பழிக்குப் பழிவாங்கும் பார்ப்பனர் ஆட்சி – பார்ப்பனனல்லாதான்
தமிழ்நாட்டு அரசர்கள் பலதடவைகள் வடநாட்டுப் பார்ப்பன அரசர்களின் மேல் படை எடுத்துப் பார்ப்பன அரசர்களை முறியடித்து வெற்றிமாலை சூடி இருக்கின்றார்கள். இது கலிங்கத்துப்பரணி போன்ற பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்தால் தெள்ளிதின் விளங்கும். நந்தமிழர் தமிழ் நூல்களில் நல்ல தேர்ச்சி பெறாமலும், சிறிது தேர்ச்சிப் பெற்றாலும் பிராமண-புராண மூடபக்தியின் மிகுதியால் பகுத்தறிவு கொண்டு ஆராயாமலும் தளரவிட்டதினால் தான், உலகம் புகழ்ந்த நந்தமிழ் நாடு பலமின்றிப் பாழ்த்து வருகின்றது. பார்ப்பன அரசர்களை நம் வீரத்தமிழ் நாட்டரசர்கள் பல தடவைகளில் போரில் வென்று விறற்கொடி ஏற்றி இருக்கின்றார்கள். உதாரணமாக:-
ஒரு சமயம் வடநாடுகளில் ஒன்றில் ஏதோ ஒரு விசேட சந்தர்ப்பத்தில் பல பார்ப்பன அரசர்கள் சேர்ந்திருந்தார்கள். அவர்களில் பிரபலஸ்தர்கள் கனகன், விஜயன் என்னும் இருவர். இவர்கள் எல்லோரும் உண்டுகளித்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருக்கும்போது, தென்னிந்திய தண்டமிழ் அரசர்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்கள். அவர்களிலொருவன், தமிழரசர்களின் வீரப் பிரதாபங்களையும், போர்த் திறமைகளையும் பற்றிப் புகழ்ந்து பேசினான். உடனே கனகனுக்கும், விஜயனுக்கும் கோபம் வந்துவிட்டது. அவர்கள் “முன் நம் ஆரிய அரசர்கள் மூடத் தனத்தினால் தோற்றுவிட்டார்கள். இப்பொழுது அந்த தமிழரசர்கள் படை எடுத்து வந்தால் அவர்களைப் புறமுதுகிட்டோடும்படி நாங்கள் அடித்து விடுவோம்” என்று வீர வார்த்தை ததும்பப் பேசினார்கள். இந்த வார்த்தைகளைத் தமிழ் நாட்டிலிருந்து காசி முதலிய வடநாட்டு க்ஷேத்ர யாத்திரைச் சென்றிருந்த ஒருவன் கேட்டுக் கொண்டிருந்து திருப்பி வந்து சேர ராஜனிடம் செப்பினான். உடனே சேர ராஜனுக்குக் கோபம் பிறந்து கண்கள் சிவக்க சின வார்த்தைகளால் சீறினான். இதைக்கண்ட அமைச்சன்(பார்ப்பனன்) தன் இனத்தாருக்கு ஆபத்து வந்ததென்றறிந்து அரசனைச் சமாதானப்படுத்த எண்ணி “அரசே! அவர்கள் தங்களைச் சொல்லவில்லை. முன் படை எடுத்துச் சென்று அவர்களை வாட்டிய பாண்டிய நாட்டரசனைத்தான் சொன்னார்கள்” என்று வினயமாகப் புகன்றான். அரசன் முன்னிலும் மிக்க சினங்கொண்டு “பாண்டியனை சொன்னாலென்ன, என்னைச் சொன்னாலென்ன? நாங்கள் தமிழ் நாட்டரசர்கள் தானே. இன்று பாண்டியனைச் சொன்னதுபோலத்தானே நாளை என்னையும் சொல்லுவார்கள். ஆகையால் நான் அவர்களை சும்மா விடமாட்டேன். அவர்களின் மேல் படை எடுத்துச் சென்று, பொருது வெற்றி பெற்று அவர்களைச் சிறைப்பிடித்து, அவர்களை இமயமலைக்கு அழைத்துச் சென்று அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து அவர்கள் தலைமீது வைத்துக்கொண்டு வந்து, கங்கை காவேரி நதிகளில் நீராட்டி அக்கல்லில் (கண்ணகி) காளி விக்கிரகம் செய்வேன். இல்லையேல் நான் வீரத்தமிழனல்ல. இது சத்தியம்” என்று தோட்கள் துடிக்க வீரம் பேசி, உடனே சண்டைக்குப் புறப்படும்படி சேனைகட் குத்தரவிட்டான். இதுவல்லவோ தமிழ்நாட்டின் தருமநெறி! (துஷ்ட நிக்ரக செளகரியம் சிஷ்ட பரிபாலன யோக்யம்) தமிழர்களின் ஒற்றுமை! உடனே சதுர்விதசேனைகளோடும் புறப்பட்டு வடநாடு சென்று போர்புரிந்து ஆரிய அரசர்களை எல்லாம் வென்று, கனகன், விஜயன் ஆகியவர்களைச் சிறைபிடித்து, இமயமலை சென்று அதைக் கடந்து அப்புறம் சென்று போர்புரிந்து வெற்றி பெற முடியாமையால், அம்மலையின் ஓர் பாறையில் தனது புலிக்கொடியைச் செதுக்கிவிட்டு, ஒரு கல்லை எடுத்து அப்பார்ப்பன அரசர்களின் தலைமேல் வைத்து சேரநாட்டிற்கு (மலையாளம்) சுமந்து வரும்படிச் செய்து அக்கல்லில் தான் (கண்ணகி) காளிவிக்கிரகம் செய்தான். இச்சரித்திர சம்பவம் தமிழரசர்களின் போர்த்திறமையையும் நாகரிகத்தையும், ஒற்றுமையையும் நன்றாய் விளக்குகின்றதன்றோ? இவ்விதமாக குமரி முதல் இமயம் வரை வியாபித்திருந்த தமிழர்களின் இராஜ்யம், பாஷை, நாகரிகம் முதலியவைகள் எப்படி அழிந்தன என்பது சிந்திக்கற் பாலதன்றோ? அது தான் ஆரியர்களின் வஞ்சகம்.
மேலே சொல்லப்பட்ட தமிழர்களின் வீரத்தை அடக்க வேண்டுமென்று ஆரியர்கள் பலவித சூழ்ச்சிகள் செய்து தமிழர்களின் விரிந்த இராஜ்ஜியத்தையும், சிறந்த கலைகளையும் , மேலான நாகரிகத்தையும் சிறுகச் சிறுகக் கெடுத்துவிட்டார்கள் என்பது ஆழ்ந்து சிந்தித்தால் விளங்காமல் போகாது.
~subhead
இந்து மதம்
~shend
இந்து மதம் என்பது பார்ப்பனர்கள் மற்றவர்களை அடக்கி ஆளவும் தாங்கள் எப்பொழுதும் சுகஜீவிகளாக இருக்கவும் பாப்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி நிறைந்த மதம் என்பது பல மேதாவிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டதாகும்.
~subhead
ஹிந்தி பாஷை
~shend
இது இறந்துபோன சமஸ்கிருதமாகிய பார்ப்பன பாஷையை மீண்டும் உயிர்ப்பிக்கவும் ஆரியக் கலைகளாகிய அடிமை கற்பிக்கும் கலைகளைக் கற்பித்து, சிறிது சுயமரியாதையடைந்த மக்களை மறுபடியும் அடிமைகளாக்கவும், மூடப்புராண பக்திகளால் இந்தியர்களை அந்நியருங்கண்டு நகைக்கக் கூடியவாறு மடையர்களாக்கவும் ஹிந்தி யென்னும் இலக்கண மில்லா பாஷையை முரட்டு சப்தமுள்ள பாஷையை பார்ப்பனர்கள் வலியப் புகுத்துகின்றார்கள். தேசத்துக்கொரு பாஷை வேண்டுமென்றால் அது அடிமை கற்பிக்கும் பாஷையாகத்தான் இருக்கவேண்டுமா? பல ஜாதிகளைச் சொல்லி மனிதர்களைப் பிரித்துவைக்கும் பாஷையாகத்தான் இருக்கவேண்டுமா? சில லட்ச ஜனங்கள் பேசும் ஹிந்தி பாஷையை பல கோடி மக்கள் பழக வேண்டுமென்று சொல்லுவானேன்? அதிலும் நம் தண்டமிழ் நாட்டினரை நிர்ப்பந்தப்படுத்துவானேன்? தமிழரசர்கள் ஆரியர்களின் இராஜ்ஜியம், பாஷை முதலியவற்றை அழித்தார்கள் என்னும் வஞ்சந்தீர்க்கவா? தமிழன்பர்களே! இதைச் சிந்தித்துப் பாருங்கள்.
~subhead
ராம ராஜ்ஜியம்
~shend
இப்பொழுது காங்கரஸ் தலைவர்கள் சுயராஜ்யம் என்றால் ராம ராஜ்ஜியந்தான் என்று சொல்லுவது எல்லோருக்கும் தெரிந்ததே. இராமராஜ்ஜியம் என்றால் பார்ப்பன ஜாதிக்கு மிக்க அனுகூலமான சட்டங்களால் ஏற்படுத்தப்பட்ட இராஜாங்கமுறையுள்ள இராஜ்ஜியம் என்பது இராமாயணத்தை பகுத்தறிவோடு நடுநின்று படிப்போர்க்கு நன்றாய் விளங்கும். எப்படி எனில், பார்ப்பனரல்லாதான் (சம்புகன்) ஒருவன் தவம் செய்துக்கொண்டிருந்தான். அது பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. உடனே இராமனை இழிவாகப் பேசி அந்த தவ சிரேஷ்டன்மேல் ஏவ, இராமன் அந்த பார்ப்பனனல்லாதானைக் கொன்றுவிட்டான். இவ்விதமான பார்ப்பனர்களுக்கு அனுகூலமான இராம ராஜ்ஜிய நீதிமுறைகளைக் கொண்ட சுயராஜ்ஜியம் அமைக்க வேண்டுமாம். இப்படிப்பட்ட சுயராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்குத் தானே அனுகூலம். ஜாதிப்பிரிவினை போதிக்கும் இராம ராஜ்ஜியம் இந்துமத ராஜ்ஜியம் என்பதில் என்ன சந்தேகம். ஹிந்து மதத்தை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள். ஆகையால் இராஜாங்கமும் பார்ப்பனர்களுடையதே!
~subhead
அரசர்
~shend
மேற்கூறிய காரணங்களால் மக்கள் ஹிந்து மதத்திற்கும், ஹிந்தி பாஷைக்கும், இராம ராஜ்ஜியத்திற்கும் அடிமைப்பட்டு மூட பக்தி கொண்டவுடன் ஆரியன் (பார்ப்பனன்) தான் அரசனாவான் என்பதில் என்ன சந்தேகம்? வேண்டுமானால் இப்பொழுதிருக்கும் காங்கரஸ் சபையின் போக்கைப் பாருங்கள். பதவி பெற்ற ஏழு மாகாணங்களில் ஆறு மாகாணங்களில் ஆரியர்கள் முதன் மந்திரிகள். சுயராஜ்ஜியமாகிய ராம ராஜ்ஜியம் வந்துவிட்டால் இந்தியாவிலிருக்கும் மாகாணங்கள் முழுவதிலும் ஆரியர்களின் ஆதிக்கம் வலுத்துவிடும் என்பதிலேதாவது சந்தேக முண்டா? ஆரியர்களின் ஆதிக்கம் வலுத்தவுடன் ஆரியன் தான் அரசனாகவோ, பிரசிடெண்டாகவோ, சர்வாதிகாரியாகவோ வருவான் என்பதில் எட்டுணையும் சந்தேகமில்லை. அப்படி வந்தவுடன் பழைய மனுதர்மச் சட்டம் தான் ராஜாங்க சட்டமாகும் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டா? சென்னை கார்பொரேஷனில் தலைமை உபாத்தியாயர்களின் நியமனத்தையும், மாட்டு வைத்திய இலாகா உத்தியோக நியமனத்தையும் பாருங்கள்-பார்ப்பன அதிகாரத்தை.
இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால், பார்ப்பனர்கள் இழந்துபோன தங்கள் இராஜ்யம், மதம், பாஷை முதலியவைகளை மறுபடியும் பெற சூழ்ச்சி செய்கின்றார்கள் என்பது நன்றாய் விளங்காமற் போகாது. இதற்கெல்லாம் அஸ்திவாரம் பாஷை. பாஷை ஆரியமாக இருந்தால் மற்ற நடைமுறைகளும் அதைத் தழுவித்தானே இருக்கும். ஆகவே, பார்ப்பனர்கள் இழந்துபோன தங்கள் இராஜ்யம்,மதம் , பாஷை முதலியவைகளை மறுபடியும் அடைய வேண்டி ஹிந்தி பாஷையைக் கட்டாயமாகப் புகுத்துவதால், தமிழர் மேலும் பார்ப்பனரல்லாத மற்ற இந்தியர் மேலும் ஆதிக்கம் செலுத்தி பழிக்குப் பழி வாங்க பார்ப்பனர்கள் ஹிந்தி பாஷை மூலம் அஸ்திவாரம் போடுகின்றார்கள் என்பது நன்றாய் விளங்குகின்ற தன்றோ. பார்ப்பனரல்லாத இந்தியர்களே! தண்டமிழர்களே! நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் ?
எந்தத் தென்நாட்டு காங்கரஸ்காரர் வடநாடு சென்று காங்கரஸúக்குப் பணம் வசூலித்திருக்கிறார்கள். வடநாட்டுக்காரர்கள் தானே தென்நாட்டில் வந்து பணம் வசூலித்துக் கொண்டு செல்லுகின்றார்கள். (தென்நாட்டுத் தரகர்களாகிய) கனம் ஆச்சாரியார், மகாகனம் சீனிவாச சாஸ்திரியார், தோழர் சத்தியமூர்த்தி, தோழர் சீனிவாச ஐயங்கார் போன்றவர்கள் வடநாட்டார்களை வரவழைத்து, தென்நாட்டிலுள்ள ஏமாந்த பணக்காரர்களாகிய நம்மனோரைக் காட்டிக்கொடுத்துப் பணம் பறித்துச் சென்று விடுகின்றார்கள். தென்நாட்டுப் பிரமுகர்கள் வடநாடு சென்று பணம் வசூலிக்க லாயக்கற்றவர்களா? வடநாட்டில் மேடைப்பிரசங்கஞ் செய்ய ஆற்றலற்றவர்களா? ஏன் இவர்களை அடக்கியே வைத்திருக்கின்றார்கள்? “கழுதைக்கு உள் ஏறி காட்டக்கூடாது” என்பதற் கிணங்க இவர்களுக்கு வடநாட்டுக்கு வழிகாட்டிவிட்டால் பிறகு பார்ப்பனர்களுக்கு மதிப்பிருக்கா தென்பதினாலா? இதை எல்லாம் காங்கரஸிலிருக்கும் நம் பார்ப்பனரல்லாத சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? சில காலம் காங்கரஸ் கட்சியில் சேர்ந்து தேச விடுதலைக்காக உடல், பொருள், ஆவியாலும் உழைத்து பார்ப்பன தந்திர-வஞ்சக உண்மை அறியும் சமயத்தில் பார்ப்பனரல்லாதாரைக் காங்கரஸிலிருந்து விரட்டி விடுகின்றார்கள். இவ்விதம் விரட்டி அடிக்கப்படும் உண்மைத் தியாகிகளில் சாமி வெங்கடாஜலம் செட்டியாரும் ஒருவர். சாமி வெங்கடாசலம் செட்டியாருக்கு சத்தியமூர்த்தி கொடுத்திருக்கும் சவுக்கடி அதிக சுருக்கென்றிருக்கின்றது. உண்மையிலேயே இவர் கதியைப் பற்றி மிக வருந்த வேண்டியது தான். மெச்சத்தக்கத் தியாகம், நீண்ட அரசியல் அனுபவம், தாய்நாட்டு விடுதலையே தன் மானமாகக் கொண்ட இத்தகைய பெரியார்களின் கதியே இப்படியென்றால் மற்ற பார்ப்பனரல்லாதாரின் கதி காங்கரஸ் கட்டுப்பாட்டில் என்னாகும் என்பதை நினைக்க பயங்கரமாயிருக்கின்றதல்லவா? ஆகையால் பார்ப்பனரல்லாத தோழர்களே! தமிழர்களே! பழிக்குப் பழி வாங்கும் பார்ப்பன ஆட்சியை சிந்தித்துப் பாருங்கள்! வீறு கொண்டெழுங்கள்! தண்டமிழைக் காப்பாற்றுங்கள்!
குடி அரசு – கட்டுரை – 05.06.1938