‘என்னுடைய வாழ்க்கையை என் பெற்றோர்கள் வாழ நினைத்தால் அது என் வாழ்க்கை அல்ல!” – உடுமலை கவுசல்யா
சங்கரை காதலிச்சு திருமணம் செய்த உடனே ஒரு கனவோட வாழ்க்கைய துவங்கீருப்பீங்க. ஆனா இந்த சமூகம் அந்தக் கனவை சிதைச்சிருச்சு. சங்கர் இல்லாத நாட்கள் எப்படி இருக்கு ?
முதலில் அது நடக்கும் போது என்னால் கொஞ்சம் கூட ஏத்துக்க முடில. வாழ்க்கை முழுவதும் கூட இருப்பான் வேற எதுவுமே வேண்டாம்னுதான் எல்லாத்தையும் விட்டுட்டுத் தான் நான் சங்கர் கூட வந்தேன். அப்படி வரும் போது எதுவேணும்னு நெனச்சு வந்தேனோ, அது கடைசி வரைக்கும் கூட இல்லைனு தெரியும் போது சுத்தமா ஏத்துக்கவே முடியல. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் இந்த சாதீய சமூகம் மட்டும்தான்.
உங்க பார்வையிலும் பேச்சிலும் ஒரு தன்னம்பிக்கை தெரியுது, இனி வரும் காலத்தை எப்படி எதிர்கொள்ள விரும்பறீங்க?
என்னோட நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணம் ஜாதியம்தான் அதனால் அதனை எதிர்த்து போராடனும் என்னோட நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது. அதற்காக இந்த தலைமுறையில் இருக்கும் தாத்தா பாட்டி ஆகட்டும், அப்பா அம்மாவா இருக்கட்டும் கொஞ்சம்கூட அவர்களை மாற்ற முடியுமான்னு தெரியல. நான் அவர்களை மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டுதான் இருக்கேன். ஆனால் அடுத்த தலைமுறையை மாற்ற நான் மிகவும் உறுதியா தீர்க்கமா இருக்கிறேன்; அவர்களிடம் பேசறேன்.
சமூகத்த பத்தி அக்கறையா துணிச்சலா செயல்பட தொடங்கீருக்கீங்க.சங்கர் இப்ப உங்க கூட இருந்திருந்தா இதே துணிச்சல் இருந்திருக்குமா?
சங்கர் கூட இருந்திருந்தா இதே துணிச்சல் வீரம் இருந்திருக்கும். ஆனா சமூகத்திற்கு உழைக்கும் மனுசியா நான் இருந்திருக்க மாட்டேன். இப்ப நான் முழுக்க முழுக்க சமூகத்திற்காக மாறி என்னால் என்ன செய்ய முடியும் என்கிற அளவிற்கு நான் முன்னேறி இருக்கிறேன். அப்ப சங்கர் இருந்திருந்தால் அது நடந்திருக்காது.
சங்கரோட படு கொலைக்கு பிறகு பாதிக்கப் பட்டவரோட பக்கம் நின்னு போராடுறதும், அதேசமயம் தன் சொந்த குடும்பத்த எதிர்க்கறதும் சாதாரண விசயம் இல்ல. இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி வந்துச்சு?
இதுக்கு முழுக்க முழுக்க காரணம் சங்கர் தான். அவனுக்கு என் மேல இருந்த பாசம், என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துகிட்ட விசயம், ஒருவேளை என் அம்மா அப்பா பார்த்து திருமணம் செய்து வைத்திருந்த ஒரு பையன் கிட்ட போய் அடிமையாத்தான் நான் இருந் திருப்பேன். ஆனா இங்க சங்கர் கிட்ட நான் ஒரு தடவகூட அடிமையா என்னை உணர்ந்ததே இல்ல.
எனக்கான வேலைகளையும் சேர்த்து அவனேதான் செய்தான். காலையில் எழுந்து சமைப்பதில் இருந்து வரை துணி துவைப்பது எல்லா வேலைகளையுமே. இதுதான் பெண் களுக்கான வேலை; பெண் தான் செய்யனும் என்று ஒரு தடவை கூட என்னை வற்புறுத்தியது கிடையாது என் அம்மாவை விட்டுவிட்டு வந்தப் பிறகு என் அம்மாவிடம் இருந்ததைவிட சங்கரிடம் நான் அதிக தாய்மையை உணர்ந்தேன்.
பெத்து வளர்த்து படிக்க வைத்த அப்பா அம்மா நல்ல வாழ்க்கையை அமைத்து குடுக்க மாட்டார்களா? இந்த நம்பிக்கை உங்களிடம் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்?
பெற்றோர்கள் பெற்றுள்ளார்கள் என்பதற்காக அவர்களின் ஆதிக்கத்தை எல்லாம் குழந்தைகள் மீது திணிப்பது எவ்வாறு சரியாகும்? இப்ப நான் பெரியாரை உள்வாங்கிக் கொண்டேன். அதனால் நான் சொல்கிறேன். எந்த மனிதர்களுக்குமே தனி மனிதனின் விருப்பத்திற்கு மேல் ஆதிக்கமே இருக்கக் கூடாது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். அதை செயல்படுத்த யாருக்குமே தடை கிடையாது. அவரைத் தவிர வேறு யாரும் தடை விதிக்க முடியாது. நான் யாருடன் வாழ வேண்டுமென்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அது எப்படி என் அம்மா அப்பா முடிவு செய்ய முடியும்? அவர்கள் பெற்றுவிட்டார்கள் என்பதற்காக இத்தனை ஆண்டுகள் வளர்த்து விட்டார்கள் என்பதற்காக என்னுடைய வாழ்க்கையை அவர்கள் வாழ வேண்டும் என நினைத்தால் அது என் வாழ்க்கையே கிடையாது.
உடுமலையில் நடந்த சங்கர் படுகொலைக்கு பிறகும் சாதி ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
இதற்கெல்லாம் முக்கிய காரணம் சாதியம் தான் அது எப்போது போகும் என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை இது ஏன் நடக்கிறது என்று பார்த்தால் பெண்ணை மையமாக வைக்கத்தான் ஒவ்வொரு ஜாதி ஆனவ படுகொலையும் நடக்கிறது. ஏனென்றால் அந்தப் பெண் கருவுற்றால் கீழ்ச்சாதிக்காரன் குழந்தை நம் பெண் வயிற்றிலே வந்து அது தன்னை தாத்தா பாட்டின்னு கூப்பிட்டுருமோ; பெற்றோருக்கு அந்த கௌரவம் போய்விடுமோ; அதற்குப் பிறகு நான்கு பேர் மத்தியில் நாம் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும் இந்த பயத்திலேயே ஒவ்வொருவரும் இதை செய் கிறார்கள்
ஜாதி மாறி திருமணம் செய்தால் தன் சொந்த மகளாக இருந்தாலும் வெட்டிக் கொல்ல வேண்டும் என்று இருக்கும் ஜாதி வெறியோடு இருக்கும் பெற்றோர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அந்த ஜாதிய கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மட்டும்தான் பெற்றோர் களுக்கு அவ்ளோ பெரிய தைரியம் வருகிறது சின்ன வயதிலிருந்து பார்த்துப் பார்த்து வளர்த்தவர்கள் தான்.என் வீட்டில் நான் ஒரே பொண்ணு. எதை கேட்டாலும் வாங்கித் தந்துவிடுவார்கள் அப்படி இருப்பவர்கள் இதுவரை சங்கரை ஏன் எனக்குப் பிடிக்கும்னு கூட என்னைக் கேட்டது இல்லை. அவனப் பத்தி ஒரு விஷயம் கூட அவர்களுக்குத் தெரியாது நான் இவ்வளவு பேசுகிறேன் இவ்வளவு நாள் ஆன பிறகும்கூட அவனைப் பற்றி அவர்களுக்கு ஒரு விசயம் கூடத் தெரியாது. ஆனால் ஒரேஒரு விசயம் அவர்கள் என்னிடம் பேசியது அவனை விட்டுவிட்டு வந்துவிடு.ஜாதி மட்டும்தான் அதற்குக் காரணமாக இருக்கிறது. அவனை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் யோசிக்கவே இல்லை புரிந்து கொள்வதற்குத் தான் இடையூறாக சாதி இடையில் இருக்கிறதே? அப்புறம் எப்படி புரிந்துகொள்ள முடியும் ?
ஏன் நான் அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன் என்றால் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதற்கு நீதி வேண்டும் இன்னொன்று அடுத்த பெற்றோரோ அல்லது கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்கள் வழக்கு மூலமாக வரும் தீர்ப்பிற்கு அவங்க பயப்படும்படியான ஒரு தீர்ப்பாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
சங்கரை நீங்கள் இந்த அளவிற்கு நேசிப்பதற்கு என்ன காரணம்? அவர்கிட்ட என்ன அப்படி தனித்துவமான ஒரு விசயம் இருந்தது?
எங்கள் வீட்டில் நான் பார்த்த ஆண்களைப் பொறுத்த அளவில் எல்லோருமே ஒரு பெண்ணை அடிமையாகத்தான் நடத்துவார்கள் அவர்களுக்காக செய்து கொடுக்கும் வேலை யென்று ஏதும் இருக்காது அடுப்பறையில் தான் நிறைய நேரம் இருந்து கொண்டிருப்பார். ஆனால் முழுக்க முழுக்க இங்கு சங்கர் வீட்டில் எல்லாமே எனக்கு மாறியிருந்தது. காலையில் ஏழரை மணிக்கு அவர் காலேஜ் போகும் முன்னாடியே எழுந்து சாப்பாடு சமைத்து என்னை சாப்பிட வைத்து கல்லூரி சென்று விட்டு மாலை வந்து துணிகளைத் துவைக்கும் வரை என் துணிகளைக் கூட துவைத்துக் கொடுப்பார் . என் அப்பா இது நாள்வரை என் அம்மாவிற்கு துணிகளைத் துவைத்து கொடுத்தாரா என்பதை நான் பார்த்ததுகூட இல்லை. நான் சாப்பிடும் தட்டை கழுவதில் இருந்து இதெல்லாம் செய்வதுதினால் அது காதலா அப்படியெல்லாம் இல்லை
ஆனால் எனக்கு அதெல்லாம் அப்போது தோன்றியது.
சங்கர் படுகொலை தமிழக முழுவதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு ஒரு முக்கிய காரணம் அந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுதான். அதை நீங்க பார்த்திருக்கீர்களா?
இல்லை இதுவரைக்கும் அந்த கண்காணிப்பு கேமராவின் பதிவைப் பார்த்ததில்லை. பார்க்கும் தைரியம் கூட எனக்கு இல்லை.
ஜாதி இந்தளவுக்கு கொடூரமானதாக இருக்கிறதா அதுவரை ஜாதிய கொடுமையை நான் அனுபவித்ததில்லை காதில் கூட கேட்டது கிடையாது.அதைப்பற்றிய புரிதல் கூட அதுவரைக்கும் இருந்தது கிடையாது ஆனால் அது எனக்கே நடக்கும் போதுதான் கொஞ்சம் கூட என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
சங்கர் இல்லாதபோதும் தொடர்ந்து அவருடைய குடும்பத்தின் கூடவே இருக்க வேண்டும் என்று எதனால் முடிவெடுத்தீர்கள்?
நாங்க ரெண்டு பேரும் அங்குதான் 8 மாசமாக இருந்தோம். அந்த எட்டு மாத காலமாக இருந்தபோது அவர்கள் என்னை பார்த்துக் கொண்டது அவன் தம்பிகளாகட்டும், அப்பாவாகட்டும், பாட்டியாகட்டும் அவர்கள் என்னை நடத்திய விதம் இருக்குல்ல. நான் என் அப்பா, அம்மா வீட்டில் இருந்ததை விட இரண்டு மடங்கு அங்கு இருந்தேன்.
அவர்கள் கூப்பிடுவதில் இருந்து, சங்கர் என்னை பாப்பா என்றுதான் கூப்பிடுவான். அவங்க எல்லோரும் என்னை பாப்பா என்று தான் கூப்பிடுவார்கள். துவைப்பது கூட நான் சொல்லியபடி சங்கர் சோப்பு போட்டு கொடுத்தால் நான் அலசினால் இரண்டு தம்பிகளும் காயப் போடுவது இந்த மாதிரி எல்லாம் சங்கர் வீட்டில் நடக்கும். எல்லாம் சமமாக செய்வோம். ஆனால் அப்போது இந்த சமத்துவம் குறித்து எல்லாம் தெரியாது அரசியல் அறியாமலே நாங்கள் சமமாக இருந்தோம்.
காதலை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது? காதலைப் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன?
காதல் என்ற எல்லோரும் எப்படி புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது ஒரு காவல்துறை அதிகாரி சொன்னதைப்போல ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அது மட்டும்தான் காதல் என்று சொல்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஏனென்றால் நான் உணர்ந்தது வேறு. என்னுடைய கோணத்தில் நான் சொல்கிறேன். முழுக்க முழுக்கவே ஏற்பாட்டுத் திருமணத்திற்கும் காதல் திருமணத்திற்கு நிறைய வேறுபாடு இருக்கிறது முன்பெல்லாம் சுயமரியாதை என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. இப்பதான் நான் சுயமரியாதை பற்றித் தெரிந்து கொண்டேன். ஆனால் அதற்கு முன்பே நான் ஒரு சுயமரியாதைக்காரியாக நடத்தப்பட்டிருக் கிறேன் என்றால் அது காதலால் மட்டும்தான் என்று நான் நம்புகிறேன்.
படிக்கிற வயசுல காதல் கல்யாணம் எல்லாம் செய்தால், வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது என்று சில பெரியவங்க கருத்துச் சொல்றாங்க. அதற்கு உங்கள் பதில் என்ன?
காதல் இந்த வயதில் தான் வரவேண்டும் என்று கிடையாது. திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு எங்களைத் தள்ளியது காயப்படுத் தியது கட்டாயப்படுத்தியது இந்த சமூகம்தான். என்னுடைய அம்மாவும் அப்பாவும் தான். நாங்களாக போய் வேண்டுமென்றே திருமணம் செய்ய வேண்டுமென்று காதலிக்கவே இல்லை. படிப்பு முடித்துவிட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தோம். ஆனால் அதற்கு முன்பே இவர்கள் எனக்கு மாப்பிள்ளை பார்க்கப் போகிறேன் என்று சொல்லியதால் வந்த பயத்தில்தான் சென்று திருமணம் செய்து கொண்டோம். நாங்களாகவே வேண்டுமென்றே படிக்கும்போது திருமணம் செய்ய வேண்டும் என்று நாங்கள் திருமணம் செய்துகொள்ள வில்லை.
தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு பிற ஜாதிப் பெண்களைக் கவருவதற்காக சுற்றுகிறார்கள் என்று ஒரு தலைவர் கருத்து சொன்னார். காதலில் நாடக காதல் என்று ஏதாவது இருக்கிறதா?
அந்த குற்றச்சாட்டை நான் என்னளவில் ஒரு துளி கூட ஏற்றுக்கொள்ள வில்லை நான் என் சுய அனுபவத்தில் இருந்து பார்த்தால் சங்கர் வெறும் சீருடையில் தான் வருவான். ஜீன்ஸ் பாண்ட் போட்டோ கூலிங் கிளாஸ் போட்டோ என்னை அவன் ஏமாற்றவில்லை. கடைசிவரை அவன் என்னை ஏமாற்றவே கிடையாது. அப்படி இருக்கும்போது நான் எப்படி அதை நம்புவேன்.
சங்கர் பெயரில் ஒரு பயிற்சிப் பள்ளி துவங்கி இருக்கிறீர்கள். அதனை பற்றி சொல்லுங்கள்.
எனக்கு அரசியல் பார்வை என்னுடைய சம்பவத்திற்கு பிறகுதான் வந்தது நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தபோது ஒவ்வொரு குழந்தையிடமும் செல்ல வேண்டும்; அடுத்த தலைமுறையை மாற்ற வேண்டும் என்றால் குழந்தைகளிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அதற்காகத் தான் அவர்களுக்கு தனிப் பயிற்சி பள்ளி ஆரம்பித்து அதன் மூலம் அரசியல் பார்வையை கொடுப்பதற்காக இந்த தனிப்பயிற்சிப்பள்ளியை ஆரம்பித்திருக்கிறேன்.
சாதி ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு தனிப்பிரிவு அமைத்திருக் கிறார்கள்.அது போதாது அதற்கு ஒரு தனி சட்டம் வேண்டும் என்று சமீபத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அது சம்பந்தமான உங்கள் கோரிக்கை என்ன?
தனிப்பிரிவு சரி. அதில் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறையாகட்டும் யாராக இருக்கட்டும் அந்த இடத்தில் முதலில் கட்டப்பஞ்சாயத்து நடக்கும். அடுத்தது பேரம் பேசுவார்கள். பெண்ணோட அம்மா அப்பாவாக இருக்கட்டும் பையனுடைய அம்மா அப்பாவாக இருக்கட்டும் அந்த இடத்தில் அந்த அதிகாரிகள் யாராவது தவறு செய்தால் அவர்களுக்கான தண்டனை என்னவாக இருக்கும்? அதை அந்த இடத்தில் உறுதி செய்தாக வேண்டும். இப்போ ஒரு காதலர்கள் அந்த இடத்தில் பாதுகாக்கப்படு கிறார்கள் என்றால் எந்த மாதிரி எல்லாம் பாதுகாக்கப்பட்டார்கள் அதுவும் இரண்டு மூன்று மணி நேரம் கழித்து அவர்களுக்கு தெரியுமல்லவா இதற்குப் பிறகு பாதுகாப்பு என்று ஆனதற்குப்பிறகு அவர்கள் எப்படி எல்லாம் பாதுகாக்கப்பட்டார்கள் என்று சொன்னால்தான் அடுத்து காதலிப்பவர்களுக்கு ஒரு உறுதி இருக்கும். ஆணவப் படுகொலை களுக்கு, ஜாதியப் படுகொலைகளுக்கு தனி சட்டம் வேண்டும். தனிச்சட்டம் இல்லாமல் இங்கு எதுவும் செய்ய முடியாது. இந்த சட்டத்தின் கீழ் எப்படிப் பாதுகாக்கப்படு கிறார்கள் என்பதற்குதான் தனிப் பிரிவு. ஆனால் இங்கு ஆணவ படுகொலைகள் நடக்கிறது. அதற்காக தனிச்சட்டம் வேண்டும் என்பது போல் சட்டம் சடங்காக மாறி நிற்கிறது. அப்படி இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.
நன்றி : ‘நக்கீரன்’ வலையொளி
எழுத்தாக்கம் : பரிமளராசன்
நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்