இன்னமுமா காங்கரஸ்

 

தமிழ்நாட்டில் காங்கரஸ் புரட்டுக்கும் பார்ப்பன சூழ்ச்சிக்கும் சாவுமணி அடித்தாய்விட்டது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இருந்து காங்கரஸ் என்பது பார்ப்பனர்களும், தகுதியற்றவர்களும் பதவிவேட்டை ஆடும் ஒரு பித்தலாட்ட ஸ்தாபனம் என்பது வெட்ட வெளிச்சமாய்விட்டது. மஞ்சள் பெட்டி என்றால் மக்கள் மயங்கி மெளடீகர்களாகும் மதிமோசமும் ஒழிந்துவிட்டது. இனி பார்ப்பனர்கள் பலாத்காரத்தாலும் மூர்க்கத்தனத்தாலும் பொது மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி காலிகளுக்கும் கூலிகளுக்கும் இறைத்து ஆள் சேர்த்துக் கொண்டு செய்யும் அட்டூழியத்தை ஆதரவாகக் கொண்டுமேதான் காங்கரஸ் இந்த நாட்டில் வாழவேண்டிய வெளிப்படையான நிலைமையில் இருந்து வருகிறது. இந்த நிலை கூட இனி எத்தனை நாளைக்கு இருக்கக் கூடும்? பொது ஜனங்கள் இந்த ஆட்களின் யோக்கியதைகளை நேரில் கண்டு மிக மிக சமீபத்திற்கு வந்து விட்டபடியால் அதுவும் வெளுத்துப் போகப் போகிறது என்பதில் ஐயமில்லை.

~subhead

நாணயமற்ற காரியங்கள்

~shend

இவ்வளவு தைரியமாய் நாம் எடுத்துக்காட்டுவதற்கு பிரத்தியட்ச ஆதாரம் சமீபத்தில் நடந்த முனிசிபல் கவுண்சிலர், சேர்மன் முதலிய தேர்தல்களேயாகும். முனிசிபல் தேர்தல்கள் தகுந்த காலத்தில் கிரமமான ஓட்டர்களைக் கொண்டு நடைபெற்றிருக்குமேயானால் தமிழ் நாட்டில் காங்கரஸ்காரர்கள் ஒன்று இரண்டு ஸ்தானங்கள் கூட கைப்பற்றியிருக்க முடியாத மாதிரியில் பாதாளம் போய் சேர்ந்திருப்பார்கள். ஆனால் சரணாகதி அக்கிரார மந்திரிகள் அந்தப்படி நடக்க விடாமல் தங்களாலான நாணையமற்ற காரியங்களை எல்லாம் செய்து பார்த்து ஓட்டர்களையே மாற்றிவிட்டார்கள். முதலாவது பார்ப்பனர்கள் எல்லோரும் ஓட்டர்களாகும்படி செய்தார்கள். இரண்டாவது முன் அசம்பிளித் தேர்தலில் மஞ்சள் பெட்டிக்கு மயங்கிவிட்ட ஓட்டர்களை யெல்லாம் முனிசிபல் தேர்தல் ஓட்டர் லிஸ்டிற்குள் புகுத்தினார்கள். ஓட்டர்களைச் சேர்ப்பதற்கு என்று பல தடவை வாய்தா கொடுத்தார்கள். இந்த ஓட்டர்களைச் சேர்க்கும் வேட்டை காங்கரஸ் கூலிகளுக்கே சாத்தியப்படுவதாய்ச் செய்ய பல தந்திரமும் சலுகையும் காட்டினார்கள். மற்றும் முன்பு பொது மக்களை ஏமாற்றிய காரியமாகிய வர்ணப்பெட்டி முறையையும் புகுத்தி தங்களுக்கு மஞ்சள் பெட்டி என்று வைத்துக்கொண்டார்கள்.

அசம்பிளித் தேர்தல் போலவே “தேர்தலுக்கு நிற்கும் ஆட்களை லட்சியம் செய்யாமல் கழுதை நின்றாலும் கவலைப்படாமல் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள்” என்ற பிரகாரம் செய்து மக்களின் சீர்தூக்கிப் பார்க்கும் குணத்தைப் பாழாக்கினார்கள்.

~subhead

ஒரு துரோகம்

~shend

மந்திரிகள், காரியதரிசிகள் ஆகியவர்கள் பொது ஜனங்களின் வரிப்பணத்தின் செலவில் ஊர் ஊராய்ச் சுற்றிப் பிரசாரம் செய்தார்கள். முனிசிபல் அதிகாரிகளையும், எலக்ஷன் ஆபீசர்களையும் மந்திரிகளின் சலுகையைக்கொண்டு மிரட்டி, செய்யத் தகாத இழிவான காரியங்களை யெல்லாம் தேர்தலில் செய்து நேர்மையற்ற முறையில் தேர்தலை நடத்தினார்கள். இவ்வளவும் போதாமல் முன்பு முனிசிபாலிட்டியில் சேர்மெனாகவும், கவுண்சிலர்களாகவும் இருந்த காங்கரஸ் அல்லாத தலைவர்களாய், பிரமுகர்களாய் இருந்தவர்கள், ஒழுக்க ஈனமாய். கோழைத்தனமாய், துரோகமாய் சில இடங்களில் நடந்து மற்ற ஜனங்களது முயற்சிகளையும் குலைத்து சுயநலத்துக்காக எதிரிகளுக்கு அடிமையாக ஆசைப்பட்டு மனதாரத் தைரியமாய் பல சூழ்ச்சிகள் செய்து காங்கரஸ்காரர்களுக்குப் பல இடங்களில் செளகரியங்கள் செய்து கொடுத்தார்கள். மற்றும் பலர் இப்படிப்பட்ட ஒழுங்கீனமான காலித்தனமான தேர்தலில் கலந்து கொள்ளுவது தங்கள் கவுரவத்துக்கு இழிவு என்று கருதி ஒதுங்கி இருந்து விட்டார்கள். மேலும் காங்கரஸ்காரர்கள் அல்லாதவர்களுக்கு தேர்தலுக்கு நிற்க ஒரு ஸ்தாபனம் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் போட்டி போடாத ஸ்தானங்கள் போக போட்டியிட்ட ஸ்தானங்களில் பெரிதும் காங்கரஸ்காரர்கள் படுதோல்வி யுற்றிருக்கின்றனர்.

இப்படியெல்லாம் காரியங்கள் நடந்தும் காங்கரசுக்குச் சராசரி 100க்கு 60 பங்குதான் வெற்றி ஏற்பட்டிருக்கிறது என்பதாகச் சொல்லலாம்.

~subhead

காங்கரஸ் கட்டுப்பாட்டின் லட்சணம்

~shend

அந்தப்படி வெற்றி இருந்தாலும் காங்கரஸ்காரர்களுக்குள் இருந்த கட்டுப்பாடும் காங்கரஸ் பேரால் வெற்றி பெற்ற கவுண்சிலர்களுடைய நாணையமும் அட்ஹாக் கமிட்டியார் நடந்து கொண்ட யோக்கியமும் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் சேர்மென், வைஸ் சேர்மென் ஆகிய தேர்தலிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஈரோடு முனிசிபல் சேர்மென் தேர்தல் சிரிப்பாய் சிரித்து ஈரோடே சந்தி சந்தியாய்க் காரி உமிழப்பட்டுத் துண்டுப் பிரசுரத்தின் மீது துண்டுப் பிரசுரமும் பொதுக் கூட்டங்களின் மீது பொதுக் கூட்டமும் “போடா வாடா காலிப்பயலே” என்கின்றதான வசைமாரி மீது வசைமாரியும் கட்சிக் கூட்டத்துக்கு போலீஸ் தேவையும், பட்டினி விரதமும், கறுப்புக் கொடி ஊர்வலமும் மற்றும் பல இதில் எழுதத் தகுதியற்ற முறையும் காங்கரஸ்காரர்களுக்குள்ளாகவே நடந்து சேர்மென், வைஸ் சேர்மென் தெரிந்தெடுப்பு சடங்கு முடிந்தது. அதுவும் எதிர்கட்சியார் சிறிது முயற்சித்திருந்தால் அடியோடு காலை வாரிவிட்டிருக்கும்படியான நிலையில் இருந்தது. ஆனால் எதிர் கட்சியார் இதில் சிறிதும் பிரவேசிக்கவில்லை.

மற்றும் அடுத்த தாலூகாவாகிய தாராபுரத்தில் 16 மொத்த கவுண்சிலர்களில் காங்கரஸ் பேரால் 11 மெம்பரும் சுயேச்சையாக 5 மெம்பருமே வந்திருந்தும் காங்கரஸ் கட்சியில் சிபார்சு செய்யப்பட்ட சேர்மென் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டிபோட்டவரே சேர்மென் ஆனார். 11 மெம்பர்கள் இருந்தும் காங்கரஸ் சேர்மெனுக்கு 6 ஓட்டுகள்தான் கிடைத்திருக்கின்றன.

தஞ்சையில் 32 ஸ்தானத்தில் காங்கரசுக்கு 20 ஸ்தானங்கள் கிடைத்திருந்தும், வைஸ் சேர்மென் எலக்ஷனில் காங்கரஸ் கட்சியில் சிபார்சு செய்யப்பட்டவருக்கு 12 ஓட்டுகளே கிடைத்து தோல்வி அடைந்தார்.

~subhead

ராஜிநாமா பூச்சாண்டி

~shend

சித்தூர் முனிசிபாலிட்டியில் 20 ஸ்தானங்களில் காங்கரசுக்கு 15 ஸ்தானங்கள் கிடைத்திருந்தும் சேர்மென் தேர்தலில் காங்கரஸ் கட்சி சேர்மனுக்கு 8 ஓட்டுகளே கிடைத்து படுதோல்வி அடைந்திருக்கிறார். அந்த ஜில்லா காங்கரஸ் ஸ்தாபனம் காங்கரசின் பேரால் வந்த 15 கவுண்சிலர்களையும் வேலூர் ஜில்லா போர்டு போல் ராஜிநாமாச் செய்யும்படி உத்தரவு போட்டதில் 11 பேர்களே ராஜிநாமாச் செய்திருக்கிறார்கள். மற்ற 4 – பேர்கள் உங்கள் யோக்கியதைக்கு எங்கள் யோக்கியதை குறைந்து போகவில்லை, டாக்டர் ராஜனிடம் முதலில் ராஜிநாமா வாங்குங்கள் என்று சொல்லி ராஜிநாமாச் செய்ய மறுத்துவிட்டார்கள்.

~subhead

300-நாள் ஆட்சி பலன்

~shend

மற்றும் பல ஊர்களில் காங்கரசின் பேரால் வந்த கவுண்சிலர்களில் பலர் காங்கரசுக்கு ஓட்டுப் போடாமலும், தேர்தலுக்கு வராமலும் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆந்திர நாட்டிலும் பல இடங்களில் குடிவாடா, கடப்பை, தென்னாலி, மசூலிபட்டணம், குண்டூர், நெல்லூர் முதலிய அநேக இடங்களில் காங்கரஸ் சேர்மென்கள் வரமுடியாமல் காங்கரஸ் அல்லாதவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். இன்னும் பல இடத்துச் செய்திகள் தெரியவில்லை.

இவைகளின் முடிவு எப்படி இருந்தபோதிலும் வேறொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் காங்கரஸ் பதவி பெற்று ஆட்சி நடத்திவரும் இந்த 300 நாட்களுக்குள் காங்கரஸ் மந்திரிகள் வெளியில் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் போய்விட்டதோடு காங்கரஸ் எம்.எல்.ஏ.கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதல்லாமல் தேர்தல்களில் காங்கரசின் ஏகபோகம் சிதறடிக்கப்பட்டு சிரிப்பாய் சிரிக்கப்பட்டு விட்டது என்பது கண்கூடாகி விட்டது.

மற்றும் காங்கரசின் சுயமரியாதையும் வீரமும் எந்த அளவில் இருக்கிறது என்று பார்த்தால் முஸ்லிம் லீகை காங்கரசால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அது பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்லவென்றும் தோழர் ஜின்னா வகுப்பு வாதியே ஒழிய அரசியல்வாதி அல்லவென்றும் “மற்ற கட்சிகளுடன் (முஸ்லிம் லீகுடன்) ராஜி செய்துகொண்டு நாளைக்குவரும் சுயராஜ்யத்தை விட ராஜி செய்து கொள்ளாமல் 100 வருஷம் பொறுத்து வருகிற சுயராஜ்யம் மேல்” என்றும் சொன்ன காங்கரசும் காங்கரஸ் தலைவர்களும் இன்று கனம் ஜின்னா வாசல் படியில் காந்தியார் உள்பட மண்டி போடுவதும், காங்கரசிலிருந்து சாமி வெங்கடாசலம் போன்ற பலரை வெளிப்படுத்துவதும் காங்கரசைவிட்டு பலர் வெளிப்போவதும், அட்ஹாக் கமிட்டியைக் காங்கரஸ் மக்களே மதிக்காததும் அட்ஹாக் கமிட்டி நியமன அங்கத்தினர்களால் நிறுத்தப்பட்டவர்கள் கும்பல் கும்பலாய் தோல்வியடைவதும் ஒரு அட்ஹாக் கமிட்டி நியமன மெம்பருக்கும் மற்றொரு அட்ஹாக்கமிட்டி மெம்பர் போட்டி போட்டுத் தோற்கடிப்பதும் காங்கரசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தள்ளப்பட்டவர்கள் காங்கரஸ் அபேட்சகரை தோற்கடித்ததும் முதலிய காரியங்களைப் பார்த்தால் இன்னமுமா காங்கரஸ்? காங்கரஸ் பெயரை உச்சரிக்க வெட்கமில்லையா? என்று கேட்கிறோம்.

~subhead

மைனாரட்டி பாதுகாப்பு?

~shend

தவிர இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கரசின் பேரால் சில பார்ப்பனர்கள் சேர்மென், வைஸ்சேர்மென் பதவிகளுக்கு வந்தார்களே ஒழிய ஒரு முஸ்லீமோ ஒரு ஆதிதிராவிடரோ வந்தார் என்று சொல்லுவதற்கு இல்லாமலே போய்விட்டது. அந்தப்படி யாராவது வரவேண்டு மென்றாவது காங்கரஸ்காரர்கள் பயனளிக்கத்தக்க முயற்சி எடுத்துக்கொண்டார்களா என்றாவது தெரியவில்லை.

இதிலிருந்து காங்கரசின் மைனாரட்டி வகுப்பாரின் பாதுகாப்பு என்பது சந்து கிடைத்த இடத்தில் எல்லாம் பார்ப்பனர்களையும் பார்ப்பனப் பெண்களையும் திணிப்பது என்பதல்லாமல் வேறு எந்த முறையில் மைனாரட்டி வகுப்புக்கு காங்கரஸ் பதவியோ பாதுகாப்போ அளித்திருக்கின்றதா என்று கேட்கின்றோம். ஈரோடு முனிசிபாலிட்டியில் ஒரு தாழ்த்தப்பட்ட சுயேச்சை வாதி சேர்மென் பதவிக்கு நின்றார். பல விதத்திலும் அவர் தகுதியுள்ளவரேயாவர். அவரை காங்கரசுக்காரர்கள் தோற்கடித்தார்கள். காங்கரஸ் மெம்பர்கள் அதிகமாக உள்ள தாராபுரத்திலும், தஞ்சையிலும் காங்கரசினால் சிபார்சு செய்யப்பட்ட இரு முஸ்லிம்கள் காங்கரஸ் மெம்பர்களாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்படியாகவுள்ள காங்கரஸ் “சிலரை எப்போதும் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். எப்போதும் எல்லோரையும் ஏமாற்றலாம் என்பது முடியாத காரியம்” என்னும் ஆப்த வாக்கியத்துக்கு ஆளாகிவிட்டது ஆச்சரியமல்ல.

– 17.05.1938 “விடுதலை”.

குடி அரசு – கட்டுரை – 22.05.1938

You may also like...