‘பராசக்தி’க்கு எதிராக வந்த ‘அவ்வையார்’ கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்-3 எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் : சுப. குணராஜன்
பராசக்தி திரைப்படம் வெளியாகிப் பத்து நாள்களுக்குள், சென்னை மாகாண அரசின் உள்துறை, இத்திரைபடத்தைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் வழிமுறையைத் தேடத் தொடங்கியது. இதனைக் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்த மனிதர் உள்துறைச் செயலாளராகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி
ஓ. புல்லாரெட்டி ஆவார். அக்டோபர் 27ஆம் தேதியன்று. சென்னைக் காவல்துறை ஆணையர் ஜெ.தேவசகாயம் அவர்களிடம், ஒரு உள்துறை அதிகாரியைத் திரைப்படத்தைப் பார்க்கும்படி செய்து, அதன் உள்ளடக்கத்தையும், அதில் ஏதேனும் ஆட்சேபகரமானதாக உள்ளதா என்று அறிந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
பராசக்தி திரைப்படத்தைப் பார்த்த சென்னை காவல்துறை உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரியின் விரிவான அறிக்கை, அப்படத்திற்கு ஆதரவாக இருந்தது. அவரது அரசியல் நிலைப்பாடு தி.மு.க. சார்பானதாக இருந்திருந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. திரைப்படம் குறித்த தன்னுடைய கருத்துகளை மறைக்காது பதிவு செய்திருந்தார். அவரது அறிக்கையில், ‘திரைப்படத்திற்கான வசனங்கள், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரபல தலைவர்களில் ஒருவராக மு.கருணாநிதி அவர்களால், வலிமையாக எழுதப்பட்டுள்ளது. இப்படம் கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு இளம்விதவை சந்திக்கும் துன்பங்களையும், கஷ்டங்களையும் தத்ரூபமாக விவரிக்கிறது. இந்தச் சமூகம் அவளை எவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கு கின்றது என்று காட்டுகின்றது” என்கின்றார். ‘கதையின் உள்ளடக்கம் அதனளவில் ஆட்சேபகரமானதாக இல்லை. ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கதைக்களம். மனிதர் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பெண்மையின் சிறந்த அணிகலன் கற்பே என்ற வலுவான ஒழுக்க நியதியையும் (இப்படம்) கொண்டிருக்கின்றது” என்று உறுதியாகச் சொல்கிறார் உளவுத்துறை அதிகாரி.
ஆனாலும், சர்ச்சைக்கு உரியதாகிவிட்ட ஒரு திரைப்படம் பற்றி, ஒரு உளவுத்துறை அதிகாரியால் முற்றிலுமாகப் புகழ்ந்து விட முடியாது என்பதால் அறிக்கையை ஏற்புடையதாக்கப் புகழ்ச்சியோடு, எதிர்ப்புகளையும் கூறி சமன் செய்ய வேண்டியிருந்தது. அதனால்தான் அறிக்கையின் முடிவில் இரண்டு பத்திகளில் பராசக்தியில் ஆட்சேபகரமானவையாகச் சிலவற்றைக் குறிப்பிட்டார்.
உளவுத்துறை அதிகாரியின் அறிக்கை, உள்துறைக்குப் பராசக்திக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான அடிப்படைகளை வழங்க மறுத்தது. திரைப்படத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாற்று மார்க்கங்களைத் தேட வேண்டியவரானார் புல்லாரெட்டி. 1952 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி அவர் மிகுந்த நம்பிக்கையோடு ஒரு யோசனையை முன்வைத்தார்.‘நானே இத்திரைப்படம் பற்றிப் பலர் குற்றஞ் சாட்டக் கேட்டிருக்கிறேன். எனவே ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, சில பொறுப்புள்ள மனிதர்களை அப்படத்தைப் பார்க்கச் செய்யலாம். விவசாய அமைச்சர் என்னிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்டார். திரையரங்க உரிமையாளர்களுடன் பேசி, காவல்துறை ஆணையரை ஒரு தனிக் காட்சிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாம். அமைச்சர்கள், செய்தி மற்றும் களவிளம்பரத்துறை அதிகாரிகள், காவல்துறை தலைமை அதிகாரி, தேர்வு செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரைப் பார்க்கச் செய்து, அவர்களின் பொதுத் தீர்ப்பை ஏற்கலாம்” என்று கூறினார். ஆனால், ராஜகோபாலாச்சாரியோ வேறு நிலைப்பாட்டை எடுத்துப் பொறுப்புள்ள மனிதர்கள் பார்த்து விமர்சிக்கும் திட்டத்தைத் தவிர்த்தார். இலக்கியம், சினிமா, ஜனநாயகம் மற்றும் மக்கள் பற்றிய தன் எண்ணங்களை உள்ளடக்கிய அவரின் நீண்ட குறிப்பு கீழ்க்கண்டவாறு விரிகின்றது:
‘மக்களின் நம்பிக்கைகளை அழிக்க முயலும் இந்தக் கீழ்த்தரமான முயற்சிகளைப் பெரிய மனிதர்களைக் கொண்டு பார்வையிட வைத்து, விமரிசித்து, மரியாதை செய்யக்கூடாதென நினைக்கின்றேன்… கற்பனையான நிகழ்வொன்றை அறிமுகம் செய்து, அதன் வழி எப்படிப் ‘புனிதமான” மனிதர்களால், உயர்ந்த இடங்களில் அயோக்கியத்தனங்கள் செயல்படுத்தப்படு கின்றது என்று காட்டுவது, எப்படி வழக்கறிஞர்கள் ஏமாற்று கிறார்கள், எப்படி மருத்துவர்கள் ஏமாற்றுகிறார்கள், எப்படி ஆண்களும் பெண்களும் நஞ்சுக் கொடுத்துக் கொல்லப்படு கின்றார்கள் என்று பெரியதும், சிறியதுமான, கீழ்த்தரமான கதைகளை மனிதர்கள் எழுது கிறார்கள். இவை உண்மை யானவை அல்ல. ஆனால், இலக்கியம் அதிலிருந்துதான் கட்டமைக்கப்படுகிறது. திரைப் பார்வையாளன் அளவுக்கு வாசகன் பாதிப்புக் குள்ளாவதில்லை. எனவேதான், மக்கள் இதனை ஆட்சேபிக் கின்றனர். நாம் அப்படத்தைப் பார்ப்பதனால், எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இது சூழ்ச்சிக்காரர்களின் செயல்திட்டம் என்பது வெளிப்படை. ஆனால், சுதந்திரத்தின் பாதையைப் பாதிப் பிற்குள்ளாக்க முடியாது. இவை இப்படியே போகட்டும். மக்கள் இவை பயனற்றவை என்று அவர் களாகவே புரிந்து கொள்வார்கள்.
இருந்தாலும் மத்திய தணிக்கைக்குழுவைப் பராசக்தியை மறுபரிசீலனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சென்னை அரசாங்கம் கேட்டுக் கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார். தணிக்கைக்குழுவின் மறு பரிசீலனை, ‘இந்த விஷயத்தில் மிக அவசியமானது” என்று அவர் குறிப்பிட்டார்.
சென்னை அரசாங்கம் பராசக்தியை மறு பரிசீலனை செய்வது பற்றி மத்தியக் குழுவிடம் வேண்டுகோள் வைத்தவேளையில் சென்னை பிராந்திய தணிக்கைக் குழு அதிகாரி
கே. சீனிவாசன், திரைப்படம் பற்றிய புதிய செய்தியொன்றை வெளியிட்டார். பராசக்தியின் தாயரிப்பாளர்கள் முன் அனுமதியின்றி மூன்று காட்சிகளைத் திரைப்படத்தின் தணிக்கை செய்த பதிப்பில் சேர்த்துவிட்டார்கள் என்று அவர் மத்திய தணிக்கைக்குழுவிற்குத் தெரிவித்தார். ‘நான் அத்திரைப்படத்தை மறுபடியும் பார்த்த போது, அதில் மூன்று காட்சிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருந்தன. நான் அவற்றைச் சுட்டிக் காட்டி, அவர்கள் மிக மோசமான விதி மீறலைச் செய்துவிட்டதாகக் கூறினேன். அவர்கள் அந்தக் காட்சிகள் முற்றிலும் ஆட்சேபகரமற்றவை என்றனர். அவர்களுடைய விளக்கம் ஏற்புடை யதல்ல. தணிக்கைச்சான்றுக்குப் பிறகு தடை யின்றித் திரைப்படத்தை மாற்ற அனுமதித்தால், தணிக்கை என்பதே நிலைகுலைந்துவிடும்” என்று எழுதினார். ஆனால் திரையரங்க உரிமை யாளர்கள்மீது சட்டபடி குற்றவியல் நடவடிக்கை எடுப்பது சிக்கலானதாகவும், பிரச்சினைக்குரிய தாகவும் சீனிவாசனுக்கு இருந்தது. ‘இந்த விவகாரத்தில் முப்பதிலிருந்து நாற்பது திரையரங்குகள் மீது சட்டரீதியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருந்திருக்கும். கூடுதல் காட்சிகள் சேர்க்கப் பட்டதற்கான ஒரே சாட்சியம். திரைப்படம் பார்க்கும் ஒவ்வொரு பரிசீலனைக்குழு உறுப்பினர்களின் வாக்குமூலம் மட்டுமே. இந்தச் சாட்சியகங்களுக்கு எதிரான திரையரங்கங்கள் தங்களின் திரைப்படப் பிரதி தணிக்கைக்குழு அனுமதித்த ஒன்றுதான் என்ற நியாயமான நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவற்றைத் திரையிட்டோம் என்று கூறலாம். இந்தச் சட்டச்சிக்கலான சூழலில்… கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருந்த காட்சிகள் ஆட்சேபகர மானதாக இல்லாத காரணத்தால், பிற்காலத்தில் இதுபோன்ற விதிமுறை மீறல்கள் சகிக்கப்பட மாட்டாது என்று தயாரிப்பாளர்களை எச்சரிக்கலாம்” என்ற யோசனையைச் சீனிவாசன் முன்வைத்தார்.
மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், சீனிவாசனின் கடிதத்தின் நகலொன்றைச் சென்னை மாகாண அரசாங்கத் திற்கு அனுப்பி, பராசக்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது. இந்த யோசனை, சென்னை அரசாங்கத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. சென்னை மாகாண உள்துறையின் குறிப்பொன்று, தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதென்பதைக் கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தியது. ‘எல்லாவற்றிற்கும் முதலாக, கூடுதலாகச் சேர்க்கப்பட்டுக் காண்பிக்கப்பட்ட மூன்று காட்சிகள் மற்றும் அவை எங்கே, எப்போது காட்டப்பட்டன, பரிசீலனைக் குழு உறுப்பினர்கள் இந்தக் கூடுதல் காட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட பிரதிகளில் இல்லை எனச் சாட்சியம் சொல்வார்களா!” போன்ற விவரங்கள் இந்த அரசிடம் இல்லை. முக்கியமாக, மாகாண அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி மத்திய தணிக்கைக்குழு நடந்து கொள்ளுமா என்பதில் உள்துறைக்கு நம்பிக்கையில்லை.
இந்த நிலையில், பராசக்தி படத்தை தயாரித்த ‘நேஷனல் பிக்சர்ஸ்’ நிறுவனம் அனுமதியின்றி சில காட்சிகளை சேர்த்ததற்கு மன்னிப்புக்கோரி மத்திய தகவல் மற்றும் ஒலி பரப்புத் துறைக்கு கடிதம் எழுதி, கதையின் தொடர்ச்சிக்காக சேர்க்கப்பட்ட இந்த காட்சிகள் ஆட்சேபணைக்கு உரியவை அல்ல என்று விளக்கம் அளித்தது.
தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், நேஷனல் பிக்சர்ஸின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, பராசக்தி படத்தைத் திரையிட்ட திரையரங்கங்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட்டது. மத்திய அமைச்சகம், இந்த முடிவை சென்னை அரசாங்கத்திற்குத் தெரிவித்தது. சென்னை அரசாங்கமோ அனாதரவாக விடப்பட்டதாக வும் உணர்ந்தது. சென்னை அரசாங்கத்தின் அதிகாரிகளில் ஒருவர் இதனைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்: ‘இந்தியா (அரசாங்கம்) இவ்வளவு கண்டிப்பின்றி, திரைப்படத் தயாரிப்பாளர்களை, அவர்களது விதிமீறலுக்கு வெறும் மன்னிப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு, நடவடிக்கை இன்றி விட்டு விட்டது துர்பாக்கியமானது. இந்தியா (அரசு) நமது கருத்தைக்கூடக் கேட்காமல் முடிவெடுத்து விட்டது. எனவே, பிரச்சனையை பழைய நிலைக்குக் கொண்டுசெல்ல வழியில்லை. நமது ஆட்சேபத்தை மட்டும் தெரிவிக்கலாம்” என்றார்.
பராசக்தி திரைப்படத்தைத் தடைசெய்யச் சென்னை மாகாண அரசு முயற்சி தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு, மத்திய தணிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி திரைப்படத்தின் இரண்டு காட்சிகள் நீக்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது. அவ்விரு காட்சிகளும், கீழ்க்கண்டவை: 1. குணசேகரன் சுவற்றின் மீது தான் வைத்த கல்லைத் தட்டிவிட்டு, இதற்குத் தெய்வ சக்தியெல்லாம் கிடையாது எனச் சொல்லும் காட்சி. 2. கோவிலின் கருவறையில் பூசாரி கல்யாணியைக் கற்பழிக்க முயலும்
காட்சி. பராசக்தி படத்தை மறுபரிசீலனை
செய்த குழுவில் இருந்தவர்கள் வி.ராஜ கோபாலன், வி.ராகவன், மஞ்சுபாஷினி மற்றும்
சி.ஆர். சீனிவாசன்.
பராசக்தியின் “விதி”, இவ்வாறாக ஆறு மாதங்களுக்கு அந்தரத்தில் தொங்கியது. திரையரங்குகளிலிருந்து எப்போது வேண்டு மானாலும் இந்தக் காட்சிகள் எடுக்கப்படுவது சாத்தியம் என்ற நிலை, அதனாலேயே வெகுமக்கள் ஆர்வத்தை இத்திரைப்படம் மீது வெகுவாகத் தூண்டியது. நூறு நாள்களுக்கும் மேலாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய பராசக்தி திரைப்படம், சிவாஜிகணேசன் மற்றும் கலைஞர் மு. கருணாநிதி என்ற இரு நட்சத்திரங்களை உருவாக்கியது.
பராசக்தி திரைப்படத்திற்கான எதிர்ப்பும், அது சார்ந்த சர்ச்சைகளும், அதற்கான எதிர் வினைகளையும் உருவாக்கியது.
1953 ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ்.வாசனின் தயாரிப்பில் வெளிவந்த அவ்வையார் திரைப்படம். மத நம்பிக்கையாளர் களிடையே பராசக்தி திரைப்படம் உருவாக்கி இருந்த அச்சத்தைத் தெளிவாக வெளிப்படுத்தி யது. ஜெமினி ஸ்டுடியோவின் “ஓய்வு நேரத் தயாரிப்பாக” ஏழு ஆண்டு காலம் தயாரிப்பில் இருந்தது அவ்வையார். தமிழ் வாய்மொழி வரலாறு மற்றும் இந்துமதக் கதைகளின் அடிப்படையில், ஆயிரமாயிரம் அடிகள், பகுதி பகுதியாக, வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் முழுமையான திரைப்படத்தின் வடிவம் எப்படி இருக்கும் என்பது கண்ணுக்குப் புலப்படவில்லை. 1952ஆம் ஆண்டு பராசக்தி திரைப்படம் வெளிவந்ததும், வாசன் அவசரமாக அவ்வையார் படத்தை முடித்தார். இறுதியாகத் திரையில் காட்சியளித்த அவ்வையார் படத்தில் பாதிக்கும் மேலான பகுதிகள், புதிதாகப் படப்பதிவு செய்யப் பட்டவை.
பராசக்தி திரைப்படத்திற்கு நேர் எதிர் மறையாக, அவ்வையார் திரைப்படம், இந்து மதக் கதைகளின் ஊடாகப் பின்னி உருவாக்கப் பட்டிருந்தது. பராசக்தியைப் போன்று அவ்வையார் திரைப்படம், பொற்காலச் சிறப்புமிக்க தமிழ்க் கலாச்சாரப் பழைமையைக் கட்டமைக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக இந்துமத பக்தியைத் தமிழர்களின் நேற்றைய, இன்றைய மற்றும் நாளைய அடையாளமாக அவ்வையாரை முன்வைத்தது, அவ்வையார், பராசக்திக்கு எதிரான ஒரு கருத்து நிலையின் வடிவம் என்பது மிகையாகாது.
தருமபுரம் ஆதினகர்த்தராகிய சுப்பிரமணிய தேசிய ஞானானந்தப் பண்டார சன்னதி, அவ்வையார் படம் குறித்துக் கீழ்க்கண்டவாறு கூறினார்: “உள்ளத்தைச் சுத்திகரித்து ஒழுக்கத்தை வளர்த்து, மத நம்பிக்கையைப் பரப்புவதில் (அவ்வையார்) ஒப்பற்றது.” எஸ்.எஸ்.வாசன், இது பற்றி இன்னும் வெளிப்படையாகவே பேசினார். திரைப்படத்தின் பாராட்டுவிழா கூட்டம் ஒன்றில் பதிலிறுத்துப் பேசிய வாசன், “இந்தக் கூட்டம் எந்நாளும் நிறைந்திருக்கும் கடவுள் பக்தியின் அடையாளம், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றிச் சேவை செய்த தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நாத்திகம் இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
சென்னை மாகாண அரசின் சின்னமான கோயில், பொருள் பொதிந்தது. அது நமது கலாச்சார அடையாளம். காலவோட்டத்தில் நாம் மதத்தையும் கடவுள்களையும் மறந்து விட்டோம். தற்போதைய “தீயதூஷணைகள்” நம்மைத் தட்டி எழுப்பிவிடும் என நம்பு கின்றேன்” என்றார். “தற்போதைய தீய தூஷணைகள்” என்று அவர் குறிப்பிட்டது. அன்றைய தி.க. மற்றும் தி.மு.கவின் மத எதிர்ப்புப் பரப்புரைகளே. வாசனின் செய்தி, பார்வை யாளர்களைச் சென்றடையத் தவறவில்லை. அவர்களில் ஒருவர் அவ்வையாரையும் பராசக்தியையும் ஒப்பிட்டு எழுதுகின்றார்.
“பிச்சைக்காரர்களின் கூக்குரல்தான் தமிழர்களின் குரல் எனக் குலைத்தது ஒரு தமிழ்ப்படம். தமிழ்நாட்டைப் பாலைவனச் சோலையாகக் காட்டாவிட்டாலும் அதை ஏன் பாலைவனமாகக் காட்ட வேண்டும்? தமிழர் களிடம் நற்பண்புகள் இருக்கும்போது ஏன் ஒரு சிலரின் குற்றங்களைப் பெரிதுபடுத்திக் காட்டித் தமிழரின் மாண்பைக் குறைக்க வேண்டும்? திருட்டு, ஏமாற்று, பெண்பித்து மற்றும் நாத்திகத்தை நம்மீது வீசிக் கேலி செய்யும் தமிழ்த் திரைப்படங்கள் ஒன்று இரண்டல்ல… அவ்வையார் அதற்கு விதிவிலக்கானது.”
பார்வையாளர்கள், அவ்வையார் படத் திரையரங்குகளில் அருள் மேலீட்டால் வீழ்வதும், மோனநிலை அடைவதையும் பற்றி வாசகர்கள் கடிதங்களை ஆனந்தவிகடன் தொடர்ச்சியாக வெளியிட்டது. அதோடுகூட நாத்திகர்கள் மனம் திருத்தி மதநம்பிக்கைக்குத் திரும்பியது பற்றிய ஒப்புதல் கடிதங்களையும் வெளியிட்டது.
அவசர அவசரமாக அவ்வையார் படம் உருவாக்கப்பட்டதும், அதன் மதவாத உள்ளடக்கமும், அதனை வெகுமக்கள் பார்வைக்கு வைத்த விதமும், பராசக்தி படத்தின் மாற்று அரசியல் உத்வேகத்திற்கான சாட்சியங் களாகும். ஆனாலும், இது பராசக்தியின் அரசியலைப் பற்றிய ஒருவகை மதிப்பீடுதான். திராவிடர் இயக்கத்தின் ஒரு பகுதியான தி.மு.க. தேர்தல் அரசியல் வெளிக்கு அப்பால் சமூக அரசியல் தளத்தில் செயல் பட்டுக் கொண் டிருந்த போக்கை விடுத்து, தேர்தல் அரசியலை விரும்பத் தொடங்கிய காலகட்டத்தில் பராசக்தி திரைக்கு வந்தது. இந்தச் சூழலில், பராசக்தியின் சித்தாந்தப் போக்கைத் திராவிடர் இயக்க வரலாற்றின் ஒருபகுதியாக பாவித்து அது பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சார்புகள் எவ்வகையானவை என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பராசக்தியின் இரு கூறுகள் இங்குக் கவனத்திற்கு உரியனவாகும். திரைப்படம் எவ்வாறு பெண்மையையும் மதத்தையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பதுதான் அது.
முதலில், பராசக்தி, எவ்வாறு கல்யாணியின் கற்புப் போராட்டத்தை முன்னிறுத்தி, அதனை அன்றைய திராவிட நாட்டின் குறியீடு ஆக்கியது என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறேன். கற்பு மற்றும் விதவையின் அமங்கலத்தன்மை பற்றிய குறியீடுகள், திரைப்படத்தில் ஏராளமாக உள்ளன. கற்பென்பது பெண்ணின் சிறப்பியல்பு என்பது, தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான கலாச்சார விழுமியம். ஜேக்கப் பாண்டியன் முன்வைப்பதுபோல, “ஆதி காலத்திலிருந்து இன்றுவரை கற்பு என்பதை இறைத்தன்மை யோடு தொடர்பு படுத்துவதோடு, அது தமிழ்மொழி மற்றும் தமிழ்ப் பெண்களோடும் தொடர்பு படுத்தப்படுகின்றது. தமிழ் மொழி தன் தூய்மையைக் காப்பதன் மூலம், தன் இறைத் தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதுபோல், தமிழ்ப் பெண்களும் தங்கள் கற்பைக் காப்பதன் மூலம் தங்கள் இறைத்தன்மையைக் காத்துக் கொள்ளலாம்.” பராசக்தி இவ்வாறாகத் தமிழ்ப் பொதுபுத்தியின் பிரதான கூறுகளை உள்ளடக்கிய திரைப்படம்.
இதற்கு மாறாக, தி.மு.க.வின் முன்னோடிகளான சுயமரியாதை இயக்கம் மற்றும் அன்றைய திராவிடர் கழகம், ஆணாதிக்கச் சமூகச் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை முன்வைத்தது. கற்பு, தாலி முதலிய ஆணாதிக்கக்குறியீடுகளை அவை கேள்விக்குள்ளாக்கியது. ‘எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி”யில் பெரியார் ஈ.வே.ராமசாமிக்கு எழுதப்பட்ட பொருத்தமான நினைவஞ்சலி, தொடக்ககாலத் திராவிட இயக்கத்தின் அரசியலை மிகச் சரியாகப் பதிவு செய்துள்ளது.
“அவரது (பெரியாரின்) பகுத்தறிவுவாதத்தின் இன்னொரு கூறு, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரானது. அவர் விதவை மறுமணம், சம்மதத்தின் அடிப்படையிலான திருமணம், பெண்களுக்கான விவாகரத்து உரிமை ஆகியவற்றுக்காக வாதிட்டார். கற்பிழந்தவள் என்பதற்கான ஆண்பால் வார்த்தை தமிழில் இல்லை எனக் குறிப்பிட்டுக் குமுறும் அவர், ‘கற்பிழந்தவள் என்ற சொல் பெண்ணை அடிமையாக, ஒரு நுகர்பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கக் கருத்தியல் சார்ந்தது” என்கின்றார். கணவனல்லாத ஒருவன்மீது ஆசை கொள்ளும் பெண்ணைக் கண்டனம் செய்யக் கூடாது என்று, இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு மாநாட்டில், பெரியார் வைத்த கோரிக்கையும், (இதைப் பத்திரிகைகள் மிகக் கேவலமாகச் சித்தரித்தன), பெண்ணை அடிமைத்தளை யிலிருந்து விடுவிக்கத் திருமண முறையையே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அவரது நிலைப்பாடும், எந்தப் பெண்ணியவாதியோடும் ஒப்பிடக்கூடிய அளவிற்கு முற்போக்கானது.
ஆரம்பகாலத் திராவிட இயக்கம் சிலப்பதிகாரம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றை அவை பெண்ணின் கற்பின் மீது குவித்த முக்கியத்துவம் காரணமாக, விமர்சனம் செய்தது. இன்னும் கூடுதலாக, அவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தியலின் அடிப்படையிலான சுயமரியாதைத் திருமணங்களை ஏற்பாடு செய்தது. இந்த ஆரம்பகாலத் திராவிட இயக்க அரசியலோடு ஒப்பிடும்போது, தி.மு.கவின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் பராசக்தி, அரசியல் மற்றும் கலாச்சார சமரசங்களின் ஒரு குறியீடாகின்றது.”
இதே போன்ற போக்கு, பராசக்தியின் மதம் பற்றிய விமர்சனத்திலும் காணக் கிடைக்கும். மதம் பற்றிப் பராசக்தியின் விமர்சனங்கள் உள்முரண்கள் கொண்டவை. இது குணசேகரன் நீதிமன்றத்தில் பேசும் நீண்ட வசனத்தின் ஊடாகத் தெளிவு பெறுகின்றது: ‘கோயிலிலே குழப்பம் விளைவித்தேன்: கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூசாரியைத் தாக்கினேன்: அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக…
“இவ்வாறாக, குணசேகரன் கோயிலை ஏற்றுக் கொண்டு, அது தவறாகப் பயன்படுத்தப் படுவதைக் கண்டிக்கின்றான். பராசக்தி தணிக்கைக் குழுவிடமிருந்து தப்பியதற்கான காரணம், அதன் உறுப்பினர்கள் அப்படத்தில் மதநம்பிக்கை மறைபொருளாக இருப்பதாகக் கருதியதே. அவர்களுக்கு அப்படியான எண்ணத்தைக் கொடுத்தது பின்வரும் காட்சியமைப்புதான்! கோவிலுக்குள் இருந்துவரும் கல்யாணியின் அலறல் கேட்டு, குப்பன் கோயில் மணியை அடிக்கிறான். கல்யாணியின் அழுகுரலுக்குப் பதிலளிப்பது போல், சரியான நேரத்தில் சிலைக்குப் பின்னிருந்தும், கோவில் கர்ப்பக்கிரகத்தி லிருந்தும், உதவி வருகின்றது. திரையில், பராசக்தியின் உருவம் அடிக்கும் மணியின் மீது பிரதிபலிக்கின்றது.
பெண்ணியம் தொடர்பானது போன்றே, மதம் பற்றிய பராசக்தியின் நிலைப்பாடும், ஆரம்பகாலத் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டிலிருந்து மாற்றம் கண்டிருந்தது. மதம் என்பது பகுத்தறிவற்றது: பார்ப்பன மேலாண்மையை உறுதிப்படுத்துவது எனத் திராவிடர் கழகம் கருதியது. இயக்கத்தின் இந்த நிலைப் பாட்டைக் குறித்து எழுதுகிறார் யுஜின் இர்சிக்.
“1929 ஆம் ஆண்டில் ‘விசித்திர தேவர்களின் கோர்ட்’ எனும் சுயமரியாதை இயக்க நூல் வெளியானது. நீதிமன்ற விசாரணை முறையைப் பயன்படுத்தி, இந்துமதக் கடவுளர்கள் அனைவரையும், அவர்கள் செய்த பாலியல் மற்றும் கொடூரமான குற்றங் களுக்காக (அந்நூல்) குறுக்கு விசாரணை செய்தது. சிவன், விஷ்ணு மற்றும் தெய்வங்கள் பலவற்றின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்த வகையில், இந்துமதப் புராணங்களின் அடிப்படைகள் கேள்விக் குள்ளாக்கப்பட்டு, மதமே மூடநம்பிக்கை என்ற தாக்குதலுக்கு உள்ளானது.
நாம் அறிந்ததுபோல், அவ்வியக்கத்தின் பிரபலமான முழக்கம், ‘கடவுளை கற்பித்தவன் முட்டாள்: கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்: கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி” என்பதாகும். இந்தத் திராவிட இயக்க வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் போது, பராசக்தியின் மதம் பற்றிய நிலைப்பாடு, சந்தேகத்திற்கிடமின்றிச் சமரசத் தின் அடையாளமாகவே வெளிப்படுகின்றது.
பராசக்தி திரைப்படத்தில் காணப்படும் கொள்கை மாற்றங்களுக்கான காரணத்தின் ஒரு பகுதியைத் தேர்தல் அரசியலில்தான் காண முடியும். ‘சேலம் நிகழ்ச்சி” என்றழைக்கப்படும் வரலாற்று நிகழ்வும், அதன் பின்விளைவுகளும் இந்தத் தொடர்பை வெளிப்படுத்தும்.1971 ஆம் வருடம் ஜனவரி மாதம், ஈ.வெ. ராமசாமி அவர்களின் தலைமையிலான திராவிடர் கழகம். சேலத்தில் ‘மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு” ஒன்றை நடத்தியது. மாநாட்டு ஊர்வலத்தில் இந்து இதிகாசங்களின் காட்சிகளைச் சித்தரிக்கும் பதாகைகள் எடுத்து வரப்பட்டன.
ஸ்தாபன காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஜனநாயக முன்னணியினர், தி.மு.க. எதிர்ப்பு மற்றும் இந்துத்துவ ஆதரவைத் தூண்டும்படி கூக்குரலிடத் தொடங்கியது. ஜனநாயக முன்னணி, தி.க. ஊர்வலத்தில் எடுத்துவரப்பட்ட போஸ்டர்களின் புகைப் படங்களோடு கீழ்க்கண்ட வாசகங்களையும் கொண்ட ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து விநியோகித்தது: ‘இவைதான் தி.மு.க. அரசின் பாதுகாப்புடன் சேலத்தில் நடந்த கடவுள் எதிர்ப்பு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட படங்கள். இன்னும் நாத்திக தி.மு.கவை நம்ப வேண்டுமா? நமது புனிதமான ஓட்டுகளை இவர்களுக்கா அளிப்பது?”
1971 ஆம் வருடச் சட்டசபைத் தேர்தல் வரவிருந்த நிலையில், தி.மு.க. உடனடியாகத் தன் நிலையை விளக்கியது. மு. கருணாநிதி உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள், ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் திரும்பத் திரும்பத் தங்கள் கட்சி கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் கட்சி என்றனர்.
தி.மு.க. முன் எப்போதையும்விட, அதிகப்படியான எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியில் மீண்டும் அமர்ந்தது.
ஜனநாயக அரசியலில் சமரசமும், பொதுபுத்தியினை ஏற்பதும் அடிப்படைக் குணாம்சங்களாகும். அது அரசியல் கட்சிகள் ஆட்சியதிகாரத்தைப் பிடிப்பதற்கான வழிமுறை மட்டுமல்ல. பலதரப்பட்ட கருத்துகளுக்கு மதிப்பும், அங்கீகாரமும் வழங்கி, ஏற்கனவே நடப்பிலுள்ள பொதுபுத்தியினுள்ளேயே செயல்பட்டு, அதில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேவையுமாகும். மாற்றுக் கருத்துக்களை உருவாக்குவதும், பொதுபுத்தியை ஏற்பதுமான ‘இரட்டைத் தன்மை’ பராசக்தி திரைப்படத்தில் வெளிப்பட்டது என்பதே உண்மை.
ஆரம்பகாலத் திராவிட இயக்கங்களின் தீவிரக் கொள்கை நிலைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது, தி.மு.க.வின் கொள்கைப் போக்கை கருத்தியல் பின்னடைவு என்றே விமர்சிக்க முடியும். ஆனால் முற்றிலும் புனிதமான, முழுமை ஒன்றிற்கான தேடல், உலகத்தைத் தனது சாயலில் கட்டமைக்க விரும்பும் வேட்கையின் வெளிப்பாடு, எனவே, அது ஒருவகை அடிப்படைவாதமன்றி வேறொன்றாகாது. தூய்மைத் தன்மையையும் முழுமையையும் தேடாத ஒரு அரசியல், சகிப்புத்தன்மையோடு மாற்றுக் கருத்துக் களையும் முன்வைக்கும் வாய்ப்பை வழங்கக் கூடும். “முழுமைக்கான வேட்கை கொண்ட உலகில், பிற சக்திகளின் ஊடாட்டம் இல்லையேல் தீமை விளைந்து விடும். எனவே, ஒரு அளவிலான கொள்கை முழுமையின்மை வரவேற்புக்குரியதே” என்கிறார் அரசியல் ஆய்வாளர் கோனாலி. பராசக்தியின் பலம் என்பது அதன் உள்ளடக்கத்தில் முழுமையான கருத்தியலி லிருந்து விலகி, பொதுப் புத்தியில் படிந்து கிடந்த சமரசத்தை ஏற்று சமூக மாற்றத்தைப் பேசியது என்பதுதான். தணிக்கையின் தடையிலிருந்து தப்பியதற்கும் இதுவே காரணம். (நிறைவு)
பார்வையாளர்கள், ‘அவ்வையார்’ படத் திரையரங்குகளில் அருள் மேலீட்டால் வீழ்வதும், மோனநிலை அடைவதையும் பற்றி வாசகர்கள் கடிதங்களை ‘ஆனந்த விகடன்’ தொடர்ச்சியாக வெளியிட்டது. அதோடுகூட நாத்திகர்கள் மனம் திருத்தி மதநம்பிக்கைக்குத் திரும்பியது பற்றிய ஒப்பதல் கடிதங்களையும் வெளியிட்டது.
திராவிட இயக்க வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, பராசக்தியின் மதம் பற்றிய நிலைப்பாடு, சந்தேகத்திற்கிடமின்றிச் சமரசத்தின் அடையாளமாகவே வெளிப்படுகின்றது.
தணிக்கையிலிருந்து தப்பியதற்குக் காரணம் கொள்கை சமரசம்தான்!
நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்