எல்லாவரிகளும் எம்மனோர்க்குத்தானா? புரோகிதர்களுக்கு ஏன் வரி இல்லை? பிராமணர்களுக்கு சகல விதத்திலும் சலுகை – பிராமணரல்லாதான்
தோழர்களே! இப்பொழுது சட்டசபை என்பது காங்கரஸ் சபை என்பதும், காங்கரஸ் என்பது பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்ற சபை என்பதும், நந்தமிழ் நாட்டார் அநேகர் அறிந்ததேயாகும். சட்டசபையில் பிராமண ஜாதி முன்னேற்றத்திற்காக எல்லா பிராமணர்களும் முழு வன்மையோடு உழைத்து வருவது, காங்கரஸ் பதவி ஏற்றதிலிருந்து கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நடவடிக்கைகளிலிருந்து பலர் அறிந்ததேயாகும். பல காங்கரஸ் பிரபலஸ்தர்களும் “பார்ப்பன நயவஞ்சக வார்த்தைகளுக்கிணங்கி மந்திரிப் பதவிகளை பார்ப்பனர்களுக்கு விட்டுவிட்டு பார்ப்பனரல்லாதார்க்கு ஏன் கஷ்டம் விளைவித்தோம்” என்று இப்பொழுது வருத்தப்படுவதாகவும் கேள்விப்படுகிறோம். இப்பொழுதிருக்கும் காங்கரஸ் சபையார் இயற்றும் எவ்வித சட்டங்களுக்கும் நாம் எல்லோரும் அடங்கி நடக்கத்தான் வேண்டும். அவர்களும், எல்லார்க்கும் பொதுவாகவும் சம்மதமாகவும் இருக்கும் சட்டங்களை ஏற்படுத்துவதே நியாயம். அதை விடுத்து அவர்கள் ஒருசாராருக்கு மட்டும் உதவி செய்வது அநியாயமல்லவா? அதற்குச் சில உதாரணங்களைத் தந்து இக்கட்டுரையை முடிப்போம்.
தோழர்களே! கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து அதனால் கிடைக்கும் வரும்படியால் பிழைப்பது இயற்கை. அப்படிப்பட்ட தொழிலால் ஒருவன் அதிக இலாபமடைந்தால் அதில் ஒரு பகுதியை அரசாங்கத்தார் வசூலித்து மற்ற ஏழைகளுக்கும் உதவும்படி செய்வது ஒருவிதத்தில் பரோபகாரந்தான். இம்முறையை சரியாக நடத்த வேண்டாமா என்பதே நமது கேள்வி.
எப்படியெனில், இப்பொழுது காங்கரஸ் சட்டசபையார் விதித்திருக்கும் ஜவுளிவரி, ரிஜிஸ்ட்ரேஷன்வரி, டோல்கேட்டுவரி, கடன் நிவாரணச்சட்டம், நம் நாட்டு வைத்தியத்திற்கு வரி முதலியவைகளைப் பரந்த நோக்கத்துடன் பாருங்கள்.
~subhead
ஜவுளி வரி
~shend
இந்த வியாபாரத்தை பார்ப்பனரல்லாத தோழர்களே அதிகமாகச் செய்கின்றார்கள். எந்த பிராமணனும் ஜவுளிமூட்டையை தலைமேல் தூக்கிக்கொண்டு தெருத்தெருவாய், ஊரூராய், சுடு வெய்யிலில் திரிந்து விற்பதைக் காணோம். ஆகையால் இவ்வரிகளையும் பிராமணரல்லாத தோழர்களே கொடுத்துத் தீர வேண்டும்.
~subhead
ரிஜிஸ்ட்ரேஷன் வரி
~shend
நம் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதாரே அதிகமான நிலச்சுவான்தாரர்கள். இவர்கள் நிலங்களை விற்பதிலும், குதவை வைப்பதிலும் அதிகமாக ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போகவேண்டி இருக்கிறது. பார்ப்பனர்கள் பெரும்பான்மையோர் உத்தியோகங்களில் இருக்கின்றார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிலங்களை விற்கவோ, குதவை வைக்கவோ விரைவான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதில்லை. தர்மம், தானம், டிரஸ்டு, உயில் எழுதி வைப்பதும் பார்ப்பனரல்லாதாரே. அதிகம் சில பிராமணர்கள் நிலச்சுவான்தாரர்களாக இருந்தாலும் நிலங்களை விற்பதிலும் குதவை வைப்பதிலும் பார்ப்பனரல்லாதாரை காட்டிலும் குறைந்துதான் இருக்கமுடியும். ஆகையால் ரிஜிஸ்டரேஷன் வரி மூலமாகவும் பிராமணரைவிட பிராமணரல்லாதாருக்கே அதிகப் பணம் நஷ்டமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
~subhead
டோல்கேட்டு வரி
~shend
இதைச் சொல்ல வேண்டியதே இல்லை. ரிக்ஷா வண்டி, ஜட்காவண்டி, மோட்டார் வண்டி, மாட்டு வண்டி, எருமை வண்டி முதலிய எல்லா வண்டிகளையும் பார்ப்பனரல்லாதவர்களே வாடகைக்கு ஓட்டி ஜீவிக்கின்றார்கள். மோட்டார் வண்டிகளில் மட்டும் ஏதாவது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு இருக்கலாம். இருந்தாலும் வாசகர்களே, இதை சிந்தித்துப்பாருங்கள். பார்ப்பனரல்லாத ஏழை வண்டியோட்டிகளின் வயிற்றில் மண் விழுவதை.
~subhead
கடன் நிவாரணச் சட்டம்
~shend
இதிலும் பார்ப்பன விதவைகள் அதிகமிருப்பதால் பார்ப்பன ஜாதிக்கு அனுகூலமாக இருக்கிறதென்று “நகரதூதனில்” தெரிகின்றது. பார்ப்பனர்கள் பெரும்பான்மையோர் உத்தியோக ஜீவனத்தில் இருப்பதால் அவர்கள் அதிகமாக கடன் வாங்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுவதில்லை. பார்ப்பனரல்லாத பெருங்குடிமக்களே விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும், கூலி ஜீவனக்காரர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் தான் கடன் வாங்குதல், கொடுத்தலில் அதிகமாக ஈடுபட்டுத் தீரவேண்டும். ஆகையால் இவர்கள் தான் தங்கள் தேவைக்கு கடன் கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டும் – கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
~subhead
நம் நாட்டு வைத்தியம்
~shend
இதனால் ஏழை பார்ப்பனரல்லாத மக்களுக்கு, பார்ப்பனரல்லாத நாட்டு வைத்தியர்கள் குறைந்த விகிதத்திற்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த வரியும் பார்ப்பனரல்லாதாரையே அதிகமாக பாதிக்கின்றது.
இப்படிப்பட்ட வரிகள் விதிக்கும்போது, ஏன் புரோகிதர்களுக்கு வரி விதிக்கக்கூடாது? மடாதிபதிகள், குருக்கள் முதலியவர்களுக்கு வரும்படி குறைவா? இவர்கள் தான் பகற்கொள்ளை அடிக்கின்றார்களே! ஒவ்வொரு புரோகிதனும் சுமார் 10 அல்லது 15 கிராமங்களை வைத்துக்கொண்டு புரோகிதம் செய்கிறான். இந்தக் கிராமங்களில் வருடம் ஒன்றிற்கு 50 கல்யாணமானாலும் குறைந்தது 100 ரூபாயும், 10 ஜதை வேஷ்டியும், 2 மூட்டை அரிசி வகைகள் தானியமும், 5 படி நெய்யும், 10 படி எண்ணெயும் சேர்ந்து விடுகின்றது. 50 சாவிலும் சுமார் 100 ரூபாயும், விசிறி, குடை, செருப்பு, அரிசி, பருப்பு முதலியவை கிடைத்துவிடுகிறது. 50 குழந்தைகள் பிறந்தாலும் குறைந்தது 50 ரூபாய் கிடைக்கிறது. (இறப்பவைக்கும் இப்படியே) 10 பெண்கள் ருதுவானாலும் 25 ரூபாய் கிடைத்து விடுகிறது. இவையன்றி நல்ல நாள், கெட்ட நாள் பார்ப்பது, கிரகப்பிரவேசம் போன்ற வரும்படிகள் மிகுதி. (விரிக்கின் பெருகும்) வாசகர்களே, மேற்கண்டவற்றை கணக்குப்போட்டுப்பாருங்கள். இவ்வளவு அதிகமான வரும்படியுள்ள ஒவ்வொரு புரோகிதனுக்கும் ஏன் வரி விதிக்கலாகாது? இது எல்லோருக்கும் தெரிந்த வரும்படிதானே. இதை ஏன் காங்கரஸ் சர்க்கார் கவனிக்கவில்லை? முதன் மந்திரி கனம் ஆச்சாரியார் பிராமணராயிருப்பதனால் தன் இனத்தாரைக்காட்டிக் கொடுக்கக்கூடாதென்ற எண்ணமா? இப்புரோகித கணக்கைப் புள்ளி விவரங்களுடன் விளக்கிய மந்திரி கனம் எஸ். ராமனாதன் அவர்களாவது ஏன் கவனிக்கவில்லை? கனம் ஆச்சாரியாரைவிட தாழ்ந்த சாதியார் என்பதினாலா? அல்லது மனுதர்ம சட்டப்படி “சூத்திரன் பிராமணனை எதிர்த்துப் பேசக்கூடாது” என்னும் பழய சம்பிரதாயத்தை நிலை நாட்டவா? அல்லது “கதரைப்பற்றி முன் நான் சொன்னது தவறு இப்பொழுது அதிக அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் எல்லோரும் கதரைக் கட்டுங்கள்” என்று தனது அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டது போல், புரோகிதத்தைப்பற்றியும் “முன் நான் இழிவாகக் கூறியது தவறு. இப்பொழுது கனம் ஆச்சாரியாருக்கு அடிமைப்பட்டு, அவருக்கு கட்டை வண்டி முதலாகியதும் ஓட்டி அனுபோகபட்டதில், கனம் ஆச்சாரியாரின் வர்க்கத்தவர் செய்யும் புரோகிதத்தினால் நன்மையுண்டு என அறிகிறேன். ஆகையால் எல்லோரும் புரோகிதம் செய்து கொள்ளுங்கள். எல்லோரும் அவரவர்களுடைய பிராமண குருக்களை வரச்சொல்லி அவர்களுக்கு நான் சொன்னதிலிருந்து கொடுக்காமல் நிறுத்தி வைத்த காணிக்கை பணங்களை யெல்லாம் இப்பொழுது வட்டியுடன் கொடுத்துவிட்டு, அவர்களுடைய கால் கழுவிய நீரைத் தீர்த்தமாகக் குடியுங்கள்” என்று சொல்லுகிறாரா? அல்லது “மடாதிபதிகளாகிய பிராமணர்களுக்கு மாத்திரம் நிலத்தீர்வை மிக குறைவாகவே இருக்கட்டும். கஷ்ட ஜீவனக்காரர்களாகிய பிராமணரல்லாதார்க்கு மட்டும் கொஞ்சம் வரிகளை உயர்த்தலா”மென்கிறாரா? என்னே எலும்பூறிய அடிமைத்தனம்! குருக்களுக்கு தன் காணிக்கை, தலைமுறை காணிக்கை என்று பார்ப்பனரல்லாத தோழர்கள் அதிகமான பணம் கொடுக்கின்றார்களே! ஏன் இந்த குருக்களுக்கு வரி விதிக்கக்கூடாது? குருக்களில் பெரும்பான்மையோர் பிராமணர்கள் என்பதினாலா?
தோழர்களே! மேற்கூறிய பலவித வரி விதிப்புகளிலும் பார்ப்பனரல்லா தவர்களுக்குத் தான் கஷ்ட நஷ்டங்களே யொழிய, பார்ப்பனர்களுக்கு சுகஜீவனந்தான். ஒவ்வொரு புரோகிதனுக்கும் ஏன் வரிவிதிக்கக்கூடாது என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். சட்டசபை அங்கத்தினர்கள் யாராவது இதைக் கவனித்து ஒரு மசோதா கொண்டு வருவார்களா?
குடி அரசு – கட்டுரை – 24.04.1938