நீடாமங்கலத்துக்கு “நீதி”

 

நீடாமங்கலத்தில் 28-12-37ல் நடைபெற்ற காங்கரஸ்காரர்கள் மகாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவர்களை அடித்துத் தொந்திரவு செய்து மொட்டை அடித்து அவமானப்படுத்தியதாக “விடுதலை”ப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மகாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும் அந்த வழக்கு சுமார் 4, 5 மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4, 5 மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்மாதம் 15தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களுக்கு ரூ.200 அபராதமும் விடுதலை பத்திராதிபரான தோழர் பண்டித முத்துசாமிப் பிள்ளை அவர்களுக்கு ரூ.200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது.

இந்த வழக்கின் முடிவு இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்லலாம். ஏனெனில் காங்கரஸ் தலைவர்களால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவாய் இருந்தாலும் அதைத் குற்றமானதென்று காங்கரஸ் ராஜ்ஜியத்தில் ஒரு வேலை காயமில்லாத நீதிபதியிடம் இருந்து நீதி பெற்றுவிடலாம் என்று யாரும் கருதமாட்டார்கள். காங்கரஸ் பார்லிமெண்டரி செகரட்டரி என்பவர் பெட்டியேறி சரியாகவோ தப்பாகவோ ஒரு கட்சிக்குச் சார்பாய் சாட்சி சொல்லி இருக்கும்போதும் மற்றும் பல காங்கரஸ் தலைவர்கள் என்பவர்களும் ஒரு கட்சிக்கு அனுகூலமாய் சாட்சி சொல்லியிருக்கும்போதும் ஒரு மேஜிஸ்ட்ரேட் நீதிபதி அதற்கு மாறாக முடிவு கூறுவதென்றால் இது சராசரி யோக்கியதையுள்ளவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாத காரியமேயாகும். ஆதலால்தான் இந்த முடிவு ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்ல வேண்டியதாயிற்று. இந்த முடிவினால் யாரும் கலங்கவோ அல்லது நீடாமங்கலம் தோழர்களுக்கு காங்கரஸ்காரர்கள் செய்த கொடுமை உண்மையற்றதாய் இருக்குமோ என்று யாராவது சந்தேகப்படவோ வேண்டியதில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

எந்த தைரியத்தைக் கொண்டு அப்படிச் சொல்லுகிறோமென்றால் நீடாமங்கலம் சம்பவம் நடந்ததாக விடுதலை, குடி அரசு பத்திரிகைகளில் சேதி வந்தவுடன் அதன் உண்மையை விசாரிக்கச் சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தார் உடனே ஒரு கூட்டம் கூடி இந்த விஷயத்தைப்பற்றி விசாரித்து முடிவு தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியை நியமித்துவிட்டார்கள். அக்கமிட்டியில் சாதாரண ஆள்களை நியமிக்காமல் அச்சங்கத்தின் மாகாண பிரசிடெண்டான தோழர் எம். பாலசுந்தரராஜ் அவர்களையும் அச்சங்கத்தின் காரியதரிசி தோழர் வி. ஜயராஜ் அவர்களையும் அக்கமிட்டியின் பொருளாளரும் காங்கரஸ் எம்.எல்.ஏ.யுமான தோழர் எஸ்.சி. பாலகிருஷ்ணன் அவர்களையும் தமிழ்நாடு காங்கரஸ்கமிட்டி மெம்பரான தோழர் ஏ. அய்யனார் அவர்களையும் தோழர் ஜே. தேவாசீர்வாதம், தோழர் எஸ்.வி. அக்கினிமுத்து ஆகியவர்களையும் நியமித்தார்கள். அக்கமிட்டியார் பிப்ரவரி -N 6-ˆ நீடாமங்கலம் சென்று நீடாமங்கலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அநேக சாட்சிகளை முறைப்படி விசாரித்து சாட்சி பதிவு செய்து கவலையோடு ஆராய்ந்து பார்த்து முடிவு எழுதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் – இந்த கமிட்டியார் உடனே புறப்பட்டு போய் நீடாமங்கலம் முதலிய சுற்றுப்பக்கங்களில் விசாரித்ததில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் உண்மையானது என்று தெரிந்தார்கள் என்பதாகவும் மற்றும் கட்டி வைத்து அடித்ததைப்பற்றியும் மொட்டை அடிக்கப்பட்டதைப்பற்றியும் சாணிப்பால் ஊற்றி அவமானப் படுத்தப்பட்டதைப்பற்றியும் பலபேர் சாட்சி சொன்னார்கள் என்றும் இதை மறைக்க பலர் முயற்சிப்பதாய் தெரிகிறதென்றும் சொல்லி இருக்கிறார்கள்.

எனவே இந்த விஷயம் நடந்தது உண்மையா பொய்யா என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு கோர்ட் நடவடிக்கையில் நியாயம் கிடைக்காததால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். þ கேஸ் சம்மந்தமான கோர்ட் ஜட்ஜ்மெண்டை நாம் பார்க்காததால் அதன் உள் விஷயங்களைப் பற்றி நாம் ஒன்றும் எழுத முற்படவில்லை என்றாலும் அந்த ஜட்ஜ்மெண்ட் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் நீடாமங்கலம் சம்பவம் சம்மந்தமாய் ஒரு முடிவுக்கு வருவதை அது தடுக்கவில்லை என்றே கருதுகிறோம்.

அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் “ஹிந்து” சமூகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத்துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது என்பதேயாகும். அவமானப்பட்டு அடிபட்டு உதைபட்டு, துன்பப்பட்ட ஆட்களில் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்துங்கூட அவர்களுக்கும் நியாயம் கிடைக்க முடியவில்லை. ஆனால் இவர்கள் முஸ்லிம்களாய் இருந்து இப்படிப்பட்ட அவமானம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்காமல் இருந்திருக்குமா என்பதை நீடாமங்கலம் ஆதி திராவிட தோழர்கள் சிந்தித்துப்பார்க்கும்படி வேண்டிக் கொண்டு இதை இப்போது முடிக்கிறோம். மற்றவை ஜட்ஜ்மெண்ட் பார்த்தபிறகு விளக்குவோம்.

குடி அரசு – தலையங்கம் – 19.06.1938

You may also like...