலை இல்லாமல் திண்டாடுகிறவர்களுக்கு மிக உதவியாயிருக்கும். ஆனால் தங்களுடைய மேலான வழியை மற்றவர்கள் பின்பற்ற விடுவீர்களா என்பது சந்தேகம். இது தங்களுக்குப் பிறவித் தொழிலா அல்லது இடை நடுவில் வந்ததா என்று தெரிவியுங்கள்.

குட்பை.

~subhead

தோழர் முனிசாமி அவர்களுக்கு,

~shend

தாங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லுகிறார்கள். அப்படி யிருக்கும்பொழுது தாங்கள் ஆதி திராவிடர்களின் நன்மைக்காக பாடுபட வேண்டாமா என்றும் கேட்கிறார்கள். அவர்களுக்கு “தனக்கு மிஞ்சித்தான் தானமும், தருமமும்” என்ற பழமொழி தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் சொல்லவுமாட்டார்கள். கேட்கவு மாட்டார்கள்.

தங்களுக்கு நடக்கும் மரியாதையும் கிடைக்கும் சுகமும் தாங்கள் ஆதி திராவிடர் என்று நினைக்கவிடுமா? அல்லது தங்கள் சமூகத்தின் நன்மைக்காக உழைக்கவிடுமா? ஆகையால் கடலில் அலை ஓயும் வரையில் தாழ்த்தப்பட்டவர்களைக் காத்திருக்கச் சொல்லுங்கள்.

குட்பை.

குடி அரசு – கடிதங்கள் – 08.05.1938

You may also like...