கிருஷ்ணகிரியில் ஈ.வெ.ரா.

 

இந்த காங்கரஸ் மந்திரி சபை பொய்யும் பித்தலாட்டமும் செய்து வோட்டுகளைப் பெற்று பதவிக்கு வந்தது என்பதை எடுத்து விளக்குகையில் போலீஸ் சர்க்கிளின்ஸ்பெக்டர் அருகாமையிலிருந்து கொண்டு ஒரு காங்கரஸ்காரன் பொய் என்று கூச்சலிட்டான். இரண்டொரு காங்கரஸ் காலிகள் ஆங்கங்கே நின்று கொண்டு கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கலைக்க முயன்றும் பலிக்காமையால் மறைந்து விட்டார்கள். பிறகு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் எப்படி காங்கரஸ்காரர்கள் மானமிழந்து சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதாக சத்தியம் செய்து கொடுத்து சரணாகதியடைந்து மந்திரி பதவி பெற்றார்கள் என்றும், பிறகு வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களையும் கவர்னரவர்களையும் துதிபாடித் திரிகிறார்கள் என்றும், வகுப்பு வாதமில்லாதவர்கள் மந்திரி பதவிகளிலும் உத்தியோகங் களிலும் தங்கள் பார்ப்பன வகுப்புக்கே சலுகை காட்டி வருகிறார்கள் என்றும், எப்படி வரியைக் குறைப்பதற்காகப் போனவர்கள் வரியை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள் என்றும் எப்படி கட்டாய இலவச கல்வி கொடுப்பதாகச் சொன்னவர்கள் கட்டாய இந்தியின் பேராலும், பள்ளிக்கூடங்களை மூடுவதன் மூலமும், வார்தா திட்டத்தின் மூலமும் அட்டை கடுதாசி திட்டத்தின் பேராலும் உள்ள கல்வியையும் பாழாக்கி விட்டார்கள் என்பதையும் விளக்கமாக சுமார் 2 மணி நேரம் பேசினார்.

குறிப்பு: 18.07.1938 இல் கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் மைதானத்தில் தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.

குடி அரசு – சொற்பொழிவு – 24.07.1938

You may also like...