மே 25ல் மேட்டூரில் நாத்திகர் விழா ! சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவு !

 

நாத்திகர் பேரணி தொடர்பாகத் திராவிடர் விடுதலைக்கழகம் தொடர்ந்த வழக்கில், பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். ஏப்ரல் மாதம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சேலம் மேட்டூரில் நாத்திகர் பேரணி மற்றும் விழா நடத்தவிருப்பதாகவும், அதற்கு அனுமதி கோரி மார்ச் மாதம் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் மனு அளித்ததாகவும், கருமலைக்கூடல் காவல் நிலைய ஆய்வாளர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டுமென்று கோரித் தங்களது மனுவை நிராகரித்தார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதியன்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்க வேண்டுமென்று கூறி உத்தரவிட்டது.

ஆனால், தங்களின் மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும், நீதிமன்றம் தங்களின் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்றும், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இன்று (மே 9) இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாத்திகர் பேரணிக்கும் பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, வரும் 25ஆம் தேதியன்று நாத்திகர் பேரணி சேலம் மேட்டூரில் நடைபெறவுள்ளது.

(செய்தி : மின்னம்பலம்)

You may also like...