இந்தி எதிர்ப்பும் பார்ப்பனப் பத்திரிகைகளும்

 

இந்தி எதிர்ப்பு விஷயமாய் சென்னை மாகாணத்தில் இருந்து வரும் கிளர்ச்சியைப் பற்றியும், அது விஷயமாய் சர்க்கார் கையாளும் கொடுங்கோன்மை அடக்குமுறையைப் பற்றியும் அந்த அடக்குமுறையை சரியென்று சொல்லி பொது ஜனங்களை சமாதானப்படுத்த அரசாங்கத்தார் சொல்லும் காரணங்களாகிய அதாவது ்இந்தி எதிர்ப்பில் அரசாங்கத்துக்கு பல தொல்லைகள் ஏற்படுகிறது” என்பதைப் பற்றியும் மற்றும் ்இந்தி எதிர்ப்பு காரியங்கள் அரசாங்கத்தார் சகிக்கமுடியவில்லை” என்றும் “அது அரசாங்கமே நடைபெற வொட்டாமல் சங்கடத்தை விளைவிக்கக் கூடியதாய் இருக்கிறது” என்று திணறுவதாகக் காட்டிக் கொள்வதைப் பற்றியும் இந்தி எதிர்ப்புக்காரர்களுக்கு தாராளமான பணம் இருப்பதாகவும், கட்டுப்பாடாக இயக்கம் நடத்தப்படுவதாகவும் அதனால் தொண்டர்கள் ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் புறப்பட்டு திக்குமுக்காடச் செய்வதால் கடுமையான அடக்குமுறைகளைக் கையாள வேண்டி இருந்தது என்று சொல்லுவதுடன் ஒரு பெரிய மெஜாரிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் தங்கள் இஷ்டப்படி காரியம் செய்யாமல் தடுக்கும்படியான பெரிய கிளர்ச்சியாய் போய் விட்டதால் இப்போது இதை அடக்க தங்களுக்கு இருக்கிற அதிகாரமும் சட்டப் பாதுகாப்பும் போதவில்லை என்று தாங்கள் கருதுவதாகவும் சொல்லி ஆதலால் இதைவிட அதாவது இப்போது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தும் சட்டத்தைவிட அடக்குமுறை கொள்கைகளைவிட இன்னமும் கொடுமையான சட்டங்களை கூடிய சீக்கிரம் செய்ய வேண்டி இருக்கிறது என்றும் மந்திரிகள் பதறித் துடிதுடிப்பதுவும் ஆகிய பேச்சுக்களும் காரியங்களும் மந்திரிகள் கடற்கரையில் பேசின பேச்சின் மூலமும், சட்டசபை பேச்சின் மூலமும் – வாசகர்கள் பொதுஜனங்கள், மெயில், இந்து, மித்திரன் பத்திரிகைகளின் மூலமே பார்த்திருக்கலாம்.

~subhead

கூலிப் பத்திரிகைகள் விஷமம்

~shend

குறிப்பாக கடற்கரையில் அய்யங்கார் ஆச்சாரியார் ஆகிய இரு பார்ப்பன மந்திரிகள் பேசிய பேச்சுக்களில் சிலவற்றை எடுத்து அப்படியே போட்டு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விளக்கமும், சமாதானமும் சென்ற வார ்குடி அரசு” தலையங்கத்தில் பிரசுரித்திருந்ததை வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

அவ்வளவு தூரம் அவற்றை தெளிவாக எடுத்துப்போட்டு அதுவும் பச்சை பார்ப்பன, அதிலும் அய்யங்கார் ஆதிக்க பத்திரிகையாகிய ்சுதேசமித்திர”னில் இருந்தது போலவே தேதி, பக்கம், கலம் முதலியவைகளையும் குறிப்புக்காட்டி எடுத்துப் போட்டு விளக்கிய பிறகும், சில பார்ப்பன கூலிப் பத்திரிகைகளும், எச்சிக்கலை காலிப் பத்திரிகைகளும் மக்களை ஏமாற்றி பார்ப்பனரல்லாத பொதுமக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியை போட்டு தங்கள் ஜாதி சோம்பேறி வாழ்வுக்கும், ஊரார் உழைப்பை நோகாமல் பயன்படுத்தி ஏமாற்றி வாழும் இழி வாழ்வுக்கும் அனுகூலமாக சூழ்ச்சியும், பித்தலாட்டமும் செய்து மானம் கெட்டாவது, ஈனத்தனத்தை லட்சியம் செய்யாமலாவது வாழக் கருதும் சில பத்திரிக்கைகள் ்இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துப்போய்விட்டது. அதற்கு கருமாதி ஆகிவிட்டது. சமாதிகட்டி பாறாங்கல்லைத் தூக்கி வைத்தாய் விட்டது” என்று ஜாடைமாடையாயும், வெளிப்படையாயும் எழுதி வருகின்றன.

இதிலிருந்தே அந்த ஜாதியோ, அல்லது அந்த ஜாதிப் பத்திரிக்கையோ யோக்கியமாய், நாணயமாய், மனிதத் தன்மையாய், இந்த நாட்டில் வாழ முடியாத கேடான நிலைமைக்கு வந்துவிட்டது என்பது கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் பச்சையாய் விளங்கிவிடும் என்றே சொல்லலாம்.

ஆண்மையுள்ளவர்கள் சுத்த ரத்த ஓட்டமுள்ள மனிதத் தன்மையுள்ளவர்கள் ஒரு காரியத்தையோ, அல்லது தங்களுக்கு இஷ்டமில்லாததோ, அன்றி தங்களுக்கு கேட்டைத் தருவதோ ஆன ஒரு இயக்கத்தையே எதிர்ப்பதாய் இருந்தால் நேரிய முறையில், வீரத் தன்மையில் எதிர்க்கவேண்டும்.

~subhead

ஈனத்தனமான முயற்சிகள்

~shend

அல்லது சரியான, நாணையமான சமாதானத்தைச் சொல்லி முறியடிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஈனத்தனமான முறையில் இழி தன்மையான பொய்யையும், பித்தலாட்டத்தையும் பேசியும், எழுதியும் தகாத கேவலமான மாதிரி சூழ்ச்சிகள் செய்தும் ஒழிக்கப் பார்ப்பது எப்படி யோக்கியமானது என்று சொல்ல முடியும்?

்இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டது” என்று விஷமத்தனமான முறையில் ஒரு பக்கம் அயோக்கியப் பிரசாரம் செய்வதும், மற்றொரு பக்கம் ஈசல் புற்றுப்போல் புல புலெனப் புறப்பட்டால் நான் என்ன செய்வது என்று கோழைப் பேச்சு பேசி கொடுமையான காரியத்தைச் செய்ய முயற்சிப்பதும், கோர்ட் என்று சொல்லப்படும் நீதிஸ்தலங்களில் உண்மையான தொண்டர்களை தாருமாறான கேள்விகள் கேட்டு யோக்கியமற்ற முறையில் நீதி செலுத்துவதும் நீதிபதி என்பவர்களே அதிகப்பிரசங்கித்தனமான முறையில் ்ஈ.வெ.ராமசாமி தானே உங்களை அனுப்புகிறார்?” என்று கேட்டு ஒப்புக்கொள்ளச் செய்ய முயற்சிப்பதும் எச்சிலை சோம்பேறிப் பையன்களைப் பிடித்து கூலி கொடுத்து இந்தியை எதிர்ப்பது போல் வஞ்சக வேஷம் போடச் செய்து இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குள் புகுத்தி மறியல் செய்யச் செய்து போலீசாரை பிடித்துப் போகச் சொல்லி கோர்ட்டுக்கும், ஜெயிலுக்கும் போன பின்பு ஈ.வெ.ராமசாமிதான் தன்னை அனுப்பினான் என்று வாக்குமூலம் கொடுக்கும்படியும் மாய்மால அழுகை அழுகும்படியும் சொல்லிக் கொடுத்து இயக்கத்தை பரிகாசம் செய்ய முயற்சிப்பதுமான பல இழிவான காரியங்கள் செய்து கொண்டும் மற்றொரு பக்கம் செல்வாக்குள்ள முக்கியஸ்தர்களை கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது இயக்கத்தை நிறுத்த முயற்சிப்பதுமான காரியங்கள் செய்யப்பட்டு வருவது யாருக்குத் தெரியாது என்று கேட்கின்றோம். இவற்றுள் எதையாவது யோக்கியமான காங்கரஸ்காரனோ, காங்கரஸ் பத்திரிக்கையோ மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

மற்றும் காங்கரஸ் பத்திரிகைகள் கையாளும் முறைகளில் ஒரு விஷமத்தனமான இழிமுறைப் பத்திரிக்கையின் செயலையும் குறிப்பிட விரும்புகிறோம்.

~subhead

ஆச்சாரியார் பொய்ப் பிரசாரம்

~shend

அதாவது கனம் பொப்பிலி அரசர் சென்னை வந்து சேர்ந்தவுடன் பொப்பிலி அரசர் கனம் பிரதம மந்திரி ராஜகோபாலாச்சாரியாரை சந்தித்ததாகவும், இந்தி எதிர்ப்பை பொப்பிலி ராஜா அவர்கள் ஆதரிக்கவில்லை என்றும், இந்தி எதிர்ப்பை நிறுத்திவிடப் போவதாக ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கூட்டத்தில் பிரேரேபிக்கப் போவதாகவும் சிறிதும் மானம், வெட்கம், நாணையம், ஒழுக்கம் இல்லாமல் எழுதி இயக்கத்தின் வேகத்தை குறைக்க முயற்சித்து இருக்கிறது. அதன் உண்மை என்ன என்று விசாரிக்கப் புகுந்தால் கனம் பிரதம மந்திரியே பொப்பிலி ராஜா வீட்டிற்கு போய் அவரிடம் உண்மைக்கு மாறான அநேக விஷயங்களை எடுத்துச் சொல்லி இந்தி எதிர்ப்பு முறையின் மீது ராஜா அவர்கள் அதிருப்திப்படச் செய்ய முயற்சித்ததாகவும் அதற்கு ராஜா அவர்கள் அம்முறைகள் உண்மையானால் அது கைவிடப்பட வேண்டியது தான் என்று அபிப்பிராயப் பட்டதாகவும் தான் நடந்திருக்கிறது.

அப்படி இருந்தாலும் கனம் பொப்பிலி ராஜா பத்திரிக்கைகளில் வெளியிட்ட சேதிகளில் கனம் ஆச்சாரியார் தன்னை சந்தித்தபோது பல பொது வாழ்க்கை விஷயங்களைப் பற்றித்தான் பேசப்பட்டதே ஒழிய மற்றபடி சென்னை பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட விஷயம் அபாண்டமானது என்று கண்டிருக்கிறது.

~subhead

மனந் துணிந்த கற்பனை

~shend

எனவே பத்திரிக்கைகளின் விஷமப்பிரசாரம் எவ்வளவு தூரம் மனந் துணிந்த கற்பனை – பித்தலாட்ட நடவடிக்கை கொண்டவைகளாக இருக்கின்றன என்பதற்காக இந்த விஷயத்தை குறிப்பிடுகிறோம்.

மற்றும் கனம் பிரதம மந்திரி ஆச்சாரியார் அவர்கள் சென்னை கவர்னர் பிரபு வீட்டிற்கும், சென்னை வெள்ளை அதிகாரிகள் வீட்டிற்கும், தமிழ் பிரமுகர்கள் வீட்டிற்கும் சென்று இந்தி எதிர்ப்பு முறைகளைப் பற்றி எவ்வளவு துணிவாக உண்மைக்கு விரோதமான பேச்சுகளை கட்டுப்பாடாகச் சொல்லி அவர்களுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் மீதும், எதிர்ப்பாளர்கள் மீதும் வெறுப்பும், துவேஷமும் உண்டாகும்படி செய்து வருகிறார் என்பதற்கு சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

~subhead

பிரதம மந்திரியார் மாயக் கண்ணீர்

~shend

அதாவது கனம் ஆச்சாரியார் அவர்கள் இந்தி எதிர்ப்பைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் தன்னைப் பற்றியும் தம் பெண்டு பிள்ளைகளைப் பற்றியும் ஆபாசமான வார்த்தைகளை, அசிங்கமான வார்த்தைகளை காதால் கேட்க, வாயால் உச்சரிக்க முடியாத அவ்வளவு கடூரமான வார்த்தைகளைப் பேசுவது தன்னால் சகிக்க முடியவில்லை என்றும், உங்கள் வீட்டு பெண்டு பிள்ளைகள் வேறு, என் வீட்டு பெண்டு பிள்ளைகள் வேறா என்று கண்ணில் தண்ணீர் விட்டு அழுது கொண்டு பேசுகிறார் என்றும் நம்பத்தகுந்த இடத்தில் இருந்து சேதி வந்திருக்கிறது.

அதாவது இன்று ஆச்சாரியார் வகிக்கும் ஸ்தானத்துக்கு எந்த விதத்திலும் கீழானதல்லாத ஸ்தானம் வகித்தவர்களே பல பெரியார்கள் தங்களிடம் இப்படிச் சொன்னதாக சொல்லுகிறார்கள். கனம் ஆச்சாரியார் அவர்கள் அவர்களிடம் (பல பெரிய மனிதர்களிடம்) சொன்னது மாத்திரமல்லாமல் சட்டசபையிலும் பொதுக்கூட்டத்திலும் கூட இப்படிச் சொல்லி இருக்கிறார்.

இதுதானா நேரான போர் முறை? என்று கேட்க வேண்டியிருக்கிறது.

~subhead

சாட்சிகள் சொன்னதென்ன?

~shend

ஏறக்குறைய சுமார் 100 தொண்டர்களின் கேசுகள் நீதி ஸ்தலத்தில் விசாரணை ஆகும்போது நேரில் இருந்தவர்களும் மற்றும் பக்கத்தில் இருந்த தக்க பொறுப்புள்ளவர்களும் இன்றும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வந்து சொல்லத் தயாராய் இருக்கிறார்கள். என்னவென்றால் கோர்ட்டு விசாரணையில் தொண்டர்கள் மீது குற்றம் கூறி சாòகள் போலீசுகாரர்கள் சொன்னதெல்லாம், இத்தொண்டர் பிரதம மந்திரியார் வீட்டுக்குப் பக்கம் நின்று கொண்டு இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று சொன்னார்கள் என்றும், கத்தினார்கள் என்றும், கூப்பாடு போட்டார்கள் என்றும் தான் பெரிதும் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு மேல் சுமார் 100 தொண்டர்கள் வழக்கு நடந்து தண்டிக்கப்பட்ட பிறகே ஆச்சாரியார் ஆட்சி ஒழிய-பார்ப்பன ஆட்சி ஒழிய என்று சொன்னதாக சாòகள் சொன்னார்கள். பிறகு அடக்குமுறை வலுவடைந்த பிறகு ஆச்சாரியாரும், அவர்கூட பத்திரிகைகளும் ஆளுகளும் ஆணவமாகவும் திமிறாகவும் பேசவும் எழுதவும் செய்தபிறகு பூணூல் ஆட்சி ஒழிக உச்சிக் குடுமி ஆட்சி ஒழிக என்று கூப்பாடு போட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இவைகளை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், இது எப்படி பெண்டு பிள்ளைகளை பற்றி இழிவாக, ஆபாசமாக, அசிங்கமாக பேசியதாக சொல்ல முடியும்?

~subhead

நம்புவதைச் சொல்வது தப்பா?

~shend

பார்ப்பன ஆட்சி என்பதும், பூணூல், உச்சிக்குடுமி ஆட்சி என்பதும் ஒரே கருத்தைத்தான் குறிப்பதாகும். அதாவது இன்று நடைபெறுகிற ஆட்சி முறை பார்ப்பன சமூகத்துக்கு மாத்திரம் பயன்படத்தக்கதாகவும் மற்ற சமூகத்துக்கு கேட்டை விளைவிப்பதாகவும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியாகவும் இருக்கிறது என்று சரியாகவோ தப்பாகவோ உணருகிற ஒருவன் அதைச் சொன்னால் தப்பு என்ன என்று கேட்கின்றோம்.

இதே பார்ப்பனர்கள் கனம் ஆச்சாரியார், அய்யங்கார், அய்யர்கள் உள்பட காங்கரஸ்காரர்கள் வெள்ளையர் ஆட்சி ஒழிக என்று சொல்லவில்லையா? ஜமீன்தார்கள் சரிகைக் குல்லாய்க்காரர்கள் ஆட்சி ஒழிக என்று கூப்பாடு போடவில்லையா? பனகால் ராக்ஷத ஆட்சி ஒழிக! பொப்பிலி அரக்கர் ஆட்சி ஒழிக என்று கூப்பாடு போடவில்லையா?

அப்போது கனம் ஆச்சாரியார் காதை மூடிக்கொண்டாரா என்று கேட்கின்றோம்.

~subhead

காங்கரஸ்காரர் சொன்னவைதானே

~shend

மற்றும் பனகால் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டதாகக் கருதி பனகால் டெட் (ஈஉஅஈ) பனகால் செத்தான் என்று பார்ப்பனர்கள் வீட்டுக்கு வீடு புகையிலை வழங்கவில்லையா? தெருவில் சங்கு ஊதச் செய்து பனகால் சங்கதி சங்கூதிப் போச்சுது என்று சொன்னதோடு இவைகள் காங்கரஸ் பத்திரிகைகளில் கூட கொட்டை எழுத்துக்களில் போடப் படவில்லையா என்று கேட்கின்றோம். முஸ்லிம்கள் இந்து ஆட்சி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லையா? வில்லிங்டன் ஆட்சிக்கு சாவுமணி அடித்தாய்விட்டது என்று சொல்லவில்லையா? என்ன வார்த்தைகள் இது வரை காங்கரஸ்காரரும் பார்ப்பனப் பையன்களும் சொல்லாததைவிட இந்தி எதிர்ப்புக்காரர்கள் சொன்னார்கள் என்று கேட்கின்றோம்.

மற்றும் வெள்ளையர் ஆட்சி ஒழிக! பணக்கார ஆட்சி ஒழிக!! ஜமீன் ஆட்சி ஒழிக!!! முதலாளி ஆட்சி ஒழிக!!!! என்று கூப்பாடு போட உரிமை இருக்கும்போது இந்த நான்கு கூட்டத்தை விட நாட்டு மக்களுக்கு கேட்டையும், தொல்லையையும், இழிவையும், சுரண்டுதலையும் உண்டாக்கும் சோம்பேறி விஷம சூழ்ச்சிக்கார பார்ப்பன ஆட்சி ஒழியவேண்டும் என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இல்லையா என்று கேட்கின்றோம்.

வெள்ளை ஆட்சி ஒழிக, சரிகைத் தலப்பா ஆட்சி ஒழிக என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இருக்கும்போது பார்ப்பன ஆட்சி ஒழிக! உச்சிக்குடுமி ஆட்சி ஒழிக!! பூணூல் ஆட்சி ஒழிக!!! என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இல்லையா என்று கேட்கின்றோம்.

~subhead

பெண்களை அவமானப்படுத்தியவர் யார்?

~shend

பெண்டு பிள்ளைகளைப் பற்றி பேசுவது என்பது குற்றம்தான், கூடாதது தான். ஆச்சாரியார் பெண்டு பிள்ளைகளைப் பற்றி மாத்திரம் அல்ல விவசாரத்தையும், குச்சிக்காரத் தொழிலையும் குலத்தொழிலாய் குடும்பத் தொழிலாய் கொண்டிருக்கும் பெண்டு பிள்ளைகளைப் பற்றி பேசினாலும் குற்றம் என்றுதான் சொல்லுகிறோம். அவர்கள் பெண்டு பிள்ளை வேறு, இவர்களுக்கு வரும் அவமானம் இழிவு வேறு என்று நாம் கருதவில்லை, கருதுவதுமில்லை என்று உறுதி கூறுகிறோம். அப்படிப்பட்ட பேச்சு பேசியவனையும், கூப்பாடு போட்டவனையும் எப்படி தண்டிப்பதிலும், எவ்வித அடக்குமுறை கையாளுவதிலும் நமக்கு சிறிதும் ஆட்சேபணை இல்லை. ஆனால் அப்படி இது வரை யார் சொன்னார்கள். அது எங்கே பதிவு செய்யப்பட்டது. அது உண்மையானால் அதற்கு தனிப்பட்ட நடவடிக்கை ஏன் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டாமா என்று கேட்கின்றோம். அதற்கு யார் பொருப்பாளி என்று கண்டுபிடிக்க என்ன முயற்சி செய்யப்பட்டது என்று கேட்கின்றோம்.

~subhead

கட்டுக் கதை

~shend

இவைகளுக்குச் சரியான சமாதானம் இல்லை என்றால் இந்த பேச்சு கற்பனைப் பேச்சு என்றும் கனம் ஆச்சாரியார் தாம் செய்யும் அடாத காரியத்துக்கு நேரடியாக சமாதானம் சொல்ல முடியாமல் பொய் மாமாலப் புரட்டு செய்து பழிவாங்கப் பார்க்கிறார் என்று தானே சொல்ல வேண்டும். ஒரு மாஜி கவர்னரும் இந்த விஷமப் புரட்டுக்கு உதவியாய் தன் பங்காசாரம் தானும் இப்படித்தான் இந்தி எதிர்ப்புக்காரர்கள் மீது பழிசுமத்தி வருகிறார் என்றும் கேள்விப்படுகிறோம். கனம் கவர்னர் பிரபு அவர்களும் இதை நம்புவதாகவும் கேள்விப்படுகிறோம்.

ஆதலால் இந்த விஷயம் அதாவது மந்திரிகள் குறிப்பாக பிரதம மந்திரிகள் பெண்டு பிள்ளைகளைப் பற்றி தொண்டர்கள் கேவலமாகப் பேசியது என்பது கட்டுக்கதை, ஜோடிப்பானது. நியாயமான ஒரு கிளர்ச்சிக்கு அதன் எதிரிகள் நேரிட்டு சமாதானம் சொல்லவோ, முகம் கொடுக்கவோ சக்தி இல்லாமல் அதன்மீது எவ்வளவு நெஞ்சுத் துணிவுடன் பழிசுமத்தி அதை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்பதை இதிலிருந்தாவது பொதுஜனங்கள் உணர வேண்டுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 28.08.1938

You may also like...