அதிகமில்லை கனவான்களே! தமிழச்சி தங்க பாண்டியன்

அவர்கள் ஆதியிலிருந்தே

ஐந்தடி தூரம் தள்ளி நின்றவர்கள்தான்.

எம் நிழல் பட்டால்

ஆகாதென விலகிச் சென்றவர்கள் தான்.

எம் உப்பையும் வியர்வையையும்

கண்ணீராக உண்டு கொழுத்தவர்கள் தான்.

அவர்கள் ஒரு நொடியில் எம்

இடுப்பிற்கு இறக்கிய

தோள் துண்டை

மீண்டும் உயர்த்திப்போட

பத்துத் தலைமுறைகளானது எமக்கு.

அவர்களுக்குச் சரஸ்வதி கொடுத்த

வீணையை விடச் சற்றும்

இளைத்ததல்ல எம் பறை

என மெய்ப்பிக்க எமது

இந்தத் தலைமுறைக்கே

வாய்த்திருக்கிறது.

தலைமேல் தொங்கும்

கத்தியாய்

அவர்களது புனிதத்தை எம்

இல்லங்களின் வரவேற்பறைகளில்

நுழைத்தார்கள்.

பாத்திருந்தோம்.

மெதுவாக எமது புத்தகங்களின்

பக்கங்களைத் திருடி

அவர்களது வரலாற்றைச் சொருகினார்கள்.

படித்திருந்தோம்.

சத்தமில்லாமல் இப்போது எம்

சமையலறைக்குள் வந்திருக்கிறார்கள்.

எமது நாக்கின் ருசியை

கூர் மழுக்கிடப் புனித நெய்யிட்டு

எம் அஞ்சறைப் பெட்டிகளைக்

கழுவச் சொல்கிறார்கள்.

மாமிச ருசியின் குருதி படிந்த

எமது ஏப்பத்தில்

‘விடுதலை’யின்

வீச்சமடிப்பதாகப் புகார் சொல்கிறார்கள்.

கவனித்தபடியிருக்கிறோம்.

புகைபோக்கியின் மேலமர்ந்து

மோப்பம் பிடிக்கின்ற அவர்கள்

நாளை

எமது படுக்கையறைக்குள்ளும் வருவார்கள்.

அந்தரங்கத்தினை சுத்திகரிப்பதாகச் சொல்லி

அங்கேயும் தூபமிடுவார்கள்.

பார்த்திருப்போமா அப்போதும்?

சரி –

என் செய்வீர்

ஒரு மனு கொடுங்கள் அவர்களிடம்

என்போருக்கு ஒரு வார்த்தை –

இடம் மாற்றிக் கொள்வோம் –

இனிமேல் அவர்கள்

எம்மிடம் மனு கொடுக்கட்டுமே!

மனுவிற்கும்

‘மனு’விற்குமான பார தூரம்

அதிகமில்லை கனவான்களே –

ஒரு நூறு ஆண்டுகள் மட்டுமே!                     ழ

நிமிர்வோம் அக்டோபர் 2017 இதழ்

You may also like...