திருவிதாங்கூர் அலங்கோலம்

 

திருவிதாங்கூர் திவான் ஸர்.சி.பி.ராமசாமி நடத்தும் ஹிட்லர் தர்பாரைக் கண்டித்து சென்னை “ஹிந்து” பத்திரிக்கை ஒரு நீண்ட தலையங்கம் எழுதத் துணிந்து முன் வர வேண்டுமானால் திருவிதாங்கூர் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்க வேண்டுமென்று நாம் கூறவும் வேண்டுமா? ஆம்! திருவிதாங்கூர் நிலைமை இனி ஒரு நாளும், எவராலும் பரிகரிக்கவே முடியாதபடி அவ்வளவு பாழாகப் போய் விட்டது. சர்.சி.பி. திவானாயிருக்கும் வரை திருவிதாங்கூர் நிலைமை சீர்படாது என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. சர்.சி.பி.யின் அடக்குமுறைகளைத் தாங்க முடியாமல் இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழை, கோட்டயம் ஆகிய நான்கு நகரங்களிலும் சர்.சி.பி. சர்க்கார் பிறப்பித்திருக்கும் தடை யுத்தரவுகளை மீற திருவிதாங்கூர் சமஸ்தான காங்கரஸ் நிர்வாகிகள் தீர்மானித்து விட்டனர். இப்பத்திரிக்கை இன்று வெளிவருமுன் இந்த நான்கு நகரங்களிலும் சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பது நிச்சயம். தர்மராஜ்யம் எனப் புனை பெயர் பெற்ற திருவிதாங்கூரிலே கலவரங்களும், தடை யுத்தரவுகளும், சட்ட மறுப்புகளும், “அரஸ்டுகளும்” தாண்டவமாடுவது சமாதானப் பிரியர்களும் சாதுக்களுமான திருவிதாங்கூர் பிரஜைகளுக்கு வியப்பாகவும், திகைப்பாகவும், நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

~subhead

கொடிய யதேச்சாதிகாரி

~shend

ஆனால் என் செய்வது? துரதிர்ஷ்ட வசமாக ஒரு கொடிய யதேச்சாதிகாரி கையில் திருவிதாங்கூர் சமஸ்தானம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. மகாராஜாவோ உலக அநுபவம் இல்லாத ஒரு இளைஞர். தம்மால் – நியமிக்கப்பட்ட திவானைக் கண்டிக்க அல்லது கல்த்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்ப அவருக்கு இருக்கும் அதிகாரத்தைப் பிரகாயமே செய்ய முடியாதபடி சில கூட சக்திகள் அவருக்கு முட்டைக்கட்டை போடுகின்றன. சமஸ்தான உள்நாட்டு விவகாரங்களில் தடையிடக் கூடாதென்ற சம்பிரதாயம் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் தடைக்கல்லாக நிற்கிறது. மேலும் 10 வருஷம் திருவிதாங்கூரில் ஹிட்லர் தர்பார் நடத்துவதற்கு மகாராஜா அவர்களிடமிருந்து ஸர்.ஸி.பி. அதிகார மாத்திரமும் பெற்று விட்டார். இந்நிலையில் அவரது யதேச்சாதிகாரத்தைத் தடுக்கச் சக்தியில்லாத நிலைமையில் சமஸ்தான மக்கள் இருந்து வருகிறார்கள். எனினும் எல்லாருமே வாயை மூடிக் கொண்டிருந்தால் சமாதானம் பாழாகி விடுமே என அஞ்சி சமஸ்தான க்ஷேமத்தில் ஆர்வமும், கவலையும் கொண்ட சமஸ்தானப் பிரஜைகள் சிலர் சமஸ்தான க்ஷேமத்துக்காக எத்தகைய தியாகமும் செய்வதெனத் துணிந்து முன் வந்து விட்டனர். ஸர்.ஸி.பி. கோபத்துக்கு ஆளான திருவிதாங்கூர் சமஸ்தான காங்கரஸ் நிர்வாகிகள் செய்த பாபம் என்ன? திருவிதாங்கூருக்கு பொறுப்பாட்சி வேண்டுமென அவர்கள் கூறினார்கள். இதுவே அவர்கள் மீது ஸர்.ஸி.பி. பழிக்குப்பழி வாங்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம். கொச்சி சமஸ்தானத்தில் பொறுப்பாட்சிக்கு அடிகோலப்பட்ட பிறகும் சமஸ்தானங்களில் பொறுப்பாட்சிக்கு இடமே இல்லையென ஸர்.ஸி.பி. பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆகவே அவர் திவான் பதவி வகிக்கும்வரை அவரது யதேச்சாதிகாரத்துக்கு பங்கம் ஏற்படக் கூடாதென்பதே அவரது நோக்கம். எனினும் சமஸ்தான காங்கரசுக்குப் போட்டியாகத் தோன்றியிருக்கும் தேசீய காங்கரஸ்காரர் அவர்கள் இஷ்டப்படி பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் லôயமும் பொறுப்பாட்சி என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர்கள் மீது ஸர்.ஸி.பி.சர்க்கார் தடையுத்தரவுகள் பிறப்பிக்க வில்லை. இம்மாதிரி பாரபட்சம் காட்டப்படுவதற்குக் காரணம் என்ன என்று கேட்டால் சமஸ்தான காங்கரஸ்காரர் ராஜத்துரோகிகள் என்றும், சர்க்காரைக் கவிழ்க்க இரகசியமாக வேலை செய்கிறார்கள் என்றும் ஸர்.ஸி.பி.சர்க்கார் கூறுகிறது. ஆனால் சமஸ்தான காங்கரஸ்காரர் முதல் கூட்டம் கூட்டும் முன்னமேயே – அவர்களது நோக்கம் என்ன என்பதை வெளியிடு முன்னமேயே அவர்கள் மீது ஸர்.ஸி.பி. சர்க்கார் தடையுத்தரவு போட்டுவிட்டதே என்றால் அதற்கு பதில் இல்லை.

~subhead

அந்தரங்கக் காரணம்

~shend

ஆகவே சமஸ்தான காங்கரஸ்காரர் பொறுப்பாட்சிக்காகக் கிளர்ச்சி செய்வதே ஸர்.ஸி.பி. சர்க்கார் கோபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுவது சரியல்ல. அந்தரங்க காரணம் வேறாகவே இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன? சமஸ்தான காங்கரஸ் வாதிகள் ஸர்.ஸி.பி. சர்க்கார் ஊழல்களை வெட்டவெளிச்சமாக்கி விட்டனர். மேற்கொண்டு 10 வருஷம் திவானாக இருக்க ஸர்.ஸி.பி.மகாராஜா அவர்களிடமிருந்து அதிகாரப் பத்திரம் பெற்று விட்டதை அவர்கள் ஆதரிக்கவில்லை. ஸர்.ஸி.பி.திருவிதாங்கூரை விட்டு வெளியேறினாலல்லாமல் சமஸ்தானம் உருப்படாது எனக் கூறுகின்றனர். இதுவே ஸர்.ஸி.பி. சர்க்கார் கோபத்துக்குக் காரணம். தம் மீது பழி சுமத்துவதும் ராஜ துரோகமென ஸர்.ஸி.பி. பகிரங்கமாகக் கூறுகிறாராம். ஸர்.ஸி.பி. ஆட்சி ஊழல்களை மக்களும் வெறுக்கத் தொடங்கி விட்டனர். திருவிதாங்கூர் பொருளாதார அபிவிர்த்திக்காக ஸர்.ஸி.பி. வகுத்திருக்கும் ஆக்கத் திட்டங்கள் திருவிதாங்கூர் செல்வநிலையை உயர்த்துவதற்கு பதிலாக ஸர்.ஸி.பி.க்கு வேண்டியவர்கள் சிலர் செல்வநிலையை உயர்த்துவதற்கே அதிகம் உதவி புரியக் கூடியவைகளாக இருக்கின்றன என திருவிதாங்கூர் மக்கள் சரியாகவோ, தப்பாகவோ நம்புகிறார்களாம். ஸர்.ஸி.பி.யின் ஆக்கத் திட்ட ஊழல்களை விளக்கி சமஸ்தான காங்கரஸ்காரர் பகிரங்க அறிக்கைகளும் வெளியிட்டிருக்கிறார்கள். ஸர்.ஸி.பி. நேர்மையுடையவராக இருந்தால் அந்த பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு நேர்மையான முறையில் பதிலளிக்க முன் வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சமஸ்தான காங்கரசையே ஒழித்துவிட ஸர்.ஸி.பி. முடிவு செய்திருப்பது அவரது கோழைத்தனத்தையும், நிர்வாக ஊழல்களையும் உறுதி செய்யக் கூடியதாக இருக்கிறது.

~subhead

பயங்கரக் குற்றச்சாட்டு

~shend

சமஸ்தான காங்கரஸ் மீதுள்ள கோபத்தினால், இந்தியா முழுதும் தொழில் நடத்திப் பிரக்கியாதி பெற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தை விருத்தி செய்து வந்த திருவிதாங்கூர் நாஷனல் அண்டு கொயிலோன் பாங்கியை ஒழிக்க அவர் சூழ்ச்சி செய்தார் எனக் கூறப்படுவது அவருக்கு அழியாக் களங்கத்தையுண்டு பண்ணும் ஒரு பயங்கரமான குற்றச்சாட்டாகும். அந்தக் குற்றச்சாட்டுக்கு நேர்மையான பதிலளியாதவரை திருவிதாங்கூர் மக்கள் அவரை வெறுக்கத்தான் செய்வார்கள். மற்றும் சமஸ்தான காங்கரசை எதிர்க்க ஒரு போட்டி காங்கரஸை அவர் தோற்றுவித்திருப்பதாகக் கூறப்படுவது அவரது அரசியல் ஞானசூனியத்தையே காட்டுகிறது. கெளரவமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாயிருக்கும் ஒரு நிருவாக அதிகாரியின் ஆதரவை பெற்ற அந்த ஸ்தாபனமானது பொது ஜன ஆதரவைப் பெறுமா? பொது ஜன ஆதரவு பெறாத ஒரு ஸ்தாபனத்தின் துணையால் தமது பெயரையும், வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ளலாமென எந்த விவேகியான அதிகாரியாவது எண்ணுவாரா! தற்பொழுது சர்வாதிகாரியாக விளங்கும் ஸர்.ஸி.பி. மூலம் பல நலன்கள் பெறலாம் என்ற ஆசையினால் சில சமய சஞ்சீவிகள் ஸர்.ஸி.பி.யின் திருவிதாங்கூர் நேஷனல் காங்கரசில் மெம்பர்களாகி தாமும் பொறுப்பாட்சிக்காக உழைப்பதாய் பொது ஜனங்களை ஏமாற்ற முன் வரக்கூடும். ஆனால் அவர்களைப் பார்த்து பொது ஜனங்கள் சிரிப்பாய் சிரித்து விடுவார்கள் என்பது மெய். திருவிதாங்கூர் நேஷனல் காங்கரஸ் ஆதரவில் கூட்டப்பட்ட ஒரு கூட்டமாவது இது வரை வெற்றிகரமாக முடிவு பெறாததே நமது கூற்றுக்கு ஆதாரம். பொதுவாக திருவிதாங்கூருக்கு இது ஒரு சோதனை காலமென்றே தோற்றுகிறது. சமஸ்தான மக்கள் ஆண்மையோடும், அமைதியாகவும் நடந்து கொண்டால் சமஸ்தான நெருக்கடியை வெகு சுளுவாக சமாளித்து விடலாம். தற்காலம் இதற்கு மேல் எழுத நமக்கு மனம் வரவில்லை.

(26.08.1938 “விடுதலை” தலையங்கம்)

குடிஅரசு – கட்டுரை – 28.08.1938

You may also like...