பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! – கார்த்திக் ராம் மனோகர்-எஸ். ஆனந்தி

‘தி ஒயர்’ ஆங்கில இணையதளத்தில் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் (இவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரால் பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்த இனவாதி; பொருளாதாரக் கொள்கையில் அவருக்கு தெளிவான பார்வை கிடையாது; அம்பேத்கர் ஆழமான சிந்தனையாளர்; பெரியார் தெருச் சண்டைக்காரர் என்று பெரியாருக்கு எதிராக நஞ்சு கக்கியது அக்கட்டுரை. இதற்கு விரிவான பதிலளித்து ‘தி ஒயர்’ ஏட்டுக்கு பேராசிரியர்கள் ராம் கார்த்திக் மனோகர், பேரா. ஆனந்தி ஆகியோர் எழுதிய கட்டுரை இது. தமிழில் ‘இரா’.

 

இந்தியாவின் ‘சுதந்திரப்’ போராட் டத்தில் பெரியார் முழுமையான உடன்பாடு  கொள்ள வில்லை என்பதற்கான காரணம் இந்த சுதந்திரத்தால் பயனடையப் போவது யார்? சுதந்திரத்தின் பயன் கிடைக்காமல் விலக்கி வைக்கப்படுவோர் யார்? என்பதுதான். அந்த நிலைப்பாட்டை பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று முத்திரை குத்திவிட முடியாது.

இந்து வலதுசாரி சிந்தனையாளர்கள் பெரியார் மீது வெறுப்பைக் கக்குவது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. சொல்லப்போனால் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். பார்ப்பன ஆதிக்கத்தை சமரசமில்லாமல் பெரியார் எதிர்த்து நின்றாரே என்பதும், இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தின் மூலவேர் சமஸ்கிருத இந்துயிசம்தான் என்ற உண்மையை அவர் கண்டறிந்து விட்டாரே என்பதுதாம், அவர்களின் வெறுப்புக்கான காரணங்கள்.

வேடிக்கை என்னவென்றால், சில வலது சாரி அறிவுஜீவிகள், பெரியாரை அம்பேத்கருக்கு எதிராக நிறுத்தி, பெரியார் எதிர்ப்புக்கு களம் அமைக்க முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்த எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன், பெரியார் தேச விரோதி; அம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளர் என்கிறார். சுப்ரமணியசாமி, அம்பேத்கர் ‘மகரிஷி’; பெரியார் பிரிட்டிஷாரின் ‘அடிவருடி’ என்றார். தமிழ்நாட்டில் அய்.அய்.டி. யில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்துக்கு மத்திய அரசு தடை செய்தபோது, கடும் எதிர்ப்புகள் உருவாயின. அப்போது பா.ஜ.க.வைச் சார்ந்த எச். ராஜா, ‘இருவரையும் இணைத்துப் பேசுவதே தவறு’ என்றார். அதாவது பெரியார் தேச விரோதி, அம்பேத்கர் சுதந்திரப்போராட்ட வீரர். எப்படி இருவரையும் இணைக்க முடியும்? என்று கேட்டார்.

இந்து வலதுசாரி சிந்தனையாளர்களுக்கு அம்பேத்கர் மீது இவ்வளவு பாசம் பொங்கி வழிவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அம்பேத்கரைப் புகழ்ந்து கொண்டே தலித் மக்களை தங்களின் இந்துத்துவ ஆதரவாளர் களாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதே முதன்மையான காரணம். கடவுள் மறுப்பாளரான பெரியார் என்ற தலைவர் மீது இவர்களுக்கு நீங்காப் பகை. பகை உணர்வு இந்தியா என்ற நாட்டை எப்படிசெயற்கையாக கட்டமைத்தீர்கள் என்று பெரியார் எழுப்பிய கேள்வியோடு பிணைந்து நிற்கிறது.

பெரியாரும் – அம்பேத்கரும் பல தளங்களில் இணைந்தே நின்றார்கள். கல்வி அனைவருக்கும் பொதுவானது என்று வலியுறுத்தினார்கள். பெண்ணுரிமை; ஜாதி ஒழிப்பு; இப்படி எத்தனையோ பிரச்சினைகளைச் சுட்ட முடியும். இப்படிகூட சொல்ல முடியும் – இந்து மதத்தை புறக்கணிக்கக் கூறியதிலும் சரி, கோட்பாட்டு அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கியதிலும் சரி; அம்பேத்கர் பெரியாரைவிட தீவிரமாகவே இருந்தார்.

ஆனால் பெரியார், ‘இந்திய தேசியம்’ என்ற கருத்துருவாக்கத்தையே கேள்விக் குள்ளாக்கினார். இந்திய தேசியம் மதச் சார்பின்மையை புறந்தள்ளி ‘வகுப்பு வாதத்தை’ உள்ளடக்கியிருந்ததை அம்பலப்படுத்தினார். எனவே பெரியார் ‘தீண்டப்படாதவராகவும்’ தேச விரோதியாகவும், இப்போதும் பேசப்படுகிறார்.

இந்தக் கருத்தைப் பாருங்கள்:

“இந்து சமூகம் என்ற ஒன்றே கிடையாது. அது ஜாதிப் பட்டியல்களின் தொகுப்பு தான். உண்மையான இந்து என்று நம்பும் ஒவ்வொருவரும் – எலி, தனது ‘வளை’க்குள் பதுங்கி கிடப்பவர்கள் தான். மற்றவர்களுடன் தன்னை தொடர்புபடுத்திக் கொள்ள மறுப்பவர்கள். உண்மையான இந்து உணர்வு அவனுடைய ஜாதி உணர்வு என்பதாக மட்டுமே வெளிப்படுகிறது. இந்தக் காரணங் களால் தான் தங்களை ஒரு சமுதாயமாகவோ அல்லது தேசமாகவோ உருவாக்கிக் கொள்ள இந்துக்களால் முடியவில்லை. ஆனாலும் இந்தியர்கள் ஒரு தேசமாகவில்லை. அவர்கள் சிதைவுண்டு கிடக்கும் மக்கள் திரளாகவே இருக்கிறார்கள் என்ற உண்மையை பல இந்தியர்களால் ஒப்புக் கொள்ள முடியாமல் அவர்களின் தேசபக்தி தடுக்கிறது.”

சுப்ரமணியசாமியும், எச்.ராஜாவும் தங்களுக்கென வரையறுத்துக்  கொண்ட ‘தேச பக்தி’ வரையறைக்குள் பொருத்தினால் மேற்குறிப்பிட்ட  கருத்துகள் அப்பட்டமான ‘தேச விரோதம்’ தான். உண்மை என்ன தெரியுமா? மேலே நாம் எடுத்துக்காட்டிய கருத்துகள் இவர்கள் தேச விரோதிகளாக சித்தரிக்கும் பெரியார் மேற்கோள் அல்ல. இந்து வலதுசாரிகள் தலித் மக்களின் தலைவர் என்று திட்டமிட்ட உள்நோக்கத்துன் அடையாளப் படுத்தும் அம்பேத்கரின் கருத்துகள்தான் மேலே நாம் எடுத்துக் காட்டியிருப்பதாகும். இந்துக்களோ அல்லது இந்தியர்களோ ஒரு தேசத்துக்குரியவர்களாக ஒன்றுபட்டு விட்டார்கள் என்ற கருத்தை அம்பேத்கர் தனது மிகச் சிறப்பான ‘ஜாதி ஒழிப்பு’ நூலில் நிராகரிக்கிறார். அம்பேத்கரின் இந்த ஜாதி ஒழிப்புக்கான பேச்சைக் கேள்விப்பட்டு அந்த ஆங்கில உரையை அம்பேத்கரிடமிருந்து கேட்டுப் பெற்று தமிழில் நூலாக்கி, பெரியார் மக்களிடம் பரப்பினார். அம்பேத்கர் ‘ஜாதி ஒழிப்பு’க்கான உரையில் முன் வைத்த அதே வாதங்களைத்தான் இந்திய உபகண்டத்தி லிருந்து தமிழநாடு பிரிந்து செல்ல வேண்டும் என்ற தனது கோரிக்கைகளுக்கான நியாயங் களாக பெரியார் முன் வைத்தார். ஆனால், ‘இந்தியா என்று ஒரு தேசமே இல்லை’ என்று இந்திய தேசியத்தையே  பெரியார் கேள்விக்கு உட்படுத்தியதைத்தான் இந்து வலதுசாரிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

ஆனாலும் சுப்ரமணியசாமியைப் போல பெரியார் மீது எல்லோராலும் ‘வசைபாட’ முடியவில்லை. எனவே வேறு மொழிகளில் எழுதுகிறார்கள். அண்மையில் பி.ஏ. கிருஷ்ணன் என்ற எழுத்தாளர் ‘தி ஒயர்’ இணைய இதழின் கட்டுரையில் ‘அம்பேத்கர் உயரிய சிந்தனை யாளர்’ பெரியார் தெரு சண்டைக்காரர் என்று பதிவிட்டிருக்கிறார். தாராள இடதுசாரிகள் சிலரும் பெரியார் பிரிட்டிஷ் ஆட்சியின் விசுவாசி; இடைநிலை ஜாதியின் ஜாதி வன்முறைகளை தட்டிக் கேட்காதவர்; தலித் பிரச்சினைகளில் தேவையான அளவு கவனம் செலுத்தாதவர்; பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி அவருக்கு கவலை இல்லை என்றெல்லாம் எழுதுகிறார்கள். பெரியார் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா?

பெரியார் இனவாதம் பேசினாரா? அவர் ஒரு பாசிஸ்ட் ஆக செயல்பட்டாரா? தன்னுடைய இனமே உயர்வானது என்று பாரம்பரியப் பெருமை பேசியவரா? அல்லது ‘இன ஒதுக்கலை’ வலியுறுத்தியவரா? இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பெரியாரே பதிலளித் திருக்கிறார்.

1950இல் ‘தி இந்து’ ஆங்கில ஏடு வெளியிட்ட பெரியார் கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்:

“மறைந்த ஜெர்மனி நாஜித் தலைவரைப் போல நான் இனவாதத்தைப் பேசவில்லை. தென்னாட்டு மக்களை இனத்தினடிப்படையில் இங்கே யாரும் இரண்டு பிரிவாகப் பிரிக்கவும் இல்லை. இரத்தப் பரிசோதனை செய்து, இனவாதம் பேசவும் இல்லை. அது பிற்போக்குத் தனமானது மட்டுமல்ல; தற்கொலைக்கு சமம்” என்று பெரியார் எழுதினார். அதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி, தொழிற் சங்க உரிமைகளை ஒடுக்குவதிலும் இந்தியைத் திணிப்பதிலும் ஹிட்லர் ஆட்சி போல செயல்படுகிறது என்று ‘குடிஅரசு’ பத்திரிகையில் பெரியார் எழுதியிருக்கிறார்.

பெரியார் பேசிய ‘திராவிட’ அடையாளம் இனத்தின் மேலாதிக்கத்தையோ அல்லது, இன ஒதுக்கலையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல. உலகம் முழுமைக்கும் சமூகப் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளான மக்களை ஒரே குடையின் கீழ் திரட்டுவதற்கு அவர் பயன்படுத்திய குறியீட்டுச் சொல்தான் ‘திராவிடர்’ ஒரு கட்டத்தில் பாலஸ்தீனியர் களைக்கூட ‘அரபு திராவிடர்கள்’என்று அவர் குறிப்பிட்டார்.

தனி மனித வன்முறை, சமூக வன்முறைகளைக் கண்டிக்காதவர்கள், மாற்றுக் கருத்துகள் வரும்போது அது குறித்து விவாதத்துக்கே மறுப்பவர்கள், தேசம் அல்லது இனம் குறித்து தங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளவே முடியாது என்பதில் இறுக்கம் காட்டுகிறார்கள்தான். பெரியாரை பாசிஸ்ட் டுகளாக சித்தரிக்க முயலுகிறார்கள்; குற்றம் சாட்டுகிறவர்கள் தங்களை முதலில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

“மதத்தைவிட்ட (லவுகீக) பார்ப்பனர்கள் வேறு; புரோகித பார்ப்பனர்கள் வேறு என்று பிரித்துப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை” என்று அம்பேத்கரும் கூறியிருக்கிறார். இதை இனவாதமாக முத்திரை குத்திவிட முடியாது. அதிகார மய்யத்தில் ஆதிக்கம் செலுத்துவோரை நோக்கி எழுப்பப்பட்ட கேள்வி அது. ஒரு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தப் பிரிவினரால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை விளங்கிக் கூறுவதற்காகவும் அவர்களின் புரிதலுக்காகவும் பின்பற்றப்படும் ஒரு செயல் உத்தி. ஒடுக்கப்படும் ஒரு சமூக அமைப்பு யாருக்கு சாதகமாக செயல்படுகிறது என்பதை விளக்கும்போதுதான் பாதிக்கப்படும் மக்களிடம் புரிதலை உருவாக்க முடியும். அமெரிக்காவில் நடந்த சிவில் உரிமைப் போராட்டங்களில்கூட மால்கம் எக்ஸ் போன்ற தீவிரவாதிகள் மட்டுமல்ல; ஜேம்ஸ் பால்ட்வின், மார்ட்டின் லூதர் போன்ற மிதவாதிகள்கூட வெள்ளை இன மக்களைக் குறிக்க ‘வெள்ளை இன வாதம்’ என்ற கருத்தைப் பயன்படுத்தியிருக் கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கலுக்கு எதிராகப் போராடிய ஸ்டேவ்பிக் கோவையும் இதில் குறிப்பிடலாம். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், வெள்ளை இன மக்கள் அனைவரையும் இனவெறியர்கள் என்று குற்றம்சாட்டுவது அவர்களின் நோக்கமல்ல; மாறாக இனவாதக் கொள்கையின் பயன் யாருக்கு சாதகமாக இருக்கிறது. இந்த நிலை உருவானதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்துவதுதான். பெண்ணியவாதிகள்கூட பாலினப் பாகு பாட்டைக் குறிக்க ‘ஆணாதிக்கம்’ என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படித்தான் கூற முடியும். அதற்காக அப்படி கூறுகிறவர்கள்மீது ‘பெண் பாசிஸ்ட்’ என்று முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. (பார்ப்பனியம் என்ற கருத்தியல் சமூக ஒடுக்குமுறையை திணிக்கிறபோது அந்த கருத்தியலில் பயன் பெறுகிறவர்கள் பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறுவது எப்படி இனவாதமாகிட முடியும்? பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு அத்தகையப் பார்வை கொண்டதே ஆகும். பெரியார் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் பார்ப்பனரையே எதிர்த்ததால் அவர் இனவாதம் பேசினார் என்ற குற்றச்சாட்டுக்கான விளக்கம் இது – மொழி பெயர்ப்பாளர்)

பெரியார் பிரிட்டிஷ் ஆட்சியின் விசுவாசியாக இருந்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

‘சுதந்திரம்’, ‘காலனியம்’ என்பதற்கான உள்ளடக்கத்தை பெரியார் குறுக்கிக் கொள்ள விரும்பவில்லை. விரிந்த பார்வையில் அவற்றை அணுகினார். கிடைக்கப் போகும் சுதந்திரத்தால் பயனடையப் போவது யார்? விலக்கி வைக்கப் போகும் மக்கள் யார் என்ற கேள்வியை எழுப்பினார். சுதந்திர இந்தியா என்பது பார்ப்பன ஆட்சியாகவே இருக்கும் என்று அவர் உண்மையாகவே நம்பினார். பிரிட்டிஷ் ஆட்சி எந்த அளவுக்கு மோசமானதோ அதைவிட மேலும் மோசமானதாகவே ‘சுதந்திர’ ஆட்சி இருக்கும் என்று கூறிய பெரியார், மேலோங்கி நின்ற பார்ப்பன ஆதிக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்படி பார்ப்பன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தா விட்டால் சுதந்திர இந்தியா பார்ப்பன இந்தியாவாகவே இருக்கும் என்ற பெரியாரின் கருத்தை பிரிட்டிஷ் ஆட்சியே வேண்டும்; காலனிய ஆட்சியையே ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தமாகிட முடியாது. பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை கொள்ளையடிக் கிறார்கள் என்று பெரியார் பேசியிருந்தால் – மேல் ஜாதியினரோடு பெரியார் கைகோர்த் திருக்க முடியும். அவர் ‘தேச பக்தராகியிருப்பார்.’ பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தோடு அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொண்ட உள்நாட்டுப் பெரும் தொழிலதிபர்களான பனியாக்களையும் பெரியார் எதிர்த்தார் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். காலனிய எதிர்ப்புச் சிந்தனையாளர்களான ஃபிரான்ட்ஸ் ஃபேனன், அமில்கார் காப்ரல் காலனிய அதிகார வர்க்கத்தால் சுய லாபம் பெற்ற உள்ளூர் மேல்தட்டுப் பிரிவினரையும் எதிர்க்கும் அணுகுமுறையை பின்பற்றியிருக்கிறார்கள்.

பெரியார் பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து அவரை மதிப்பிடுகிறவர்கள், 1933இல் ‘புரட்சி’ ஏட்டைத் தொடங்கியபோது அவர் எழுதியதை படித்துப் பார்க்க வேண்டும்.

“வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு இன்று ‘புரட்சி’ வெளி வரவில்லை அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்து கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ‘புரட்சி’ தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ‘புரட்சி’ தோன்றியதல்ல. அதுபோலவே இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த ‘புரட்சி’ வெளிவரவில்லை.

சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண், பெண் அடங்களும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக ‘புரட்சி’ செய்யவே ‘புரட்சி’ தோன்றி யிருக்கிறது. அது உயிருள்ளவரையும் அதன் கடமையைச் செய்து கொண்டிருக்கும்”

– பெரியாரின் பார்வைக்கு அவர் பயன்படுத்திய வார்த்தைகளையே எடுத்துக் காட்டியிருக் கிறோம்.

பெரியார் சோஷலிசக் கொள்கையில் உண்மையான ஈடுபாடு கொண்டிருந்ததோடு சோவியத் ஒன்றியத்தின் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தார். பெரியாரிஸ்டுகளாக இருந்த பலர், காவேரி பாசனப் பகுதியில் நிலப் பிரபுக்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்கள். கீழவெண்மணியில் தலித் விவசாயக் கூலிகளை உயிருடன் எரித்த படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட கோபால கிருஷ்ண நாயுடு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் தொடர்புடை யவர்கள் பெரியார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்கள். “காலனிய ஆட்சி  விரைவிலோ அல்லது காலம் கடந்தோ தூக்கி எறியப்பட்டுவிடும். ஆனால் ஜாதி அமைப்பும் அதன் ஒடுக்குமுறையும் அவ்வளவு எளிதில் ஒழிக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக இருக்கிறது. ஆயிரமாயிரம் காலமாக இந்த அமைப்பு இறுகிப் போய் நிற்கிறது. இந்த ஜாதி அமைப்பை ஒழிக்காமல் பெறும் சுயராஜ்ய அரசாங்கத்தில் (ஆடினநசn ளுவயவந) ஜாதி முன்னைக் காட்டிலும் மேலும் வீரியமாக இயங்கும் என்பதே பெரியாரின் கருத்து. கம்யூனிச தத்துவத்தில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் ஜாதியை ஒழித்து விட்டாலே பாதி கம்யூனிசம் வந்து விடும் என்று வாதிட்டார். பெரியார் பிரிட்டிஷ் ஆட்சியின் விசுவாசி என்ற குற்றச்சாட்டுக்கு இதுவே நமது விளக்கம்.

ஜாதி வெறியோடு செயல்பட்ட இடை நிலை ஜாதிகளை பெரியார் எதிர்க்கவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

பார்ப்பனியத்தை சமரசமின்றி எதிர்த்தார் பெரியார். வேத சாஸ்திரங்களின் வழியாக பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்தின் ஆதிக்க நிலையில் இருத்திக் கொண்டதை வாழ்நாள் முழுதும் எதிர்த்தவர் பெரியார். இந்து மதத்தின் வழியாக பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட மேலாதிக்கம், ஜாதிய புனிதங்கள், ஆண்-பெண் அடிமைத்தனத்தை உறுதிப் படுத்திய சாஸ்திரங்கள், அதிகாரத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் அத்தனையையும் கேள்விக்குள்ளாக் கினார். பார்ப்பனர்கள் வழியாகவே பார்ப் பனியம் என்ற கருத்தியல் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல், சமுதாயம் உள்ளிட்ட பொது வெளிகளில் தங்களின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாக உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படாதவரை சமுதாய முன்னேற்றம் சாத்தியமில்லை என்றார் பெரியார். பெரியார் குறுகிய அடையாள அரசியலைப் பேசவில்லை. ஒட்டு மொத்த சமூகத்துக்கும் அவர் விடுதலையை சுயமரியாதையை பேசினார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இடைநிலை ஜாதியினரைவிட தலித் மக்களுக்கு மிகவும் முக்கியமானது என்று 1925இல் அவர் பேசினார். இந்தக் கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் மீது திணிக்கும் ஜாதி ஒடுக்கு முறையைவிட பார்ப்பன ரல்லாதார் தங்களுக்கிடையே பின்பற்றும் ஜாதியம் மிகவும் கொடூரமானது என்று தயங்காமல் கூறி வந்தார். ஜாதிய ஏற்றத் தாழ்வு சமூகக் கட்டமைப்பில் தங்களுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஜாதியை விட, தன்னை மேலானவர்களாகக் கருதும் இடைநிலை ஜாதியை கடுமையாகக் கண்டித்தார். அவர்கள் நடத்திய மாநாடுகளிலேயே இடைநிலை ஜாதியினர் ஜாதிப் பெருமை கோருவதை சாடினார். பார்ப்பனரல்லாத மேல் ஜாதியினர் நலனுக்காக பெரியார் கவலைப்பட்டார் என்பது பெரியாரைப் பற்றி சரியான புரிதல் இல்லாத மேலோட்டமான பார்வை. ஜாதிய ஒடுக்கு முறைக்கான தத்துவம் – பார்ப்பனியத்திலிருந்தே வருகிறது. ஜாதி அமைப்பில் பெரும் பயனடைகிறவர்கள் பார்ப்பனர்கள் என்று பெரியார் கூறியதாலேயே இடைநிலை ஜாதியினரின் தலித் எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர் ஆதரித்தார் என்று அர்த்தமாகிவிடாது. ‘ஜாதி ஒழிப்பு’ நூலில் அம்பேத்கர் முன் வைத்த கருத்தை பெரியார் முழுமையாக அப்படியே ஏற்றுக் கொண்டார்.

“ஜாதி அமைப்பில் அனைவரும் அடிமைகள். ஆனால் அனைத்து அடிமைகளும் சமமான அந்தஸ்துக்கு உரியவர்கள் அல்ல” என்பதே அம்பேத்கர் கருத்து. அதுவே பெரியாரின் கருத்து. குறிப்பாக தலித் மக்களுக்காகப் பெரியார் போராடவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்மையல்ல. தீண்டாமைக்கு எதிராக மாநாடுகளை நடத்திய பெரியார், தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து அந்த மக்கள் வெளியேற வேண்டும் என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் தந்தார். பல நேரங்களில் இடைநிலை ஜாதியினரை எதிர்த்து தலித் மக்கள் பக்கம் நின்று குரல் கொடுத்திருக்கிறார். உதாரணமாக 1957இல் நடந்த முதுகுளத்தூர் கலவரத்தைக் கூறலாம். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக ஆதிக்க ஜாதியாக இருந்த தேவர்கள், தலித் பிரிவினரான ‘பள்ளர்’களை தங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியதை எதிர்த்தார்கள்; மோதல் ஏற்பட்டது.  பெரியார், தேவர்களுக்கு எதிராக ‘பள்ளர்கள்’ பக்கமே நின்றார். ஜாதிக் கலவரத்தைத் தூண்டிய முத்துராமலிங்க தேவரை ‘சமூக விரோதி’ என்று கூறி அவரை கைது செய்ய வேண்டும் என்றார். தேவரை கைது செய்வதற்கு காமராசர் ஆட்சிக்கு ஆதரவாக நின்றார். இத்தனைக்கும் முத்து ராமலிங்க தேவர், அவருடைய சமூகத்தில் மிகப் பெரும் செல்வாக்குள்ளவர்; ‘கடவுளை’ப்போல் கருதப்பட்ட தலைவர். அந்த சமூகத்தின் ஆதரவை இழந்து விடுவோம் என்று தெரிந்தே பெரியார் கொள்கை வழி நின்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.

‘மேல் தட்டு’ பார்ப்பனர்கள் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புத் தத்துவத்தை கடுமையாக எதிர்க்கிறார்கள். இது நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. பெரியாரின் சமூக மாற்றத்துக்கான செயல் திட்டங்களுக்கு இந்து வலதுசாரிகளிடமிருந்தோ அவர்களின் தூதுவர்களிடமிருந்தோ பெரியாருக்கு நற்சான்றிதழ் தேவை இல்லை. பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பு தத்துவம் மற்றும் அவரது மொழி தொடர்பான அரசியலை திராவிட அறிவு ஜீவிகள் மட்டுமல்ல, சமூக மாற்றத்தில் கவலை உள்ள அனைவருக்குமே தெளிவான புரிதல் வேண்டும் என்பதற்காக அதன் நியாயங்களை எடுத்துரைக்க விரும்புகிறோம்.

சுயமரியாதை பறிக்கப்பட்டு, அடிமை நிலையில் தள்ளப்பட்டதற்கான காரணங்களை விளிம்பு நிலை மக்களிடம் விளக்கி ஒடுக்குமுறை களிலிருந்து விடுவித்துக் கொள்ளும் சமுதாய மாற்றத்துக்கான போராட்டத்தில் அவர்களை தீவிரமாக பங்கேற்கச் செய்வதே பெரியாரின் சமூக சீர்திருத்தத்திற்கான அடித்தளம். உலகம் முழுதும் சிதறிக் கிடந்த விளிம்பு நிலை மக்கள் பிரச்சினையில் பெரியார் காட்டிய ஈடுபாடு மிகவும் விரிவானது; ஆழமானது. அந்த மக்களின் வரலாறு, சமூகப் பொருளாதார நிலைகளை அவர் அறிந்து வைத்திருந்தார். அவர்களின் உலகக் கண்ணோட்டம் மற்றும் மொழி குறித்த புரிதல் பெரியாருக்கு இருந்தது. விளிம்பு நிலை மக்களின் ‘பொதுப் புத்தி’யில் திணிக்கப்பட்டு படிந்து கிடந்த பழமைவாத கருத்துகளை கடுமையாக விமர்சித்து அவர்களை அணி திரட்டினார். தங்களுக்கு மேலான பிரிவினரிடம் பணிந்து வாழ வேண்டும். அதுவே சிறந்த பண்பு என்ற நடுத்தர வர்க்கம், விளிம்பு நிலை மக்களின் ‘பொது புத்தியில்’ திணித்த கருத்தை அவர் கொண்டாடவில்லை; மாறாக எதை எதிர்த்தார்.

எல்லாவற்றுக்கும் மேம்பட்ட சக்தி என்றெல்லாம் கூறப்படுகிற கருத்தையும் அவர் திணிக்கவில்லை. மாறாக பகுத்தறிவு கருத்துகளைக் கூறி மக்களை அணி திரட்டினார். பெர்னாட்ஷா, பெட்ரண்ட் ரசல், இங்கர்சால் போன்ற பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளை வெகுமக்களிடம் கொண்டு சென்று அவர்களை விழிப்படையச் செய்தார். விளிம்பு நிலை மக்களிடம் அரசியல், சமூக வரலாறுகளை எடுத்துக் கூறி, இந்து மதத்தின் ஜாதி ஏற்றத் தாழ்வுக்கான காரணங்களை அடுக்கி, ஆன்மீகத்தில் மூழ்கி விடாமல் விழிப்படைய வைத்தார்.

பார்ப்பனரல்லாத உயர்ஜாதி தமிழ் அறிஞர்கள், தமிழின் பழம் பெருமை மோகத்தில் மூழ்கிக் கிடக்காமல், அதிலிருந்து விலகி, வெகு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் சமூக அனுபவங்களை உணர்ந்து, அவர்களுக்கான அறிவார்ந்த செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்றார். மக்களை சிந்திக்கவும் சீர்திருத்தவுமே மொழி பயன்பட வேண்டும் என்பது அவரது கருத்து.

தத்துவம் குறித்த பார்ப்பனக் கருத்தை அவர் நிராகரித்தார். தத்துவச் செயல்பாடுகள் பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. தத்துவ விற்பன்னர்களாக பார்ப்பனர்கள் இருக்கலாம். அதற்காக மக்களைவிட அவர்கள் உயர் வானவர்கள் அல்ல என்றார். பார்ப்பனியம் கட்டமைத்த சொல்லாடல் களிலிருந்து அவர் விலகி நின்றார். அவரது இராமாயணம், மகாபாரத எதிர்ப்புகளை இந்த சூழலோடுதான் பொருத்திப் பார்க்க வேண்டும்.

இந்தி, சமஸ்கிருதத்தை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கிய பெரியார், வெகு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு அவை தடையாக இருப்பதை கண்டித்தார். பழம் தமிழ்ப் பெருமை பேசுவதை எதிர்த்தார்.  தமிழ் இலக்கியங்களில் பெண்ணடிமை கருத்துகள் இருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் அறிவியல் மொழியாக வளர வேண்டும் என்று வலியுறுத் தினார். ஒரு கட்டத்தில் ஆங்கிலத்தையே பயன்படுத்த வலியுறுத்தினார். இத்தாலி மார்க்சிய சிந்தனையாளர் கிராம்ஷி கூறியதுபோல் ஏற்கனவே படிந்து கிடந்த பொதுப் புத்தியிலிருந்து விடுபட்டு “புதிய பொது சிந்தனை” உருவாக வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்தது.

இவையெல்லாம் பெரியாருக்கு எப்படி சாத்தியமாயிற்று என்றால், சுய விமர்சனத்துக்கு தன்னை உட்படுத்திக் கொண்டதுதான் என்று கூற முடியும். தனது வரலாறு, தனிப்பட்ட பண்புகள், அறிவார்ந்த செயல்பாடுகள் அதிகாரத்தில் தனதுநிலை, ஆதிக்க ஜாதியினர், விளிம்பு நிலை மக்களிடம் கொண்டிருந்த உறவுகளை தொடர்ந்து மீளாய்வுக்கு உட்படுத்தி வந்தவர் பெரியார். வெகுமக்களின் பொது புத்தியில் மலிந்து கிடந்த முரண்பாடுகளை வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து தனது எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டே இருந்தார். இந்த போக்குகள்தான் பெரியாரின் தொடர்ச்சியான  செயல்பாடுகளை சாத்தியப் படுத்தியது.

இறுதியாக ஒன்றைக் கூற வேண்டும் – பெரியார் எழுத்துப் பேச்சுகள் 40 தொகுதிகளாக வெளி வந்திருக்கிறது. வெவ்வேறு சூழல்களில் அவர் வெளியிட்ட கருத்துகளில் சில வரிகளை மட்டும் வெட்டி எடுத்துப் போட்டு – இதுதான் பெரியார் என்று காட்ட முற்படுகிறார்கள். எந்த சிந்தனையாளரையும் எந்த சூழலில் அவரது கருத்துகள் வெளிப்பட்டன என்பதை ஒதுக்கிவிட்டு மேற் கோள்களை மட்டும் எடுத்துக் காட்டி சிறுமைப்படுத்திவிட முடியும். நரேந்திர மோடி அம்பேத்கரை ‘நவீன மனு’ என்று வர்ணிக்க முடிகிறது என்றால், அது, இப்படி வரலாற்றுச் சூழலிலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சிதான். பெரியாரின் ‘மேற்கோள்களை’யும் இப்படித் தான் பெரியாருக்கு எதிராக பயன்படுத்து கிறார்கள்.

பெரியாரின் சிந்தனைகளைத் தாங்கிய தரமான ஆங்கில நூல் இல்லாமல் போனதும் இத்தகைய திரிபுகளுக்கு இடமளித்து விடுகிறது பெரியாரின் சிந்தனைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு

சர்வதேச சமூகத்தைச் சென்றடையும்

முயற்சிகள் இனியாவது தொடங்கும் என்று நம்புவோம்.

(கட்டுரையாளர்கள் : கார்த்திக் ராம் மனோகர், கல்கத்தா சமூக விஞ்ஞான ஆய்வு மய்யத்தில் துணை பேராசிரியர்; எஸ். ஆனந்தி சென்னை வளர்ச்சி ஆய்வு மய்யத்தின் இணை பேராசிரியர்.)

முசோலினியின் இனவாதத்தைக் கண்டித்தவர் பெரியார்

பெரியார், ‘இந்திய தேசியம்’ என்ற கருத்துருவாக்கத்தையே கேள்விக்குள்ளாக்கினார்.

கிடைக்கப் போகும் சுதந்திரத்தில் பயனடையப் போவது யார்?

இந்து சமூகம் வெறும் ஜாதிப் பட்டியல்தான் என்றார் அம்பேத்கர்

பெரியார் குறுகிய அடையாள அரசியலைப் பேசவில்லை தத்துவ செயல்பாடுகள் பார்ப்பன அறிவு ஜீவிகளுக்கு மட்டுமே உரித்தானது அல்ல!

நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்

You may also like...