சிறையில் இந்தி எதிர்ப்பாளர் துயரம்

 

சட்டமறுப்புக் காலத்திலே கிரிமினல் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றியபோது இந்திய தேசீய வாதிகள் எல்லாம் ஒரு முகமாக எதிர்த்தனர். அச்சட்டங்களை நிறைவேற்றிய பிரிட்டிஷ் சர்க்கார் மீது ஓயாது வசை புராணம் பாடினர். தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்து பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கரஸ்காரர் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாகவும் காங்கரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுலகமே பொன்னுலகமாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள்தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 – மாகாணங்களிலே காங்கரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லைப்புற மாகாணத்தைத் தவிர வேறு எந்த காங்கரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கரஸ்காரரால் வெறுக்கப்பட்ட ஸி.ஐ.டிகளும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்துவிட்டார்கள். காங்கரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜத்துரோக குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர்மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம் செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.

~subhead

அவர்கள் செய்த குற்றம்?

~shend

இந்தி எதிர்ப்பாளர் செய்த குற்றம் என்ன? முதல் மந்திரியார் வீட்டு முன்னும் ஒரு பள்ளிக்கூடத்தின் முன்னும் நின்றுகொண்டு ்இந்தி வீழ்க! தமிழ் வாழ்க!” என்று கத்தினார்களாம். இதுதான் அவர்கள் பேரில் கூறப்படும் குற்றச்சாட்டு. மற்றபடி பலாத்காரம் செய்ததாகவோ இடைஞ்சல் உண்டு பண்ணியதாகவோ காலாடித் தனம் செய்ததாகவோ இதுவரைத் தொண்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் எவரும் சாட்சியம் கூறவில்லை; பொதுஜனங்களும் புகார் செய்யவில்லை. சென்னையில் காங்கரஸ் தலைவர்கள் மேல் பார்வையில் போலீஸ் பந்தோபஸ்தில் சமீபத்தில் நடைபெற்ற கிராம்பு மறியலின் போது காங்கரஸ் தொண்டர்களால் கிராம்பு வியாபாரிகளுக்கும் பொது ஜனங்களுக்கும் உண்டான இடைஞ்சல்கூட இந்த இந்தி எதிர்ப்புத் தொண்டர்களால் எவருக்கும் உண்டாகவில்லை. மாஜி காங்கரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் தோற்றுவித்த பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தார் கொள்கைப்படி, சர்க்கார் முறை ஜனங்களுக்குத் திருப்திகரமானதாயில்லாதிருந்தால் சாந்தமான முறையில் மறியல் செய்ய எல்லாருக்கும் உரிமையுண்டாம். நமக்கு இதுவரைக் கிடைத்துள்ள செய்திகளினால் அந்த சாந்தமான முறைப்படியே – சாத்வீக முறைப்படியே இந்தி எதிர்ப்பாளர் மறியல் செய்து வருவதாய்த் தெரிகிறது.

~subhead

பம்பாய்ச் சங்கத்தார் கண்டனம்

~shend

இம்மாதிரி சாத்வீக மறியல் செய்து வரும் இந்தி எதிர்ப்பாளர்மீது அடக்குமுறைச் சட்டங்களைப் பிரயோகம் செய்வது அடாத செயலென பம்பாய் பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தாரும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் தேசீயவாதிகள் மீது அன்னிய சர்க்கார் அடக்குமுறைச் சட்டங்களைப் பிரயோகம் செய்வதற்கும் பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் அச்சட்டங்களைப் பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டென சில குறுகிய புத்தியுடைய காங்கரஸ் பக்தர்கள் கூறுகிறார்கள். இது திருடன் நம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் நண்பர்கள் நம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டெனக் கூறுவதற்கு ஒப்பாகவே இருக்கிறது. சட்ட மறுப்புக்காலத்திலே அந்நிய சர்க்கார் அடக்குமுறைச் சட்டங்களின்படி அளித்த தண்டனைகள் எவ்வளவு கொடுமையாக காங்கரஸ்காரருக்குத் தோற்றப்பட்டதோ அவ்வளவு கொடுமையாகவே இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் அளிக்கும் தண்டனைகளும் தோற்றப்படுகின்றன. அடக்குமுறைச் சட்டக் கொடுமைகளை அனுபவித்தறிந்த காங்கரஸ்காரர் தமது ஆட்சியிலே அதே சட்டங்களை எதிரிகள் மீது பிரயோகம் செய்வது நீசத்தனமாகும்.

~subhead

காங்கரஸ்காரர் அதிர்ஷ்டம்

~shend

காங்கரஸ்காரர்களுக்கு ஏராளமான பத்திரிகைகளும் ஏஜண்டுகளும் இருந்ததினால் காங்கரஸ்காரர் சிறைகளில் அனுபவிக்கும் கஷ்டங்கள் ஒன்று பத்தாகப் பெருக்கி விளம்பரம் செய்யப்பட்டன. அந்த வசதிகள் இந்தி எதிர்ப்பாளருக்கு இல்லாததினால் அவர்கள் அனுபவிக்கும் சிறை கஷ்டங்களைப் பொதுஜனங்கள் அறியமுடியவில்லை. சிறையிலே இந்தி எதிர்ப்புக்கைதிகள் சரியாக நடத்தப்படாததினால் அநேகருக்கு வயிற்றுக் கடுப்பு முதலிய நோயுண்டாயிருப்பதாயும், ஒருவருக்கு டபிள் நியூமோனியா நோயுண்டாகி ஆஸ்பத்திரிச் சிகிச்சையில் இருந்து வருவதாயும் தெரிகிறது. தென்னாட்டார் பொதுவாக உண்பது அரிசிச் சாதமே. இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டவர்களெல்லாம் அரிசிச் சாதமுண்டு பழகியவர்களே. கேப்பைக்களி தமது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதென்றும் அரிசிச் சாதம் போட உத்தரவளிக்க வேண்டுமென்றும் அவர்கள் செய்து கொண்ட விண்ணப்பம் அதிகாரிகளால் கவனிக்கப்படவில்லையெனச் சொல்லப்படுகிறது. பத்து மந்திரிகளும், பத்து பார்லிமெண்டரி காரியதரிசிகளும் இருந்தும் இவர்களில் ஒருவராவது இந்தி எதிர்ப்புக் கைதிகளை பார்த்ததாகவோ அவர்களது குறைகளைப் பரிகரித்ததாகவோ தெரியவில்லை. ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் நிர்வாகத்திலே – நம்ப ஆட்சி அமலில் இருக்கும் இந்நாளிலே- காந்தியாரின் அன்பு ராஜ்யம் நடைபெறுவதாகக் கூறப்படும் இக்காலத்திலே – சாத்வீக மறியல் நடத்திய தொண்டர்களை இம்மாதிரி கொடுமைப்படுத்துவது நீதியாகுமா? தருமமாகுமா? அஹிம்ஸா வாதிகளான காங்கரஸ்காரர் ராஜ்யத்தில் இம்மாதிரி கொடுமைகள் நடப்பது அஹிம்சாவாதிகளுக்குப் பெருமையளிக்கக் கூடியதாக இருக்குமா?

~subhead

கைது செய்யாததினால் வந்த மோசம் என்ன?

~shend

கொள்ளையடித்ததற்காகவும் கொலைபுரிய முயன்றதற்காகவும் மற்றும் பல கிரிமினல் குற்றங்கள் செய்ததற்காகவும் தண்டிக்கப்பட்டுச் சிறைவாசம் செய்தவர்கள் விடுதலை பெற்றுவரும் இக்காலத்திலே சாத்வீக மறியல் செய்பவர்கள் இம்மாதிரிக் கொடுமைகளுக்கும் ஹிம்ஸைகளுக்கும் ஆளாவதென்றால் இதற்கு ஜவாப்தாரியாயுள்ள சர்க்கார் என்றோ பொறுப்புடைய சர்க்கார் என்றோ ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்காரென்றோ அன்பு ராஜ்யம் நடத்தும் சர்க்கார் என்றோ கூற முடியுமா! சென்ற இரண்டு மூன்று தினங்களாக பிரதம மந்திரி வீட்டு முன் மறியல் செய்வோர் கைது செய்யப்படவில்லையெனத் தெரிய வருகிறது. வாஸ்தவத்தில் அவர்கள் செய்யும் மறியல் தூரக்ரகமானதாயிருந்தால் – பலாத்காரமுடையதாயிருந்தால் இந்த இரண்டு மூன்று நாட்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் உண்டாயிருக்க வேண்டாமா? அவர்களைச் சிறைப்படுத்தாததினால் எவ்வித அசம்பாவிதங்களும் உண்டாகவில்லையென்றே தெரிய வருகிறது. ஆகவே சாத்வீக மறியல் செய்யும் அவர்களை கைது செய்வதும் தண்டிப்பதும் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்துடனேயே அன்றி அவர்களால் ஆபத்துண்டாவதினால் அல்ல என்பது விளங்கவில்லையா? இந்தி எதிர்ப்பாளருக்குத் தாம் பயப்படப்போவதில்லையென்று அவர்கள் சிறை புகுந்தால் மோரும் சாதமும் அளித்துக் காப்பாற்ற தயார் என்றும் பொதுக்கூட்டங்களில் ஜம்பம் பேசிய சிறை மந்திரி கனம் ராமன்மேனோன் என்ன செய்கிறார்? இந்தி எதிர்ப்புக் கைதிகளின் நிலைமையை ஒரு நாளாவது அவர் நேரில் சென்று விசாரித்தாரா?

~subhead

ஹம்பக் பேச்சு

~shend

காங்கரஸ்காரர் உயிருக்கும் உடலுக்குந்தான் மதிப்புண்டு; ஏனையோர் உயிருக்கும் உடலுக்கும் மதிப்பில்லையென்பது சிறை மந்திரியார் கருத்தா? இந்தி எதிர்ப்பாளர் சிறையில் கொடுந்துன்பம் அனுபவித்து வருகையில் காங்கரஸ்காரர் அஹிம்சையைப் பற்றியும் அன்பு ராஜ்யத்தைப் பற்றியும் பேசுவது ஹம்பக் பேச்சுத்தானே! பிரிட்டிஷ் சர்க்கார் மேற்பார்வையில் நடக்கும் மாகாண சுய ஆட்சியிலேயே சர்க்கார் கொள்கையைக் கண்டிப்பவர்களுக்கு இக்கதியானால் பிரிட்டிஷ் தொடர்பற்ற பூரண சுயராஜ்யத்திலே – ராம ராஜ்யத்திலே – அன்பு ராஜ்யத்திலே சர்க்கார் கொள்கையை எதிர்ப்பவர்கள் கதி என்னாகும்? காங்கரஸ்காரரின் மாகாண சுய ஆட்சி அநுபவங்களை முன்னிறுத்திப் பார்க்கும் எவனாவது காங்கரசின் பூரண சுயராஜ்யத்திலே பேச்சுச் சுதந்தரமும், எழுத்துச் சுதந்திரமும், அபிப்ராய சுதந்தரமும், உடல் பொருள் ஆவிப் பாதுகாப்பும் கிடைக்கும் என நம்புவானா? வரப்போகும் காங்கரஸ்காரரின் பூரண சுயராஜ்யத்திலே ஒடுக்கப்பட்டவர்கள் நிலைமை என்னாகும்? மைனாரட்டிகள் நிலைமை என்னாகும்? கராச்சித் தீர்மானப்படியுள்ள பிரஜா உரிமைகள் எங்கே? மாகாண சுய ஆட்சியை காங்கரஸ்காரர் கைப்பற்றியதும் அந்த கராச்சித்திட்டப் பிரஜா உரிமைகள் செத்துப் போய்விட்டனவா? காங்கரஸ்காரருக்கு மட்டுந்தான் அந்த பிரஜா உரிமையுண்டா? பார்ப்பன அடிமைகளுக்குத்தான் அந்தப் பிரஜா உரிமைகள் உண்டா? அப்படியானால் காங்கரஸ்காரர் கோரும் சுயராஜ்யம் காங்கரஸ்காரருக்கு மட்டும் அல்லவென்றும் சர்வ ஜனங்களுக்கும் அந்த உரிமை யுண்டென்றும் காங்கரஸ் நண்பர்களும், காங்கரஸ் எதிரிகளும் சமமான உரிமைகள் அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுவதற்குப் பொருள் உண்டா? மதிப்புண்டா? காங்கரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால் – யோக்கியப் பொறுப்புடையவர்களானால் – நேர்மையுடையவர்களானால் – அடக்குமுறைச் சட்டங்களை இதற்குள் ஒழித்திருக்க வேண்டாமா?

~subhead

அடக்குமுறைச் சட்டங்கள் ஏன் ஒழியவில்லை?

~shend

அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க மசோதா கொண்டு வந்தால் கவர்னர் அனுமதிப்பாரோ மாட்டாரோ என்ற பீதியினால் அவைகளை ரத்து செய்ய சென்னைப் பிரதம மந்திரியார் ஒருகால் முயற்சி செய்யாதிருந்தாலும் அதை உபயோகப்படுத்தாமல் துருப்பிடித்துத் தன்படியே ஒழியும்படியாவது விட்டுவிடக்கூடாதா? சட்டங்கள் எவ்வளவு கொடியனவாயிருந்தாலும் அவைகளைக் கையாளப்பட்டவர்கள் நேர்மையுடையவர்களாயும் நீதி போதமுடையவர்களாயும் இருந்தால் அச்சட்டங்களினால் மக்களுக்குத் தீமையுண்டாகாது. சட்டங்களைக் கையாளுகிறவர்கள் பழிக்குப்பழி வாங்கும் இயல்புடையவர்களாயிருந்தால் குற்றமற்ற சட்டங்களாலும்கூட பொதுஜனங்களுக்குத் துன்பங்கள் உண்டாகும். தோழர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கொண்டு வரப்போகும் அடக்குமுறையொழிப்பு மசோதாவைப் பற்றி அபிப்பிராயம் கூறிய அசம்பிளி உபதலைவர் அம்மையார் ருக்மணி லôமீபதி பேச்சு சுதந்தரத்துக்கும் செயலாற்றும் சுதந்தரத்துக்கும் இடையூறாக இருக்கும் கிரிமினல் திருத்தச் சட்டம் ஒழிய வேண்டியதுதான் என்று சொன்னாராம். தோழர் கிருஷ்ணமாச்சாரியார் கொண்டு வரப்போகும் மசோதாவை எந்த காங்கரஸ் சர்க்காரும் ஆட்சேபிக்க முடியாது.

~subhead

முதல் வெற்றி

~shend

வாஸ்தவத்தில் இந்த மசோதாவை காங்கரஸ் சர்க்காரே கொண்டு வந்திருக்க வேண்டும் என தோழர் ராமதாஸ் பந்துலு கூறினாராம். சென்னை காங்கரஸ் சர்க்கார் சுயமதிப்பைக் காப்பாற்றும் பொருட்டாவது கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஒழிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என சென்னை மாஜி ஹைக்கோர்ட்டு நீதிபதி தோழர் வி.வி. ஸ்ரீநிவாஸய்யங்கார் அபிப்பிராயப்பட்டாராம். இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் கடைசி முடிவு எப்படியானாலும் சரி காங்கரஸ்காரரின் சுயரூபத்தையும் பழிக்குப்பழி வாங்கும் நீச குணத்தையும் சிவில் உரிமைகளைக் காப்பாற்றுவதில் அவர்களுக்கு இருந்து வரும் ஆர்வத்தையும் வெட்ட வெளிச்சமாக்க ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டது அவ்வியக்கத்துக்கு ஒரு முதல் வெற்றியே. அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை தமது வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழிக்கும் ஒரு மசோதாவை அக்கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப்பமளித்த காங்கரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம் வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் கிருஷ்ணமாச்சாரியார் முயற்சி காங்கரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக்கடியென்றே சொல்ல வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

~subhead

பாஷ்யம் முயற்சி

~shend

மற்றும் சென்னைப் பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத் தலைவர் தோழர் கெ.பாஷ்யம் அய்யங்கார் பிரஜா உரிமைகளைப் பற்றியும் இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் பிரயோகம் செய்வது பற்றியும் யோசிக்க சென்னைப் பிரஜா உரிமை பாதுகாப்புச் சங்கக் கூட்டம் ஒன்றை விரைவில் கூட்டப் போவதாக சொல்லப்படுகிறது. இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் பிரயோகம் செய்வது தப்பென பம்பாய் பிரஜா உரிமை சங்கம் ஏற்கனவே அபிப்பிராயம் கூறியிருக்கிறது. அதை ஆட்சேபித்த ஒரு காங்கரஸ் பத்திரிகை சாத்வீக மறியல் செய்வதுதான் பிரஜா உரிமையென்றும் இந்தி எதிர்ப்பு பலாத்காரமானதும் துராக்ரகமானதுமாக இருப்பதினால் இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தை பிரயோகம் செய்வது சரிதானென்றும் அபிப்பிராயம் கூறியிருக்கிறது. தோழர் பாஷ்யம் அய்யங்கார் பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தைக் கூட்டப் போகும் நோக்கம் என்ன? பம்பாய் சங்க அபிப்பிராயத்தை ஆதரிக்கவா? சென்னை காங்கரஸ் பத்திரிகை அபிப்பிராயத்தை ஆதரிக்கவா? தோழர் கெ.பாஷ்யம் அய்யங்கார் மந்திரி கட்சியைச் சேர்ந்தவராயிருப்பதினால் பம்பாய்ச் சங்க அபிப்பிராயத்தைக் கண்டிக்கும் பொருட்டு சென்னை சங்கத்தைக் கூட்டுகிறாரோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படலாம். ஆகவே சங்கம் கூட்டி முடிவு செய்யும் வரை நாம் காத்திருந்து பார்ப்போமாக!

குடி அரசு – தலையங்கம் – 24.07.1938

You may also like...