ஆச்சாரியார் அடக்குமுறைக்கு ஜே!

 

இன்று இந்தியாவில் 7 மாகாணங்களில் நடப்பது காங்கரஸ் ஆட்சி. காங்கரசே சர்க்காராகவும் சட்டமாகவும் இருந்து, பெரும்பாலான ஓட்டுகளைக் கொண்டு வெற்றிபெற்ற பாத்தியதையால் நடத்தும் ஜனநாயக ஆட்சி, மற்றும் சுயராஜ்யத்தில் ஒரு சிறு பங்கு கிடைத்திருப்பதாகக் கருதி அரசியல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்கு இருக்கும் அதிகாரம் பூராவையும் செலுத்த பிரிட்டிஷாரிடம் அனுமதியும் “வாக்குறுதி”யும் பெற்று 100 – க்கு 85 வீதம் உள்ள மெஜாரிட்டி பலத்தில் நடத்தும் ஏகபோக ஆட்சியுமாகும். இப்படிப்பட்ட ஆட்சியில் காங்கரஸ்காரர்கள் செய்வது என்ன?

கொடுத்த கடன் செல்லாது, வாங்கின கடன் கொடுக்க வேண்டியதில்லை.

மனப்பூர்வமாக சம்மதித்து எழுதிக் கொடுத்தபடி நடக்க வேண்டியதில்லை. நடக்கும்படி கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை.

என்று சட்டம் செய்தாய்விட்டது. சமதர்மவாதிகள் பொது உடமை உணர்ச்சியாளர்கள் இதை ஆதரிக்கலாம். ஆனால் இந்த தனி உடமை ராஜ்யத்தில் கொடுக்கல் வாங்கல் நடக்க வேண்டுமே, அதற்கு சர்க்கார் என்னவழி செய்தார்கள்? இதன் மூலம் பணக்காரன் என்றும் பணக்காரனாய் இருக்கவும் ஏழை என்றும் ஏழையாய் இருக்கவும் உதவிபுரியும் (வருணாச்சிரம தர்மத்தைப் போல்) ஒரு பொருளாச்சிரம தர்மத்தை உண்டாக்கி விட்டார்கள்.

~subhead

ஏழைகள் தலைதூக்க முடியுமா?

~shend

கொடுக்கல் வாங்கல் இல்லையானால் ஏழைகள் எப்படி முன்னேற்றமடைய முடியும்? கூலிக்காரனாய் இருக்கும் ஒரு குடியானவன் முன்னுக்கு வந்து அவன் ஒரு சிறு விவசாயி ஆகி பாடுபட்டு விவசாயம் செய்து அதிலிருந்து சிறிது மீத்தி அதைக்கொண்டு அரை ஏக்கராவோ ஒரு ஏக்கராவோ பூமி வாங்கி பிறகு அவன் ஒரு சொந்தப்பூமியுள்ள குடியானவன் ஆக வேண்டுமானால் அவனுக்கு ஒரு பத்து, ஐந்து ரூபாயாவது கடன் கிடைக்கும்படியான சவுகரியம் இருந்தால் தான் முடியும். ஆனால் காங்கரஸ்காரர்கள் இப்போது செய்திருக்கும் கடன் குறைப்பு சட்டத்தால் அதற்குச் சிறிதும் வழியில்லாமல் போய்விட்டது.

குறைந்த வட்டியாவது கிடைக்கட்டும் என்று கடன் கொடுக்கவும் எவருக்கும் தைரியமில்லாமல் போய்விட்டது. ஏனெனில் இனி இவர்கள் (இந்த காங்கரஸ்காரர்கள்) நாளைக்கு என்ன சட்டம் செய்வார்களோ என்று பயந்து கையில் சிக்கிய பொருளைச் சர்க்கார் பாங்கியில் போடவோ புதைத்து வைக்கவோ தூண்டும்படி செய்துவிட்டது. இதனால் முதலாளிகளுக்குக் கஷ்டம் இல்லை என்றாலும் ஏழை விவசாயிகள் கூலி விவசாயிகள் நசுக்கப்பட்டார்கள் ஒழிக்கப்பட்டார்கள் என்பது தான் பலன்.

~subhead

மதுவிலக்குப் பலன்

~shend

மற்றும் சேலத்தில் (மாத்திரம்) மதுவை நிறுத்தினார்கள் என்ற பெயரை உண்டாக்கிக் கொண்டு அந்தச் சாக்கை வைத்துப் பல நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்களை மூடச் செய்தார்கள். பள்ளிக்கூட உதவித் தொகைகளை நிறுத்தினார்கள். போக்குவரத்து வசதி – கிராமக் குடி தண்ணீர் வசதி – சுகாதார வசதி – வைத்திய வசதி ஆகியவைகளான உயிர் போன்ற ஜன வாழ்க்கை உரிமைகளையெல்லாம் ஒழித்து வருகிறார்கள்.

இவ்வளவு கஷ்டம் அனுபவித்தும் குடி ஒழிந்தபாடில்லாமல் ஒரு ஜில்லா குடி நிறுத்தத்துக்காக மற்ற 25 ஜில்லாக்களும், அந்த ஜில்லா நிருவாகத்துக்கும் குடி நிறுத்த மேற்பார்வைக்கும் வரி (செலவுக்குப் பணம்) கொடுக்கும்படியாகவும் சேலம் ஜில்லாவிலுள்ள குடிகாரர்கள் அதிகச் செலவு செய்து வெளி- எல்லை ஜில்லாக்களுக்குப் போய் குடித்துவிட்டு வரும்படியாகவும் இதனால் பல குடும்பங்கள் அரைக் கஞ்சி கால் கஞ்சியாவது குடித்து வந்த குடும்பங்கள் கூட்டோடு பிச்சை எடுக்கக் கிராமங்களுக்குப் போகும்படியாகவும் ஆகிவிட்டது.

இந்த இரண்டு காரியங்களையும் பற்றி கனம் ஆச்சாரியார் உண்மைக்கு மாறாக பிரசாரம் செய்யப் பல சூழ்ச்சி ஏற்பாடுகள் செய்து மக்களை ஏய்த்து வருகிறார். இது எப்படியோ போய்த் தொலையட்டும்.

~subhead

ஹிந்தி பேரால் அடக்குமுறை

~shend

ஹிந்தி பாஷை என்னும் ஆரிய பாஷையை தமிழ் மக்களுக்கு கட்டாயமாகப் புகுத்தியே தீருவேன் என்கின்ற மூர்க்கத்தனத்தில் இறங்கி அதற்காக இன்று தன்னுடைய கடைசி அடக்குமுறை ஆயுதத்தைப் பிரயோகித்து விட்டார்.

ஆச்சாரியாரின் புத்தி நுட்பத்தையும் சூழ்ச்சித் திறனையும் அறிந்தவர்கள் ஆச்சாரியார் இவ்வளவு சிக்கிரத்தில் இந்த நிலைக்கு வந்து விடுவார் என்றும், மற்றவர்கள் மீது இவர் குறை சொன்ன காரியங்களை எல்லாம் இவ்வளவு சீக்கிரத்தில் இவரே செய்து தீர வேண்டிய நிலைமைக்கு வந்துவிடுவார் என்றும் கருதி இருக்க மாட்டார்கள். ஆனால் மணல் வீடு – பொய்க்கோட்டை எவ்வளவு நாளைக்கு நிற்கும்? ஆச்சாரியார் மக்களுக்கு – நாட்டுக்கு நன்மை செய்யக் கவலையுடையவரானால் – செய்ய வேண்டும் என்கின்ற நல்ல எண்ணம் உடையவரானால் – அவரது நல்வாழ்வு இன்னம் கொஞ்ச நாளைக்காவது இருக்க வேண்டாமா? என்கின்ற கவலையோடு யோசித்துப் பார்த்து எதையும் செய்ய முன் வந்திருப்பார். அவர் எப்படியோ புரட்டு பித்தலாட்டம், தகிடுதத்தம் செய்தாவது பதவியைப் பெற்று மூன்று நாள் பதவியில் இருப்பதானாலும் அதற்குள் தமிழர்கள் வாழ்வுக்கு எவ்வளவு கேடு செய்யலாமோ அவ்வளவையும் செய்து ஆரியப்பார்ப்பனர் வாழ்வை வருண தர்மப்படி மேன்மையாக்கிவிட்டுப் போய்விடலாம் என்கின்ற முடிவில் இருக்கிறவர். ஆகவே அப்படிப்பட்டவர் இன்று எப்படியோ விழித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை எப்படி ஏய்க்க முடியும்? அடக்கு முறையும் தடியடியும் கொடுங்கோல் ஆட்சியும் இல்லாமல் அவர் இனி அரை நாழிகையாவது எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும்? ஆதலால் இவ்வளவு சீக்கிரத்தில் அவரது ஆட்சி இந்தக் கதி அடைந்து விட்டது என்பதில் ஆச்சரியமில்லை.

~subhead

ஆச்சாரியாருக்கு சில கேள்விகள்

~shend

ஆச்சாரியார் தமிழ்நாட்டு ஆட்சியில் தலைமை மந்திரி ஸ்தானம் வகிப்பவர். போலீசு இலாகாவும் உள்நாடு இலாகாவும் பொருளாதார இலாகாவும் தனக்கே என்று தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறவர். மற்ற இலாக்காக்களையும் தன் காலடியில் வைத்து மிதித்துக்கொண்டு, தனது அடிமை போன்றவர்களைக் கொண்டு நடத்தி வரும் ஏகபோக சர்வாதிகாரியாக இருப்பவர். இப்படிப்பட்ட இவர் இம் மாதம் 16-ந் தேதி சென்னைக் கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டி அதில் தாம் பேசப்போவதாக விளம்பரம் செய்து, உள்ளூர் பொது ஜனங்கள் எல்லோரையும் வரும்படி அழைத்த கூட்டத்திற்குத் தாம் வருவதற்கு முன்பே 100 குதிரைப் படையையும் 600, 700 போலீஸ் படையையும் வரவழைத்து வைத்துக் கொண்டு பின்புறமாக ரகசியமாக மாளிகைபோல் கட்டப்பட்ட மேடையில் தோன்றி பேச ஆரம்பிப்பாரானால் அதுவும் பேசுவதற்கு முன்பே கூட்டத்தில் குதிரைப்படையை விரட்டி கூட்டத்தைக் கலைத்து பொது ஜனங்களை ஓட ஓட போலீசாரால் குறுந்தடி கொண்டு அடித்துத் துரத்தி விட்டு தனக்கு வேண்டிய ஒரு சிலரை வெறும் பார்ப்பனராக மாத்திரம் வைத்துக்கொண்டு கூட்டம் நடத்திவிட்டு கூட்டத்தை முறைப்படி கூட முடிக்காமல் வளையம் போட்ட போலீஸ் காவலுடனே கார் ஏறி ஓடுவாரானால் பொதுஜன நன்மதிப்புப் பெற்ற ஜனநாயக மந்திரி என்று தம்மை இன்னமும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறாரா என்று கேட்கிறோம்.

அதுதான் போகட்டும். தாமும் தமது பிரதம சிஷ்யரும் தம்மை விளம்பரப்படுத்தும் விளம்பரம் மந்திரியுமான கனம் ராமநாதன் அவர்களும் செல்லுமிடங்களிலெல்லாம் எதிர்ப்பும் பகிஷ்காரமும் குழப்பமும் கூட்டங்களிலெல்லாம் மண்மாரியும், செருப்புமாரியும், வசைமாரியும் கடுமழை போல் பெய்யும்போதும் கனம் ஆச்சாரியார் தம்மை இன்னமும் பொது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர் என்றும், தம்மை இன்னமும் பொது ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும், பொது ஜன நம்பிக்கைக்குத் தாம் பாத்திரமானவர் என்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறாரா என்று கேட்கின்றோம்.

~subhead

பொது ஜனங்கள் பதில்

~shend

ஆச்சாரியார் ஹிந்தியைக் கட்டாய பாடமாக்குவேன் என்றார். பொது ஜனங்கள் கூடாது என்று கிளர்ச்சி செய்தார்கள். ஆச்சாரியார் இதைப் பொது ஜன கிளர்ச்சி அல்ல என்றும் இது ஒரு தனி மனிதன் (ராமசாமி) கிளர்ச்சி என்றும் சொல்லி ஏய்க்கப் பார்த்தார்.

பொது ஜனங்கள் இதற்கு பதில் சொல்லுவதற்காக இது ஒரு மனிதன் (ராமசாமி) கிளர்ச்சி அல்ல, பொது ஜனங்கள் கிளர்ச்சி என்று காட்டுவதற்காக ஆச்சாரியார் முன் தங்களைக் காட்டிக் கொள்ளுகிறார்கள்.

இதற்கு ஆச்சாரியார் செய்ய வேண்டிய பதில் ஹிந்திக் கிளர்ச்சி பொது ஜனக்கிளர்ச்சி என்பதை ஒப்புக் கொண்டேன் என்று யோக்கியமாய் ஒப்புக் கொள்ள வேண்டியதேயாகும். அதை விடுத்து தடியடியும், குதிரைக் குளம்பு மிதியும், அக்கிரம அநியாய சட்டப்பிரயோகமும் செய்து சிறைத் தண்டனையும் சொத்துப் பறிமுதலும் ஆகிய அடக்குமுறைகளால் இக் கிளர்ச்சியை ஒழித்துவிடப் பார்த்தால், இதை பொறுத்துக் கொண்டிருப்பது ஹிந்தியை கட்டாய பாடமாய் நுழைப்பதால் ஏற்படும் கெடுதியை – ஆபத்தைவிட இது ஒரு பெரும் ஆபத்து அல்லவா என்று கேட்கின்றோம்.

ஹிந்தி எதிர்ப்புக்காக இது வரை 100 பேர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சிறு சட்டங்களால் தண்டிக்கப்பட்டவர்கள் சுமார் 10, 15 பேர்கள் போக இப்போது அடக்குமுறைச் சட்டத்தின்படி 10, 15 பேர்கள் 3 மாத காலத்துக்கு கடின காவலும் 4 மாத காலத்துக்குக் கடின காவலுமாய்த் தண்டிக்கப்பட்டாய் விட்டது.

~subhead

சிறை புகுவோர் நோக்கம்

~shend

பாக்கிப் பேர்களும், இனியும் கைது செய்யப்படப் போகும் ஆயிரக்கணக்கான பேர்களும் இது போலவே இன்னம் அதிகமாகவும் தண்டிக்கப்படலாம். “தூண்டுபவர்கள்” என்கின்ற பேரால் பலர் வருஷக் கணக்கில் தண்டிக்கப்படலாம். அதனால் எதுவும் முழுகிப் போய்விடும் என்று நாம் கருதவில்லை. “தமிழ் மக்கள் கோழைகள் – ஜெயில் என்கின்ற தியாகத்துக்குப் பயந்தவர்கள்” என்று காங்கரஸ் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் குலாம்களும் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது வடிகட்டின அயோக்கியத்தனமான கூப்பாடு என்பதாக மெய்பிக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் ஏற்பட்டதென்றே நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனால் அதற்காக வேண்டி பலாத்காரம் செய்ய வேண்டுமென்றோ மற்ற மக்களுக்குச் சட்ட விரோதமான முறையில் மனத் தாங்கல் ஏற்படும்படியான காரியங்கள் செய்ய வேண்டுமென்றோ யார் மீதும் யாருக்கும் அனாவசியமான வெறுப்பும் துவேஷமும் ஏற்படும்படி நடக்க வேண்டும் என்றோ நாம் சிறிதும் கருத மாட்டோம் என்பதோடு அந்தப்படி யாரும் நடக்கக் கூடாது என்றும் மிகக் கண்டிப்பாய் கூறுவோம்.

ஆனால் இந்த சர்க்கார் அல்லது காங்கரசு, அல்லது ஆச்சாரியார் எந்த அளவுக்குப் பொது ஜனங்களை அனுசரித்து – அடக்கு முறை இல்லாமல் யோக்கியமான முறையில் அன்பு கொண்டு நல்ல எண்ணத்துடன் நன்மையான காரியம் செய்து ஆட்சி புரிகிறார்கள் என்பதையும், இதற்கு முன் இருந்தவர்கள் எந்த முறையில் இவருக்கு ஒழிக்கப்பட – அழிக்கப்பட – புதைக்கப்பட வேண்டியவர்கள் ஆனார்கள் என்பதையும் பொது ஜனங்கள் உணருவதற்கேற்றபடி உண்மையை வெளிப்படுத்துவதற்குத் தகுந்தபடி நம்மாலான காரியங்களைச் செய்து தீருவதுடன் ஒவ்வொரு தமிழ் மகனும் தன்னாலான காரியத்தைச் செய்ய வேண்டியது அவரவர் கடமை என்று சொல்ல பின் வாங்க மாட்டோம்.

~subhead

எதிர்ப்பாளர் செய்த குற்றம்

~shend

இதுவரை நடந்த கேசு விசாரணையில் ஆச்சாரியார் பக்கம், அதாவது சர்க்கார் பக்கம் ஒவ்வொரு கேசுக்கும் இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சர்க்கார் ஆள்களே. அதாவது ஆச்சாரியார் தான் நினைத்த உடன் ஒரு மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடத்தக்க மாதிரியில் தன் கீழ் உள்ள (போலீஸ்) இலாகாவில் சிக்குண்ட ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு கான்ஸ்டபிளுமேயாகும். அவர்கள் சொன்ன விஷயங்களோ “இவன் (இந்தத் தொண்டன்) தமிழ் வாழ்க! என்ற அட்டைக் கொடியை கையில் வைத்துக்கொண்டு ஆச்சாரியார் வீட்டுக்குப் பக்கத்தில் நின்று தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக என்று கூச்சல் போட்டான்” என்று தான் சொன்னார்கள். அதுவே அந்தச் சட்டப்படி குற்றமாகிறதாம்.

அதற்கு 3 மாத 4 மாத கடின காவல் தண்டனையாம். சாட்சிகள் உண்மையையே சொல்லி இருக்கலாம். நீதிபதி சட்டப்படி சரியாய் நடந்திருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் இந்தக் காரியம் தர்ம நியாயமானதா என்று கேட்கிறோம். அடக்கு முறையை ஒழித்து பிரஜா உரிமையைக் காப்பாற்ற வந்த தர்மராஜ்ய பிரபாகரர்களாகியவர்களின் ராமராஜ்ஜிய தர்பார் இது தானா என்று கேட்கிறோம்.

“சைமன் கமிஷன் ஒழிக” “சைமனே திரும்பிப் போ” என்று ஊர் முழுவதும் கூத்தாடினார்கள். சைமன் கமிஷன் முன்னேற வொட்டாமல் முன் நின்று தடுத்தார்கள். இன்னும் இப்படி எத்தனையோ செய்தார்கள். இவை பிரஜா உரிமை இல்லாத அடக்கு முறை ஆட்சியில் நடக்க இடம் கொடுக்கப்பட்டவையாகும்.

~subhead

கிராம்பு பகிஷ்காரம்

~shend

ஆச்சாரியாரின் தர்ம ராஜ்யத்தில் சென்ற மாதத்தில் நடந்த கிராம்பு பகிஷ்காரம், கிராம்பு வண்டி சக்கரத்தின் கீழ்படுத்துக் கொண்டு வண்டியைப் போகவொட்டாமல் தடுத்து, கிராம்பு வாங்குகிறவனை வாங்க வொட்டாமல் தடுத்தது, ஆகிய காரியங்கள் இந்தச் சர்க்காரில் இந்தச் சட்டத்தின் கீழ் வருவதில்லை என்றால் – இதை இந்தப் போலீசார் தடுக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் – ஆச்சாரியாரின் நல்ல ஆட்சிக்கும் பண்டித ஜவஹர்லாலின் பிரஜா உரிமைக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம்.

ஆகவே இக்கொடுமைகளை ஒழித்துத் தமிழ் மக்களின் தன்மானத்தைக் காப்பாற்ற நீண்ட போர் தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. 10000 பதினாயிரம் பேராவது சிறை செல்லாமல் தமிழ் மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் கேடுகளும் அக்கிரம சட்டங்களும் அநியாய அடக்கு முறைகளும் ஒரு நாளும் ஒழியாது என்பதாகவே கருத வேண்டியதாய் விட்டது. சிறை செல்லத் தொண்டர்கள் பஞ்சமில்லை என்றே தெரிகிறது. மற்றபடி பணம் தான் அவசியமாகத் தேவைப்படுகிறது. தகுதியுடைய கனவான்கள் ஆயிரக்கணக்காய் அனுப்பிக் கொடுக்க வேண்டும். வெளி நாட்டிலும் உள் நாட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள தோழர்கள் பணம் வசூலித்து கமிட்டிக் காரியதரிசி தோழர் கே.எ.பி.விசுவநாதம் அவர்களுக்கு அனுப்ப வேண்டும். தமிழ் மக்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

-“விடுதலை”

குடி அரசு – கட்டுரை – 26.06.1938

You may also like...