ஒரு வருஷ ஆட்சி படலம்
காங்கரஸ் மந்திரிகள் பதவி ஏற்று ஒரு வருஷமாகி விட்டது. அதாவது அவர்கள் தேர்தலுக்கு நிற்கும் போது மந்திரி பதவி ஏற்பதில்லை என்றும் அரசியல் சட்டத்தை உடைத்தெறிவதற்கும் ஏகாதிபத்தியத்தைத் தொலைப்பதற்காகவுமே சட்டசபைக்குப் போகிறோம் என்றும் சொல்லி பாமர மக்களை ஏய்த்து ஓட்டுப் பெற்று சட்டசபை அங்கத்தினர்களான பிறகு அரசியல் சட்டத்தை உடைப்பதானால் மந்திரி பதவி ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்றும் சொல்லி பதவி ஏற்க முன்வந்து காங்கரஸ் கமிட்டி பேரால் அனுமதி உண்டாக்கிக் கொள்ளத் துணிந்து கொண்டு பதவி ஏற்ற பிறகு அரசாங்கத்தார் தங்களை பதவியில் வைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அதற்காக ்நாங்கள் பதவி ஏற்றாலும் புதிய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்கின்ற வாக்குறுதியை சர்க்காருக்கு கொடுக்கவும் காங்கரஸ் கமிட்டி மூலமே தீர்மானித்துக் கொண்டு அந்த வாக்குறுதி கொடுப்பதையும் பாமர மக்கள் ஏமாறும்படி அதாவது சர்க்காரை வாக்குறுதி கேட்பது போல் பாவனை செய்து அந்த வாக்குறுதி கேட்பதற்கு ஆக வாக்குறுதி கொடுத்ததாய் மக்களை நினைக்கும்படி செய்து அந்தப்படி அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்ததல்லாமல் ராஜ விஸ்வாச சட்ட விஸ்வாச பிரமாணமும் செய்து கொடுத்து மந்திரி பதவி ஏற்று இன்று ஒரு வருட காலம் ஆகின்றது.
ஆகவே இந்த ஒரு வருஷ காலத்தில் இந்த மந்திரி ஆட்சியில் நிகழ்ந்த பயன் என்ன என்று பார்ப்பது மெனக்கேடான வேலையாகாது என்று கருதுகிறோம். அந்தப்படி பதவியேற்று காங்கரஸ்காரர்கள் நடத்திய காரியங்களில்
~subhead
முதல் பலன்
~shend
முதலாவதாக மந்திரி பதவிகளை காங்கரஸ்காரர்களுக்கு வினியோகம் செய்வதிலேயே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டார்கள்.
இரண்டாவது பதவி வினியோகத்தில் வகுப்பு உணர்ச்சிகள் பெருகி மனக்கசப்புகள் உண்டாயிற்று. அதாவது மந்திரிகள் 10 தலைவர்கள் 4 ஆக 14 ஸ்தானங்களில் 7 ஸ்தானங்களை பார்ப்பனர்கள் எடுத்துக்கொண்டார்கள். இதிலும் முதல் மந்திரியும், இரண்டு சபை தலைவர்களும் பார்ப்பனர்களே ஆகிக் கொண்டார்கள். ்போதாகுறைக்கு” பார்லிமெண்டரி சீப் செக்ரட்டரி என்கின்ற பதவியையும் பார்ப்பனர்களே எடுத்துக்கொண்டார்கள்.
இவ்வளவும் அல்லாமல் காங்கரசுக்கு துரோகம் செய்ததாய் தீர்ப்புக் கூறி காங்கரசைவிட்டு வெளியாக்கி அவரது பதவிகளையும் ராஜிநாமாச் செய்யும்படி வற்புறுத்தி அதேபடி ராஜிநாமா செய்துவிட்டு சொந்தப் பொறுப்பில் ஒரு தேர்தல் பதவிக்கு நின்று படுதோல்வி அடைந்த ஒருவருக்கு நாமினேஷன் கொடுக்கச் செய்து மந்திரி பதவி கொடுத்துவிட்டு இதற்கு பொது ஜனங்கள் காரணம் கேட்டதற்கு ்அந்த காரணம் தனக்கு தெரியா”தென்றும் ்நாமிநேஷன் கொடுப்பதும், மந்திரி பதவி அளிப்பதும் கவர்னர் பிரபுவின் அதிகாரம்” என்றும் பொய் சமாதானம் சொன்னதுமான காரியம் மற்றொன்று.
~subhead
குறைந்த சம்பளப் புரட்டு
~shend
இவை ஒருபுறமிருக்க தாங்கள் பதவி ஏற்றால் N 500 ரூ-க்கு மேல் ஊதியம் பெற மாட்டோம் என்றும் மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் N500 ரூ – க்கு மேல் கொடுக்கமாட்டோம் என்றும் ஓட்டர்களுக்கு கொடுத்த நம்பிக்கைக்கு துரோகமாக மந்திரிகள் ஒவ்வொருவருக்கு N 500,150, 150, 100, 250 – 1150 ரூ வீதம் அதாவது சம்பளம் 500, வீட்டு வாடகை 150, மோட்டார் கார் அலவுன்ஸ் 150, சர்க்கார் செலவில் 4000 ரூ மோட்டார்கள் 4 அனுபவிப்பதில் ஒன்றுமில்லாமல் போவதும் அதற்கு மத்தியில் ரிப்பேர், டியூப், டயர் ஆகியவை சேர்ந்து N 100 ரூபாயும், மந்திரிகளின் சுற்றுப் பிரயாண டிராவலிங் அலவுன்ஸ் பெறுவதில் செலவு போக மீதி குறைந்தது N 250 ரூபாயும் ஆக மொத்தம் மந்திரி 1 -க்கு N 1-க்கு 1150 ரூபாய்க்கு குறையாமல் அனுபவிப்பதுமாய் இருந்து வருவதாகும்.
மற்றும் மனிதனின் ஒழுக்கத்தையும், நாணையத்தையும், சுதந்திரத்தையும் கெடுக்கும் மாதிரியில் பலருக்கு பயன்படும்படி சட்டசபை மெம்பர்களுக்கும் (அவர்களுடைய பிரயாணப் படியல்லாமல்) N 1 – க்கு 75 ரூ வீதம் சம்பளம் கொடுத்து அடிமைப்படுத்திக் கொண்டதும் ஆன காரியங்களை பதவி அமைப்பிலேயே ஏற்பட்டுவிட்டன.
இப்படிப்பட்டவர்கள் பதவி ஏற்ற இந்த ஒரு வருஷ காலத்தில் ஏற்பட்ட பலன் என்ன என்பதை சொல்லவேண்டுமானால் ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்வதிலேயே இவர்கள் செய்த காரியம் எப்படிப்பட்டது என்பது விளங்கிவிடும் என்றே கருதுகிறோம்.
~subhead
ஓயாத பிரசாரம்
~shend
அதாவது மந்திரிகள் ஒரு ஜில்லாவில் நிறுத்திவிட்டதாகக் கூறும் மதுவிலக்கைப் பற்றியும், விவசாயிகளுடைய கடன் பளுவை குறைத்து விட்டதாகக் கூறும் கடன் குறைப்பு சட்டத்தையும், மக்களுக்கு தேசீயக் கல்வியை புகட்டுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டதாகக் கூறும் இந்தி கட்டாய பாடதிட்டத்தைப் பற்றியும் 10 மந்திரிகளும் 10 காரியதரிசிகளும் ஒரு நாளாவது இடைவிடாமல் ஒரு மணி நேரமாவது ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் சதா சர்வ காலம் நாடு முற்றும் சுற்றிச் சுற்றி ்இவை நல்ல காரியங்கள்” “இவை நல்ல காரியங்கள்” இதனால் மக்களுக்கு நாட்டுக்கு நன்மையுண்டு நண்மையுண்டு என்று பிரசாரம் செய்து தீரவேண்டிய அவசியத்திற்கும் பிரசாரம் செய்த வண்ணமாய் இருப்பதற்கும் கொண்டு வந்து விட்டுவிட்டது என்றால் இந்த காரியங்களுக்காக மந்திரிமார் செய்யும் சுற்றுப் பிரயாணங்களில் செல்லுமிடங்களில் எல்லாம் பொது ஜனங்கள் 100 நூற்றுக்கணக்கான பேர்கள் ஏன் 1000 ஆயிரக்கணக்கான பேர்கள் கறுப்புக்கொடி பிடித்து, பஹிஷ்காரக் குறி காட்டி இவர்களை மானபங்கப்படுத்தி அனுப்புவது என்றால் மற்றபடி அக்காரியங்களின் நன்மைகளைப் பற்றி விவரிக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.
~subhead
எங்கும் ஆறு பேரா?
~shend
இந்த கறுப்புக்கொடி முதலிய மரியாதைகளுக்கு முதல் மந்திரியார் சொல்லும் சமாதானமானது ்ஒரு ஆறே ஆறு பேர் தான் நான் செல்லுமிடங்களிலெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்து கறுப்புக் கொடி காட்டிய வண்ணமாய் இருக்கிறார்கள்” என்பதாகும். ஆனால், கறுப்புக் கொடி பகிஷ்காரங்கள் ்மெயில்” ்சண்டே அப்சர்வர்” ்விடுதலை” ்நகர நூதன்” ்நம் நாடு” ்குடி அரசு” முதலிய பத்திரிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்துடன் 500 கணக்கான கறுப்புக்கொடி பிடித்த மக்களுடன் எடுக்கப்பட்ட போட்டோ பட பிளாக்குகள் டஜன் டஜனாக ஊர் பேர் தேதி நேரங்களுடன் பிரசுரிக்கப்பட்டு வருவதை பார்க்கும் ஜனங்கள் இந்த ்ஆறே பேர்தான்” என்ற சமாதானத்தை எப்படி ஒப்புக்கொள்வார்கள் என்றும் தன்னைப்பற்றி பொது ஜனங்கள் யோக்கியர் என்று எப்படிக் கருதுவார்கள் என்று கருதினாரோ என்பது நமக்கு விளங்கவில்லை. முதல் மந்திரியாரின் கூட்டங்களும், கல்வி மந்திரி, விளம்பர மந்திரி, வைத்திய மந்திரி, சட்ட இலாக்கா மந்திரி முதலியவர்கள் கூட்டங்களும், சில தலைவர் முகவுரை கூட முடிவு பெறாமலும் பல முடிவுரை வந்தனோபசாரம் முடிவு பெறாமலும் கலைக்கப்பட்டு ஓட்டமெடுக்க நேரிட்டவைகள் மெயில், இந்து, மித்திரன் முதலிய பத்திரிக்கைகளில் இருப்பனவற்றிற்குக் கூட இந்த ்ஆறே பேர்தான்” என்கின்ற சமாதானமே போதுமா என்றும் சென்னை கடற்கரை கூட்டத்தில் காங்கரஸ் தலைவரும் முதல் மந்திரியும் 500 போலீசாரை வைத்துக்கொண்டு நடத்திய கூட்டத்திலாவது முடிவுரையும் வந்தனோபசார சடங்கும் நடந்ததா என்றும் இது நடவாததற்கும் இந்த ்ஆறே பேர் தான் காரணம்” என்றும் யோசித்துப் பார்க்கும்படி பொதுஜனங்களையே வேண்டிக் கொள்கிறோம். இவற்றை நாம் ஏன் இந்த வியாச முதலிலேயே குறிப்பிடுகிறோம் என்றால் இந்த காங்கரஸ் பொது ஜன செல்வாக்குள்ள, நூற்றுக்கு எண்பது மஜாரட்டி உள்ள ஜனநாயக மந்திரிமார்கள் பதவி வகித்த ஒரு வருஷ காலத்துக்குள் இவர்கள் செய்த காரியங்களின் பயனாய் நாட்டில் இவர்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கும் பொதுஜன ஆதரவும் எப்படிப்பட்டது என்பதை சுருக்கமாய் விளக்குவதற்கு ஆகவே இதை முதலில் குறிப்பிட்டோம்.
~subhead
கள்ளு
~shend
மற்றும் ்கள்ளு நிறுத்தத்தினால் கல்வியை குறைக்க வேண்டியதாய் விட்டது” என்றும் ்கல்விக்கு ஆக கொஞ்சம் கூட பண உதவி செய்ய முடியாது” என்றும் மந்திரிகளே அதுவும் கல்வி மந்திரியே 12-6-38 தேதி திருநெல்வேலியில் கூறிவிட்டார் (இது சு.மி-ல் இருக்கிறது)
~subhead
கடன் குறைப்பு
~shend
கடன் குறைப்பு மசோதாவில் பெரிய விவசாயிகள், விவசாயிகள் குறைக்கப்பட்ட கடனைக் கட்டக்கூட தங்களுக்கு கடன் கிடையாமலும் சிறு விவசாயம் செய்யக்கூடியவர்களுக்கு விதைப்பு செலவுக்குக்கூட பண சவுகரியம் கிடையாமலும் போய்விட்டதென்று இவர்கள் கூக்குரல் இடுவதை முதல் மந்திரியாரே நன்றாய் உணர்ந்து பணக்காரர்களும், லேவா தேவிக்காரர்களும் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும்படி விண்ணப்பம் செய்து கொண்டு கெஞ்சுகிறார். அதாவது ்பணமிருப்பவர்கள் விவசாயிக்கு வேண்டிய கடன் தொகையை முதலில் கொடுத்துவிட்டு பிறகு மீதி இருந்தால் பாங்கியில் போட வேண்டும். நாட்டுக்கு அஸ்திவாரமாகிய விவசாயிகளை காப்பாற்றுங்கள்” என்று ஓலமிடுகிறார்.
(இதுவும் சு.மி. பத்திரிகையில் இருக்கிறது)
மேற்கண்ட இரண்டு விஷயங்களிலும் அதாவது மதுவிலக்கு கடன் குறைப்பு ஆகிய இரண்டு விஷயங்களிலும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாய் கருதி செய்யப்பட்ட காரியங்கள் தீமையாக முடிந்து விட்டதை முதல் மந்திரியாரும் கல்வி மந்திரியாரும் நன்றாய் உணர்ந்துவிட்டார்கள்.
~subhead
மாஜி திவான் பகதூர் அபிப்பிராயம்
~shend
மற்றும் திவான் பகதூர் (பட்டத்தை விட்ட) தோழர் டி.எ.ராமலிங்க செட்டியார் எம்.எல்.சி., அவர்களும் இந்த சட்டத்தின் குறைபாடுகளைப் பற்றி எழுதும் போது
்கடன் இல்லாமல் விவசாயம் நடப்பது துர்லபம். குடியானவனுக்குச் சுலபமாய் கடன் கிடைப்பதற்கு வழி இல்லை, பணம் கொடுப்பவர்கள் ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து எழுதிக்கொண்டோ அல்லது சொத்துக்களை கிரையமாக எழுதிக் கொண்டோதான் கடன் கொடுக்கிறார்கள்” என்று எழுதி உடனே வேறு சட்டம் செய்து இதைத் திருத்த வேண்டும் என்றும் எழுதி ்கூட்டுறவு” என்ற பத்திரிகையில் ஜúலை 1 – ந் தேதி பிரசுரித்துள்ளார். இவர் காங்கரசு எதிரியல்ல; பார்ப்பன துவேஷி அல்ல (ஜஸ்டிஸ் – சுயமரியாதை கட்சிக்காரருமல்ல) மிக்க மரியாதையான பாஷையில் எழுதி இருக்கிறார். இவ்வித சட்டத்தை ஜஸ்டிஸ் மந்திரிகள் செய்திருந்தால் இவர் கிழித்து சின்னாபின்னமாக்கி இருப்பார். ஆனால் காங்கரஸ் ஒழுங்கு (அடக்குமுறை) நடவடிக்கைக்கு பயந்து திருட்டு பாஷையில் எழுதி இருக்கிறார்.
மந்திரிகள் இந்த ஒரு வருஷத்தில் செய்த 3 நல்ல காரியங்களில் இனி மீதி இருப்பது இந்தி.
~subhead
இந்தி
~shend
இந்தி பாஷையை புகுத்துவது தவறு என்று மக்கள் கூப்பாடு போடுவதை உணர்ந்து முதல் மந்திரியாரே அதை மாற்றிக் கொண்டார். அதாவது ்நான் கட்டாயமாகப் புகுத்தப் போவது இந்தி அல்ல ஹிந்துஸ்தானி” என்று சொல்லிவிட்டார். இதைப்பற்றி காங்கரசையே ஆதரிக்கும் மெயில் பத்திரிகை இந்தி என்றால் என்ன? ஹிந்துஸ்தானி என்றால் என்ன? உருது என்றால் என்ன? சமஸ்கிருதம் என்றால் என்ன? இவைகளில் முதல் மந்திரி புகுத்தப் போவது எது? அதற்கு இலக்கியம் என்ன? இலக்கணம் என்ன? எழுத்து என்ன? என்றெல்லாம் கேட்டிருப்பதோடு தனக்கும் தெரியவில்லை என்றும் புகுத்துபவர்களுக்கும் தெரியவில்லை என்றும் புகுத்தப்படுபவர்களுக்கும் தெரியவில்லை என்றும் கிண்டல் செய்து குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடுவது போல் இருப்பதாக பரிகாசம் செய்கிறது. ஆச்சாரியாரும் இந்தி உத்திரவை மாற்றி ஆக வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார் என்றாலும் மானம் அவர் கையைப் பிடித்துக் கொள்ளுகிறது.
இந்திப் போர் எப்படி இருந்தாலும் ஒரு பாஷைக் கிளர்ச்சியை அடக்குவதற்கு கிளர்ச்சிக்காரர்களை அடக்குமுறை சட்டங்களால் அதுவும் பிரதம மந்திரியால் வெகு அற்பமான விஷயம் என்று கருதப்பட்ட ஒரு சிறு கிளர்ச்சிக்காகதானே அதை பல வழிகள் மாற்றிக் கொண்டிருந்தும் கூட காங்கரஸ்காரர்களாலேயே மிகவும் அநீதியானதும் மனித சமூகத்தார் மானத்துக்கு கேடானதுமான சட்டம் என்று பழி கூறி அதை ஒழிப்பதற்காகவே அங்ஙனம் ஏற்பதாகச் சொல்லி ஓட்டுப் பெற்றவர்கள். பதவிக்கு வந்த உடன் அதே சட்டங்களைக் கொண்டு சுமார் 200 பேர்கள் வரை 6 N வரையும் ஒரு வருஷம் வரையும் கடுங்காவல் தண்டனையும் தண்டிக்கப் படவேண்டியவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள் என்றால் இவர்களுடைய ்நல்ல ஆட்சி”க்கு இனி வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.
அதுவும் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், வெடிகுண்டுக் காரர்களும் மன்னிக்கப்பட்டு நிபந்தனை இல்லாமல் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யுங்காலையில் ்என் தாய் பாஷையை நேசிக்கிறேன்” என்ற பாவத்துக்கு ஆக இரண்டு வருடம் என்றால் அதுவும் சன்யாசிக்கு – மடாதிபதி – தமிழ் பண்டிதருக்கு இரண்டு வருஷம் கடின காவல் என்றால் இந்த ஆட்சியின் ஒரு வருஷகால நிகழ்ச்சிக்கு பட்டியலோ ஜாப்தா – பாலன்ஸ் ஷீட்டோ இருக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.
இவைகள் எல்லாம் எப்படியோ தொலைந்து போகட்டும், ஒரு சாமியார் ஒரு வருஷம் சிறையில் அவதிப்பட்டதால் உலகம் முழுகிப் போகும் என்று நாம் கவலைப்படவில்லை. 200 பேர் அல்ல 2000 பேர் சிறை சென்று துன்பப்பட்டதால் ஜன சமூகத்திற்கு ஏதும் கேடு வந்து விடுமோ என்று நாம் கவலைப்படவில்லை. ஆனால் இன்றைய ஆட்சியானது பல நூற்றாண்டுகளுக்கு முன்,
~subhead
முன்னோர் வாக்கு
~shend
ஒரு கவி அரசி ்நூலாலே (பூணூல் ஆட்சியாலே ) நாடு கெடும்” என்றும் ஒரு கவி அரசர் ்முப்புரி நூல் பாப்புப் பெருத்து… துரைத்தனம் பாழ்த்ததுவே” பாப்பு (பார்ப்பனர்) பெருத்தல்லோ…. ராஜ்யம் பாழ்பட்டதுவே என்றும் பாடியதை மெய்ப்பிக்க முதல் மந்திரியாரின் இந்த ஒரு வருஷ ஆட்சி உருவாரமாய் நிற்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம்.
மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள காரியங்களையும் அபிப்பிராயங் களையும் உறுதிப்படுத்த கனம் முதன் மந்திரியார் அவர்களே நமக்கு தேவைக்கு மேற்பட்ட ஆமோதிப்பை அளித்துவிட்டார்கள்.
்அதாவது அரசியலில் எனக்கு அனுபோகமில்லை. எதிர்ப்புகளைச் சமாளிக்க எனக்கு சக்தி இல்லை. அரசியல் ஞானம் எனக்கு போதாது. வக்கீல் தன்மையிலும் காசு பெற்ற பக்கமே வாதம் பேசிப் பேசி பழகிவிட்டபடியால் உண்மை கண்டுபிடிக்கவும் நடுநிலைமையாய் நடக்கவும் எனக்கு முடிவதில்லை. அரசியல் இவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நான் அறியாமல் போய்விட்டேன். பிடிவாதமாக நான் நினைப்பதே சரியென பேசத்தான் தெரிகிறதே தவிர ஒத்துப் போகவும் நியாயம் உணரவும் என்னால் முடிவதில்லை” என்று கள்ளிக் கோட்டை, மங்களூர், அனந்தப்பூர் முதலிய ஜில்லாக்களின் சுற்றுப் பிரயாணத்தில் பேசி இருக்கிறார்.
இவை மாத்திரமல்லாமல் இந்த பதவியை விட்டுவிட்டு ஓடுவதற்கு சமயம் தேடுவதாகவும் ஜாடைமாடையாய் அடிக்கடி கூறுகிறார்.
ஆகவே காங்கரஸ் ஆட்சியின் – ஆச்சாரியார் ஆட்சியின் ஒரு வருஷ ஆட்சியின் பலாபலத்தின் வரவு செலவு திட்டத்திற்கு வேறு என்ன ஜாப்தா வேண்டும் என்று மறுபடியும் கேள்க்கின்றோம்.
~subhead
மந்திரிமார் கைவிரிப்பு
~shend
நிற்க, காங்கரஸ் ஆட்சியின் கல்வித் திட்டம் என்பது பள்ளிக்கூடங்களை மூடி சாவடிகளிலும் ஊர் கேணிகளிலும் சில வார்த்தைகள் அடங்கிய அட்டைகளை எழுதிக் கட்டிவிட வேண்டியது என்பதாய் விட்டது (இது சர்க்கார் அறிக்கையிலேயே கூறுகிறது)
ஆஸ்பத்திரிகளுக்கு சம்பள டாக்டர் எடுக்கப்பட்டு கெளரவ டாக்டர்கள் நியமிக்கப்பட்டுவிட்டது.
கிராமங்களுக்கு தண்ணீர் வசதிக்கு பொதுக் கிணறுகள் வெட்ட பணமில்லை என்று கண்டிப்பாக சொல்லப்பட்டாய் விட்டது.
ரோட்டுபாலம் முதலியன செப்பனிடவும் புதிதாய் போடவும் புது வரி போட்டாக வேண்டியதாகி புது புது சுங்கமும் ஏற்படுத்தி ஆகிவிட்டது.
கிராமத்தாருக்கு இதைவிடக் கேடான காரியம் இந்த மந்திரிகள் வேறு என்ன செய்யவேண்டும்?
~subhead
காங்கரஸ் சாதிக்காதவை
~shend
நிர்வாக செலவை குறைப்பதாக கூப்பாடு போட்டவர்கள் ஒரு வருஷத்தில் 3லி கோடி ரூபாய் கடன் வாங்கிய பிறகும் புது வரிகள் போடாமல் நிர்வாகம் நடத்த முடியவில்லை என்று ஊர் ஊராக திரிந்து சொல்லுகிறார்கள்.
பழைய மந்திரிகள் பேரில் என்ன என்ன குற்றங்கள் சுமத்தினார்களோ அவைகள் எல்லாம் இவர்களும் செய்து கொண்டே வருகிறார்கள்.
ரிவினியூ போர்டை எடுக்க முடியவில்லை.
நிதி நிர்வாக இலாக்காக்களை பிரிக்க முடியவில்லை.
அடக்குமுறை அனுசரிக்காமல் இருக்க முடியவில்லை.
- i. d. என்கின்ற ஒற்றர்களை எடுக்க முடியவில்லை.
தொழிலாளர்களை அடிக்காமலும் சுடாமலும் இருக்க முடியவில்லை.
கவர்னர் சம்பளத்தையோ, வெள்ளைக்காரர் சம்பளத்தையோ ஒரு காசு கூட குறைக்க முடியவில்லை.
்தேசீயக் கொடி”யை சர்க்கார் ஒப்புக்கொள்ளும்படி செய்யவோ, சர்க்கார் கட்டடத்தின் மீது கட்டவோ அல்லது அதற்கு தேசீயக் கொடி என்கின்ற பெயரையாவது நிலைநிறுத்தி அரசியல் ஆதாரத்தில் புகுத்தவோ முடியவில்லை.
கடசியாக பிரிட்டிஷ் கொடியைக் கண்டால் தேசீயக்கொடி மறைந்து கொள்ள வேண்டும் என்றுகூட உத்திரவு போடப்பட்டாய் விட்டது.
~subhead
போலீசாருக்கு புகழ்மாலை
~shend
போலீஸ்காரர்களை நடுங்க வைப்பதாய் சொன்னவர்கள் காலாகாலம் இல்லாமல் போலீசாரை புகழ்ந்த வண்ணமாய் திரிய வேண்டியதாய் விட்டது.
வெள்ளைக்காரர்களை திணற வைப்பதாய் சொன்னவர்கள் வெள்ளைக்காரர்களுக்கு நல்ல பிள்ளையாய் நடந்து கவர்னர்களிடம் நற்சாட்சி பத்திரம் பெற அவர்கள் பின் திரிய வேண்டியதாய்விட்டது.
அரசியல் சட்டத்தை தகர்ப்பதாகச் சொல்லி உள்ளே புகுந்து அரசியல் சட்டத்தை ஒழுங்காக பக்தி விஸ்வாசமாக நடத்திக்காட்டி சன்மானம் கேட்டு வாங்க அலைய வேண்டியதாக ஆகிவிட்டது.
உதாரணமாக சென்னை சர்க்கார் சீப் சிக்கரட்டரி தோழர் பேக்கன்பரி துரை அவர்கள் சீமைக்குப் போகும்போது அவரை தங்களைப் பற்றி சில நல்ல வார்த்தை சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்று மந்திரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் கப்பலேறும் போது பம்பாய் துறைமுகத்தில் ஒரு காலும் கப்பலில் ஒரு காலும் வைத்துக்கொண்டு ்சென்னை மந்திரிகள் நல்ல அடிமைகள்” என்பது வினங்க ்அவர்கள் அரசியல் சட்டத்தை மிக ஒழுங்காக நடத்திக்கொடுத்தார்கள்” என்று சொல்லிவிட்டு சவாரி பிடித்தார். அதை வெட்கமில்லாமல் காங்கரசுக்காரர்களும் அவர்களது பத்திரிகைகளும் தங்களுக்கு சன்மானம் கிடைத்ததாக புகழ்ந்துக் கொள்ளுகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சியாரைப் பற்றி இதே வெள்ளையர்கள் கவர்னர்கள் வைசிராய்கள் புகழ்ந்து கூறியபோது இதை காங்கரஸ்காரர்கள் அவர்களை ்அடிமை முத்திரை பெற்றார்கள்” என்று படுக்காளிப் பேச்சு பேசினார்கள்.
இப்போது போதாக்குறைக்கு ்சமஷ்டியை” ஒப்புக்கொள்ளுவதாக பேசுகிறார்கள். காங்கரஸ் தலைவர் சுபாஸ் பாபு அது நாணையமல்ல என்கிறார். காங்கரஸ் அகராதியில் நாணையம் என்றோ மானம் என்றோ வார்த்தைகள் இருந்தால் தானே காங்கரஸ்காரருக்கு சொரணை தட்டும். அது இல்லாததால் என்ன காரியம் செய்தால் பார்ப்பனர் பிழைக்கலாம், ஆதிக்கம் செலுத்தலாம், என்ன காரியம் செய்தால் ்சூத்திர……… மக்களை” கூலி கொடுத்து வசப்படுத்திக் கொண்டு எதிரிகளை நசுக்கலாம் என்பதில் அல்லும் பகலும் கவலையாய் இருக்கிறார்கள். அதற்கும் பலர் பிறந்திருக்கிறார்கள். ஆகவே காங்கரசின் ஒரு வருஷ ஆட்சி படலத்தில் ஒன்றாவது அத்தியாயம் ஒருவாறு முடிந்ததெனலாம்.
குடி அரசு – தலையங்கம் – 17.07.1938