ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளா? – பேரா. அ. மார்க்ஸ்

“ஆகஸ்ட் 25லிருந்து தினசரி 15,000 முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து தப்பி ஓடி வரு கின்றனர்” என ஐ.நா. அவையின் மனித உரிமை கவுன்சில்; (UNHRC ) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் பத்து நாள்களில் சுமார் 1,50,000 பேர் தப்பி ஓடி வந்துள்ளனர்.

சென்ற ஆகஸ்ட் 24 அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salva- tion Army – ARSA ) என்னும் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியதைச் சாக்காகக் கொண்டு அம்மக்கள் மீதான இன்றைய இராணுவத் தாக்குதல் தொடங்கியது. அராக்கன் படையின் தாக்குதல் மற்றும் எதிர்தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும்  கொல்லப் பட்டதாகச் சொல்லப்பட்டது. அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. பெரியளவில் முஸ்லிம் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. இராணுவத்தின் தாக்குதலின் விளைவாக அவர்கள் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு அஞ்சித் தப்பி ஓடி வரும் அப்பாவி மக்களையும் இராணுவம் சுட்டுத் தள்ளிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. இதுவரை கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப் பட்டதாகத் தெரிகிறது. தரை வழி தவிர கடல் வழியாகவும் இம்மக்கள் தப்பி ஓடி வருகின்றனர். பாதுகாப்பற்ற கடல் பயணத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் மரணித்த செய்திகளும் வந்துள்ளன.

ரோஹிங்யா தீவிரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்கிறார்கள் எனவும், தமது கிராமங்களைத்தாமே கொளுத்திக் கொள்கிறார்கள் எனவும் மியான்மர் இராணுவம் குற்றம் சாட்டுவதை ரோஹிங்யா மக்களும் பன்னாட்டு மனித உரிமைப் போராளிகளும் கடுமையாக மறுத்துள்னர். ஐ.நா. அதிகாரி ஒருவர் அங்கு நடப்பது “மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்” என்று கூறியுள்ளார். ‘உலகில் மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்’ என ஐ.நா. மனித உரிமை அமைப்பு இம்மக்களை வரையறுத்துள்ளது.

பதவியில் இல்லாதபோதும் மியான்மரில் இன்று பெரிய அளவில் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளவரும், ஜனநாயக தேவதையாகக் கொண்டாடப்படுபவரும், சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஆங் சான் சுய்கி கடைசி வரை மௌனம் காத்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்ற பின் இறுதியாக வாயைத் திறந்தார். “மனித உரிமைகள் மீறப்படுவதாலும், ஜனநாயகப் பாதுகாப்புகள் அற்றுப் போவதாலும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி எங்களுக்கு நிறையவே தெரியும்” எனக் கூறியது தவிர அவர் வேறேதும் பெரிதாகச் சொல்லவில்லை.

இது ஒருபுறம் இருக்க பா.ஜ.க. அரசும் பரிவார அமைப்புகளும் தொடர்ந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது வெறுப்பை பரப்பிக் கொண்டே இருந்தன. இங்குள்ள ரோஹிங்யா அகதிகளை வெளியேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டங்களை எல்லாம் நடத்திக் கொண்டிருந்தன.

ரோஹிங்யா முஸ்லிம்கள் உட்பட சட்ட விரோமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ள அனைத்து வெளி நாட்டவரையும் வெளியேற்றப் போவதாக சென்ற மாதம் உள்துறை துணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது 40,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 16,000 பேர்களுக்கு துன்புறுத்தப்படுதல், போதிய காரணமின்றிக் கைது செய்யப்படுதல் போன்றவற்றால் இடம் பெயர நேரிட்டவர்கள் என ஐ.நா. அவையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் பதிவு செய்து அடையாள அட்டையும் வழங்கி யுள்ளார். மற்றவர்களுக்கும் இப்படி அடையாள அட்டை வழங்கும் நிலை உள்ளது. இது குறித்து கேட்டபோது ரிஜிஜூ, “அவர்கள் பாட்டுக்குப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.அதை எங்களால் தடுக்க முடியாது.ஆனால் அகதிகளுக்கான ஐ.நா. உடன்பாட்டில் இந்தியா இதுவரை கையெழுத்திட வில்லை” என அலட்சியமாகப் பதிலளித்தார். அகதி களுக்கான ஐ.நா. உடன்பாட்டில் நாம் கையெழுத்து இடாததால் ஐ.நா. வழங்கியுள்ள அடையாள அட்டையை வைத்திருந்தாலும் அவர்களை நாங்கள் வெளியேற்றுவதை யாரும் தடுக்க முடியாது என்பது இதன் பொருள்.

இந்தியாவுக்கு என தேசிய அளவிலான ஒரு அகதிகள் கொள்கை கிடையாது. அகதிகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தில் அது கையெழுத்திடவும் இல்லை. இதன் விளைவாக அகதிகளைக் கையாள்வதில் அது ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்கிறது.திபெத்திய அகதிகளை ஒரு மாதிரியாகவும் நடத்த முடிகிறது. ராஜீவ் கொலையை ஒட்டி கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஈழத் தமிழ் அகதிகள் கட்டாயமாக போர் நடந்து கொண்டிருந்த இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.

துன்புறுத்தப்பட்டு, தங்களின் சொந்த நாட்டில் வாழ முடியாமல் இவ்வாறு இடம் பெயர்ந்தவர்களைப் பொருத்த மட்டில் அவர்களை அகதிகளாகத்தான் கருத வேண்டுமே ஒழிய ‘சட்ட விரோதக் குடியேறிகள்’ (illegal immigrants ) எனச் சொல்வது அறமுமல்ல, வழமையுமல்ல. மனித உரிமைப் பிரச்சினைகளில் இந்தியா எப்போதும் பன்னாட்டளவில் மிகவும் அறக்கேடாகத்தான் நடந்து வருகிறது. உலக அளவிலான மனித உரிமை தொடர்பான உடன்பாடுகளில் அது அவ்வளவு எளிதாகக் கையெழுத்திட்டு விடுவதில்லை. இப்படி அகதிகள் தொடர்பான உடன்பாட்டில் இந்தியா கையொப்பம் இடாமல் இருப்பது மிகவும் கண்டனத் துக்குரியது என்பதை நான் என் எழுத்துக்களில் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறேன்.

எனினும் சில நேரங்களில் இப்படியான உடன்பாடுகளில் கையொப்பம் இடாவிட்டாலும் சர்வதேச வழமைகளைக் கடைபிடிப்பது என்பது எழுதப்படாத ஒரு ஒப்பந்தமாக இன்று நடைமுறையில் உள்ளது. அப்படியான ஒன்றுதான் அகதிகள் குறித்த “திருப்பி அனுப்பாக் கொள்கை”. அதாவது அகதிகளாக வந்தவர்களைத் திருப்பி அனுப்பக்கூடாது. இந்தியா இதை ஏற்க மறுப்பது குறித்து ஐ.நா.அதிகாரியைக் கேட்டபோது அவர், “principle of non-refoulement is considered as part of customary international law and binding on all states whether they have signed the Refugee Convention or not ” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.  அதாவது ஐ.நா. அவையின் அகதிகள் உடன்பாட்டில் ஒரு நாடு கையெழுத்து இட்டாலும் இடாவிட்டாலும் ‘திருப்பி அனுப்பாக் கொள்கை’ என்பது ஒரு சர்வதேசச் சட்ட வழமை என்பது இதன் பொருள். ஆனால் மோடி அரசு இது குறித்தெல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. திருப்பி அனுப்புவதில் மாற்றமில்லை எனவும் வங்க தேசத்துடனும் மியான்மருடனும் இது குறித்துப் பேச இருப்பதாகவும் ரிஜிஜூ கூறுகிறார்.

மியான்மரைப் பொருத்தமட்டில் நீண்டகால இராணுவ ஆட்சிக்குப் பின் ஜனநாயகத்தை நோக்கி திரும்பிக் கொண்டுள்ள இந்நிலையில் உருவாகும் புதிய அரசு முஸ்லிம்கள் இல்லாத அரசாக இருக்க வேண்டும் என நினைக்கிறது. தனது பதினோரு இலட்சம் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்கப் போவதில்லை என்பதில்அது உறுதியாக உள்ளது. அவர்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்றே அது சொல்லி வருகிறது. வெளியேறியவர்கள் திரும்பி வந்தால் அவர்கள் குடியுரிமை உள்ளவர்களா எனக் கடும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுபவர் எனவும் அது சொல்லி வருகிறது.

முஸ்லிம் வெறுப்பையே மூலதனமாகக் கொண்டு அரசியல் நடத்தும் பா.ஜ.க., ரோஹிங்யா முஸ்லிம்களை தன் வெறுப்பு அரசியலுக்குப் பலி யாக்குவதில் இங்கு உறுதியாக உள்ளது. இது குறித்த செய்திக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவவனம் இன்றைய மோடி அரசை ஒரு “இந்து தேசியவாத அரசு” என அடையாளப் படுத்துவது குறிப்பிடத்தக்கது. (Reuters, Aug14, 2017 )

நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்

You may also like...