இந்தியாவில் ஒரே ஒருவர் தான் பெரியார் பேராசிரியர் ந. முத்துமோகன்
“இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் நாம் இத்தனை காலம் காத்துக் கொண் டிருந்தோம் என்று தோன்றுகிறது. இந்தப் போரில் நாம் அழிக்கப்படுவோம் அல்லது விடுதலை பெறுவோம். இரண்டுக்கும் தயாராகுவோம். வேறு குறுக்கு வழி இருப்பதாகத் தெரியவில்லை.”
மீண்டும் பெரியார் குறித்து பேசத் தொடங்கியுள்ளோம், யோசிக்கத் தொடங்கி யுள்ளோம். இந்துத்துவத்தின் மீள் வருகை பெரியாரின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. இடதுசாரி, சனநாயக மற்றும் சமயச் சார்பற்ற சக்திகள் பலவீனமடைந்தால் இந்தியாவில் மீண்டும் ‘பிராமணிய’ ஒழுங்கு முன்னுக்கு வந்துவிடும் என்று பெரியார் திரும்ப திரும்ப எச்சரித்து வந்தார். அவர் சொல்லி வந்ததைவிட இன்னும் அதிகளவு அபாயத்துடன் இந்துத்துவம் இப்போது மீண்டு வந்துள்ளது. இந்துத்துவ சக்திகள் சர்வதேச அரசியலில் கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கும் வேலைத் திட்டத்துடன் இப்போது தொழில்பட்டு வருகிறது. இந்துத்துவம் அதற்கே உரிய முறையில் உலகமயமாகி வருகிறது. முன்பு ஒருமுறை அது உலகமயமாகிய போது பாசிசத்தைப் பிறப்பித்தது. இது இரண்டாவது முறை.
பெரியார் இந்தியாவில் ஒரே ஒருவர்தான். நமது காலத்தில் அவருக்கு ஒப்பாரும், மிக்காரும் இந்தியாவில் இல்லை. அழுத்தமான ஒரு சிந்தனைப் போக்கைக் குறித்து நிற்பவர் பெரியார். நவீன இந்தியச் சிந்தனைகளில் அவரது கருத்துக்களும் செயல்பாடுகளும் குறிப்பிட்ட ஒரு வகையான நிலைப்பாட்டை
(யn யசபரஅநவே) முன்வைக்கின்றன. வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொண்ட வாதம் அது. பிசிறில்லாத மிகத் தெளிவான நிலைப்பாடு அது. புதிய நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் புதிய பொருள்கோளியல் எல்லைகளை நோக்கி விரியும் சிந்தனைப்போக்கு அது. இந்தியாவின் பல பகுதிகளில் சனநாயகவாதிகள், சீர்திருத்தவாதிகள், புரட்சிக்காரர்கள் இதே காலக்கட்டத்தில் தோன்றியிருக்கின்றனர். ஆயின் பெரியாருக்கு வேறுயாரும் வகைமாதிரி கிடையாது. நீண்டகாலத்திற்கு அவர் தனித்தவராகவே விளங்குவார். இந்துத்துவத்தால் தினசரி பாதிக்கப்படும் பலவகைப்பட்ட மக்கட் பகுதியினர் இன்று பெரியாரியத்தை ஏறிட்டுப் பார்த்து வருகின்றனர். சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறுத்துவர்கள், தலித்துகள், பிற ஒடுக்கப்பட்ட சாதியினர், கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், நாத்திகர்கள், பெண் விடுதலையாளர்கள், பகுத்தறிவாளர்கள், இன்னும் பலர் இந்துத்துவத்தை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுத்தெடுக்கப் பெரியாரியத்தை உற்றுநோக்கி வருகின்றனர். இன்னும் அந்த வியூகங்கள் தயாராகவில்லை. இன்னும் சிலர் பெரியாரியத்தின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் அனக்கமின்றிப் பின்வாங்கத் தலைப்படுகின்றனர்.
பெரியார் மேலைநாட்டுச் சிந்தனைகளால் கவர்ச்சிக்கப் பட்டவர் என்று சொல்பவர்கள் உண்டு. அவர் நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியை அமோகமாக ஆதரித்தவர் என்று சொல்லப் படுவது உண்டு. பெரியாரின் பகுத்தறிவு ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய அறிவுவாத (சுயவiடியேடளைஅ) வகைப்பட்டது என்று சொல்பவர்கள் உண்டு. இந்த விளக்கங்களில் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ உண்மை இருக்கலாம். பெரியாரின் சிந்தனைகள் மேற்கு நாடுகளின் அறிவுவாதம், நேர்க்கட்சிவாதம், பயன்பாட்டுவாதம் (சுயவiடியேடளைஅ, நுஅயீசைiஉளைஅ, ஞசயபஅயவளைiஅ) போன்றவற்றின் சில கூறுகளைக் கொண்டுள்ளது. பெரியார் வெளிப்படையாக மார்க்சியத்தை ஆதரித்துப் பேசியவர் என்பதையும் நாம் அறிவோம். ஆயின் இவை எல்லாவற்றையும் விட, பெரியார் இந்தியச் சூழல்களை மிக அணுக்கமாக உணர்ந்திருந்தார் என்பதே அவரது கருத்துநிலையின் வரலாற்று வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று சொல்ல வேண்டும்.
இந்தியச் சமூகத்தில் சாதியம், தனி உடைமை, இந்து மதம், கலாச்சார அதிகாரம் ஆகியவற்றின் உள்ளீடான தொடர்புகளை வேறு எவரையும், விட பெரியார் அழுத்தமாக, சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்திருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டும், சுமார் மூவாயிரம், நாலாயிரம் ஆண்டுகளாக அறியப் பட்டுள்ள இந்திய வரலாற்றில் கிட்டத்தட்ட சகல சமூக நிகழ்வுகளுடனும் தொடர்பு கொண்டவையாகச் சாதியும், மதமும் விளங்கு கின்றன என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதைச் சொல்ல வேண்டியுள்ளது. சாதி யினுள்ளும், மதத்தினுள்ளும் ஒளிந்து கிடக்கும் இந்திய ரகசியத்தை பெரியார் கண்டு கொண்டார். அதன் பெயர்தான் சனாதன தர்மம். அது புராதனமும் அல்ல, நூதனமும் அல்ல. அது சனாதனம். காஞ்சி மடாதிபதியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் எப்போதும் சிலாகிக்கும் இந்திய சனாதன ரகசியம் அது. அதனை அறிந்து கொண்டபோது, பெரியாருக்கு வெறும் காங்கிரஸ் அரசியல் அர்த்தமற்றதாகத் தோன்றியது. சனாதனத்தை அவர் நேரடியாக எதிர்கொள்ள முடிவு செய்தார். இந்த முடிவை மையமாக வைத்தே அவரது சிந்தனைப்போக்கு அலை அலையாக விரிந்தது. அது தத்துவங்களை நோக்கிப் பரவியது. தேசிய அரசியல் பற்றிப் பேசியது. பெண் விடுதலை நோக்கி வளர்ந்தது. சோசலிசம் நோக்கி விரிந்தது. அந்த இந்திய சனாதன ரகசியம் பற்றிய புரிதலே அவரது எல்லா விவாதங் களுக்கும் ஒளியூட்டியது.
சாதி, மதம் மட்டுமல்ல, அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் இந்திய வரலாற்றில் நீடித்தவை, நிரந்தரமாக நிகழ்ந்து வருபவை. சாதியும் மதமும் தோற்றம் பெற்ற காலத்தி லிருந்தே அவற்றுக்கு எதிரான குரல்களும் தோற்றம் பெறத் தொடங்கிவிட்டன. மூன்று வரலாற்றுக் காலகட்டங்களை இங்கு நினைவுபடுத்த வேண்டும். சாருவாகனும் புத்தரும் வாழ்ந்த பழங்காலம், முதலாவது. அடுத்து, பின் இடைக்காலம் என அழைக்கப் படும் இந்தோ இஸ்லாமியக் காலக்கட்டம். மூன்றாவதாக, நவீன காலம். இந்த நவீன காலத்தில் தான் பெரியார் தனித்து நிற்கிறார் என மேலே குறிப்பிட்டோம். பண்டைய சாருவாக-பவுத்த காலமும், இந்தோ இஸ்லாமிய பின்னிடைக் காலமும் இந்து சனாதன தர்மத்தை மிகவும் ஆழமாகக் காயப்படுத்தின. சமஸ்கிருத மொழி அப்போது குடை சாய்ந்தது. சனாதன பிராமணியம் சந்தர்ப்பங்களுக்காகக் காத்துக் கிடந்தது. பல்வேறு வட்டார மொழிகளும் பண்பாடுகளும் அக்காலங்களில் செழித்தன. சாதி ஒழுங்குகள் புரளத் தொடங்கின. சனாதனிகள் அந்தக் காயங்களை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். சாருவாகர், பவுத்தர், சித்தர், அந்தர், சூபியர், சீக்கியர் என அடுக்கடுக்காக வரலாற்றில் போராளிகள் தோன்றினார்கள்.
பொருளாதாரச் சுரண்டல், சாதியப் படிநிலை, கலாச்சார அதிகாரம், மொழிவழி நிராகரிப்புகள், வழிபாடு மற்றும் பழக்க வழக்க இழிவுபடுத்தல்கள், உணவுத் தடைகள், பெண்ணடிமைத்தனம், பிரதேசவாரியான பகிஷ்கரிப்புகள், நிற (வர்ண) வேறுபடுத்தல்கள் எனப் பலவகையான ஆதிக்கங்கள் இம் மண்ணில் நிகழ்ந்தேறின. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் சனாதனத்திற்கு எதிரான தன்னுணர்வும் போராட்டங்களும் பல வடிவங்களில் அரங்கேற்றப் பட்டன. ஒவ்வொரு தளத்திலும் மாற்று வடிவங்கள், எதிர் வடிவங்கள் கண்டறியப்பட்டன. சனாதனத்திற்கு எதிராக தொடர்ந்து நிகழ்ந்த போராட்டங்களின் நவீன வெளிப்பாடே தந்தை பெரியார். பெரியார் எங்கோ வெளியிலிருந்து வந்தவரல்ல, அவர் இந்த நாட்டின் சொந்த வரலாற்றின் ஓர் அற்புதமான நீட்சி.
சாதி மதம் குறித்த பெரியாரின் அறிவு நூலறிவு அல்ல. பெரியார், அவர் எடுத்துப் பேசிய எந்தப் பிரச்சினையிலும் நூலறிவாளர் அல்ல. அவரது அறிவு பட்டறிவு, அனுபவ அறிவு. சாதி மதம் குறித்து அவர் அனுபவ ரீதியாக அறிந்திருந்தார். இயற்கையாக, அனுபவம் சார்ந்து, நடைமுறைக்கு ஏற்ப அமைந்திருப்பவற்றை மட்டுமே நம்பவேண்டும் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார். பகுத்தறிவு என்ற சொல்லைப் பெரியார் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ஆயின் மேற்கு நாடுகளின் தத்துவங்களில் பயன்படுத்தப்படும் பகுப்பாய்வு (ஹயேடலளளை) என்ற சொல்லை அது குறிப்பதாக சொல்ல முடியவில்லை. எதையும் உன் சொந்த அறிவில் உரசிப்பார், அனுபவத் திற்கு முரணாக இருக்கக் கூடாது, நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்று அவர் சொல்லுவதாகவே தோன்றுகிறது. பகுத்தறிவு என்ற சொல்லும் அதன் பயன்பாடும் பெரியாருக்கே உரியவை. அந்தச் சொல்லை அவர் சொந்தமாக உருவாக்கிப் பயன்படுத்தினார். பெரியாரின் சுயமரியாதை என்ற சொல்லும் அப்படிப் பட்டதே. சுயராஜ்ஜியம் என்ற சொல்லை இந்திய தேசியவாதிகள் பயன்படுத்தியபோது, அதற்கு இணையாகப் பெரியார் சுயமரியாதை என்ற சொல்லை உருவாக்கினார் என்பது உண்மை தான். ஆயின் அச்சொல்லின் பயன்பாடு விரிந்து கொண்டே போனபோது, அதன் பொருண்மைத் தளமும் விரிந்து கொண்டே போனது. அது பெரியாருக்கே உரிய சொல்லாயிற்று.
இந்தியத் தத்துவங்களில் சார்வாகம் (உலகாயுதம்), பிரகிருதிவாதம், பவுத்தம் போன்ற தத்துவங்களிலிருந்து சில கருத்துக்களை அவர் எடுத்துப் பயன்படுத்தியிருக்கலாம். அவற்றோடு பெரியாருக்கு ஒத்த நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆயின் அவற்றில் எவற்றோடும் அவர் கட்சி சேர்ந்து கொள்ளவில்லை. புதிதாகப் பேசவே அவர் விரும்பினார், அனுபவம் சார்ந்து பேசவே அவர் விரும்பினார். அந்த வகையில் அவர் மிகவும் எளிமையானவர். நேரடியானவர். உடனடியானவர்.
‘சனாதான பிராமணிய’த்திற்கு எதிரான நெடும் போராட்டத்தின் ஒரு நவீன வெளிப்பாடு பெரியார் என்று மேலே குறிப்பிட்டோம். நவீனம் என்பதை மேற்கு நாடுகள் அடையாளப் படுத்திய அதே வடிவில் பெரியார் முன்வைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் நவீனம் என்ற கருத்தாக்கத்தை இந்தியமயப் படுத்தினார். சமத்துவம் என்ற கருத்தைப் பெரியார் இந்தியச் சூழல்களுக்கேற்ப அர்த்தப் படுத்தினார். பெண் விடுதலை என்ற கருத்தாக்கத்தைப் பெரியார் இங்குள்ள சூழல்களை முன்னிலைப்படுத்தி வரையறுத்தார். நாத்திகம், பகுத்தறிவு சுயமரியாதை, தேசியம், திராவிடர் இன்னும் பல விசயங்கள் பெரியாரியத்தில் உடனடிச் சூழல் சார்ந்த பொருண்மையை எட்டின. சொந்தச் சூழல்களுக் கேற்பவே ஒவ்வொரு புதிய கருத்தாக்கமும் பொருள்பட வேண்டும் என்பதில் பெரியார் மிக இயல்பான நிலைப்படுகளைக் கொண்டிருந்தார். சொந்தச் சூழல்களுக்கேற்ப பொருள் கோளுதலில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான நமது போராட்ட அனுபவங்கள் உள்வாங்கப் படுகின்றன.
பெரியாரிடம் மிக ஆழமாக ஓர் அற உணர்வு தொழில்பட்டது. நீதி, நியாயம் குறித்த ஒரு முன் நவீன உணர்வு அது. ஈராயிரம் ஆண்டுகளாகக் கட்டி எழுப்பப்பட்ட சனாதன இந்துமதம் என்ற கண்ணாடி மாளிகையை நோக்கி அவரால் கல்லெறிய முடிந்தது. அவரிட மிருந்த அற உணர்வு ஓர் எளிய மனிதனின் நனவிலி மனத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் நியாய உணர்வு. சனாதன இந்து மதத்திற்கு அறம் கிடையாது என்று உரத்தகுரலில் சொல்லும் துணிச்சல் அவரிடம் இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் பட்டினி கிடந்த விவசாயிகள் நிலப்பிரபுக்களின் தானியக் கிடங்குகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தனர். அதனை வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்திய ஈ.பி.தாம்ப்சன் என்ற மார்க்சிய அறிஞர் மத்திய கால விவசாயிகளின் நெஞ்சுக்கூட்டுக்குள் பதுங்கிக் கிடந்த அற உணர்வு, நியாய உணர்வு அவர்களிடம் தொழில்பட்டது என்று எழுதினார். பெரியாரிடம் தொழில்பட்டதும் அப்படிப்பட்ட ஓர் அற உணர்வே.
ஐரோப்பிய அறிஞர்கள் பலர் இந்து மதத்தையும் தத்துவங்களையும் ஆரிய வரலாற்றின் அற்புதங்கள் என அறிவித்துக் கொண்டிருந்த அந்த நாட்களில் பெரியார் அவற்றைக் காட்டுமிராண்டித்தனம், முட்டாள்தனம் எனத் தயக்கமின்றிக் குறிப்பிட்டார். ஐரோப்பியர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருந்த மனுதர்ம நூல்களைத் தீக்கிரையாக்கினார். சமூக அறத்தின் அப்பட்டமான தீவிர வடிவம் தந்தை பெரியார்.
இந்துத்துவத்தின் இன்றைய மீள்வருகை பெரியாரியத்தின் தோல்வியைக் குறிக்கிறதா? அப்படிச் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள். பெரியார் போன்றோரின் முரட்டு நாத்திகத்தால் தான் கோயில்கள் அதிகமாகப் போய்விட்டன என்று வாதிடுவோர் ஒரு பகுதியினர் உண்டு. நமக்கு வேறுவிதமாகத் தோன்றுகிறது. இப்போதுதான் இந்துத்துவம் முழுசாக அதன் சொந்த வடிவில் வெளிவருகிறது. சாதியும் மதமும் கலாச்சார ஆதிக்கமும் அம்மணமாக அவற்றின் சொந்த வடிவில் இப்போதுதான் வெளி வருகின்றன. இனிவரும் அரசியல் இந்திய நாட்டின், இந்திய சமூகத்தின் சொந்த மொழிகளில் அமைந்திருக்கும். அது சாதிய மொழியாக, சனாதன மொழியாக, ஆதிக்க மொழியாக எந்த ஒளிவு மறைவுமின்றி இனி அமைந்திருக்கும். அவற்றுக்கு எதிரானவர்களும் இனி விடுதலையின் சொந்த மொழியில் பேச வேண்டியிருக்கும். இது வெளிப்படையான ஒரு போர். இங்கு சமரசத்திற்கு இடமில்லை. இந்த சந்தர்ப்பம் தான் மார்க்சியம் போன்ற விடுதலைச் சிந்தனைகள் அவற்றின் காத்திரமான அரசியல்களை முன்வைத்து, எதிரியைச் சந்திக்க வெளிப்படையாக வரும் சந்தர்ப்பமாக இது இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்திற்காகத் தான் நாம் இத்தனை காலம் காத்துக் கொண் டிருந்தோம் என்று தோன்றுகிறது. இந்தப் போரில் நாம் அழிக்கப்படுவோம் அல்லது விடுதலை பெறுவோம். இரண்டுக்கும் தயாராகு வோம். வேறு குறுக்கு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
பசு. கவுதமன் தொகுத்த ‘என்.சி.பி.எச்.’ வெளியிட்டுள்ள பெரியார் சிந்தனைத் தொகுதிகளான “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” – நூலுக்கு எழுதிய அணிந்துரை.
(கட்டுரையாளர் மார்க்சிய – தத்துவ ஆய்வாளர்)
நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்