பெண் போராளிகளின்அறைகூவல்
திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த அக்.7ஆம் தேதி சென்னையில் நடத்திய நிகழ்வு – ஜாதி ஒழிப்பு முயற்சிக்கான புதிய முன்னெடுப்பு என்றே கூற வேண்டும். ஜாதி ஒழிப்புக்கு முன்னுரிமை தந்து எழுதி வரும் பத்திரிகையாளர் ஜெயராணி, ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தைத் தயாரித்து கையால் மலம் எடுக்கும் அவலத்தை பொது வெளியில் விவாதத்துக்குள்ளாக்கிய திவ்யபாரதி, ஜாதி வெறியர்களின் கொலை வெறிக்கு காதலித்து கைப்பிடித்த காதலரை பறிகொடுத்தும், ஜாதி ஒழிப்புக் களத்தில் அர்ப்பணித்து நிற்கும் உடுமலை கவுசல்யா, கதிராமங்கலம், நெடுவாசலில் மக்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களை எதிர்த்து மக்களிடம் துண்டறிக்கை வழங்கியதற்காக குண்டர் சட்டத்தை சந்தித்த வளர்மதி, ஜாதி கடந்த பொது வாழ்வகத்தை உருவாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை அவர்கள் மீதான ஜாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து தீரத்துடன் போராடி வரும் மக்கள் மன்றத் தோழர் மகேசு, பெண்கள் சந்திப்பு, குழந்தைகள் பழகு முகாம் என்று ஓயாது பெரியாரியலைப் பரப்பி வரும் ஆசிரியர் சிவகாமி இவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் பேச வைத்த நிகழ்வு அது.
ஜாதி ஒழிப்பு இனி இளைய தலைமுறையை நோக்கியே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற புரிதலோடு ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்று இளைஞர்களைத் திரட்டி பரப்புரை இயக்கங்களை நடத்தி வரும் அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம். அந்த இளைஞர் இயக்கத்தின் அடுத்த கட்ட நகர்வு தான் பெண் போராளிகளுக்கான மேடை!
இளைஞர்களை நோக்கி இரண்டு முழக்கங்களை முன் வைத்தது இந்த பொது மேடை. ஜாதி சங்கங்களை புறக்கணியுங்கள் என்பது ஒன்று; சுய ஜாதிப் பற்றிலிருந்தும், சுய பாலின உணர்விலிருந்தும் விடுபட்டு வெளியே வாருங்கள் என்பது மற்றொன்று.
ஜாதி ஒழிப்புக்கான சமூக மாற்றத்தில் இந்த இரண்டு கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை சமூகவியல் ஆய்வாளர்களால் நிச்சயமாக உணர முடியும். இடஒதுக்கீட்டின் கீழ் பெற்ற கல்வி; நவீனத்துவத்தின் வளர்ச்சி; தகவல் தொடர்பு சாதனங்களின் தாக்கம் இளைய சமுதாயத்தில் புதிய சிந்தனைகளை விதைத்து வருகிறது என்பது உண்மை. அதன் காரணமாக தங்கள் வாழ்க்கைத் துணைவர்களை ஜாதி கடந்து இவர்கள் தேடுகிறார்கள். ஆனால் ‘ஜாதி கடப்பது’ ஜாதிய உறவுகளில் பாரம்பரிய இழுக்கை ஏற்படுத்தி விடும் என்ற உணர்வில் ஊறிப் போய் நிற்கும் மூத்த தலைமுறை – இந்த இளைய தலைமுறையின் மாற்றத்தை ஏற்கவோ, அங்கீகரிக்கவோ மறுக்கிறது. தலைமுறை இடைவெளி தலைமுறைகளுக்கான மோதலாக உருவெடுத்து நிற்கிறது. இந்த வரலாற்றுச் சூழலில் இளைய தலைமுறையிடம் இயல்பாக உருவாகும் முற்போக்கான மனமாற்றங்களை மடைமாற்றி ஜாதி வெறிக்குள் மீண்டும் அவர்களை மூழ்க வைப்பதற்கு ஜாதி சங்கங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றன. இந்த ஜாதி சங்கத் தலைவர்களின் அரசியல் ‘அறுவடை’க்கு, ஜாதி உணர்வு கூர் தீட்டப்படுகிறது. இந்த சூழ்ச்சி வலைக்குள் சிக்கிடாமல் தற்காத்துக் கொள்ள இளைஞர்களுக்கு ‘சுயஜாதி மறுப்பும்’, ‘ஜாதியப் பெருமித எதிர்ப்பும்’ அவசியமாகிறது.
ஜாதிகளைக் கடந்த ஒரு சமுதாய வாழ்க்கை சமத்துவம் – சுயமரியாதை என்ற பண்பாடுகளை உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கையை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு இளைஞரும் அதுபெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் ஜாதி ஒழிப்பு – பெண்ணுரிமை கோட்பாடுகளை ஏற்று வாழத் தொடங்கி விட்டால் அடுத்தடுத்த சமூக மாற்றங்களை அது விரைவாக்கிவிடும் என்று நாம் உறுதியாக கூற முடியும்.
பொது மேடையில் பேசிய போராளிப் பெண்கள் அனைவருமே ‘கருப்பு-சிவப்பு-நீலம்’ என்ற வண்ணங்கள் அடையாளப்படுத்தும் தத்துவங்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார்கள்.
இந்த ‘வண்ணங்களின்’ ஒருங்கிணைப்பு இன்றைய வரலாற்றுத் தேவை. அதற்கான புதிய பாதைக்கு வழி திறந்துவிட்டிருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொது மேடை!
இருபால் இளைஞர்களின் இணைந்த ஜாதி ஒழிப்புப் பயணத்தை அடுத்தடுத்து முன்னெடுப்பதில்தான் ஜாதி ஒழிப்புக்கான வெற்றிப் பாதை செப்பனிடப்படும்.
நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்