வங்காளம் கற்பிக்கும் பாடம்

 

வங்காளத்திலும் பாஞ்சாலத்திலும் சிந்துவிலும் ஆசாமிலும் முஸ்லிம் மந்திரிசபை ஏற்பட்டது. இந்தியாவிலே ராமராஜ்யம் ஸ்தாபித்து மீண்டும் வர்ணாச்சிரம ஆட்சியை நிலைநிறுத்தப் பாடுபட்டு வரும் காங்கரஸ்காரருக்கு மிக்க மனக் கொதிப்பையும் பொறாமையும் வயிற்றெரிச்சலையும் உண்டு பண்ணியது. சென்ற ஏப்ரில் 1 – ந்தேதி முதற்கொண்டே அந்த நான்கு மந்திரிசபைகளையும் கவிழ்க்க காங்கரஸ்காரர் பகிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர். அவர்கள் முயற்சி பாஞ்சாலத்திலும் வங்காளத்திலும் ஆசாமிலும் பலிக்கவில்லை. சிந்துவில் ஓரளவு பலித்தது. முதலில் ஸர். குலாம் ஹúசேன் ஹிதயத்துல்லா ஸ்தாபனம் செய்த மந்திரி சபையைக் கவிழ்த்து காங்கரஸ்காரர் சொற்படி நடக்கும் அல்லாபக்ô மந்திரி சபையை ஏற்படுத்தினார். அந்த மந்திரி சபை முஸ்லிம் நலனுக்கு முரணாகவும் மாகாண க்ஷேமத்திற்கு பாதகமாகவும் நடந்து வருவதினால் அதைக் கவிழ்க்க வேண்டுமென்று முஸ்லிம் லீக் தீர்மானித்து விட்டது. தற்கால சிந்து மந்திரிகள் காங்கரஸ்காரர் உதவியினாலே உயர்வாழ வேண்டியவர்களாக இருக்கின்றனர் காங்கரஸ்காரருக்குச் சொந்த பலம் அதிகமில்லையாயினும் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி பேசி சிந்து மந்திரிகளை ஏய்த்துக் கொண்டு வருகின்றனர். ஆகவே சிந்து மந்திரி சபையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

~subhead

பாஞ்சால, ஆசாம் நிலைமை

~shend

பாஞ்சால மந்திரி ஸர்.சிக்கந்தர் ஹயாத்கான் ஒரு பெயர் பெற்ற ராஜ்யதந்திரி. ஷாதிக்த் கஞ்சு மசூதி விஷயமாக அவர் தமது சமூகத்தார் வெறுப்பையும் லட்சியம் செய்யாமல் பாஞ்சால க்ஷேமத்தையும் சர்வ சமூகங்களின் ஒற்றுமையையும் முன் நிறுத்தி மிக்க ராஜ்ய தந்திர நோக்குடன் நடந்துகொண்டு பாஞ்சால மக்கள் பாராட்டையும், அகில இந்திய பாராட்டையும் பெற்று விட்டதினால் அவரது மந்திரி சபையைக் கவிழ்க்கவும் காங்கரஸ்காரரால் முடியவில்லை. ஆசாமிலே காங்கரஸ்காரருக்கு சொந்த கட்சி பலமில்லாவிட்டாலும் தேசீய மனப்பான்மையுடையவர்களை காங்கரசில் சேர்த்து ஒரு காங்கரஸ் மந்திரிசபை ஸ்தாபிக்க முயற்சி செய்யப்பட்டது. மந்திரி சபை வெகு சீக்கிரம் ஸ்தாபிக்கப்பட்டு விடும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை ஸர். முகம்மது சாதுல்லா மந்திரி சபையை காங்கரஸ்காரருக்குக் கவிழ்க்க முடியவில்லை.

~subhead

வங்காளத்தில் காங்கரஸ் சூழ்ச்சி

~shend

வங்காளத்திலே பச்லுல் ஹக் மந்திரிசபையைக் கவிழ்க்க சென்ற ஒரு வருஷ காலமாக காங்கரஸ்காரர் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிட்டு அடிக்கடி கல்கத்தா சென்றதாகக் கூறப்படும் காந்தியார் வங்காள காங்கரஸ்காரருக்கு தம்மாலான உதவிகளெல்லாம் செய்து பார்த்தார். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சட்டசபை மெம்பர்கள் எல்லாம் காங்கரஸ் கட்சியில் சேருமாறும் மறைமுகமாகத் தூண்டினார். ஒடுக்கப்பட்ட வகுப்பு மெம்பர்கள் எல்லாம் காங்கரசில் சேர முடிவு செய்துவிட்டதாகவும் காந்தியார் அநுமதியையும், ஆசிர்வாதத்தையும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாயும் கூட பத்திரிகைகளில் பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலே பிரஜா கட்சி மெம்பர்களில் சிலர் முதன் முந்திரி கனம் பச்லுல் ஹக் மீதுள்ள கோபத்தினால் பிரஜா கட்சியை விட்டுப் பிரிந்து சுயேச்சைப் பிரஜாக் கட்சியை ஸ்தாபித்தனர். எனினும் ஹக் மந்திரிசபை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கரஸ்காரருக்குத் துணிச்சல் உண்டாக இல்லை. எனவே ஹக் மந்திரி சபையை ஒழிக்க வழி என்ன என்று காங்கரஸ்வாதிகள் யோசித்துக்கொண்டிருக்கும்போது சுகாதார, ஸ்தல ஸ்தாபன மந்திரி சையது நெளஷர் அலிக்கும் பிரதம மந்திரி கனம் பச்லுல் ஹக்குக்கும் அபிப்பிராய பேதமுண்டாயிற்று. அந்த அபிப்பிராய பேதம் நாளுக்கு நாள் முற்றி சையது நெளஷர் அலியை வெளியேற்றும் நிலைமைக்கு வந்தது. ஹக் மந்திரி சபை ராஜிநாமா செய்து மீண்டும் கனம் பச்லுல் ஹக்கினால் இரண்டாவது மந்திரி சபை ஸ்தாபிக்கப்பட்டபோது சையது நெளஷர் அலியை பிரதம மந்திரி கனம் பச்லுல் ஹக் இரண்டாவது மந்திரி சபையில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர் மந்திரி கட்சியை விட்டுப் பிரிந்து எதிர்கட்சியில் சேர்ந்து கொண்டார். எதிர்கட்சியில் சேரவே அவரை ஆதரிக்கும் முஸ்லிம் மெம்பர்களும் எதிர்கட்சியில் சேர்ந்து கொண்டனர். எதிர்கட்சியில் இப்பொழுது 111 மெம்பர்கள் இருந்தாலும் அவைகளில் 53 பேரே காங்கரஸ்வாதிகள். ஆகவே தற்கால நிலைமையில் காங்கரஸ்காரருக்கு சொந்தப் பொறுப்பில் காங்கரஸ் மந்திரி சபை அமைக்கவே முடியாது. இதர கட்சிகளுடன் சேர்ந்து ஐக்கிய மந்திரிசபை அமைக்கும் விஷயத்தில் காங்கரஸ்காரருக்குள்ளேயே அபிப்பிராய பேதம் இருந்து வருவதினால் காங்கரஸ் கூட்டு மந்திரி சபை ஏற்படுவதும் சாத்தியமல்ல.

~subhead

சரத் சந்திரர் வீச்சு

~shend

எனினும் மகன் செத்தாலும் பரவாயில்லை மருமகள் முண்டையானால் போதும் என்ற மனப்பான்மையுடன் ஹக் மந்திரி சபையை ஒழித்துவிட்டு காங்கரஸ்காரர் சொற்படி நடக்கும் ஒரு மந்திரிசபையை ஸ்தாபிக்க சென்ற இரண்டு மூன்று மாதகாலமாக காங்கரஸ்காரர் தீவிர முயற்சி செய்தனர். ஜனாப் சையது நெளஷர் அலி கட்சி மூலம் தமது நோக்கம் எளிதில் கைகூடுமென காங்கரஸ்காரர் நம்பியிருக்கவும் கூடும். விளையாட்டுக்காகத் தாம் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரவில்லையென்றும் ஹக் மந்திரிசபை வீழ்த்தப்பட்டால் ஒரு மந்திரி சபை ஸ்தாபிக்கும் நோக்கத்துடனேயே எதிர்கட்சியார் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டு வந்தனரென்றும் அவ்வாறு ஸ்தாபனமாகும் மந்திரிசபையில் ஒரு முஸ்லிமே பிரதம மந்திரியாக இருப்பாரென்றும் அந்த மந்திரிகள் இன்னின்ன காரியங்கள் சாதிப்பார்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர் தோழர் சரத் சந்திரபோஸ் நம்பிக்கையில்லாத் தீர்மான விவாத காலத்திலே பகிரங்கமாகவும் கூறினார். ஹக் மந்திரி சபையை எதிர்த்தால் வேறு மந்திரி சபை ஏற்பட வழியில்லாமல் மன்னர்பிரான் சர்க்காருக்கு முட்டுக்கட்டை விழுமோ என்ற அச்சத்தினால் ஐரோப்பியக் கட்சி மெம்பர்களும் ஆங்கிலோ இந்தியர்களும் எதிர்கட்சித் தீர்மானத்துக்கு ஆதரவளிக்காமல் இருந்து விடக் கூடுமென்றெண்ணி அவர்களைத் தம் வழி இழுக்கும் பொருட்டு தோழர் சரத் சந்திர போஸ் அவ்வாறு முன்னாடியே கூறியிருந்தாலும் இருக்கலாம்.

~subhead

பச்லுல்ஹக் சவால்

~shend

நம்பிக்கையில்லாத் தீர்மான விஷயத்தில் எதிர்கட்சியார் கையாண்ட குறும்புத்தனமான முறையையும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். மந்திரி சபையார் கூட்டுப் பொறுப்பை வங்கப் பிரதம மந்திரி ஒப்புக் கொண்டிருப்பதினால் மந்திரி சபை மீது பொதுவாக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டியதே நியாயம். ஆனால் ஒருமுறை ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து தோல்வியுற்றால் மீண்டும் ஆறுமாத காலத்துக்கு சட்டப்படி தீர்மானம் கொண்டுவர முடியாது. ஆகவே 10 மந்திரிகள் மீதும் தனித்தனி நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. எனினும் கூட்டுப் பொறுப்பை முன்னிட்டு தம்மீது முதலில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் அதை நிறைவேற்றினால் 10 மந்திரிகளும் ராஜிநாமாச் செய்து விடுவதாயும் பிரதம மந்திரி கனம் பச்லுல் ஹக் சவால் விடும் மாதிரி கூறியும் எதிர்கட்சித் தலைவர் தோழர் சரத் சந்திரபோஸ் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே முதன் முதலில் தொழில் மந்திரி கனம் எச்.எஸ்.சுஹ்ரா வாதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிரேரணை செய்யப்பட்டது. அவர் மந்திரியான பிறகு தொழிலாளருக்கு எத்தகைய நன்மையும் செய்யவில்லை என்றும் தொழிலாளருக்குள்ளே வகுப்பு துவேஷ முண்டாக அவர் உதவி செய்தாரென்றும் அவர் மீது எதிர் கட்சியார் குறை கூறினார்கள். மற்றும் அவர் மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தபோது பிரதம மந்திரி பச்லுல் ஹக் பந்துக்களுக்கு உத்தியோகங்கள் கொடுத்தாரென்றும் வகுப்பு துவேஷம் உண்டாகும்படி காரியங்கள் நடத்தினாரென்றும் குற்றம் சாட்டப்பட்டது. விவாதத்துக்கு பதிலளிக்கையில் தொழில் மந்திரி கனம் எச்.எஸ். சுஹ்ராவாதியும் பிரதம மந்திரி கனம் பச்லுல் ஹக்கும் எதிர்கட்சியார் குற்றச்சாட்டுகளையெல்லாம் சின்னாபின்னப்படுத்தினர்.

~subhead

ஹக் முழக்கம்

~shend

கனம் பச்லுல்ஹக் பேசுகையில் தாம் பந்துக்களுக்கு உத்தியோகம் கொடுத்ததாய் ருசுப்படுத்தப்பட்டால் பிரதமமந்திரி பதவியை ராஜிநாமாச் செய்துவிடுவதாகவும் விவாத முடிந்த பிறகு தம்மீது குற்றம் சாட்டிய மெம்பர்மீது உரிமைக் கமிட்டி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அசம்பிளித் தலைவரைத் தாம் கேட்டுக் கொள்ளப் போவதாகவும், இதர மாகாணங்களில் எல்லாம் வகுப்புக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கையில் வங்காளத்தில் இதுவரை இந்து – முஸ்லிம் கலவரங்கள் உண்டாகாமலிருப்பதே தாம் வகுப்புத் துவேஷம் உண்டாகும்படி நடந்து கொள்ளவில்லை யென்பதற்கு மறுக்கமுடியாத அத்தாட்சியென்றும் கூறினார். மற்றும் அசம்பிளி மண்டபத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கையில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பல வகுப்பைச் சார்ந்த ஆலைத் தொழிலாளர்கள் பச்சை, சிவப்பு கொடிகள் தாங்கி ்ஹக் மந்திரி சபை வாழ்க, காங்கரஸ் வீழ்க” என கோஷித்துக் கொண்டு ஊர்வலம் வந்து கூட்டம் கூடி ஹக் மந்திரி சபையை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதினால் கனம் எச்.எல்.சுஹ்ராவாதி தொழில் மந்திரியான பிறகு தொழிலாளர்களுக்கு எத்தகைய நலனும் ஏற்படவில்லையென எதிர்க்கட்சியார் குற்றம் சாட்டியதற்கு ஆதாரமே இல்லையென வெளியாகிவிட்டது.

~subhead

ஐரோப்பியர் கட்சித் தலைவர் விளக்கம்

~shend

ஐரோப்பிய கட்சித் தலைவர் ஸர். ஜார்ஜ் காம்பெல், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்தும் ஹக் மந்திரிசபையை ஆதரித்தும் பேசுகையில் கூறிய ஒரு அபிப்பிராயம் முக்கியமாக கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. பொருளாதார நிர்வாக விஷயமாகவும் சட்ட சமாதான பாதுகாப்பு விஷயமாகவும் ஹக் மந்திரி சபையார் ஒழுங்காக நிர்வாகம் செய்துவருவதைப் பாராட்டிவிட்டு ஹக் மந்திரி சபை வீழ்ச்சியுற்று ஒரு புது மந்திரிசபை ஏற்படும் பட்சத்தில் அந்த மந்திரி சபையை நம்ப ஐரோப்பிய கட்சியார் தயாராயில்லை யென்றும் அதனால் ஹக் மந்திரி சபையை ஆதரித்துத் தீர வேண்டியது ஐரோப்பிய கட்சியின் கடமையென்றும் ஸர். ஜார்ஜ் காம்பெல் கூறினார். புது மந்திரிசபையை நம்பமுடியாது என ஸர். ஜார்ஜ் காம்பெல் கூறக் காரணமென்ன? எதிர் கட்சியிலிருக்கும் 111 பேரும் திட்டமான கொள்கை யுடையவர்களல்ல. 53 காங்கரஸ்காரரைத் தவிர மற்றவர்களுக்கு திட்டமான கொள்கையில்லை. அவர்களில் பலர் கட்சி மாறியவர்கள். கட்சி மாறியவர்கள் அரசியல் சம்பிரதாயப்படி அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்தவர்கள். கட்சி மாறுவோர் நேர்மையுடையவர்களானால் தமது சட்டசபை மெம்பர் பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டுத் தாம் சேரப் போகும் கட்சியின் பேராலோ அல்லது சொந்தக் கொள்கையின் பேராலோ மீண்டும் தேர்தலுக்கு நிற்க வேண்டும். அதுவே அரசியல் ஒழுங்கு. ஆகவே கொள்கையற்றவர்களும் வாக்காளர் நம்பிக்கை இழந்தவர்களுமான சட்டசபை மெம்பர்களின் ஆதரவு பெற்ற ஒரு மந்திரி சபையைத் தம்மால் ஆதரிக்க முடியாதென ஜார்ஜ் காம்ப்பெல் கூறியது நியாயமே. கடைசியில் தொழில் மந்திரி கனம் சுஹ்ராவாதி மீது கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் 19 வோட்டு மிகுதியினால் தோற்கடிக்கப்பட்டது. அப்பால் கூட்டுறவு ரெஜிஸ்டிரேஷன் மந்திரி கனம் முகுந்த மால்லிக் (ஒடுக்கப்பட்டவர்) மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வோட்டு எடுக்காமலே தோற்கடிக்கப்பட்டது. எனவே மற்ற மந்திரிகள் மீது எதிர்கட்சியார் கொண்டு வர எண்ணியிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் பிரேரணை செய்யப்படவே இல்லை. இவ்வண்ணம் வங்காள காங்கரஸ்காரர் சூழ்ச்சி படு தோல்வியடைந்தது. வங்காள மந்திரி சபையைக் கவிழ்க்க அவர்கள் செய்த சூழ்ச்சி வங்க மந்திரி சபைக்கு இருந்துவரும் ஆதரவை எல்லாரும் உணரும்படி செய்து விட்டது. காங்கரஸ்காரர் தம் முட்டாள்தனத்தை மறைக்கும் பொருட்டு ஐரோப்பிய மெம்பர்கள் உதவியினாலேயே ஹக் மந்திரிசபை உயிர் பிழைத்ததெனக் கேலி செய்கிறார்கள். கனம் பச்லுல் ஹக் கூறுவதுபோல் ஐரோப்பியர் வோட்டினால் வங்க மந்திரி சபை பிழைத்தது குற்றமோ அவமானமோ அல்ல. ஐரோப்பியர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே; ஐரோப்பியர்களுக்கும் வங்காள மாகாண க்ஷேமத்தில் அக்கரையுண்டு. சட்டசபை மெம்பர்களுக்குள் ஜாதி மதம் காரணமாக வித்தியாசம் கற்பிப்பது அறிவீனமாகும். ஒருகால் காங்கரஸ் மந்திரிசபை ஏற்பட்டாலும் ஐரோப்பியர் உதவியினாலேயே இயங்க முடியும்.

~subhead

காங்கரஸ்வாதிகளுக்கு எச்சரிக்கை

~shend

மற்றும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மான நாடகம் மூலம் வங்க காங்கரஸ் முஸ்லிம்களிடத்து வங்க முஸ்லிம் சமூகத்தாருக்குள்ள வெறுப்பும் புலனாகிவிட்டது. வங்க காங்கரஸ் முஸ்லிம் சட்டசபை மெம்பர்களை முஸ்லிம்கள் படுத்திய பாட்டை காங்கரஸ் முஸ்லிம் சட்டசபை மெம்பர்கள் அவர்கள் ஆயுட் காலத்தில் மறக்கவே மாட்டார்கள்.

கனம் பச்லுல் ஹக் பெருந்தன்மையுடன் முன்வந்து முஸ்லிம்களை அடக்கி காங்கரஸ் முஸ்லிம் சட்டசபை மெம்பர்களுக்கு அபயம் அளித்திருக்காவிட்டால் அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். பொதுஜன அபிப்பிராயத்துக்கு முரணாக நடப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய கதியே அவர்களுக்கும் ஏற்பட்டது. இதற்காக கனம் பச்லுல் ஹக்கைக் குறை கூறுவது சரியல்ல. ஆர்ப்பாட்டங்களையும், கிளர்ச்சியையும் அடக்க மந்திரி கட்சியார் எத்தகைய முயற்சியும் செய்யவில்லையென மந்திரி கட்சியை ஆதரித்த ஸர். காம்ப்பெல்லும் கூட முறையிட்டார். முதல் தீர்மானம் தோல்வியடைந்தவுடன் ஒரு லக்ஷம் ஜனங்கள் கூடி மந்திரிகளுக்கு வாழ்த்துக் கூறி சந்தோஷ ஆரவாரம் செய்தார்களாம். ஆகவே ஒரு லக்ஷம் ஜனங்கள் ஈடுபட்டுச் செய்த கிளர்ச்சியையும் ஆரவாரங்களையும் பத்து மந்திரிகளால் எங்ஙனம் அடக்க முடியும். மற்றும் ஹக் மந்திரி சபையைக் கவிழ்க்க காங்கரஸ்காரர் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் பொதுஜனங்கள் மனத்திலே மிக்க ஆத்திரத்தையும் வெறுப்பையும் உண்டாக்கிவிட்டன. பொது ஜனங்களுக்கு ஆத்திரமும் வெறுப்பும் உண்டானால் அப்பால் என்னதான் நடக்குமென எவராலும் கூறமுடியாது. ஒரு லக்ஷம் பேருக்குண்டான மனக்கொதிப்பினால் ஹக் மந்திரிசபை மீது வங்க மகாஜனங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையும் மதிப்பும் இருந்து வருகிறதென்பது தெளிவாகி விட்டது. இந்த சம்பவம் மூலமாவது வங்க காங்கரஸ்வாதிகள் ஒரு பாடம் கற்று ஒழுங்காக நடக்க முன் வருவார்களாக!

குடி அரசு – தலையங்கம் – 14.08.1938

You may also like...