தமிழ்நாடு பெயர் சூட்டிய வரலாறு

சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ் நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட சுருக்கமான வரலாற்றுப் பதிவு இது. அண்ணாவின் பிறந்த நாளையொட்டி (செப்.15) அவரது வரலாற்றுச் சாதனையை ‘நிமிர்வோம்’ பதிவு  செய்கிறது. ‘திராவிட கட்சிகள்’ தமிழருக்கு துரோகம் இழைத்து விட்டதாகப் பேசுவோரும் இந்த வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

 

அண்ணா தலைமையில் 15 பேர் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் களாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக 1957 இல் தி.மு.க. சட்டமன்றம் சென்றது. சட்டமன்ற திமுக தலைவராக அண்ணா அவர்களும், துணைத் தலைவராக க.அன்பழகன், கொறாடாவாக கலைஞர் மு.கருணாநிதி நியமிக்கப்பட்டனர்.

பேரவையின் முதல் கூட்டத்திலேயே ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு க.அன்பழகன்அவர்கள் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அத்திருத்தத்தில் “இம்மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’என்ற பெயர் மாற்றம் செய்யப் படாதது வருத்தத்திற்குரியது” என மொழிந்தார். விவாதத்தில் பல உறுப்பினர்கள் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

அண்ணா அவர்கள் பேசும்போது, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால், ‘தமிழ்நாடு’ என்று பெயரிடவேண்டும் என்ற திருத்தத்தின் மீது மட்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார். பின்னர் வாக்கெடுப்பு நடந்தது. 42 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தி.மு.க., ஜனநாயக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரஜா சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரித்தன. காங்கிரசுஸ் கட்சியினர் 127 பேர் எதிராக வாக்களித்ததால், ‘தமிழ் நாடு’ பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தி.மு.க.வின் தீர்மானம்தோற்றது.

1961ஆம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர் ப. சின்னத்துரை, ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டக் கோரும் தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார். தி.மு.க. அதை வலியுறுத்திப் பேசியது: ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், அவைக்கு வெளியே இதே கோரிக்கைக்காக போராட்டம் நடத்தியது. போராட்டத்தைக் காரணம் காட்டி அமைச்சர் சி.சுப்பிரமணியம் கோரிக்கையை அரசு ஏற்காது என்றார்.

அண்ணா தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தார்கள்.

தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள்சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவிலிருந்து பதவி விலகின. இந்நிகழ்வுகளால் சற்றுக் கலக்கமடைந்த காங்கிரசுஸ்ஆட்சியாளர்கள், சில முடிவுகளை அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

  1. ‘மெட்ராஸ்ஸ்ஸ்டேட்’ என்பதற்கு ‘சென்னை ராஜ்யம்’ என்று தமிழில் எழுதப்படும். இனி தமிழில் எழுதும்போது சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்குப் பதிலாக ‘தமிழ்நாடு’ என்று எழுத வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது.
  2. அரசாங்க நிர்வாகக் கடிதப் போக்குவரத்தில் இனி தமிழ்நாடு என்றுதான் எழுதப்படும்.

இந்த அறிவிப்புகள் ஓரளவுக்கு எதிர்க் கட்சிகளால் வரவேற்கப்பட்டன. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரசுஸ்அரசின் இந்த அரைகுறையான செயலை ஏற்க தயாராக இல்லைஎன்று கூறிவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் நாட்டிலுள்ள மாநிலங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் இடம் பெற்று இருக்கிறது. அதில் 7 ஆவது பதிவில் தமிழகத்தின் பெயர் ‘மெட்ராஸ்’ என்று இருந்தது. இதனை மாற்றி ‘மெட்ராஸ்’ என்பதற்குப் பதிலாக ‘தமிழ்நாடு’ என்று மாற்றப்பட வேண்டும் என்று அரசியல் சட்ட திருத்த மசோதா ஒன்றை 1961இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பூபேஷ்குப்தா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மதிப்புமிக்க தலைவர் களில் ஒருவராகவும் திகழ்ந்த பூபேஷ்குப்தா, ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற்றவர். சிறந்த நாடாளுமன்ற வாதியாகத் திகழ்ந்தவர். இவரது ஆணித்தரமான வாதங்கள் நாடாளுமன்ற வரலாற்றில் தனித்ததோர் அடையாளத்தைப் பெற்றிருந்தது. இத்தகைய புகழ்வாய்ந்த மேற்கு வங்கத்துத் தலைவர் பூபேஷ்குப்தா, “வரலாறு, மொழி, கலாச்சார அடிப்படைகளுக்கு இசைவாக மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’” என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்னும் கருத்து மெட்ராஸ் மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களிடம் மிக ஆழமாக இருக்கிறது. எனவே இந்த மசோதா” என்ற குறிப்புடன் பெயர் மாற்றத்திற்கான மசோதா குறித்து ‘குறிக்கோள்கள் மற்றும் காரணங்கள்’ அறிக்கையினை மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்தார்.

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் தொடர்பான தனிநபர் சட்ட முன்வடிவைதாக்கல் செய்து பூபேஷ்குப்தா, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, தமிழ் மொழி தமிழ் மக்கள் மற்றும் பண்பாட்டின் மீது அவர் வைத்திருந்த ஆழமான பற்று எத்தகையது என்பதை வெளிப்படுத்து கிறது.

“உலகத்திலேயே மிகவும்தொன்மையான மொழிகளுள் ஒன்று தமிழ். உலகத்தின் பல பாகங்களிலும் உள்ள மக்களின்பேச்சு மொழியே வளர்ச்சி அடையாதிருந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் இருக்கிறது. உலகத்தின் பல மொழிகளில் வளர்ச்சி யடைவதற்கு முன்னமேயே சிறப்பான இலக்கியங்களைப் படைத்தது தமிழ். தமிழ் அத்தகைய புகழ் படைத்தது. நமது நாட்டில் கலாச்சாரப் பராம்பரியத்திற்குஅவ்வளவு சிறப்பாகவும் வளமாகவும் பங்களிப்புச் செய்த தமிழ் மக்களின் மேன்மை அத்தகையது. தமிழைப் பற்றிப் பேசும்போது நமக்கு மிகுந்தபாசம் உண்டாகிறது. ஏனெனில் நாம் இன்றைக்கும் பார்க்கிற இந்தியா, ஏராளமான மொழிக்கூறுகளும் குழுக்களும் அடங்கியதாக இருக்கிறது. அவர்களில் தமிழ்நாட்டு மக்கள் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள். அவர்களின் இலக்கியத்தில், அவர்களின் கலாச்சாரத்தில், அவர்களின் பாடல்களில், இசையில், அவர்களின் வாழ்க்கை முறையில் நமது மக்களின் கலாச்சாரம் என்று நாம் கருதுகின்றவற்றின் தொன்மைப் பெருமை மிளிர்கிறது. ஆகவேஎல்லா வகையிலும் இந்திய கலாச்சாரத்தின் மையமாக தமிழ்நாடு இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் பெரும் பாலோர் நல்ல ஆங்கில அறிவு உடையவர்களாக இருந்தும், மெட்ராஸ் என்ற இப்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் ஆட்சி மொழியாகத் தமிழே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் முதன்மை மாநிலமாக இருக்கிறது.”

‘தமிழ்நாடு’ சட்டமன்றத்தில் தாய் மொழியில் மட்டுமேஉரைகள் நிகழ்த்தப்படு கின்றன என்பதை நேற்று தான் அறிந்தேன். தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினர்களையும் குறிப்பாக இந்தச் சூழ்நிலையை உருவாக்கியவர் களையும் நான் பாராட்டுகிறேன். இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராஜ் நாடாருக்கும் எனது பாராட்டுகள். அவர் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர். எங்கள் தோழர்கள் பலரை சிறையில் அடைத்தவர். அவர் மீது எனக்குஏகப்பட்ட வருத்தம் உண்டு.ஆனால் அவர் தனது மொழிக்குச்சேவை செய்திருக்கிற முறை,ஆங்கிலத்தில் பேச மறுத்திருப்பது, மாநிலப் பணிகளைதமிழிலேயே நடத்துவது ஆகியவற்றுக்காக இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில்எங்களின் ஆதரவும் பாராட்டுகளும் அவருக்கு உண்டு.

பூபேஷ்குப்தா அவர்கள் தமதுஉரையில், “தமிழ்நாடு பெயர்மாற்றம் வரலாற்றுத் தேவை” என்பதை வலியுறுத்திக் குறிப்பிட்டு இருக்கிறார். பூபேஷ் குப்தாவின் விரிவான விளக்கமான உரைக்குப் பின்னர்அவரது கருத்துக்களை வழிமொழிந்தும் ஆதரித்தும், புதியவாதங்களை எடுத்துரைத்தும் நாடாளுமன்றத்தில் அண்ணா ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் பெற்றதாகும்.

“பெயர் மாற்றம் பற்றி அதிகாரப்பூர்வ மசோதா வந்தால் தமிழகத்திலுள்ள இலட்சக் கணக்கான தமிழர்கள் மனநிறைவு அடைவார்கள். இச்சட்ட முன் வடிவின் நோக்கத்தை ஏற்கனவே தமிழக அரசு ஏற்றுள்ளது. அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் மாநிலஅரசு எதிர்க்கிறது. பெயர் மாற்ற சட்ட முன்வடிவை எதிர்த்துப் பேசிய உறுப்பினர்களில்ஒருவர் கூட பூபேஷ் குப்தாவின் வாதத்திற்கு மறுமொழி கூறவில்லை.

1961ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் குறித்து மக்கள் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒருவர் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அரசு கட்சித் தலைவராக இருந்த சி.சுப்ரமணியம் அவர்கள் அத் தீர்மானத்தின் நோக்கத்தை ஏற்பதாகக் கூறினார். சென்னை அரசின் தமிழ் வெளியீடுகள் அனைத்தும் இனித் தமிழ்நாடு எனப் பெயர் தாங்கி வெளியாகும் என்று அப்போது அமைச்சர் கூறினார். இப்போது அவ்வாறு தான் அவை வெளியாகின்றன.

அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை அளிக்கையில் நான் இப்போது தமிழ்நாடு அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தை அளிக்கின்றேன் என்றார். ஆனால் இதை சட்ட முறையில் மாற்றுவதைத் தான் மாநில அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

சென்னை மாநிலத்தின் மூலப் பெயர் ‘தமிழ்நாடு’தான் என்பதை விளக்க 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் இலக்கியங் களிலும் சான்றுகள் உள்ளன. இச்சட்டமுன் வடிவு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார தந்திரமே என்று கூறப்படுவதை வன்மையாகக் கண்டிக் கிறேன். அரசியல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவதில்லையா? ஆளும் கட்சியே இம் மசோதாவைக் கொண்டு வந்திருந்தால், நான் மிகவும் பாராட்டியிருப்பேன். தமிழர் களுக்கு ‘தமிழ்நாடு’ என்றும் அனைத்திந்தியா விற்கு சென்னை மாநிலம் என்றும் மாநில அரசு பின்பற்றும் கொள்கை ‘அரசியல் பித்தலாட்டம்’ ஆகும்.

திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் சோசலிஸ்ட் கட்சி ஆகியவையும், சுதந்திரா கட்சியும் கூட தமிழ்நாடு பெயர் மாற்றத்தை ஏற்றுள்ளன. பெயர் மாற்றப் பட்டால் தமிழக மக்கள் தங்கள் பகுதிக்கு பழைய பெயரே மீண்டும் பெற்றது பற்றி மனநிறைவு அடைவார்கள்”

அண்ணாவின் உரையில் குறுக்கிட்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டி.எஸ். பட்டாபிராமன், “சுமார் ஐநூறுஆண்டுகளுக்கு முன்பு வரை ஒன்றுபட்ட தமிழ்நாடு என்று இருந்ததில்லை. பாண்டியநாடு, சேரநாடு, சோழநாடு என்றுதான் இருந்தது. வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த முடியாதபோது, எதற்காகப் புதிதாக ஒரு பெயரை உருவாக்க முனைகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் டி.எஸ். பட்டாபிராமனுக்கு பதில் அளித்த பேரறிஞர் அண்ணா, இலக்கியங்களில் தமிழ்நாடு என்று வரும் பாடல் வரிகளை எடுத்து உரைத்தார்.

“இந்த மன்றத்துக்கும், இந்த உறுப்பினருக்கும் தெளிவுபடுத்த தமிழ்நாடு என்று சொற்கள் இருக்கும். சில நூல்களைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பரிபாடல், பதிற்றுப்பத்து, தவிரஇன்னும் பிரபலமானவை சிலப்பதிகாரம்,மணிமேகலை இவையெல்லாம் ஆயிரம்ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதமிழ்க் காப்பியங்கள். பரிபாடலில் வருகிற “தண்டமிழ் வெளி தமிழ்நாட்டு அகமெல்லாம்” என்ற வாக்கியத்துக்கு, மூன்று பகுதிகளும் இனிமையான தமிழ்சூழ்ந்த தமிழ்நாடு என்று பொருள்.

1800 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதிற்றுப் பத்தில் ‘இமிழ்கடல் வெளிதமிழகம்’ என்று எழுதப்பட்டு இருக்கிறது.அதாவது, கடலை எல்லையாகக் கொண்டதமிழ்நாடு சிலப்பதிகாரத்தில் ‘தென்தமிழ் நந்நாடு’ எனக் கூறப்பட்டிருக்கிறது. இதன்பொருள் நல்ல தமிழ்நாடு.

மணிமேகலையில், “சம்புத் தீவினில் தமிழக மருங்கில்” என வருகிறது. தமிழ்நாடு, சம்புத் தீவு என அழைக்கப்படுகிறதுஎன்பதே இதன் பொருள்”

இன்னும் புகழ்பெற்ற உதாரணங்கள் தேவை என மதிப்புக்குரிய உறுப்பினர்கள் விரும்பினால், கம்பனும் சேக்கிழாரும் கண்டிப்பாகத் தங்கள் கவிதைகளில் பயன்படுத்தி யிருப்பதைக் காணலாம். இதற்குப் பின்னரே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்ற மூன்று ராஜ்யங்கள் வந்தன.

தமிழ்க் காப்பியங்களில் தமிழ்நாடு என்று இருக்கிறது. இந்தக் காப்பியங்களில் கருத்துவளத்துக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை.இது மதிப்புக்குரிய நண்பர் நினைவையும், நேரத்தையும் தமிழ்க் காப்பியங்களுக்காகச் செலவிடப்படவில்லை என்பதையே காட்டு கிறது.”

“இந்தப் புனிதமான ஒரே பிரச்சினையில் தமிழ் மக்களை நாம் சந்திப்போம்.உங்களால் 51 சதவீத மக்களை உங்களுக்குஆதரவாகக் காண்பிக்கும் பட்சத்தில் நான் உங்களுக்குத் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன்” என்று காங்கிரசுஸ் கட்சிக்கு அண்ணா சவால் விடுத்தார்.

என்.எம்.லிங்கம் என்பவர் “தமிழ்நாடு என்று பெயரிடுவதால் உங்களுக்கு என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.அதற்கு அண்ணா தக்க பதிலடி தந்தார்.

“மக்கள் அவையின் (ழடிரளந டிக ஞநடியீடந) பெயரை லோக்சபா என்றும், மாநிலங்கள் அவையின் (ஊடிரnஉடை டிக ளுவயவநள) பெயரைராஜ்யசபா என்றும், குடியரசுத் தலைவர் (ஞசநளனைநவே) பெயரை ‘இராஷ்டிரபதி’என்றும் மாற்றியதன் மூலம் உங்களுக்குஎன்ன பயன் விளைந்தது? இத்தகைய மாற்றங்கள்‘உணர்ச்சிப் பூர்வமான மனநிறைவை அளிப்பவை” என்று பதிலளித்தார் அண்ணா.

நாடாளுமன்றத்தில் இவ்வளவு விவாதங் களுக்குப் பிறகும் காங்கிரசு கட்சி‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்ட விரும்பவில்லை. காலம் கனிந்தது; ஆட்சி பீடத்தில் அண்ணா அமர்ந்தார்; அரியணையில் தமிழ் அமர்ந்தது.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணா நாடாளு மன்றத்தில் கூறியவாறு, திமுகழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றது. அண்ணா 1967 மார்ச் 6ஆம் நாள் ‘தமிழக முதல்வராக’ பொறுப்பு ஏற்றார்.

சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே முதல்வர் அண்ணா தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும்எனும் தீர்மானத்தை முன்மொழிந்தார் 19.6.1967 அன்று தீர்மானத்தை முன்மொழிந்து சட்ட மன்றத்தில் ஆற்றிய உரை வருமாறு:

“இந்திய அரசியலமைப்பில் இந்த மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்றுமாற்ற வேண்டும் என இந்த அவை கருதுகிறது. மேலும், இதுகுறித்து இந்திய அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை நிறைவேற்ற இந்த மாநிலம்நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

அரசியல் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வரக் கோரும் இந்தத் தீர்மானம் – அரசுத் தரப்பில் கொண்டு வந்தது என்று கருதாமல் இந்த அவை முழுவதுமாகச் சேர்ந்து கொண்டு வந்த தீர்மானமாகக் கருத வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்புடைய ஒன்று என்பதை எதிர்க்கட்சி ஆதரித்துப் பேசியதே சான்றாகும்.

ஆனால் வெங்கட்ராமன் கூறிய சில வாதங்களை மற்றவர்கள் வேறுவிதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகப் பதில்கூற வேண்டியதிருக்கிறது. சென்னைநிர்வாகத் திற்கும் தொழில் வளத்திற்கும்உலகில் பெயர் பெற்றது என்பதைவிடதமிழ்நாடு என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.

சேர – சோழ – பாண் டியரையும் – சிலப்பதி காரத்தையும் – குறளையும் – சீவகசிந்தா மணியையும் – அகநானூறும்-புற நானூறும் மற்றவையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஈராயிரம் ஆண்டுகள் எழிலோடு இருந்த தமிழ் மரபை உலகு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தத் தீர்மானம்.

சென்னை என்றால் நிர்வாகச் சிறப்பு மட்டுமல்ல. கிளைவ், வாரன்ஹேஸ்டிங்ஸ் கூட நினைவுக்கு வரலாம். செயிண்ட்ஜார்ஜ் கோட்டை நினைவுக்கு வரலாம்.

வெங்கட்ராமன் : அவையெல்லாம் மறந்து விட்டது.

அண்ணா : அவற்றோடு சேர, சோழ, பாண்டி யரையும் தமிழ் மரபையும் மறந்துவிடக் கூடாது என்பதற்குத்தான் இந்தத்தீர்மானம்.”

சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி யினரும் அறிஞர் அண்ணா கொண்டு வந்த பெயர் மாற்றத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர்.

அதன் பின்னர் 1967, ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தின்மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அண்ணா உரையாற்றினார்.

“இந்த மன்றத்தில் எல்லாக் கட்சியினரா லும் நல்ல அளவுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற இருக்கிற‘தமிழ்நாடு’ என்று பெயரிடுகின்ற இந்தநிகழ்ச்சி இந்த மன்றத்திலே இன்றைய தினம்உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலே யும் மிகுந்தமகிழ்ச்சியையும் நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும்.

நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் அவர்கள் கூட இந்தத்தீர்மானத்தை ஆதரிக்கிறார்களே தவிரவேறில்லை. இந்தியப் பேரரசிலே மிகச் செல்வாக்கோடு இருக்கின்ற இரண்டொரு தலைவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தபோது இதைப்பற்றி அவர்கள் சொல்லும்போது “தமிழக சட்டமன்றத்தில்இது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படுமானால் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதிலே தயக்கம் இருக்காது” என்பதனை முன்கூட்டியே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அதனை அரசை நடத்துகிறவர்கள் கூட ஏற்றுக் கொள்கிறார்கள் என்று எண்ணத்தக்க வகையில் பத்து நாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றி பேச வேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில் அங்குள்ள உள்துறை அமைச்சர் திரு சவான் அவர்கள் ‘மெட்ராஸ்ஸ்ஸ்டேட்’ என்று பேசிப் பழக்கப்பட்டவர் மிகுந்த அக்கறையோடு ‘கூயஅடை சூயனர’ என்றுதான் பேசி இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தோழர் களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே ‘திராவிட’ என்பதை நினைத்துக் கொண்டு இருப்பதாலே‘தமிழ்நாடு’ என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் ‘தமிழ்நாடு’ என்று பெயரிடுதல் வேண்டும் என்றுதிராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக் கொண்டு வந்திருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களும், மற்றவர்கள் கொண்டு வருகிறார்கள் என்பதினால் முன்னாலே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தாலும், இலக்கியத் தில் ஆதாரம் இருக்கிறதா என்றுக் கேட்டிருந் தாலும் இன்றைய தினம் அவர்களும் ‘தமிழ்நாடு’ என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த பெருமைக் கொள்கிறார்கள். ஆகையினால் இந்தத் தீர்மானம் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் இந்த அவையிலே நிறைவேற்றப்பட இருக்கிறது.

நம்முடைய பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், நெடுங்காலத்திற்குப் பிறகு நம்முடைய இல்லங்களில் அமர்ந்துப் பேசிக் கொள்கின்ற நேரத்தில் பெருமையோடு சொல்லிக் கொள்ள இருக்கிறார்கள். “என்னுடைய பாட்டனார் காலத்தில்தான் நம்முடைய தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’என்று பெயரிடப்பட்டது. எதிர்க்கட்சியில் உட்கார்ந் திருந்த என்னுடைய பாட்டனார் கருத்திருமன் இதை ஆதரித்தார்” என்று கருத்திருமன் பேரப் பிள்ளைகளும் எங்களுடைய பேரப் பிள்ளை களும் எதிர்காலத்தில் பேசக்கூடிய நல்ல நிலமைகளை எல்லாம் அவர்கள் எண்ணிப் பார்ப்பார் களேயானால் நிச்சயமாக அந்த ஆலோசனையைக்கூட சொல்லாமல் இதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதில் ஒருத்துளியும் ஐயப்பாடு இல்லை. ஆகையினால் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டு மென்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்”

பேரவைத் தலைவர் சி.பா.ஆதித்தனார் அவர்களால் தீர்மானம் பேரவையின்முடிவிற்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று அறிவித்தார்.

பின்னர் முதலமைச்சர் அண்ணாஅவர்கள் சட்டமன்றத் தலைவரிடம் ஒருவிண்ணப்பம் வைத்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றிஇருக்கின்ற நன்நாளில் ‘தமிழ்நாடு’ என்று நான் சொன்னதும் ‘வாழ்க’ என்றுஅவை உறுப்பினர்கள் சொல்வதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோருகின்றேன்”

அறிஞர் அண்ணா : தமிழ்நாடு

உறுப்பினர்கள் : வாழ்க!

இவ்வாறு மூன்று முறை அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று முழங்க, உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

பிறகு மேலவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நன்றி: ‘சங்கொலி’ ஏடு வெளியிட்ட தொடரின் சுருக்கம்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே ‘திராவிட’ என்பதை நினைத்துக் கொண்டு இருப்பதாலே ‘தமிழ்நாடு’ என்பதிலே அக்கரை இல்லாமல் போய்விடுமோ என்றுசிலர் எண்ணிய நேரத்தில் ‘தமிழ்நாடு’ என்று பெயரிடுதல் வேண்டும் என்றுதிராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திக் கொண்டு வந்திருக்கிறோம்.- அண்ணா

மூன்று முறை அண்ணா ‘தமிழ்நாடு’ என்று முழங்க, உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க என்று முழக்கமிட்டனர்.

நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்

You may also like...