சுயமரியாதை இயக்கப் போதனை “சாந்தி வாழ்வே எனது ஆசை”

 

தோழர்களே! சுயமரியாதை இயக்கம் என்ன போதிக்கிறது என்பதை மக்கள் முதலில் தெரிந்து கொண்டால்தான் சுயமரியாதை இயக்கத்தில் சேருவதும் அதைப்பற்றி பேசுவதும் ஒருவனுக்கு பொருத்தமாகும்.

சுயமரியாதை இயக்கம் ஒவ்வொரு மனிதனையும் முதலில் தன்னை மதிக்கச் சொல்லுகிறது. தன்னை மதிப்பது என்றால் தனது பஞ்சேந்திரியங்களையும் அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளால் ஏற்பட்ட பிரத்தியக்ஷ அனுபவங்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்த உண்மையை மதிக்கச் சொல்லுகிறது. இன்று மனித சமூகத்தில் பெரும்பாலான மக்கள் அனேக காரியங்களில் இந்த தன்மையை மதிப்பதில்லை, அனேக காரியங்களுக்கு இந்த அனுபவங்களைப் பொருத்துவதில்லை.

மனிதன் உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளை விட மேலானவன் என்பதற்கு எடுத்துச் சொல்லும் ஆதாரம் மற்ற ஜீவர்களுக்கு உள்ளதைவிட மேலான ஐம்புலன் உணர்ச்சி இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் சுயமரியாதை இயக்கமும் ஆதரித்து அவைகளை மரியாதை செய், அவற்றிற்கு மதிப்புக் கொடு, அவற்றின் முடிவுப்படி நட என்று சொல்லுகிறது.

~subhead

நம்மவர்கள் போக்கு

~shend

மனிதனுக்குண்டான ஆலோசிக்கும் தன்மையும் பகுத்தறிந்து ஆராய்ச்சி செய்யும் தன்மையும் மனிதனுக்கு அமைந்துள்ள பஞ்சேந்திரிய சக்தியால் மற்ற எல்லா ஜீவராசிகளையும் விட மேலானதாய் இருக்கிறது. அதை மனிதன் சரியானபடி உபயோகிக்காமலும் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல் மிருகப் பிராயத்திலும் கீழாக வாழ்கிறான் என்பதை பல விஷயங்களிலும் பலர் விஷயங்களிலும் காண்கிறோம். உதாரணமாக மனிதன் தனது புலன்கள் உணர்ச்சிக்கு தேவையான ஒவ்வொரு காரியத்தையும் எப்படி பரிசோதித்து பிரத்தியக்ஷ அனுபவத்தைக்கொண்டு நடந்து கொள்கிறானோ அது போல் வேறு பல காரியங்களில் நடந்து கொள்வதில்லை. இது விஷயமாக உங்களுக்கு உதாரணங்கள் எடுத்துக் காட்டவேண்டுமானால்:-

ஒரு மனிதன் உங்களிடம் வந்து ஒரு அணா நாணயத்தைக் கொடுத்து அதற்கு செம்புக்காசுகளாக சில்லறை கேட்பானேயானால் நீங்கள் அந்த நாணயத்தை பரிசோதித்துப் பார்த்து உங்களுக்கு திருப்திப் படும்படியான மாதிரியில் சோதனைகள் செய்து பிறகுதான் அதற்கு சில்லறை கொடுப்பீர்கள்.

ஒருவன் உங்களிடம் வந்து ஒரு பணவிடை பொன்துண்டை கொடுத்து அதற்கு அரை விலை கொடுக்கும்படி கேட்டாலும் நீங்கள் அத்துண்டை உரைத்துப் பார்த்து எடை பார்த்துக்கொண்டுவந்த ஆளின் யோக்கியதையையும் பார்த்து பிறகுதான் அதை வாங்குவீர்கள். நீங்கள் சாப்பிடுவதிலும் அனுபவ விஷயத்திலும் இப்படியே ஆராய்ச்சி செய்து அனுபவப்பட்டு பார்த்தே பின்பற்றுகிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் உயிரினும் பெரியதாய் கருதும் மதம் அல்லது சமயம் – மார்க்கம் என்கின்ற விஷயங்களிலும் நீங்கள் உயிரோடு வாழும்போதும் நீங்கள் முடிவெய்திய பின்பும் அதாவது செத்த பிறகும் உங்களுக்கு மேன்மையை அளிக்கவல்லது என்று கருதி விளங்கும் கடவுள் அல்லது தெய்வம் என்னும் விஷயத்திலும் அதற்கு ஆக உங்கள் வாழ்நாளில் நல்ல பாகத்தையும் உங்கள் செல்வத்தின் குறிப்பிடத்தக்க பாகத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் செலவழிக்கும் காரியங்களிலும் மேல்கண்ட அதாவது ஒரு அணாவுக்கு சில்லறை கொடுக்க எடுத்துக்கொண்ட ஜாக்கிரதை ஆராய்ச்சி பகுத்தறிவு பிரயோகம் முதலியனவைகளை பிரயோகிக்கின்றீர்களா பயன்படுத்துகின்றீர்களா என்று யோசித்துப் பாருங்கள்.

~subhead

சுயமரியாதை இயக்கம் போதிப்பதென்ன?

~shend

சுயமரியாதை இயக்கம் மக்களுக்குப் போதிக்கும் முதல் காரியம் இதுதான்.

ஏனெனில் இந்த ஒரு காரணத்தாலேயே மனித சமூகம் பகுத்தறிவு உடையது என்று சொல்லப்பட்டும் கூட மிருகத்தை விட மற்றும் கீழான ஈரறிவு மூவறிவு பிராணிகளை விட கேவலமாக நடந்துகொண்டு மக்களை மக்கள் பகைத்துக்கொள்ளுகிறார்கள். மக்களை மக்கள் பிரித்துக் கொள்ளு கிறார்கள். மக்களிடம் மக்கள் துவேஷம் வெறுப்புக் காட்டி மனித சமூகத்திற்கே ஒற்றுமையும், சாந்தியும், திருப்தியும் இல்லாமல் இருக்கச்செய்து கொள்ளுகிறார்கள். இந்தத் தன்மை ஒன்று மாறினால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு மாபெரும் மாறுதல் காணலாம். சுகமும் சந்தோஷமும் நீடித்த இன்ப வாழ்வும் காணலாம். ஆதலாலே சு.ம. இயக்கம் மனிதனைத் தனது அறிவையும், ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்தி எம் முடிவையும் செய்யும்படி போதிக்கிறது, வேண்டிக்கொள்ளுகிறது.

இந்தக் காரியங்களுக்கு இணங்க முடியாதவர்களும் இணங்கத்தக்க அறிவும் ஆற்றலும் அற்றவர்களுக்கும் மக்கள் இந்த நிலையை அடைந்து விட்டால் தங்களது வாழ்வும் மேன்மையும் ஒழிந்துவிடுமே என்று கருதும் சுய நலக்காரர்களுக்கும் மோசக்காரர்களுக்கும் இவ்வியக்கம் குற்றமாய், நமனாய் காணப்பட்டு இவ்வியக்கத்தை இழித்துப் பழித்துக் கூறி மூடப் பிரச்சாரமும், விஷமப் பிரச்சாரமும் செய்ய வேண்டியதாகிவிடுகின்றது.

இதன் பலன்தான் சுயமரியாதை இயக்கமென்றால் அது “நாஸ்திக இயக்கம்” என்றும் ஒழுக்கமற்ற இயக்கம் என்றும் மடையர்களும் அயோக்கியர்களும் சொல்லித் தீரவேண்டி இருக்கிறது. இதைக் கேட்டுக் கொண்டு ஆராய்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் பொருத்திப் பார்த்து முடிவுகாண சக்தியற்ற மக்கள் பலர் இதை நம்பிக்கொண்டு மூடர்களாக வாழவேண்டியவர்களாகவும் ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.

கடவுளையோ மதத்தையோ மாத்திரம் கருதி ஆரம்பிக்கப்பட்ட இயக்கமல்ல இந்த சுயமரியாதை இயக்கம்.

~subhead

எதற்காக ஆரம்பிக்கப்பட்டது

~shend

எந்தக் காரியத்தையும் ஆராய்ந்தறிந்து செய்யவேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதாகும்.

மனிதன் எந்த மதஸ்தனாகவும் எப்படிப்பட்ட கடவுளை அல்லது கடவுள்களை உண்மை என்று நம்புகிறவனாகவும் இருந்தாலும் நமக்குக் கவலை இல்லை. ஆனால் அவன் அவற்றைத் தனது அனுபவத்தால் ஆராய்ந்து பார்த்து அம்முடிவுக்கு வந்தானா இல்லையா என்பதைப் பற்றித்தான் சுயமரியாதை இயக்கத்துக்கு கவலை உண்டு.

இதனால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அநேக மதவாதிகள் என்பவர்கள் எந்த தனிப்பட்ட மதத்தைப்பற்றியும் சிந்தியாமல் “எம் மதமும் சம்மதம்” என்று சொல்லி இருக்கிறார்கள் என்பது ஒரு புறமிருந்தாலும் அநேக பெரியார்கள் “அன்புதான் மதம்” என்கிறார்கள், “சத்தியம் பேசுவதுதான் மதம்” என்கிறார்கள், “மக்கள் துயர்களையும் தொண்டாற்றுவதுதான் மதம்” இவை தவிர்த்த வேறு மதம் இல்லை என்கிறார்கள். சுயமரியாதை இயக்கம் இந்த மதங்களை ஆட்சேபிப்பதில்லை. ஏற்றுக் கொள்ளவும் தயாராய் இருக்கிறது. அதுபோலவே கடவுளைப் பற்றியும் அநேகர்களால் ஒப்புக்கொண்ட பெரியார்கள் அன்பே கடவுள் அருளே கடவுள் அறிவே கடவுள் சத்தியமே கடவுள் வேறு கடவுளே இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள், இன்றும் சொல்லுகிறார்கள். இந்தக் கடவுள்கள் விஷயத்தில் சுயமரியாதை இயக்கம் தகராறு செய்வதில்லை ஏற்றுக்கொள்ளச் சொன்னாலும் தயங்குவதில்லை. இப்படிப்பட்ட மதமும் கடவுளும் மனித சமூக வாழ்வுக்கு ஒரு அளவில் இன்றியமையாதது என்றுகூட சுயமரியாதை இயக்கம் ஒப்புக்கொள்ளத் தயார்தான்.

ஆனால் இவை அல்லாத கடவுள்களும் மனித சமூக ஒற்றுமையான அன்பான வாழ்வுக்கும் ஒழுக்கத்துக்கும் எவ்வளவு கேட்டை பிரத்தியக்ஷத்தில் உண்டாக்கி இருக்கிறது என்று பாருங்கள்.

~subhead

நாம் பிரத்தியக்ஷத்தில் பார்ப்பதென்ன?

~shend

ஒருவன் கடவுளை மற்றவன் ஒப்புக்கொள்வதில்லை. ஒருவன் மதத்தை மற்றவன் ஒப்புக்கொள்ளுவதில்லை. இதை நாம் எல்லோரும் பிரத்தியக்ஷத்தில் பார்க்கிறோம்.

ஒருவன் பசுவை கடவுளாக கும்பிடுகிறான். ஒருவன் பசுவை அறுத்து சாப்பிடுகிறான். ஒருவன் மதம் பிரார்த்தனை கொட்டு முழக்கு தப்பட்டை சத்தம் வேண்டாம் என்கின்றது. மற்றவன் மதம் பிரார்த்தனை மணி, சேகண்டி, சங்கு, மேளம், நகார் வேண்டுமென்கின்றது. இருவர் கடவுளும் மதமும் சேர்ந்தாற்போல் வாழவேண்டும் மதிக்கப்படவேண்டும் என்றால் போலீசு, துப்பாக்கி, பட்டாளம், ஜெயில், அடி, உதை தயாராய் இருக்க வேண்டியதிருக்கிறது. இங்கு அன்புக் கடவுளுக்கும் சத்தியக் கடவுளுக்கும் “எம்மதமும் சம்மதத்துக்கும்” அறிவு மதத்துக்கும் இடமே இல்லை. ஒருவன் கடவுளுக்கு உருவம் கற்பிக்கப்படுகிறது. மற்றவன் கடவுளுக்கு உருவம் குணம் செய்கை எதுவும் கற்பிக்கப்படுவதில்லை.

ஒருவன் கடவுளுக்கு பெயரும் பெண்டுபிள்ளை குடும்பமும் ஆபாச ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையும் கற்பிக்கப்படுகிறது. மற்றவன் கடவுள்களுக்கு அவை கண்டிப்பாக இல்லை. இந்த இரண்டில் ஒன்றைத் தவிர வேறு கடவுளும் மதமும் இன்று “காண”ப்படுவதில்லை. கேட்கப்படுவதில்லை. இம்மாதிரி வழக்கங்கள் உள்ள கடவுள் மத சேற்றில் விழுந்தவன் எப்படிக் கரையேறுவான்.

எப்படி இருந்த போதிலும் நான் கருதுவது என்ன வென்றால் மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற ஜீவன்களுக்கு தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேஷம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை. இதை மதம் என்றாலும் கடவுள் என்றாலும் நான் கோபித்துக் கொள்வதில்லை. ஆகவே தோழர்களே இன்று இங்கு இந்த சிறு வார்த்தைகளோடு ஆரம்பித்து வைக்கிற இந்த சுயமரியாதை சங்கத்தை நீங்கள் தக்கபடி பயன்படுத்திக்கொண்டு நெடுங்காலம் இருந்து அது மனித சமூகத்துக்கு தொண்டாற்றி வரும்படியான மாதிரியில் இருந்துவர ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு இச் சங்கத்தை திறந்து வைக்கிறேன்.

குறிப்பு: 26.07.1938 இல் நன்னிலம் வட்டம் வெளவாலடியில் சுயமரியாதைச் சங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 07.08.1938

You may also like...