ஆதித் தமிழர் பேரவை நடத்திய தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்
தீபாவளி பண்டிகை என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த துணிவு , தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது, அதை பின்பற்றி ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து மக்களிடையே தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு ஆதரவாகக் குரல் தந்த ஒத்த கருத்துடைய ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து கருத்தரங்கம் ஒன்றை ஆதித் தமிழர் பேரவை ஈரோட்டில் அக்.18ஆம் தேதி ‘தீபாவளி’ நாளில் நடத்தியது. ‘தீபாவளி’யை தமிழர்கள் புறக்கணிக்க இந்த கருத்தரங்கம் வேண்டுகோள் விடுத்தது.
சாதிவெறி, மதவெறி, ஆதிக்க தலித் வெறி, அடிப்படை மதவெறி, ஆணவப் படுகொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், கருத்துரிமை பறிப்பு, கல்வி உரிமை சிதைவு, மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தால் நாட்டை மீண்டும் மனுவின் கொடுங்கோலுக்கு அழைத்துச் சென்று, ஒரே நாடு, ஒரே மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பு சட்ட மரபுகளை சிதைக்கும், மக்கள் விரோத பா.ஜ.க. மோடி அரசின் நயவஞ்சக செயலை அம்பலப்படுத்தி, மக்களுக்கு விழிப்பூட்ட ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது இக்கருத்தரங்கம்.
அண்மையில் கருத்துரிமைக்கு எதிராக கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ், நீட் தேர்வில் படுகொலைக்கு உள்ளான அனிதா, இந்து முன்னணி கயவர்களால் சிதைக்கப்பட்ட அரியலூர் சிறுமி நந்தினி, உயர்கல்வி மறுப்பால் படுகொலையான ஜெ.என்.யு. தலித் மாணவர் சேலம் முத்துகிருஷ்ணன், அடிப்படை மதவெறியால் படுகொலையான கோவை பாருக், சாத்திய ஆணவ திமிரினால் படுகொலைகளுக்கு உள்ளன உடுமலை சங்கர், திண்டுக்கல் சிவகுருநாதன், பெரம்பலூர் பார்த்தீபன், திட்டக்குடி சிவகுமார் என நீளும் கோர படுகொலைகளை கண்டித்து அம்பலப்படுத்தியதோடு இப்படிப்பட்ட கொடுஞ்செயல்களுக்கு எதிராக கோபம் கொண்டு கொதித்தெழ வேண்டிய மக்களை பண்டிகைகள், விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என திசை திருப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பார்ப்பனிய பண்பாட்டு ஏற்பாடு தான் இந்த தீபாவளி பண்டிகை என்று கருத்தரங்கில் பேசியவர்கள் எடுத்துரைத்தனர்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் இரா. அதியமான் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பாலபாரதி மற்றும் வெண்மணி (ஆதித்தமிழர் கட்சி), சண்முகம் (தி.க.), குமரகுருபரன் (த.பெ.தி.க.), பெருமாவளவன் (ஆதித் தமிழர் பேரவை) ஆகியோர் உரையாற்றினர்.
பெரியார் முழக்கம் 16112017 இதழ்