காவேரிப்பட்டணத்தில் தோழர் ஈ.வெ.ரா. ஆடம்பரமான ஊர்வலம் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்
தான் இந்தி எதிர்ப்பு சம்பந்தமாய் வந்திருப்பதாகவும் இந்தி எதிர்ப்புக்கு அவர்கள் உதவியை எதிர்பார்ப்பதாகக் கூறி – சென்ற ஒரு வருட ஆட்சி பார்ப்பன வருணாச்சிரம ஆட்சியாக இருந்து வருகிறது என்பதைப் பல ஆதாரங்களைக் காட்டிப் பேசினார். உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கிறது என்றும் பார்ப்பனரல்லாதார் ஆங்கில உயர்தரக் கல்வி பெற்று உத்தியோகங்கள் அடைவதைத் தடுக்க வார்தாத் திட்டம் என்றும் இந்திப் பாடம் என்றும், உபாத்தியார், பள்ளிக்கூடம், சிலேட்டுப் பலகை எதுவுமின்றி அட்டைகள் மூலம் கல்வி போதிப்பது என்றும் கூறி நமது தமிழ் மக்கள் மேல்படிப்புப் பெறுவதைத் தடுப்பதன் மூலம் நமது மக்களைத் தற்குறிகளாக்கித் தாங்களே எல்லாப் பதவிகளையும் வகித்து என்றென்றும் தலைதூக்க முடியாமல் செய்யும் சூழ்ச்சியிலிறங்கி இருக்கிறார்கள் என்று விளக்கினார். காங்கரஸ்காரர்கள் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டி எந்த ஒரு விஷயத்திலும் நாணயமாய் நடந்து கொள்ளவில்லை என்பதை ருசுக்களோடு எடுத்துக் காட்டினார்.
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காலத்தில் இரட்டை ஆட்சியின் கீழ் பண நிர்வாகம் எதுவும் தங்களிடம் இல்லாதபோது கல்விக்காக, குறிப்பாக தமிழ் ஆரம்பக்கல்விக்காக பார்ப்பன சூழ்ச்சிகளுக்கு இடையேயும் செய்து வந்த நல்ல முயற்சிகளையும் காரியங்களையும் காங்கரஸ் ஆட்சியோடு ஒப்பிட்டார்.
இந்தி எதிர்ப்பாளர்கள் பொது மக்கள் வேண்டாத இந்தி பாஷையை நமது நாட்டு சிறுவர்களுக்கு வாயில் நுழையாத கடின தொனிகளைக் கொண்ட இந்தியை பலவந்தமாக சிறுவர்கள் தலைமீது சுமத்தும் அக்கிரமத்தை கண்டிப்பதற்காக பலரை சிறைபடுத்தி சிறையில் இழிவாக நடத்தி வருவதை எடுத்துக்காட்டினார். இந்தியை நுழைப்பதால் தமிழர்கள் தங்கள் கலை நாகரிகம் முதலியவைகளை இழந்து பார்ப்பனர்களுக்கும் ஆரிய நாகரிகத்திற்கும் அடிமைப்பட வேண்டுமென்றும் கூறினார்.
கடன் நிவாரண மசோதா மூலம் விவசாயிகளுக்கு நன்மை செய்து விட்டதாகக் கூறுவதில் உள்ள பித்தலாட்டத்தை விளக்கி உண்மையில் விவசாயி கூலியாகப் போகவேண்டிய நிலைமைக்கு விவசாயி வந்து விட்டான் என்றும் விவசாய அபிவிருத்திக்கான வற்றிற்கு பணம் கிடைப்பதற்கு மார்க்கமின்றி தவிக்கிறான் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
கூட்டத்தில் காங்கரஸ்காரர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும் தகுந்த பதிலளித்தார்.
குறிப்பு: 18.07.1938 இல் காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.
குடி அரசு – சொற்பொழிவு – 24.07.1938