கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது – தோழர் கௌசல்யா நெகிழ்ச்சி உரை சூலூர் 26112017
அனைவருக்கும் வணக்கம்! எனக்கு உரிமை படைத்த மேடையில் நிற்கும் உணர்வு எனக்கு இங்கே அதிகமாகக் கிடைக்கிறது. இந்த மேடை என்று சொல்வது திராவிடர் விடுதலைக் கழகம் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல. சாதி ஒழிப்புக்காக தூய உள்ளத்தோடு உழைக்கிறவர்களான அதுவும் கருஞ்சட்டைகளோடு நிற்கையில் கர்ப்பப்பைக்குள் நிற்பதாகவே உணர முடிகிறது. ஆம் இது எனக்கான இடம், நீங்கள் என் சொந்தங்கள் என்ற உணர்வு இயல்பாகவே வந்துவிடுகிறது. சாதியைப் பாதுகாக்கும் ஐந்து சட்ட விதிகளை பெரியார் கொளுத்திய நாள் இன்று! அதன் வரலாறு , அடக்குமுறை, வீரச்சாவுகள் குறித்தெல்லாம் எனக்குப் பின்னால் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பேச இருக்கிறார். நான் புதிதாகக் கற்கத் தொடங்கியுள்ள மாணவிதான். நானும் கற்கத்தான் இங்கே வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த சில செய்திகளை கீற்று போன்ற இணையத்தில் படித்து கிடைத்த புரிதல்களை மட்டும் இங்கே முன் வைக்க விரும்புகிறேன். பெரியார் ஆணைக்கிணங்க சட்டத்தைக் கொளுத்திய 16 வயதே நிரம்பிய சிறுவன்...
