திருச்சியில் இந்தி எதிர்ப்பு படை வழியனுப்பு உபசாரம் 7000 பேர் கூட்டம்

 

தோழர்களே!

இன்றைய கூட்டம் இந்தி எதிர்ப்புப் பிரசாரத்துக்கு ஆக செல்லும் படையை வழியனுப்புவதற்காக என்றே கூட்டப்பட்டது என்பது அழைப்பு விளம்பரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டத்தில் வந்து சிலர் குழப்பம் விளைவிக்க நினைத்தது சுத்த முட்டாள்தனமாகும். இந்த கூட்டத்தில் இரண்டொருவர் ்காந்திக்கு ஜே” போடுவதும் ்இந்தி வாழ்க” என்று கத்துவதும் மண்ணை வாரி இறைத்து வேஷ்டியை வீசி மக்களை எழுந்து போகும்படி காலித்தனம் செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கூட்டத்தை கலிபுல்லா சாயபு மிக்க வலுவுடன் அடக்கி இராவிட்டால் இன்று பலர் உதைபட்டு துன்பப்பட்டு இருப்பார்கள். போலீசும் இல்லாத இந்த சமயத்தில் காலிகளுக்கு இக்கூட்டத்தார் புத்தி கற்பிக்க ஆரம்பித்து இருந்தால் என்ன நிலை ஏற்பட்டு இருக்கும்? கூட்டத்தில் இந்தியை ஆதரிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்று தோழர் கலீபுல்லா சாயபு கேட்டபோது கை தூக்கிய எண்ணிக்கையிலிருந்தே இத் தொல்லைக்காரர்களின் யோக்கியதை நன்றாய் விளங்கி இருக்கும். அவர்களும் பெரிதும் பார்ப்பனர்களாகத்தான் இருந்திருப்பதாய் தெரிகிறது. இம்மாதிரி காலித்தனத்தால் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு இப்பார்ப்பனர் வெற்றிபெற முடியும்?

நாங்கள் உண்மையிலேயே இந்தியை எதிர்ப்பவர்கள். இந்தி பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆக புகுத்தப்படுவது என்பதை இக்கூட்டத்தில் உள்ள பார்ப்பனர்களே மெய்யாக்கிவிட்டார்கள். தமிழ் மக்கள் வயிறு எரிந்து மனம் நொந்து கிடக்கும் காலத்தில் அதுவும் பிரிந்து ஆதரவற்றுக் கிடக்கும் இந்நாளில் ஏதோ சில கூலிகள் தங்கள் வசத்தில் இருப்பதாகக் கருதி எங்கள் முயற்சிகளை இப்படி அடக்கப் பார்ப்பது தர்மமா என்று கேட்கின்றேன்.

~subhead

எதிரிகள் சூழ்ச்சி

~shend

எங்களுடைய சேதிகளை பொதுப் பத்திரிக்கை எனச் சொல்லும் பார்ப்பனப் பத்திரிக்கைகள் கேலி செய்து கிண்டல் செய்து மறைத்து திரித்து கூறுகின்றன. சில அடியோடு அடக்கிவிடுகின்றன. எங்கள் ஒற்றுமையை கலைக்க சூட்சி செய்கின்றன. மக்கள் அநீதியாக சிறைபிடித்து கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

எங்களுக்குள்ளாகவே துரோகிகள் கற்பிக்கப்படுகிறார்கள். கீழ் மக்களை சுவாதீனம் செய்து அவர்கள் மூலமாக நம் இயக்கத்தை ஒழிக்க முயற்சி செய்யப்படுகின்றது.

இந்தி எதிர்ப்பு ஜஸ்டிஸ் கட்சியின் மற்றொரு அவதாரம் என்றும் பழி சுமத்தப்படுகிறது.

ஜஸ்டிஸ் கட்சிக்கு சட்டசபையில் உள்ள இரண்டு தலைவர்களும் பார்ப்பன தாசர்களாய் இருக்கும்போது இது எப்படி ஜஸ்டிஸ் கட்சி காரியமாக இருக்க முடியும். இந்தி எதிர்ப்பு பார்ப்பன துவேஷத்துக்கு ஒரு கருவி என்று சொல்லப்படுகிறது. தோழர்கள் டி.ஆர்.வெங்கிட்ட ராமசாஸ்திரி, கே.நடராஜன், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, சி.வி. விஸ்வநாத சாஸ்திரி, உ.வே. சாமிநாதய்யர், பரவஸ்து ஆச்சாரியார், கே.பாஷ்யம் அய்யங்கார், வி.பாஷ்யம் அய்யங்கார், வி.வி.சீனிவாசய்யங்கார் குனச்ரு, டில்லி நிர்வாகசபை வர்த்தக மெம்பர் சர்.மகம்மது யாகூப் இவர்கள் எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா?

“சென்டினல்” ்அமிர்த பஜார்” ்மாடர்ன் ரிவ்யூ” ்சோஷியல் ரிபார்மர்” ்லீடர்” “சர் வெண்ட் ஆப் இந்தியா” முதலாகிய பத்திரிகைகள் ஜஸ்டிஸ் பத்திரிகைகளா? அல்லது பம்பாயிலும், சென்னையிலும் உள்ள பிரஜா உரிமைச் சங்கங்கள் ஜஸ்டிஸ் கிளைச் சங்கங்களா? அடக்குமுறையை ஒன்று இரண்டு தடவையாவது கண்டித்து எழுதிய ்சுதேசமித்திரன்” ஜஸ்டிஸ் பத்திரிகையா? இப்படியெல்லாம் இருக்க தமிழ் மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு அவர்களை அடிமை கொள்ளச் செய்யும் இம்மாதிரியான சூழ்ச்சியும் கொடுமையும் நியாயமா? என்று உங்களைக் கேட்கிறேன்.

~subhead

சில்லறை சேஷ்டை செய்வது நியாயமா?

~shend

நாங்கள் சொல்லுவதும் செய்வதும் தப்பானால் நாளை இங்குக் கூட்டம் போட்டு பாருங்கள், உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள், மற்றபடி பொய்யாகவாவது கூட்டத்தில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டது என்று எழுதுவதற்கு ஆகவே இங்கு விஜயம் செய்திருக்கும் சில அயோக்கிய நிருபர்களுக்குச் சேதி கொடுக்க வேண்டும் என்று கருதி சில்லறை சேஷ்டைகள் செய்வது நியாயமா? என்று கேட்கிறேன்.

இன்றைய ஆட்சியில் தங்கள் அபிப்பிராயம் சொல்லக்கூடவா இடமில்லை? இந்த கூட்டத்தில் ்காந்திக்கு ஜே” ஏன் போட வேண்டும்? இவர்கள் காந்தியை யோக்கியர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா அல்லது தங்களையாவது காந்தி சிஷ்யர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா? நான் பார்த்தேன் ஒருவன் மண்ணை வாரி இரைத்துக்கொண்டு ்காந்திக்கு ஜே” போட்டான். முதுகில் இரண்டு அப்பளம் விழுந்தவுடன் அறுத்துவிட்ட கழுதைகள் போல் பலர் ஓட்டமெடுத்தார்கள். இந்த சமயம் நான் பயந்துவிட்டேன். போலீசும் தென்படவில்லை. நமக்கோ நம் ஆள்களுக்கோ பந்தோபஸ்தில்லை என்று நான் கவலைப்படவில்லை, ஆத்திரத்தோடு கைகலக்க ஏற்பட்டால் எதிரிகள் கதி என்னவாகும். அப்புரம் இந்தி எதிர்ப்புகாரர்கள் பலாத்காரம் செய்கிறார்கள் என்று சொல்லுவதா? எவ்வளவு கஷ்டப்பட்டு பலாத்காரம் ஏற்பட இருந்ததை இப்போது அடக்க வேண்டியதாயிற்று. போலீசார் கூட்டத்திற்கு காவல் அளிக்க வேண்டியதில்லை என்றாலும் காலிகளுக்காவது காவல் அளிக்க வேண்டாமா? இன்று இவ்வூர் போலீசு தண்டாரோ அடிக்கக் கூட அனுமதி கொடுக்கவில்லை. நோட்டீசு அச்சடிக்க அச்சாபீசுகள் பயப்படுகின்றன.

இந்த கிளர்ச்சிக்கு பணம் வசூல் செய்வதை தடுக்க பல போக்கிரித்தனமான அற்பத்தனமான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது?

~subhead

தொண்டர்களுக்கு தண்டனையா?

~shend

தொண்டர்களை சிறைபிடிப்பதையும், தண்டிப்பதையும், அவர்களை நடத்துவதையும் சற்று பாருங்கள். 150 பேர்களை சிறை பிடித்து தண்டித்து விட்டு இப்போது அந்த காரியத்துக்கு சிறை பிடிப்பது நிறுத்தப்பட்டுப் போய்விட்டது என்றால் இதுவரை பிடித்தது ஒழுங்கா, நியாயமா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றி காங்கரஸ் காரியக் கமிட்டி “தப்பு அபிப்பிராயத்தின் மீது அக்கிளர்ச்சி நடப்பதால் அதை விளக்க காங்கரஸ் தலைவருக்கு அதிகாரமளித்திருக்கிறது” என்று தீர்மானித்திருக்கிறது.

அப்படியானால் அபிப்பிராய பேதத்தினால் நடத்தும் காரியத்துக்கு 6 N , ஒரு வருஷம், இரண்டு வருஷம் கடின காவலா என்று கேட்கின்றேன். இதுதான் ஜனநாயகமா? இதுதான் அபிப்பிராய சுதந்தரமுள்ள பிரஜா உரிமை ஆட்சியா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இந்த அரசாங்கம் இந்தி எதிர்ப்புக் கமிட்டியை சட்டம் மீறுவதற்கும் ஆயிரக்கணக்கான மக்களை சட்டம் மீறித் தீர வேண்டுமென்று கட்டாயப்படுத்தவும் தூண்டச் செய்கிறது. இதில் சர்க்காருக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது என்று கேட்கிறேன்.

அரசாங்கத்திற்கும் சட்டத்திற்கும் பணிந்து போவது அவமானம் என்று மக்கள் கருதும்படி செய்கின்றது.

நாம் என்ன செய்வது, கிளர்ச்சி கூட செய்யக்கூடாதா? தோழர் சத்தியமூர்த்தியார் இந்திக் கிளர்ச்சிக்காரரை ராஜத்துரோக சட்டப்படி வழக்குத் தொடுத்து தூக்கில் போடும்படி சர்க்காருக்கு யோசனை கூறுகிறார். இப்போது நடத்தும் சட்டமே கொடுங்கோலாட்சி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆகவே காங்கரஸ் ஆட்சியின் யோக்கியதையும் அதைக் கையாளும் பார்ப்பனர்கள் யோக்கியதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்பது ஆக விட்டு படை தொண்டர்களுக்கு ஈ.வெ.ரா. செய்த உபதேசமாவது:-

~subhead

தொண்டர்களுக்கு உபதேசம்

~shend

இப்படையை நடத்துகிறவர்கள் பொறுப்புள்ள பெரியார்கள். இவர்கள் நடத்தையில் படை வெற்றிகரமாய் முடிவுபெறும் என்றே கருதுகிறேன். ஒற்றுமை, சிக்கனம், சமரச எண்ணம் ஆகியவை தலைவர்களுக்கு வேண்டும். தொண்டர்களுக்குப் பொறுமை, சகிப்புத் தன்மை கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் தன்மை ஆகியவை வேண்டும்.

எதிரிகள் பல சூழ்ச்சி செய்வார்கள். சிறியதைப் பெரியதாக்கி பழி கூற பல எதிரிகள் இருக்கிறார்கள். எதிரியிடம் கூலி வாங்கிக் கொண்டு நம்மைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் பல ஈனர்கள் நமக்குள்ளாகவே இருந்து குடி கெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இயக்கத்துக்கு கேடு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். எவ்வளவு பழி சுமத்தினாலும் எவ்வளவு இழிவு படுத்தினாலும் இவற்றை எவ்வளவு பேர் நம்பினாலும் நான் மாத்திரம் களைத்துப் பின் வாங்குகிறவனல்ல. எனக்கு எனது லôயம் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அதற்கு ஆகவே உயிர் உள்ள அளவும் பாடுபட்டுத்தான் சாவேன். யார் என்ன சொன்னாலும் வெட்கப்படப் போவதில்லை. யார் என்ன மோசம் செய்தாலும் சரி, துரோகம் செய்தாலும் சரி, வாழ்நாள் முடிகிறவரை கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு காரியம் செய்கிறதென்ற முடிவில் தான் இருக்கின்றேன். ஆகவே தோழர்களே! இம்மாபெரும் லôயத்திற்கு தொண்டாற்றும் வேலை யாவரும் தங்கள் வாழ்வுக்கு பயன்படுத்திக் கொண்டு காரியத்தை கெடுக்காமல் லôயத்துக்கு தங்களால் கூடுமானவரை தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பு: திருச்சி டவுன்ஹால் மைதானத்தின் முன்புறம் 01.08.1938 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு பிரச்சாரப் படை வழியனுப்பு விழா கூட்டத்திற்கு தலைமையேற்று ஆற்றிய நிறைவுரை.

குடி அரசு – சொற்பொழிவு – 07.08.1938

You may also like...