தலையங்கம் உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’
இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையாக உச்சநீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்ட சூழல் அண்மைக் காலமாக உருவாகியுள்ளது. அதனால் உச்சநீதிமன்றம் விவாதங்களுக்கு அப்பாற்பட்டநேர்மையான அமைப்பாக செயல்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? இப்போது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள்மீது இலஞ்சப் புகார் குற்றச் சாட்டுகள் வரத் தொடங்கியிருக்கின்றன.
ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த ஒரு கல்வி அறக்கட்டளை – மருத்துவக் கல்லூரி தொடங்க மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கேட்டது. மருத்துவக் கவுன்சில் மறுக்கவே நீதிமன்றத்தை நாடியது அந்த அறக்கட்டளை. நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற நீதிபதிகளுக்கு இலஞ்சம் பெற்றுத் தரும் விஸ்வநாத் அகர்வால் என்ற இடைத்தரகரை நாடியது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதி கூறிய அந்த தரகர், அதற்கு நீதிபதிகளுக்கு கொடுப்பதாகக் கூறி பெரும் தொகையை இலஞ்சமாகப் பெற்றார். இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி பெரும் தொகை இலஞ்சமாக பெற்றதை உறுதி செய்து, தரகரையும் ஒரிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி இஸ்ரத் மஸ்டூர் குட்டூசியையும் கைது செய்தது. இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீதிபதிகளே இலஞ்சம் பெறும் நிலைக்கு நீதித் துறை சீர்கெட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ஒரு தொண்டு நிறுவனம் (சி.ஜே.ஏ.ஆர்.) உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி ஒரு வழக்கு தொடர்ந்தது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு மூத்த நீதிபதி செலமேஸ்வர் அமர்வு முன் நவம்பர் 10ஆம்தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த நாள் இதே பிரச்சினைக்காக ஒரு வழக்கறிஞர் (காமினி ஜெய்ஸ்வால்) உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று கோரினார். எனவே 10ஆம் தேதி வர இருந்த விசாரணை 9ஆம் தேதியே விசாரணைக்கு ஏற்கப்பட்டது 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு நீதிபதி செலமேஸ்வர் அமர்வு உத்தரவிட்டது.
இங்கே தான் சிக்கல் தொடங்கியது. 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வழக்குப் போகாமல் நவம்பர் 10ஆம் தேதி ஏ.கே. சிக்ரி, அசோக்பூஷன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
“நீதித் துறையை களங்கப்படுத்த அனுமதிக்க முடியாது. ஒரே பிரச்சினைக்கு இரண்டு வழக்குகளை அனுமதிக்க முடியாது” என்று மேற்குறிப்பிட்ட இரண்டு நீதிபதிகளும் கூறினர். இதற்கு வழக்கறிஞர் பிரசாந்த்பூஷன் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்.
“நாங்கள் தாக்கல் செய்த மனு நீதிபதி செலமேஸ்வர் அமர்வு முன் தான் விசாரணைக்கு வரவேண்டும். ஆனால் தலைமை நீதிபதி உத்தரவினால், உங்கள் (நீதிபதி ஏ.கே. சிக்ரி) தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் தலைமை நீதிபதி மீதே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே தலைமை நீதிபதி வழக்கு விசாரணையிலிருந்து விலகி நிற்பதே மரபு. ஆனால் தலைமை நீதிபதி உத்தரவினால், வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது வேதனையளிக்கிறது” என்று கூறினார். இந்த நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அரசியல் சாசன அமர்வு அவசரமாகக் கூடி, விவாதித்து, நீதிபதி செலமேஸ்வர் பிறப்பித்த, 5 நீதிபதிகள் அமர்வு விசாரணையை இரத்து செய்தது.
நீதிபதிகள் இலஞ்சம் வாங்கிய வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பெயர் எங்கே இடம் பெற்றிருக்கிறது என்று தலைமை நீதிபதியே கேட்டபோது அந்தப் பகுதியை பிரசாந்த் பூஷன் படித்துக் காட்டியிருக்கிறார். உடனே தலைமை நீதிபதி, ‘இப்போதே உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர
முடியும்’ என்று கூறியதோடு, ‘ஒரு வழக்கை விசாரிக்கும் அமர்வை தேர்வு செய்யும் உரிமை தலைமை நீதிபதிக்குத் தான் உண்டு’ என்று தனது அதிகாரத்தை உறுதி செய்துள்ளார்.
அதிகாரம் இருக்கலாம்; ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்தும் சூழல்களை நீதிபதிகள் கவனத்தில் கொள்ள வேண்டாமா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. தனது உறவினர் தொடர்பான ஒரு வழக்கு, ஒரு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தால், நீதிபதிகள் அதை விசாரிக்க மறுக்கும் மரபுகள் நீதிமன்றத்தில் பின்பற்றப்படுகின்றன. தலைமை நீதிபதி மீதே குற்றம்சாட்டுகிற ஒரு வழக்கில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், ஒதுங்கி நிற்கும் தார்மீகக் கடமையைத் தான் தலைமை நீதிபதியிடம் நாடு எதிர்பார்க்கும்; அப்படி எதிர்பார்ப்பதில் தவறுஇல்லை.
நீட் தேர்விலிருந்து ஜல்லிக்கட்டு, தேசபக்தி என்று அனைத்து அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு தீர்ப்புகளை வழங்கும் அதிகாரம் படைத்த உச்சநீதிமன்றம், நீதிபதிகள் தொடர்பான பிரச்சினைகளில் ‘வழுக்குவதும் – சறுக்குவதும்’ நீதிமன்றத்தின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கவே செய்கிறது.
பெரியார் முழக்கம் 16112017 இதழ்