பெரியார் இயக்கத்தின் மீதான அவதூறுகளைத் தகர்க்கும் ஆய்வு

“நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்” என்ற பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் எழுதியுள்ள வரலாற்று ஆய்வு நூல், திராவிட இயக்கம் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது.

28.12.1937 அன்று அன்றைய தஞ்சை மாவட்ட நீடாமங்கலம் கிராமத்தில், “தென் தஞ்சை ஜில்லா காங்கிரசின் மூன்றாவது அரசியல் மாநாடு” ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் தலைமையில் நடந்த போது, ‘ஜாதி மதபேதமின்றி’ அனைவரும் விருந்துண்ண வரலாம் என்ற ‘சமபந்தி’ உணவுக்கான அழைப்பை ஏற்று மாநாட்டை வேடிக்கைப் பார்க்க வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் பந்தியில் சாப்பிட அமர்ந்தனர். மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் தூண்டுதலின்பேரில் அவர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே கடுமையாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அடுத்த நாள் அவர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கும் தகவல் தரப்பட்டு அங்கும் அவர்கள் தாக்கப்பட்டனர். மரத்தில் கட்டி வைத்து அடித்து சாணிப் பாலை வாயில் ஊற்றி, மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்துப் போய் அவமானப்படுத்தப்பட்டனர். ‘தீண்டப்படாத’ முத்திரை குத்தப்பட்ட 20 தோழர்கள் இந்த நிலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இதில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தேவசகாயம், இரத்தினம், ஆறுமுகம் என்ற மூன்று தோழர்கள், இந்த மாநாட்டை தனது சொந்தப் பொறுப்பில் முன்னின்று நடத்தியவர் நீடாமங்கலம் பெருநிலக்கிழாரும் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான டி.ஜே.பி. சந்தான ராமசாமி உடையார்.

ஆதிக்க ஜாதியினரின் தூண்டுதலில் நிகழ்த்தப்பட்ட ஜாதிய ஒடுக்குமுறை கொடுமைகளை எதிர்த்து முதன்முதலாக குரல்கொடுத்தது சுயமரியாதை இயக்கம்தான். ‘விடுதலை’ நாளேடு இதை முதன்முதலாக அம்பலப்படுத்தி கண்டனக் குரல் எழுப்பியது. பிறகு சுயமரியாதை இயக்கத்தின் ‘குடிஅரசும்’ இணைந்து கொண்டது. 6 மாத காலம் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுதும் பேசப்படும் பிரச்சினையாக இதை மாற்றியது சுயமரியாதை இயக்கம். வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ‘தீண்டப்படாத’ தோழர்களுக்கு பாதுகாப்பை யும் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் அளித்தனர்.

நீடாமங்கலம் – சுயமரியாதை இயக்கத்தின் கோட்டையாகத் திகழ்ந்த ஊர். இந்த ஊரில் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தவர்களில் ஒருவர் நீடாமங்கலம் அ. ஆறு முகம். உள்ளூரில் சுயமரியாதை இயக்கத்தின் செல்வாக்குப் பெற்றவராக இருந்தவர். ‘சமதர்ம சங்க’த்துக்கும் அவரே தலைவர். கிராம முன்சீபாகவும், யூனியன் போர்டு தலைவராகவும் பல ஆண்டுகாலமிருந்தவர். நீடாமங்கலத்தில் பெரும் நிலக்கிழார்களாகவும், ஜாதிய ஒடுக்கு முறைகளுக்கு காரணமாக இருந்தவருமான உடையார் சமூகத்தை எதிர்த்து நீடாமங்கலம் சுயமரியாதை இயக்கம் போராடியது. தேர்தல் நிதி திரட்ட ஏ.எஸ்.பி.ஆர். உடையார் வீட்டுக்கு பட்டேல், சத்தியமூர்த்தி, சர்தார் வேதரத்தினம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் வந்தபோது உடையாரின் ஜாதி வெறியைக் கண்டித்து சுயமரியாதை இயக்கம் கருப்புக் கொடி காட்டி போராடியது. கோயில் தேர்த் திருவிழா டி.ஜெ.பி.எஸ். உடையார் தலைமையில் நடந்தபோது தேரின் மீது காங்கிரஸ் கொடி பறக்க விட்டதை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதற்காக சுயமரியாதை இயக்கத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு மன்றத்தில் தீர்ப்பு சுயமரியாதை இயக்கத்தினருக்கு சாதகமாகவே வந்தது. நீடாமங்கலம் ஆறுமுகம் யூனியன் போர்டு தலைவராக இருந்தபோது பிணம் எரித்தல், பறை அடித்தல் தொழிலை செய்து வந்த பாவாடை என்ற தாழ்த்தப்பட்ட தோழரை போர்டு உறுப்பினராக்கினார். போர்டு கூட்டங்களில் ஏனைய ஆதிக்க ஜாதி உறுப்பினர்களோடு சமமாக அமர்ந்தார் பாவாடை. நீடாமங்கலத்துக்கு மின் இணைப்பு வந்தபோது தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு களுக்கு மின் இணைப்பு தர முன்னுரிமை தரவேண்டும் என்று வலியுறுத்தி நிறைவேற்றியவர். காங்கிரஸ்காரர்களின் ஜாதி வெறியை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தினர் நடத்திய தொடர் போராட்டங்களால் ஆத்திரமடைந்த டி.ஜெ.பி.எஸ். உடையார், சுயமரியாதைக்காரர்களை எங்குப் பார்த்தாலும் வெட்டுங்கள் என்று தனது ஆட்களுக்கு உத்தர விட்டார். இந்த மிரட்டலுக்குப் பிறகு உடையார் வீட்டு வாசல் வழியாக அ. ஆறுமுகம் தனது குதிரை வண்டியில் செல்லும் போதெல்லாம் வண்டியிலிருந்து இறங்கி உடையார் வீட்டின் வாசல் முன் நின்று அங்கிருந்து அந்த வீதியைக் கடக்கும் வரை நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் மாநாட்டை நடத்திய ஏ.எஸ்.பி. உடையாரும், கொலை மிரட்டல் விடுத்த டி.ஜெ.பி.எஸ். உடையாரும் சகோதரர்கள்.

நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் சாப்பாட்டு பத்தியில் நிகழ்ந்த ஜாதிய ஒடுக்கு முறையை முதன்முதலாக அம்பலப்படுத்திய ‘விடுதலை’ மீது வழக்கு தொடரப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் இராஜகோபாலாச்சாரி.

காங்கிரஸ் மாநாட்டில் மதிய உணவு பரிமாறப்பட்டபோது எல்லோரும் சாப்பிட வரலாம் என்று  ஒலி பெருக்கியில் 2, 3 முறை அழைப்பு விடுவிக்கப் பட்டதால்தான் தாழ்த்தப்பட்ட தோழர்கள் பந்தியில் சாப்பிட உட்கார்ந்தனர். அவர்கள் சாப்பிட உட்கார்ந்த வுடன் மாநாட்டை நடத்திய டி.கே.பி.எஸ். உடையார் உத்தரவின்பேரில் அவரது ஏஜண்டான சபாபதி உடையார், “ஏண்டா, பள்ளப் பயல்களா, உங்களுக்கு இவ்வளவு ஆணவமா?” என்று கேட்டு பக்கத்தில் கிடந்த சவுக்குக் கட்டையை எடுத்து அம்மூவரையும் அடித்தார். போலீசார் வந்து அவர்களைக் காப்பாற்றினர். அடிபட்டவர்களில் ஒருவரான ரெத்தினம் வலி தாங்க முடியாமல் வெள்ளாற்றில் விழுந்து அக்கரை ஏறித் தப்பினார். மற்றவர்களும் வெள்ளாற்றுக்கு வடபுறம் கும்பகோணம் சாலையில் இருந்த ஒரு நாடகக் கொட்டகையில் பாதுகாப்புக்காக ஒளிந்து கொண்டனர்.

பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏனைய ‘தீண்டப்படாத’ தோழர்களும் பந்தியை விட்டு வெளியேறினர். ஆனாலும் அடுத்த நாள் பண்ணைக்கு வேலைக்கு வந்தபோது அனுமந்த புரம் பண்ணை ஏஜன்ட் கிருஷ்ணமூர்த்தி அய்யர் அங்கு வந்தார். கம்பத்தில் கட்டி வைத்து அவர்களை அடிக்கவும், மொட்டையடிக்கும் படியும் கட்டளையிட்டார், பண்ணை ஏஜெண்டான அய்யர், ஆறுமுகம் என்ற தோழருக்கு மொட்டை அடிக்க முயன்றபோது அவரது தந்தை கதிர்வேலு, “என் மகன் திருமணம் செய்யப்போகும் புதுமாப்பிள்ளை; தயவு செய்து மொட்டை அடிக்காதீர்கள்” என்று அய்யர் காலில் விழுந்து கதறினார். உடனே அய்யர், உச்சியில் மட்டும் சில முடியை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை மழித்துவிடு என்று தயவு காட்டினார்.

சம்பவம் நடந்தவுடன் நீடாமங்கலம் சுயமரியாதை இயக்கத் தலைவர் அ.ஆறுமுகம் பெரியாருக்கு தந்தி கொடுத்தார். உடனே ‘விடுதலை’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்த அ. பொன்னம்பலனாரை, பெரியார்  கள விசாரணைக்காக நீடாமங்கலம் அனுப்பி வைத்தார்.

காங்கிரஸ் கட்சியோ இராஜகோபாலாச் சாரி ஆட்சியோ இப்பிரச்சினைக் குறித்து கள்ள மவுனம் சாதித்தது. விடுதலை நாளேட்டின் தலையங்கங்களோ அனல் வீசின. அப்போது நீதிக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்ட ஜெ. சிவசண்முகம் பிள்ளை என்ற தாழ்த்தப்பட்ட தலைவர், நீடாமங்கலம் சம்பவம் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு இராஜ கோபாலாச்சாரியின் காங்கிரஸ் ஆட்சி அளித்த பதில்தான் மிகவும் கவனத்திற்குரியதாகும்.

“நீடாமங்கலம் காங்கிரஸ் மாநாட்டில் பிற்பகல் விருந்தின்போது ஹரிஜன தோழர்கள் கலந்து கொண்டனர். அங்கு நிலவிய வழக்கத்தின் பேரில் எல்லா ஜாதியினரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருந்தன.  இவை அந்த ஹரிஜனங்களுக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தின”

– என்பதுதான் அரசாங்கம் அளித்த பதில்.

அப்போது தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களாக இருந்த ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ் உள்ளிட்ட தலைவர்களிடமிருந்து இந்த நிகழ்வுக்கு எதிர்வினை ஏதும் இல்லை என்று கவலையுடன் சுட்டிக்காட்டிய ‘விடுதலை’, எம்.சி. ராஜா மவுனம் கலைக்க வேண்டும் என்று எழுதியது. ஆங்கில ஊடகங்கள் முழுதுமாக இந்த செய்தியை இருட்டடிப்பு செய்த நிலையில், டாக்டர் அம்பேத்கர் கவனத்துக்கு இந்த செய்தி போகவில்லை.

நீடாமங்கலம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் ‘பள்ளர்கள்’ என்ற ஜாதிப் பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்தத் தோழர்களை ஈரோடு பகுதிக்கு அழைத்து வந்து தங்க வைத்து சுயமரியாதை இயக்கத்தினர் பாதுகாப்பு அளித்தனர். இராஜகோபாலாச்சாரி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வி.அய். முனுசாமி பிள்ளை, நீடாமங்கலம் சம்பவத்தையே பொய் என்று மறுத்துவிட்டார்.

வன்கொடுமைக்கு உள்ளாகி மீட்கப்பட்ட மூன்று தோழர்களில் ஆறுமுகம் என்ற தோழரை பெரியார் தன்னுடன் வைத்துக் கொண்டார். பிறகு அவருக்கு காவல்துறையில் அரசுப் பணி பெற்று தந்தார். தற்போதும் அவரது வாரிசுகள் சென்னையில் வாழ்கிறார்கள். சித்திரவதைக் குள்ளான தேவசகாயம், இரத்தினம் – இருவரும் ‘பள்ளர்’ ஜாதியைச் சார்ந்தவர்கள். ஆறுமுகம் தீண்டப்படாத ஜாதி ‘பள்ளர்’களுக்கு முடிவெட்டும் தொழிலைச் செய்து வந்தவர். இந்த வரலாறுகளை சமூகப் பின்னணியோடு விரிவாக விளக்குகிறது இந்த ஆய்வு நூல்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடவில்லை; அது இடைநிலைச் சாதிகளின் பக்கமே நின்றது என்று தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் அவதூறுகளை வலிமையாக மறுக்கும் மிகச் சிறந்த ‘ஆவணமாக’ வெளி வந்திருக்கிறது இந்த நூல்.

நூல்: “நீடாமங்கலம் – சாதியக் கொடுமையும்

திராவிட இயக்கமும்”

ஆசிரியர் : ஆ. திருநீலகண்டன்

வெளியீடு : ‘காலச் சுவடு’ பதிப்பகம்;

விலை : ரூ.175

– ‘இரா’

நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்

You may also like...